திங்கள், 27 மே, 2019

இளையராஜாவின் விமர்சனம் கண்டிப்பாக ஏற்புடைத்ததல்ல. ஆனால்.....
இளையராஜாவின் விமர்சனம் கண்டிப்பாக ஏற்புடைத்ததல்ல.
ஆனால்.....

இது ஒன்றும் முட்டுக்கொடுத்தல் இல்லை
இளையராஜாவுடைய விமர்சனம் கண்டிப்பாக ஏற்புடையது அல்ல! ஆனால்
அவர் முற்றும் துறந்த ஞானி அல்ல இசைஞானி

ஏற்கனவே காப்பிரைட் பிரச்னையில் கொஞ்சமும் அடிப்படை புரிதலே இல்லாமல் அவரை தேவைக்குமேல் விமர்சித்து காறித்துப்பியாயிற்று!

இங்கு கிறுக்கும் ஒற்றைவரி பதிவை காப்பியடித்துவிட்டார்கள் என்று பரம்பரையையே விமர்சித்து பொங்கும் பலருக்குமே இளையராஜாவின் நியாயம் அப்போதும் இப்போதும் புரியவில்லை!

ஏற்கனேவே அந்த விஷயம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மனிதரிடம் கேள்வி கேட்கும்போது அந்தக் கேள்வியை அவர் சரியாக உள்வாங்கிக்கொண்டாரா என்று கொஞ்சம் கவனித்து சரி செய்திருக்கலாம் என்பது என் கருத்து!

அரைமணி பேட்டியில் எல்லாமே சரியாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு கேள்வி,

நீங்கள் திரைப்படம் எதுவும் எதுவும் பார்ப்பதில்லையா?

ஆமாம்!

சமீபத்தில் 96 என்றொரு படம் வந்ததே பார்த்தீர்களா?

இல்லை!

அதில் 80S காலகட்டத்தை காட்டும்போது உங்கள் பாடல்களை காட்டுகிறார்களே!

உடனே பொங்கிவிட்டார் ராஜா!

அதில் அவர் உபயோகித்த வார்த்தைகள் கண்டிப்பாக தவறுதான்! அதில் மாற்றுக்கருத்தே இல்லை!

ஆனால், அவர் அதற்கு சொன்ன உதாரணம் அந்தக் கேள்வியின் அடிப்படையையே அவர் புரிந்துகொள்ளவில்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டியது!

அதில் பள்ளியில் பாடலைப் பாடும் பெண் உங்கள் படப்பாடல்களை பாடுகிறார் என்று அந்த சூழ்நிலையை விளக்கியிருக்கவேண்டியது பேட்டி காண்பவரின் கடமை இல்லையா?

அப்படி அந்த சூழலை விளக்கியிருந்தால், தவறான புரிதலுக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்கும் பெருந்தன்மை ராஜாவுக்கு உண்டு என்பதில் அவரது வெறுப்பாளர்களுக்குக்கூட மாற்றுக்கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்!

அதைவிட்டு அவரச அவசரமாக தவறான புரிதலோடு பேட்டியை முடிப்பது பிழை இல்லையா?

இன்னொரு விமர்சனம், ராஜாவின் உடல்மொழி, தலைகனம் பற்றி!

மனைவி அரைத்துவைத்த பொடி, மற்றவற்றை உபயோகித்து செய்யும் சமையல் அம்மா சமையலைவிட நன்றாக இருக்கிறது என்று பிள்ளைகள் சொல்லும்போது,

 ஏதோ ஒரு யூ ட்யூப் சேனலைப் பார்த்து செய்யும் சமையலோ, கைவினைப்பொருளோ சிறப்பாக வந்துவிடும்போது,

எங்கோ, யாரோ சொல்லிக்கொடுத்த ஒரு தீர்வை முன்வைத்து பணியிடத்தில் பாராட்டுப் பெறும்போது,

ஏதோ பெரிதாக சாதித்துவிட்டது போல் ஒரு தலைகனம் நமக்கு வருகையில்,

இத்தனை சாதனைகள் செய்த ஒரு படைப்பாளிக்கு இருக்கும் ஞானச்செருக்கு அவ்வளவு மோசமானதா என்ன?

இளையராஜா காலத்தால் அழியாத பாடல்களைத் தந்தார் என்பது உண்மைதானே?

பின்னணி இசையில் தனி முத்திரை பதித்தவர் என்பது உண்மைதானே?

ஆயிரம் படங்களுக்கு இசையமைக்கும் சாதனையை இன்னொருவர் செய்வது அவ்வளவு சுலபமாய் முடியாது எனபது உண்மைதானே?

இளையராஜா பாட்டுக்களுக்காக மட்டுமே படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடியது என்பது உண்மைதானே?

இதை நீங்கள் அத்தனை பேரும் சொல்வீர்கள்தானே?

அப்படியானால் அதை இளையராஜா சொல்வதிலோ, 
ஆமோதித்து ஏற்றுக்கொள்வதிலோ உங்களுக்கு என்ன பிரச்னை?

உங்கள் ஸ்டாண்டர்ட் டெம்ப்ளேட் தன்னடக்கத்தில் அவர் தன்னைப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

போலித் தன்னடக்கத்துக்கு இருக்கும் மரியாதை ஏன் தன் பெருமையை, உயர்வை தானே ஏற்றுக்கொள்ளும் நேர்மைக்கு இல்லை?


அதில் என்ன பிழை?

வயதானவர்களுக்கு சட்டென்று வரும் உணர்வு மாற்றங்களும் கோபமும் இளையராஜாவுக்கு மட்டும் வரக்கூடாது என்பதில் என்னவிதமான லாஜிக் இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை!


விமர்சியுங்கள், யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை
ஆனால் 
எதையும் முழுமையாகப் பார்க்காமல், ராஜா என்றால் அடிப்போம் என்று ஓடிவராதீர்கள்

ராஜா நிச்சயம் இதைவிடக் கொஞ்சம் மரியாதைக்கு உரியவர்!

நன்றி!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக