Wednesday, 15 May 2019

அங்கிள் மாத்திரம் ஏன்ப்பா இப்படி இருக்கிறார்?அங்கிள் மாத்திரம் ஏன்ப்பா இப்படி இருக்கிறார்?


இந்தக்கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னே கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்!

கடவுள்கிட்ட இது வேணும், அதுக்கு நான் இதைத் தர்றேன் அப்படின்னு பேரம் பேசறது எனக்கு அவ்வளவா செட் ஆகாது!

ஆனா வீட்டம்மா அந்தப் பேரத்துல கொஞ்சம் கில்லாடி!
பழனி முருகன்கிட்ட ஏதோ அவங்களுக்கு டீலிங்!

எப்படி சொன்னா வேலையாகும்ன்னு அம்மணிக்கு கால் நூற்றாண்டு பாடம்!

“ஏங்க, நாம குடும்பத்தோட பழனிக்கு வர்றதா வேண்டிக்கிட்டேன்! எப்போ போலாம்?”

“நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன்?
வேண்டுதல் ஏதாவது வைக்கறதா இருந்தா, என்னை அதுல இழுக்காதே, வேணும்னா உங்க அண்ணனுக்கு அலகு குத்தறேன்னோ, செத்துப்போன உங்க அப்பனுக்கு மொட்டை அடிக்கிறேன்னோ இல்லை பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு சுடிதார் வாங்கித்தர்றேன்னோ வேண்டித் தொலைக்க வேண்டியதுதானே! “

அசராம பதில் வந்தது,
எனக்கென்ன, கோவிலுக்கு வர்றவரைக்கும் வீட்ல நான்வெஜ் எடுக்கறதில்லைன்னு வேண்டிக்கிட்டேன்! அதுக்கப்புறம் உங்க இஷ்டம்!”

பெண்கள் எவ்வளவு அக்கிரமக்காரர்கள் பாருங்கள் பெரியோர்களே!

அன்னைக்கே கிளம்பியாச்சு கோவிலுக்கு - சோறு முக்கியம் பாருங்க!

பழனிக்கு பதினைஞ்சு கிலோமீட்டருக்கு முன்னாடியே பக்தகோடிகள் கூட்டம் அம்முது!

ஒருவழியா பக்கத்துல போனா ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தா அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமை மூணு மணிக்கு உங்க டோக்கன்னு இழுவை வண்டியில் (வயித்தெரிச்சல் வேளைல சுத்தத் தமிழ் வேற)  வாக்குறுதி தர்றான்!

"இதுக்குத்தான் மூஞ்சியை தூக்கிட்டு கோயிலுக்கு வரக்கூடாது!"
- வேற யாரு, தர்மபத்தினிதான்!

“பொறந்ததிலிருந்தே அதே மூஞ்சிதான்! அதெ தூக்கிக்கிட்டு வராம தூர எறிஞ்சுட்டா வரமுடியும்? மூஞ்சியை பார்த்துத்தானே கட்டிக்கிட்டே!”

“ம்க்கும், உங்க பரம்பரைக்கே வாய்தானே மூலதனம்!”

பக்கத்துல கல்யாணம் ஆகணும்னு மொட்டை போட்டுக்கிட்டு வரிசைல நின்னவன் மொத்த  கான்வெர்சேஷனும் கேட்டுட்டு மயிரே போச்சுன்னு ஒரே ஓட்டம்!

அவனாவது நல்ல இருக்கட்டும்!

அப்போதான் பொண்ணு திருவாய் மலர்ந்தாள்!
"அப்பா, உன் ட்விட்டர் ஃப்ரண்டு யாரோ பழனில இருக்காருன்னு சொன்னியே! அவர்கிட்ட கேட்டுப்பாரேன்!"

அப்போ ஆரம்பிச்சது ஏழரை அவருக்கு பாவம்!

பழனி மொட்டையாண்டிக்கு அவர்மேல் என்ன காண்டுன்னு தெரியல!
கால் பண்ணுனதும் உடனே எடுத்துட்டார்
அப்போ அவருக்கு பின்விளைவுகள் தெரியாது!

