சனி, 8 ஜூன், 2019

இருபது வருஷமாக கிடைக்காத பதிலைத் தேடி காந்தி தேசத்தில் ....மோடி காலத்து காந்தி தேசத்தில் ஒரு குறும்பயணம்!


மார்க்கெட்டிங்கில் இருப்பதில் இது ஒரு வசதி!

நினைத்த நேரத்துக்கு பெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடலாம்!

ஒருமுறையாவது குஜராத் போகவேண்டும் என்பது நெடுநாள் கனவு!

காந்தி என்கின்ற பனியா (ஜாதியை வைத்து அடையாளம் காண்பதுதானே இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட்) பிறந்த மண்ணை ஒருமுறை மிதித்துவிடவேண்டும் என்ற ஒரு கிறுக்குத்தனமான தேசபக்தி!

சட்டென்று வந்த ராஜ்கோட் பயண வாய்ப்பை பற்றிக்கொண்டு கிளம்பியாச்சு!

நிறைய டெக்னிக்கல் விஷயங்களை பேசி முடிவு செய்யவேண்டியிருந்ததால் கூடவே டெக்னிக்கல் டைரக்டரும்!

இந்த ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுவதெல்லாம் எனக்கு கொஞ்சம் அதிகப்படி டெக்னாலஜி.

அதனால் அந்தப்பொறுப்பு அவர் தலையில்!

நமக்கு இணையம்தானே தகவல் களஞ்சியம்!

குஜராத்தில் எல்லோரும் காவித்துணியும் திலகம்போல் குங்குமமுமாய் கையில் தடியோடு சுற்றுவார்கள் என்பது ஒருபுறம்!
குஜராத் மாடல் என்று வாய்கிழிய கத்துவதால்,
ஒன்று, அங்கு பாலாறும் தேனாறும் ஓடும்
அல்லது, கொடூரமான கற்காலத்து வாழ்க்கையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம்!

கிளம்புவதற்கு முந்தையநாள் டிக்கெட் விபரம் கேட்க, முதல் கோணல்!

கோவை - மும்பை - அஹமதாபாத் என்று டிக்கெட் புக் பண்ணியிருந்தார்!

ஏன் ராஜ்கோட்டுக்கு நேரிடையாக போகவில்லை என்பதற்கு ஒரு விபரீத வியாக்கியானம் - இத்தனைக்கும் அவர் ட்விட்டரில்கூட இல்லை!

திரும்பிவரும்போது அலஹாபாத்தில் வேலை இருக்கிறது!

அதற்கு என்ன கருமத்துக்கு போகும்போது அலஹாபாத்தில் என்று கேட்க நினைத்து வரப்போகும் பதிலை நினைத்து மௌனமாக இருந்து தொலைத்துவிட்டேன்!

மும்பை செல்லும் விமானம் தேசிய வழக்கப்படி தாமதம்
ஏறத்தாழ ஓடிப்போய் அஹமதாபாத் போக ஏர் இண்டியா விமானத்தில் ஏற, எங்க பாட்டி வயசில் ஒரு பழைய தேவதை சொன்ன நமஸ்தே கொஞ்சம் அந்த நள்ளிரவில் பயமாகத்தான் இருந்தது!
இதில் ஒரு ஊருக்கே ஆகும் லிப்ஸ்டிக் வேறு!


அஹமதாபாத்தில் கிழவி புன்னகைத்து இறக்கிவிட்டபோது நள்ளிரவு ரெண்டு மணி!

விமான நிலையம் முழுக்க பட்டேலும் காந்தியும்!

அதிலும் ஒரு இடத்தில் ஒரு தர்மசங்கடமான பைல்ஸ் பேஷண்ட் போஸில் காந்தி உட்கார்ந்திருக்க, என்ன இது என்று உற்றுப்பார்க்கையில் தெரிந்தது அவரிடமிருந்த ராட்டை களவாடவோ அகற்றவோ பட்டிருந்தது!

காற்றில் நூல் நூற்கும் போஸ் காந்தியே கொடுத்தாலும் கொடூரமாகத்தான் இருந்து தொலைக்கும்!

அந்த நேரத்தில் ஃபோட்டோ எடுக்க மனமில்லாமல், திரும்பி வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று வாசலுக்கு ஓட்டம்!

இந்த நள்ளிரவு வேளையில் குஜராத்தில் அஹோரிகள்தான் சுற்றிக்கொண்டிருப்பார்கள் என்பதுவேறு மண்டைக்குள்!

இரண்டுபேருக்குமே குஜராத்தி தெரியாது!

ஹிந்தி, எனக்கு சோளிக்கே பீச்சே க்யாஹே வரைக்கும் தெரியும்!

அவர் என்னைவிட கொஞ்சம் பரவாயில்லை- ரஹுதாத்தா வரைக்கும் தெரியும்!

அந்த நேரத்தில் அனல் பறக்கும் க்ளைமேட் வேறு!

வெளியே வந்தால், கண்ணில் பட்ட ஆட்டோவில் எல்லாம் காவித்துணி, ட்ரைவர் நெற்றியில் குங்கும தீற்றல் மூக்கிலிருந்து முடிவரை!

பேசாமல் நாமும் குங்குமம் தீற்றிக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்ற,

ஊரில் ஒருநாள் குலதெய்வம் கோவிலில் பூசாரி கொடுத்த குங்குமத்தை கொஞ்சம் பெருசா நெத்தியில் வெச்சிருந்தபோது பிட்டர்ஹாஃப் எல்லோர் முன்னாலும் கூப்பிட்டு அன்பாய்ச் சொன்னது ஞாபகம் வந்து தொலைத்தது!

“மொதல்ல அதை அழிங்க! உங்க மூஞ்சிக்கு குங்குமப்பொட்டு வெச்சா ரெண்டும்கெட்டான் மாதிரி இருக்கு! அப்படியே ரோட்டில் போனால் எவனாவது, எவளாவது கையைத் தட்டி கூப்பிட்டுத் தொலைக்கப் போகிறார்கள்!”

(கண்ணாடியில் பார்க்கும்போது எனக்கே கைதட்டி கூப்பிடத் தோன்றியது வேறு விஷயம். ஆனால் இப்படி ஒரு அவமானத்தை குலதெய்வம்கூட வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது என்ன நியாயம்?)

விடுங்கள்! நடுஜாமத்தில் பாஷை தெரியாத அத்துவானத்தில் நின்றுகொண்டு இந்த ஆராய்ச்சி எதற்கு?

கூடவந்த ரஹுதாத்தா, பையா, ரஷ்தா, பஸ், ராஜ்கோட் என்று ஏதோ உளறி ஜம்முன்னு ஆட்டோல ஏறி உட்கார்ந்துட்டார்!

போகும்போது எங்கே போறோம்ன்னு கேட்க,
யாருக்குத் தெரியும்ன்னு ஒரு பதில்!

அனல் பறக்கற தார்சாலைல ஒரு யுகம் போனபின்னாடி இன்னொரு அத்துவானம்!

பத்து நிமிஷத்தில் (ச்சார்ன்னா பத்துதானே?) பஸ் வரும்ன்னு சொன்னவன் ஆயிரத்து நூறு ரூபாயை பிடுங்கிக்கொண்டு ஏசி ஸ்லீப்பர் அப்படின்னு ஏதோ சொல்ல, என் வழித்துணைக்கு கொஞ்சம் மூஞ்சி பேஸ்த் அடித்தது!

சின்னக்குழந்தை மூத்திரம் போல ஒரு பத்து மில்லி டீயை வாங்கிக்குடித்துவிட்டு (பத்துரூபாய்க்கு அநியாயம்) பஸ்ஸில் ஏறிப் படுத்த ரெண்டாவது நிமிடம் பயணத்துணை உலுப்பி எழுப்பினார்!

என்ன விஷயம்னு கேட்டா
வாந்தி வருது!

தொப்பையைப் பார்த்துக்கொண்டே "ஏன் ஸார் முழுகாம இருக்கீங்களா?"

விளையாடாதீங்க, இதுக்குமேல ட்ராவல் பண்ண முடியாது. இறங்கிக்கலாம்!

ட்ரைவர் வாபஸ் காடின்னு ஏதோ சொல்லி ஒரு அத்துவானக் காட்டில் உதிர்த்துவிட்டுப் பறந்தே போனான்!

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அரைமணி தேவுடு காத்தபிறகு எங்கிருந்தோ ஒரு ஸ்கூட்டர்காரர் வந்தார்!

ரெண்டு அபலைகள் நடுரோட்டில் நள்ளிரவில், காந்தி தேசமாய் இருந்தாலும் அது அவ்வளவு பத்திரமில்லை என்று ட்ரிப்பிள்ஸ் அடித்துக் கூட்டிப்போய் ஒரு ஆட்டோ ஏற்றிவிட்டார் நல்ல மனசுக்காரர்!

வழி நெடுக அவர் ஓயாமல் கிதர் உதர்ன்னு பேசிக்கிட்டே வந்தது உபதேசம்ன்னு மட்டும் புரிந்தது!

அந்த ஆட்டோக்காரரிடம் ஏதோ சொல்லியனுப்ப, எம்ஜியார் படத்து வில்லன் கையாள் மாதிரி சரிங்க எஜமான்னு தலையை ஆட்டிட்டு ஏறி உட்கார்ந்ததும் ஆட்டோவை 150 கிலோமீட்டர் வேகத்தில் எடுத்தபோது சொன்ன ஸாலா எங்களுக்கு இல்லைதானே!

மூத்திரச் சந்துக்குள் ஒரு ஹோட்டல். 
அதில் ராத்தங்க ஒரு ரூம்!

"ஒரு நாலு மணிநேரம் தூங்க ரெண்டு ரூம் எதுக்கு? ஒரே ரூம் போதும்". திருவாய் மலர்ந்தார் மசக்கை.

எனக்கு இந்த ரூம் ஷேரிங் எல்லாம் அலர்ஜி!

ஹனிமூன் போனப்பவே ரெண்டு சிங்கிள் ரூம் கிடைக்குமான்னு கேட்டவன் நான்!

என்ன பண்ண, நாய் வேஷம் போட்டாச்சு!

ஒரே ரூமில் 
- நல்லவேளை தனித்தனி படுக்கை!- 
அக்கடான்னு சாயும்போது அதிகாலை மூணரை மணி!

படுத்து ரெண்டாவது நிமிஷம், பக்கத்தில் எங்கேயோ மரம் அறுக்கற மிஷின் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க!

என்னாடா இது சோதனைன்னு எழுந்து பார்த்தால், அது பக்கத்துப் படுக்கை பிள்ளைத்தாய்ச்சி குறட்டை!

எல்லா ஸ்ருதியிலும் பசிக்கு உறுமும் ஜீவன் போலொரு சத்தம்!

நாலு மணிக்கு குஜராத் ரோட்ல டீயைத் தேடி வாக்கிங் போவேன்னு கேரளால சோழி உருட்டின ஜோசியன்கூட சொல்லலை!

தெருத்தெருவாய் சுத்தி முடிச்சு ஆறுமணிக்கு ரூமுக்கு வந்தபோதும் அதே மர அறுப்பும், பசி உறுமலும் சுதி மாறாமல்!

ஒருவழியா குளிச்சு சிங்காரிச்சு கிளம்பி (ப்ரேக்ஃபாஸ்டுக்கு இட்லியேதான் வேணும்- டைரக்டர்!) பஸ் மாதிரி ஏதோ ஒன்னில் ஏறி சுரேந்திர நகர்!

நாலு மணிநேர பயணம், அங்கே அப்பா தாயேன்னு ஒரு மார்க்கெட்டிங் கெஞ்சல் முடிச்சு இன்னொரு கொடூரமான பயணத்துக்குப்பிறகு ராஜ்கோட்!

ராத்திரி எட்டு மணிக்கு ஏகதேசம் 50 டிகிரி உஷ்ணம்!

இந்த வேலையே இல்லாம போனாலும் பரவாயில்லை, எனக்கு தனி ரூம்தான் வேணும்னு அடம்பிடிச்சு ரூமில் வந்து விழுந்தபோதே அரைத்தூக்கம்!

ஆனால், ரூம் அப்படி ஒரு இதம் - முதல் முறை போன மாமியார் வீடு மாதிரி!

அன்னைக்கு நடந்த டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இங்கே எதுக்கு?

மறுநாள் மதியம் ஒரு மணிக்கு அஹமதாபாத்தில் ஃப்ளைட்.

அதிகாலை அஞ்சு மணிக்கு பஸ் பிடிச்சு போய்டுங்கன்னு ஆட்டோக்காரன்ல இருந்து குஜராத் ஆதியோகி வரைக்கும் அத்தனைபேரும் சொன்னாலும்,  எங்காளு ஒரே அடம்!

215 கிலோமீட்டர்தான், நாலு மணி நேரத்துல போய்டலாம்!

பன்னண்டே காலுக்கு ரிப்போர்ட் பண்ணினா போதும்! அதுனால ஏழுமணிக்கு பஸ் பிடிச்சால் போதும்ன்னு அடம்பிடிச்சு, ஏழுமணி பஸ்ஸுக்கு டிக்கெட்!

ஆனா, சும்மா சொல்லக்கூடாது, அரசுப்பேருந்து சும்மா ரதம் மாதிரி இருந்துச்சு!

ஏழு மணி வண்டி சரியா ஏழுமணிக்கு எடுத்துட்டான்!

உவமைக்கவிஞர் லல்லுபிரசாத் யாதவ் சொன்னமாதிரி NH 47 ரோடு உண்மையாவே ஹேமமாலினி கன்னம் மாதிரிதான் இருந்தது!

பஸ்ஸும் போறதே தெரியாம வழுக்கிக்கிட்டு போகுது!

முதல் கால் மணிநேரம் சொர்க்கம்!

அப்புறம்தான் கவனிச்சேன், டிரைவர் அரை கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் ஒரு டூ வீலரைப் பார்த்தாலே கல்லைக்கண்ட நாயைப்போல பதுங்குவதை!

உண்மையிலேயே சொர்க்கரதம் போல இறுதி ஊர்வல வேகத்தில் நகருது வண்டி!

சத்தியமா ஏதாவது மிராக்கிள் நடக்காம ராத்திரிக்கு முன்னால அஹமதாபாத் போய் சேரமாட்டோம்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார் ஏழு மணிக்கு முன்னால பஸ் ஏறமாட்டேன்னு அடம் பிடித்த அறிஞர்!

இதே பஸ்ஸில் டெர்மினஸ் வரைக்கும் போனால் ஃப்ளைட்டை அண்ணாந்துகூட பார்க்கமுடியாது என்பது புரிந்து
அஹமதாபாத் எல்லை வந்ததும் ரேப்புக்கு தப்பித்த ஹீரோயின் மாதிரி பஸ்ஸிலிருந்து குதித்து ஆட்டோ தேட

வயசான ஆளா பார்ப்போம் அதுதான் ஸேஃப்டி அப்படின்னு ஏதோ ஆரம்பித்தவரை மனசுக்குள் ஆயிரம் கெட்டவார்த்தை சொல்லி வாயை மூடச்சொல்லி செய்கையில் சொல்லிவிட்டு, ஒரு முறுக்குமீசை ரன்பீர்சிங்கை பிடித்தேன்!

வழக்கம்போல ரகுதாத்தா ஏதோ ஆரம்பிக்க,

ஜெட் வேகத்தில், ஏர்போர்ட், அர்ஜெண்ட்ன்னு மணிரத்னம் வசனம் சொல்லி ஏறியபோது செக் இன் முடிய இன்னும் பத்து நிமிஷம்தான்!

18 கிலோமீட்டர், தஸ் மினிட் டைம்ஹே ஏர்போர்ட் சலோன்னு சொன்னவனை வேற்றுகிரகவாசியைப் பார்ப்பதுபோல் பார்த்து ஆட்டோ காதை முறுக்கிய ரன்பீர்!
அடுத்த எட்டு நிமிஷத்தில் நடந்தது அந்த மிராக்கிள்!

ஒரு ஆள் பூதக்கூடிய சந்துபொந்து எல்லாம் புகுந்து புறப்பட்டது ஆட்டோ!

பிளாட்ஃபாரம் எல்லாம் நடக்க மட்டும் என்று எவன் சொன்னான்!

சிக்னலாவது ஹைகோர்ட்டாவது!

ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி ஏற முடிஞ்சது மேல எல்லாம் ஏறி பறந்தது ஆட்டோ!

பிறந்தபோது கிராமத்து மருத்துவச்சி தொட்டுவெச்ச தேனை அன்னைக்குத்தான் துப்பினேன்!

க்க்க்க்ரீச் ....
ப்ரேக் போட்ட கார்க்காரன் சொன்னது கண்டிப்பாக உன்னதமான கெட்டவார்த்தைதான்!

ரண்பீரோட  அம்மா, பாட்டி எல்லோர் கற்பையும் சோதிக்கற வார்த்தைபோல!

குஜராத்திலயோ ஹிந்தியிலயோ ஏதோ திட்டிக்கொண்டே இன்னும் வேகமாக பறக்க ஆரம்பித்தார் ரண்பீர்!

பிள்ளைத்தாய்ச்சி, வாந்தி எடுக்கக்கூட மறந்து சத்தமாகவே கந்தர்சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டுவர,

ஏர்போர்ட்டில் 800 ரூபாய் வாங்கிக்கொண்டு ரன்பீர் எங்களை உதிர்த்தபோது, செக்யூரிட்டி செக் ஆபீஸர் எல்லாம் சாப்பாட்டுக்கு கிளம்பிகொண்டிருந்தார்கள்!

இன்னும் பத்து செகண்ட் இருக்கு, ஊரில் மாமியார் கர்ப்பம்னு ஏதேதோ சொல்லி காலில் விழாத குறையாய் கெஞ்சி கூத்தாடி ஹாண்ட் லக்கேஜை ஸ்கேனுக்கு அனுப்பிவிட்டு பறவையைப்போல சிறகை விரித்து நின்றபோது,

அந்த கார்க்காரன் சொன்ன அதே கெட்டவார்த்தை இன்னும் சத்தமாக..

சொன்னது தடவிப்பார்த்த செக்யூரிட்டி ஆபீஸர்!

மாசம் ஆறு இலக்கத்தில் சம்பளம் வாங்கும் டைரக்டர் பாக்கெட்டில்
ஹோட்டல் ரூமில் வைத்திருந்த காம்ப்ளிமெண்டரி ரேஷர்!

அவரைப்பிடித்து குஜராத் ஜெயிலில் போடுங்கள் ஆபீஸர் என்று பையைத் தூக்கிக்கொண்டு ஒரே ஓட்டம்!

நான் உள்ளே புகுந்ததுமே மொத்த ஏர்ஹோஸ்டஸும் ஃபர்ஸ்ட் நைட் ரூமில் பெண்டாட்டி நுழைந்ததும் சார்த்தும் வேகத்தில் சார்த்திய கதவை தட்டிக் கெஞ்சி உள்ளே வந்த டைரக்டர் காலியாய் இருந்த கடைசி சீட்டில் போய் உட்கார்ந்தவர் கோவை வர வரைக்கும் பக்கத்தில் வரணுமே!

அடுத்தமுறை போகும்போதாவது குஜராத்துக்கு தனியே போய் இருபது வருட கேள்விக்கு பதில் கண்டுபிடிக்கணும்!

சோளிக்கே பீச்சே க்யாஹே?