புதன், 31 ஜூலை, 2019

வேகமாக நலிந்துவரும் தொழிலும் கண்டுகொள்ளாது உறங்கும் அரசும்!
தவறுகளிலிருந்து பாடம் கற்கும் மனநிலையிலேயே இல்லை போல இந்த அரசு.

மோட்டார் வாகனங்கள் மீதான இந்த அரசின் பார்வை மிக ஆபத்தானது!

எல்லாவற்றையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற விடலை மனோபாவத்திலிருந்து முதலில் விடுபடவேண்டும் நம் பிரதமர்!

சுற்றுச் சூழல் மீது திடீரென்று ஏற்பட்டிருக்கும் இந்த மிகு அக்கறை பயத்தைத்தான் ஏற்படுத்துகிறது!

நான் உட்பட பலரும் சில்லறையை சிதறவிட்ட டீமானிடைசேஷன் தவறான நடைமுறைப்படுத்தலால் எவ்வளவு பெரிய தோல்வியில் முடிந்தது என்பது ஷேகர் ரெட்டிகள் சொல்லிக்கொடுத்த பாடம்!

எதையும் தான்தான் முதலில் செய்தேன் என்று சொல்லிக்கொள்ளும் பேரவசரம் மோடிக்கு!

வளர்ந்த நாடுகளே படிப்படியாக அமல்படுத்த முயலும் ஒரு மாற்றத்தை எந்த ஒரு கால அவகாசமும் கொடுக்காமல் உடனே உடனே என்று செயல்படுத்தத் துடிப்பது கடைந்தெடுத்த அரைவேக்காட்டுத்தனம்!

முதிர்ச்சி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்போல நம் பிரதமர்!

பெட்ரோல் டீசல் வாகனங்களை உடனே ஒழித்து, நாளைக் காலை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது அத்தனை சுலபம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரா மோடி?

அவருடைய ஆலோசகர்கள் என்ன செய்கிறார்கள்?


எதற்காக இத்தனை தகவல்கள் அவசர அவசரமாக கசியவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன?

நாட்டில் நடப்பது ஏதாவது பிரதமர் பார்வைக்குப் போகிறதா?

சென்னையில் முதன்முதல் துவங்கப்பட்ட ஜப்பானிய கார் நிறுவனம் இப்போது வாரத்துக்கு மூன்று நாட்கள் விடுமுறை விட்டிருப்பது

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் கொரிய கார் நிறுவனம் ஒரு ஷிஃப்டை குறைத்திருப்பது

ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தி சாலை வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே இயங்குவது 

மாருதி உட்பட எல்லாக் கார் தயாரிப்பு நிறுவனங்களிலும் குப்பையாகத் தேங்கிப்போன வாகனங்களின் எண்ணிக்கை

ஏறத்தாழ 30 சதவிகிதம் சரிந்திருக்கும் வாகன விற்பனை

இதில் ஏதும் அரசின் கவனத்துக்குப் போகவே இல்லையா?

எனில், இதற்கு அரசு எதற்கு?

தெரிந்தே மௌனம் சாதிக்கிறது அரசு எனில், திரைமறைவில் வேறு ஏதும் பேரங்கள் நடக்கிறதா?

அதானி வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது பிரதமரே!

ஒரே இடத்தில் மட்டும் வளர்ந்தால் அது வீக்கம். எல்லாத் துறையும், எல்லாத் தொழிலும் வளர்ந்தால்தான் அது வளர்ச்சி!

`மோட்டார் வாகனத் தயாரிப்பு என்பது ஒற்றைத் தொழில் அல்ல!

அது சார்ந்த ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களின் தயாரிப்புத் தொழிற்சாலைகள்
அதில் ஈடுபட்ட பல்லாயிரம் தொழிலதிபர்கள்
வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம் இது!

நான் சந்திக்கும் அத்தனை தொழிலதிபர்களும் ஒரு காலத்தில் மோடி புகழ் பாடியவர்கள்.

துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவருமே மோட்டார் வாகன பாகங்கள் தயாரிப்பவர்கள்!

நேற்று ஓசூரில் ஒரு ஜெர்மன் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைக்கு சென்றபோது பத்து நாள் லே ஆஃப் முடிந்து நேற்று முன்தினம்தான் வேலை ஆரம்பித்ததாகச் சொன்னார்கள்!

இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை என்று கவலையோடு பேசியதை பார்க்கமுடிந்தது!

பல நிறுவனங்களில் இந்தமாத சம்பளம் கொடுக்கவே முடியாது என்ற சூழல்!

தயாரிக்கப்பட்ட பாகங்கள் வண்டிவண்டியாக குவித்துவைக்கப்பட்டு எல்லோர் கண்ணிலும் ஒரு கலக்கம்!


இது தேசத்தை எவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது என்பது அரசுக்குத் தெரியாதா?

நடுத்தர வர்க்கம் வெறும் வதந்திகளை நம்பி மொத்தமாக வாங்குவதையே நிறுத்திக்கொண்டபின் இத்தனை வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் என்ன செய்யும்?

இந்த வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றனவா?
அன்றி,
அவை உண்மைதானா?

அரசு இவ்வளவு குறுகிய அவகாசத்தில் எல்லா வாகனங்களையும் அழித்து மின்சார வாகனங்களை மட்டுமே இந்தியாவில் இயக்கமுடியும் என்று உறுதியாக நம்புகிறதா?

அதன் முதல் படிதான் இந்த 1000, 2000 மடங்கு பதிவுக்கட்டண உயர்வு பரிந்துரையா?

எனில், உலகிலேயே, இந்தியாதான் மற்ற எல்லா நாடுகளையும் விட பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எரிபொருள் வாகன இயக்கத்தை முற்றாக தடை செய்யப்போகிறதா?

அதற்கான முழு தயார் நிலையில் இருக்கிறதா இந்த அரசு?

குஜராத், ராஜஸ்தான், வேறு எந்த மாநிலங்கள் மின்மிகை மாநிலங்களாக இருக்கின்றன?

கோடிக்கணக்கில் இயங்கும் வாகனங்களை இயக்கப் போதுமான மின்சார உற்பத்தி அடுத்த சில மாதங்களில் ஆரம்பித்துவிடுமா?

அல்லது ஒரு யூனிட் மின்சாரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலும் வாங்குமளவு மக்கள் செழிப்பாக இருக்கிறார்களா?

அதற்கான மின்சார உற்பத்தி ஆலைகள் எங்கெங்கு நிறுவப்பட்டு, உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கிறது?அரசின் அதிகபட்ச வருவாய் பெட்ரோல் டீசல் மீதான வரிவிதிப்பால் கிடைப்பதே!
அதை முற்றாக இழந்தாலும் எந்த இழப்பும் இல்லாத அளவுக்கு வருமானத்தை பெருக்க இந்த அரசு எடுத்திருக்கும் தொழில் வளர்ச்சி நடவடிக்கைகள் என்னென்ன?

யாருக்கும் தெரியாமல் நிலவில் அந்தத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றனவா?

இத்தனை உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மாற்று ஏற்பாடு என்ன செய்திருக்கிறது அரசு?

வேலை இழந்து நிற்கப்போகும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன வழி செய்திருக்கிறது அரசு?

நடைமுறைப்படுத்தவே முடியாத ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அரசே வதந்தியை பரப்பிவிடுவது என்ன திரைமறைவு பேரத்துக்காக?

அல்லது நாட்டிலிருக்கும் எல்லாத் தொழிற்சாலைகளையும் ஒரே நிறுவனம் வாங்கிக்கொள்ளப் போகிறதா?

இரண்டாம் முறை மிருக பலத்தோடு நாடாள அனுமதித்திருக்கிறார்கள் மாக்கள் என்பதால் மிருகமாகவே ஆகிவிட்டதா அரசு?

இவ்வளவு நலிவையும் கூக்குரல்களையும் வாயே திறக்காமல் வேடிக்கை பார்க்குமளவு அரக்கத்தனம் அரசின் ரத்தத்தில் ஊறிவிட்டதா?

மிகமிக கவலைதரும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி தலை குப்புற விழுந்துகொண்டிருக்கிறது நாடு!

ஏதும் அறியாததுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டு கள்ள மௌனம் சாதிக்கிறது அரசு!

இந்தியாவை எத்தியோப்பியா ஆக்குவதற்கு உங்களுக்கு வாக்களிக்கவில்லை மக்கள்!

அத்தனை அவசரக்கோல அள்ளித் தெளிப்புகளுக்குப் பிறகும், உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, தின்னும் ஒருபிடி சோற்றையும் பிடுங்கிக்கொண்டு தெருவில் நிறுத்திவிடாதீர்கள்!

ஏழை அழுத கண்ணீர் எத்தனை சாம்ராஜ்யங்களை அழித்திருக்கிறது என்பதை கொஞ்ச நேரம் ஜெய் ஸ்ரீராம் சொல்வதை நிறுத்திவிட்டு வரலாற்றைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்!

இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கின்றன!

உருப்படியான, நடைமுறைப்படுத்தத்தக்க, பல திட்டங்களை செயல்படுத்தலாம்!

மேடைபோட்டு புளுகுவதை விட்டு, மனதார மக்களுக்காக உழைக்கலாம்!
செய்தால் பட்டேல் சிலையைவிட மக்கள் மனதில் உயரலாம்!

முதல் படியாக,
உடனடியாக கள்ள மௌனம் கலைத்து நசிந்து குற்றுயிராகிக் கொண்டிருக்கும் நடுத்தர, குறுந்தொழிற் சாலைகளை உயிர்ப்பிக்கட்டும் அரசு.

இல்லை, 
எனக்கு இதுதான் உவப்பான பாதை என்று இறுமாந்து நடந்தால், வரலாறு காறி உமிழும்!

தான் எவ்வாறு வரலாற்றில் நினைவுகூரப்பட வேண்டும் என்பதை மோடியே தீர்மானிக்கட்டும்!

அதற்கான விலையை

குருட்டுத்தனமான நம்பிக்கையில் வாக்களித்த ஆட்டு மந்தைகளோடு சேர்ந்து முதுகெலும்போ செயல்திட்டமோ இல்லாத எதிர்க்கட்சிகளும் அனுபவிக்கட்டும்!

மக்கள் நலனை மயிரளவுகூட மதிக்காத அரசியல்வியாதிகளை வளர்த்துவிட்ட
சிந்திப்பதையே நிறுத்திவிட்ட தலைமைகள் சூழ் நாட்டில் வாழ சபிக்கப்பட்ட நாமும்
அவர்களோடு .....
வெள்ளி, 19 ஜூலை, 2019

யாருக்கு சொந்தமானது திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கம்?தலைமுறை கடந்த அபிமானியோடு ஒரு நேர்காணல்!


நீண்ட நாட்களாக பகிரத் தயங்கிய ஒரு பதிவு!

இது கண்டிப்பாக கண்ணியமான விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடும் என்ற நம்பிக்கை இல்லாததால் வந்த தயக்கம்!

இருப்பினும், தோன்றியதை தயங்காது பகிரும் தளம்தானே இணையம் என்பதால், மிக நீண்ட யோசனைக்குப்பின் உங்கள் பார்வைக்கு ஒரு நேர்காணல்!

அதற்குமுன், ஒரு சின்ன அறிமுகம் - ரவியைப்பற்றி!

நினைவு தெரிந்த நாளிலிருந்து என் நண்பன்!
எங்கள் இருவருக்குள்ளும் எந்த ரகசியங்களோ, பரிமாறிக்கொள்ளாத விஷயங்களோ இல்லை!
ரவிக்கு என்மீது சமீபகாலமாக ஒரு தீராத கோபம் உண்டு!
அவன் முழு அனுமதி பெறாமல் அவன் பற்றிய பல செய்திகளை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டதாக!

ஏனோ, இந்தமுறை அவனே இதை ஒரு உரையாடல் வடிவிலேயே எழுதச் சொன்னான் - ஒரே ஒரு நிபந்தனையோடு!

நான் சொல்வதை மட்டுமே எழுதவேண்டும், உன்னுடைய விமர்சனங்கள் ஏதுமிருப்பின், அதை இடையிடையே எழுதாமல் கடைசியில் எழுது!

இதோ, ஒப்புக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டேன்! - நேரிடையாக விஷயத்துக்கு!

நான்:  ரவி, நான் அறிந்தவரை நீங்கள் ஒரு திமுக அபிமானி. ஆனால், சமீப காலங்களில் நீங்கள் ஏன் கட்சியைப்பற்றி கடுமையான விமர்சனங்களை வைக்கிறீர்கள்?

ரவி: என்னை திமுக அபிமானி என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. ஆனால்  எனக்கே  நான் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறிவிடுவேன் என்ற பயம்வந்து பல நாட்கள் ஆகின்றது!
இதற்கு ஒரு காரணம் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாவிட்டாலும், கட்சியின் செயல்பாடு கீழிறங்கி வருவது எனக்கும், என்போன்ற நடுநிலை அபிமானிகளுக்கும் ஒரு சலிப்பையும் விரக்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது!


அதற்குமுன், திமுகவுடனான உங்கள் தொடர்பு பற்றி கொஞ்சம்...