"அய்யய்யோ, நான் வெளியூர்ல இருக்கேனே, கொஞ்சம் பொறுங்க ஸார் நான் கூப்பிடுறேன்!"

"இதெல்லாம் நாம  எத்தனை பேருக்கு சொல்ற கதை, நமக்கேவா" ன்னு நினைச்ச அடுத்த நிமிஷம் ஒரு போன்!

"ஸார், நான் கோபால் ஸார் ஃப்ரண்டு பேசறேன், எங்க இருக்கீங்க?"

அதுக்கப்புறம் ஆரம்பித்தது மிராக்கிள்!

பிரசிடெண்ட் ஆஃப் இண்டியா மாதிரி அடுத்த பத்தாவது நிமிஷம் மலைமேல் ஸ்பெஷல் தரிசனம் முடிச்சு கீழ வந்தாச்சு!

ஐயர்ல இருந்து வின்ச் ஆப்பரேட்டர் வரைக்கும் அரைக்காசு வாங்கல!

கீழ வந்து மரியாதை நிமித்தம் நண்பருக்கு ஃபோன்!

“இருங்க, நம்ம ஃப்ரண்டு கூப்பிடுவாரு!”

வந்த போனில் திருப்பூர் லாட்ஜுக்கு வந்து சாப்பிட்டுக்கிட்டு இருங்க, நான் வந்தர்றேன்னு ஒரு இன்ஸ்டரக்சன்!

ஞாயித்துக்கிழமை மத்தியானம் பருப்பு சாம்பார் சாப்பிடுற கொடுமை விரோதிக்கும் வரக்கூடாது!
கல்யாணம் பண்ணிவெச்ச அத்தனைபேரையும் ஆறுலட்சத்து அறுபத்து மூணாவது தடவையா திட்டிக்கிட்டே வெளியே வந்தா, ஸ்கூட்டர் நிறைய பொம்மை, சாக்லேட்ன்னு அடுக்கி வச்சுக்கிட்டு அந்த நண்பர்!

என்னங்க இது?

கோபால் ஸார் குடுக்கச் சொன்னாருங்க!

ஏங்க இதெல்லாம்ன்னு போன் பண்ணுனா,
நீங்க எதுவும் பேசக்கூடாது! நான் ஊர்ல இல்லையேன்னு வருத்தமா இருக்கு! நான் இருந்திருந்தா நல்லா கவனிச்சிருப்பேன்! மன்னிச்சுக்குங்க!”

அடப்பாவி, நல்லவேளை அவர் ஊரில் இல்லை!
இருந்திருந்தால் டெம்போ வெச்சுக்கிட்டுத்தான் திரும்பிப் போயிருக்கணும்!

இத்தனைக்கும் அவரை நேரில் அதுவரை பார்த்ததே இல்லை
ஒரே கட்சி அபிமானம் என்பதால் ட்விட்டரில் அவ்வப்போது பேசுவதும், தொலைபேசியில் நலம் விசாரிப்பதும் மட்டும்தான்!

ஊருக்குப் போறவழியிலெல்லாம் அவரைப்பற்றியே பேச்சு!

ஏறத்தாழ நடந்ததே மறந்துபோன நிலையில் (நல்லதை உடனே மறப்பதுதானே நம் பிறவிகுணம்), ஒருநாள்
இன்னொரு நண்பரிடமிருந்து ஃபோன்
“நானும் பாலு சாரும் கோயமுத்தூர் வந்திருக்கிறோம், சந்திக்கமுடியுமா?”

அதுதான் அவரை முதல்முறை சந்தித்தது!

வெறும் பத்து நிமிட சந்திப்பு. அதற்குள் குடும்பத்தில் அத்தனைபேரிடமும் கலகலப்பாக பேசி அறிமுகம்.(இயல்பிலேயே கொஞ்சம் அதட்டலான குரல் நண்பருக்கு) புறப்பட்டுப் போனதும் அவரைப்பற்றி, பழனி பயணம் பற்றியே பேசிக்கழிந்தது அந்த நாள்!

அதோடு தப்பித்துவிடுவார் என்றுதான் நம்பினேன்!

என் உடன்பிறப்பின் விவசாய ஆர்வம் அவரை அவ்வளவு சுலபமாக விடவில்லை!

கோயமுத்தூரிலிருந்து ஒரு இருநூறு கிலோமீட்டர் தள்ளி ஒரு மகத்தான குக்க்க்க்க்கிராமத்தில் அரபுநாட்டு சம்பாத்தியத்தில் திடீரென்று ஒரு இடத்தை வாங்கிப்போட்டபிறகு சொன்னார் தம்பி
இந்தமாதிரி ஒரு இடம் வாங்கியிருக்கிறேன், தோப்பு வைக்க ஆசை, யாராவது தெரிந்தவர் இருக்கிறார்களா?”

பழனி முருகன் பாலுவை விடுவதாக இல்லை!
அடிவாரத்திலேயே இருந்துக்கிட்டு நம்ம மாமனாரை மட்டும் பார்க்க ஓடுறாரேன்னு கடுப்பில் இருந்திருக்கிறார் பழனியாண்டி!

ஃபோனில் வசமாக சிக்கிய நண்பரின் தோட்டத்தைப் பார்க்க மறுநாளே மொத்த குடும்பத்தோடு நெடும் பயணம்!

கூட்டிப்போய் காட்டிய கொய்யாத் தோட்டம், அதன் நேர்த்தி, கேரளத்து வனயட்சி போன்ற வளப்பம் இதெல்லாம் எனக்கும் தம்பிக்கும் கண்ணிலேயே நின்றுபோக, அன்றைக்கு ஆரம்பித்தது வினை அவருக்கு!

தோட்டத்தின் ஓரத்தில் நின்ற புளியமரத்தில் ஒரு பழத்தை ஆர்வமாய் பறித்து பிள்ளைத்தாய்ச்சிபோல்  சாப்பிட்டதை பார்த்திருக்கிறார் நண்பர்!

வீடு திரும்பும்போது ஓவர்லோடு!

வண்டி திணறித் திணறி ஊர் வந்து சேர்ந்தது!

அடுத்த ஒரு வாரம் வடவள்ளி முழுக்க கொய்யாப்பழம் இலவச விநியோகம்! பாலு ஸார் தோட்டத்து கொய்யாவில் பாதி என் வீட்டில்!

சொல்ல மறந்துபோச்சு - வீட்டில் அடுத்த ஆறுமாச ரசமும் புளிக்குழம்பும் அவர் கொடுத்துவிட்ட ஒரு மூட்டை புளியிலிருந்துதான். 

அதற்கப்புறம் ஒரு சுப முகூர்த்த நாளில் பாலுசாரை கூட்டிக்கொண்டு தோட்டத்துக்கு போனதோடு வேறு கதை ஆரம்பம்!


வெறும் பொட்டல் காடு!

வெள்ளாமை பார்க்காத கன்னி நிலம்!

கிணற்றின் ஆழத்தில் பைனாகுலர் வைத்துப் பார்த்தால் தெரியும் ஒரு துளி தண்ணீர்!

எனக்கு மலைப்பில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை!

"கொஞ்சம் அவசரப்பட்டுட்டாருங்க உங்க தம்பி!"

இதை சொன்ன கையோடு,
விடுங்க பார்த்துக்கலாம்!”

ஆறுதலுக்கு சொல்கிறார் என்றுதான் நினைத்தேன் அப்போது அவ்வளவு பழக்கம் இல்லாததால்!

இதில் பெரிய விஷயம், அவர் தொழில்முறை விவசாயி அல்ல!  பொழுதுபோக்குக்கு!

எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர்,
ஸ்பின்ன்னிங் மில் எரெக்சன் வேலைகளில் கில்லாடி! 

அதிலும் இதே ஈடுபாடு!

உழைப்புக்கும் அலைச்சலுக்கு கொஞ்சமும் அஞ்சாத குணம்!

இன்னைக்கு ரெஸ்ட் என்று அவர் சொல்லிக் கேட்டதே இல்லை என்ற அளவுக்கு அசராத தேனீ!

ஒரு வருடம் ஆச்சு அதற்குப்பிறகு!

எத்தனை நடந்திருக்கிறது இந்த இடைப்பட்ட நாட்களில்!


திடீர்ன்னு ஒருநாள் ஃபோன் வரும்
“ஸார், நான் தோட்டத்தில் இருக்கேன், மதியமா புறப்பட்டு வர்றீங்களா?”

போய் பார்த்தால், காடு முழுக்க உழவு ஓடியிருக்கும்!

“அடுத்தவாரம் போர் போட்ரலாம் ஸார்!”

சொல்லிட்டுப்போன ரெண்டாவது நாள்,
"ஸார், ஒரு சின்ன கேப் கிடைச்சுது! டிவைனரை கூட்டிக்கிட்டு தோட்டத்துக்கு வந்துட்டேன்!"

அடுத்த ரெண்டு மணி நேரத்தில் அடுத்த சேதி
 "ஸார் போர் போட ஆரம்பிச்சாச்சு!"

நடு ஜாமத்தில் அடுத்த கால்
- "ஸார், அறுநூறு அடியில தண்ணி வந்திருச்சு!"

மறுநாள் கொஞ்சம் குற்ற உணர்வோடு தோட்டத்துக்குப் போனால், அலட்சியமாக கிணற்றுமேட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருப்பார்!

அங்கிருப்பவர்கள் சொல்லும்போது நமக்கு மனசுக்குள் கசியும்
"ஸார் நைட்டு ஃபுல்லா தூங்கவே இல்லைங்க!"

கண் விழித்ததும் அதே அட்டகாசமான சிரிப்பு,
 "ஸார், போர் தண்ணி பார்த்தீங்களா?"

“என்னை கூப்பிட்டிருக்கலாமே?” - மனசு தாளாமல் கேட்டால்,

"சும்மா இருங்க ஸார், நீங்க இங்க வந்து என்ன பண்ணப்போறீங்க?"

கொஞ்சம் கொஞ்சமாக கண்ணெதிரே தோட்டம் உருவானது

அதில் என்னோட உழைப்பு எதுவுமே இல்லை
எப்போதாவது விருந்தாளி போல போய் எட்டிப் பார்த்து வருவதோடு சரி!வேலி போட்டுக்கொண்டிருந்த மறுநாள் மதியத்தில்
திடீரென்று வந்து இறங்கிய கொய்யா நாற்றுக்களும், எலுமிச்சை கன்றுகளும் அடுத்த நாளில் நடவு முடிந்து, காலையில் பார்க்கும்போது வேறு யார் தோட்டத்துக்கோ வந்துவிட்ட மலைப்பு!

திடீரென்று ஒரு ஃபோன் வரும்
ஸார், இப்போதான் நார்த்ல இருந்து வந்தேன். இப்போ கிளம்பிடுவேன். முடிஞ்சா காங்கயம் வந்துடறீங்களா? சிரமம் எதுவும் இல்லையே?”

யார் வேலைக்கு யார் சிரமம் பார்ப்பது?
அதுதான் பாலு ஸார்!

நான் போறதுக்கு முன்னால காங்கயத்துல நிற்பார்!

போறவழில ஒரு டீ! அதிலேயே உயிர் வாழும் ஒரு அற்புத பிறவி!

தோட்டத்துக்கு போனதும் நம்மை கண்டுக்கவே மாட்டார்.

“நீங்க போய் அம்மாவ பார்த்துட்டு மதியம் ஆளுகளுக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்துருங்க. இங்க ஏன் வெய்யில்ல நிக்கறீங்க!”
கழுத்தைப் பிடித்து அனுப்பாத குறையாக அனுப்பிவிட்டு,
“ஐயா, அப்புறம் என்ன ஆச்சு?”
 கேட்டுக்கொண்டே உள்ளே போவார்!

சாப்பாடு வாங்க கொங்கு மெஸ் போனால்,
"வாங்க, தோட்டத்துக்குத்தானே, பழனிக்காரர் சொன்னாருங்க கட்டி வெச்சாச்சு!"

நமக்கு வெறும் ட்ரைவர் வேலைதான்!

எல்லா சுமையும் அவர் தலை மேல!

ஒருநாள் மோட்டார் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி அவரை காங்கேயத்தில் இறக்கிவிடும்போது ராத்திரி மணி பதினொன்று!

"நான் வேணும்னா பழனில கொண்டுவந்து விடட்டுமா?  காலைல நேரமா மில்லுக்கு போகணும்னு சொன்னீங்களே"

"பேசாம இருங்க சார், அந்த டைம்ல நீங்க கோயமுத்தூர் போயறலாம். போனதுமே மறக்காம ஒரு மெசேஜ் அனுப்பிடுங்க!"

பேரனுக்கு தன் குணத்தைத்தான் பெயராக வைத்திருக்கிறார்
பேரன்பு!

அடுத்த அதிர்ச்சி விடிந்ததுமே!

நடு ஜாமத்தில் நடுவழில இறக்கி விட்டுட்டு வந்தோமேன்னு காலைல ஆறுமணிக்கு போன் பண்ணி,
“சார், கிளம்பிட்டீங்களா? “

“கிளம்பிட்டேன், ஆனா மில்லுக்கு போகலை, எனக்கு என்னவோ சந்தேகமாகவே இருந்துச்சு, அதுதான் மோகனூர் தோட்டத்துக்கு கிளம்பி இதோ, வந்து சேர்ந்துட்டேன்!”

பழனி போன வேகத்துல, குளிச்சுட்டு அப்படியே கிளம்பியிருக்கிறார் படுபாவி மனுஷன்!

மகளிடம் சொல்லி சொல்லி ஆற்றுப்போவேன்!

இப்படி ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லைடா!”
“சத்தியமாக நானாக இருந்தால் இப்படி ஒருவருக்கு எந்த உபகாரமும் எதிர்ப்பார்க்காமல் ஓயாமல் உதவி செய்யமாட்டேன்!

கடவுள் தன் இருப்பை நமக்குக்  காட்ட படைத்துவிட்ட சில அபூர்வ பிறவிகளில் உங்க அங்கிளும் ஒருத்தர்டா!”

இதை அவரிடம் ஒருதடவைகூட சொல்ல முயன்றதில்லை!

ஒரே ஒருதடவை நன்றி சொன்னதுக்கே பயங்கரமா கோபித்துக்கொண்டார்!
சட்டென்று கோபம் வரும்!

சரியான சுடுகஞ்சி!

“இனி நான் வரமாட்டேன்! என்னை விட்ருங்க!”
சொல்லிவிட்டு இறங்கிப்போவார்!

மறுநாள் காலை
ஸார், மதியம் ரெடியா இருங்க தோட்டத்துல கொஞ்சம் வேலை இருக்கு!”

பிள்ளைக் கோபத்துக்கு ஆயுள் சில நிமிடங்கள்!

இப்போ, தோட்டம் முழுமையாக ரெடி!


காய்த்துக் குலுங்கும் கொய்யா மரங்களில் பாலு ஸாருடைய உழைப்பு மட்டுமே தெரிகிறது!

இப்படி நட்பு நட்பு என்று பத்துப்பைசா பலன் இல்லாமல் தன் வேலையைக்கூட விட்டுவிட்டு அலையும் மனிதரை இதுவரை நான் பார்த்ததே இல்லை!
இனிமேலும் இப்படி ஒரு ஜீவனைப் பார்ப்பேன் என்று நம்பிக்கையும் இல்லை!

இதோ, இன்றைக்கு காலையில்
ஸார் அடுத்தவாரம் பின்னாடி நிலத்தில் வேலையை ஆரம்பிச்சிடலாம்!
நான் மில் வேலையை முடிச்சுட்டு வந்துடறேன்!”

என் மகள் அடிக்கடி கேட்கும் கேள்வி

அங்கிள் மட்டும் ஏன்ப்பா இப்படி இருக்காரு?

எனக்குத் தெரிந்த ஒரே பதிலைத்தான் நான் சொல்வதுண்டு

உலகில் மழை பெய்யவைக்க 
கடவுளுக்கு ஏதாவது காரணம் வேண்டாமா
அதனாலதான்!கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான்;- நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்;

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
பேச்சினி லேசொல்லு வான்;
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்
உண்ணும் வழியுரைப் பான்;
அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக் குள்வரு வான்;
மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்
வாழ்வினுக் கெங்கள்கண்ணன்;

No comments:

Post a comment