இதை தொடர்பு என்று சொல்வதைவிட பந்தம், உறவு என்று சொல்வதே சரியாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட வகுப்பை சேராத, என்போன்ற இரண்டாம் தலைமுறை பட்டதாரிகளுக்கு திமுக என்பது ஒரு வரம் தந்த சாமி.

எனக்கு முந்தைய தலைமுறை, என் தந்தை போன்றோர், பல தலைமுறைகளாக தங்களுக்கு மறுதலிக்கப்பட்டு வந்த கல்வி தங்களுக்குக் கிடைக்க, ஒரு நிலைமைக்கு உயர திமுக மட்டுமே காரணம் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தார்கள்!

அதிலும் என் தந்தை ஒரு மிகத் தீவிரமான திமுக விசுவாசி!

அவர் சொல்லிய பல வாழ்க்கைக் கதைகள் எனக்கும் இளவயதிலிருந்தே திமுக மீதான ஈர்ப்பை, பற்றுதலை அதிகப்படுத்தியிருந்தன!

மேலும் அவரது சில கொள்கைகள், அவரும் நானும் கலந்துரையாடிய பல விஷயங்கள் இவை எல்லாவற்றையுமே கொஞ்சமாவது இங்கு பகிர்ந்துகொண்டால்தான் திமுகவுடன் என் பிணைப்பு எத்தைகையது என்பது புரியம்!

சொல்லுங்க!

சிதம்பரத்தில் கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே, பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட என் தந்தை ஒரு தீவிர நாத்திகராகவே தன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கினார்.

திருமண நாளில் மந்திரம் ஓதிய புரோகிதரை இடைமறித்து அவர் வாயாலேயே திருக்குறள் படிக்கவைத்து திருமணம் நடத்துவது என்பது 1960களின் ஆரம்ப காலங்களில் எவ்வளவு பெரிய விஷயம் என்பது உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்!

1969ல் கர்ப்பிணியான மனைவி எத்தனை தடுத்தபோதும், பஸ், லாரி என்று மாறிமாறிப்போய் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதும், 1973ல் பெரியார் இறந்தபோது எதற்கும் கலங்காத அவர் கண்ணீர்விட்டுக் கதறி அழுததும் என் தாய் பலமுறை என்னிடம் குறையாகச் சொன்ன விஷயங்கள்!

அதற்குப்பின், வயலில் வேலை செய்தவரை, தோட்டியை நான் அந்தக்கால வழக்கம்போல் ஒருமையில் பெயர் சொல்லி அழைத்தபோது இடைமறித்து அவர் கண்டித்தபோதுதான், சமத்துவம், சமூக ஏற்றத்தாழ்வு இவை பற்றியெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்!

அதன்பிறகு அவர் பல்வேறு தருணங்களில் என்னோடு பகிர்ந்துகொண்ட பல விஷயங்கள் என்னை மெல்லமெல்ல ஒரு திமுக அபிமானியாகவும், ஓரளவு கொள்கைவாதியாகவும் செதுக்கின!

அவர் சொல்ல, என் மனதில் பதிந்த சில விஷயங்கள்

1. சமூக நீதி என்பது என்றைக்கேனும் எல்லோருக்கும் கிடைத்தே ஆகவேண்டும் என்றாலும், அதை இவ்வளவு விரைவாக, ஆணித்தரமாக தமிழகத்துக்கு கொண்டுவந்து சேர்த்ததில் பெரியாருக்கும், அண்ணாவுக்கும் அதற்குப்பிறகு கலைஞருக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

2. கல்வி எல்லா சமுதாயத்தினருக்கும் பொதுவானது என்று பகிரப்பட்டதற்கு இட ஒதுக்கீடு முக்கியமான காரணம்! அதற்கு திமுகவின் பங்கு மிக மேன்மையானது!

3. இந்த ஒதுக்கீட்டின் பலன் எல்லோருக்கும் சென்றடைய இன்னும் பல தலைமுறைகள் ஆகலாம்! இதில், முதல் தலைமுறையாக பலன்பெற்ற என்போன்றோர் வெறும் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதமே, உன் காலத்தில் அது அதிகபட்சம் ஐந்து சதவிகிதம் ஆகலாம்!

பல தலைமுறைகளாக  மறுதலிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக அனைவரையும் சென்றடைய ஒரு நூற்றாண்டு காலம் ஆகும்!
மிக முக்கியமான ஒரு கடமை நமக்கு இருக்கிறது. இதில் நமக்கு என்பது முதல் தலைமுறை பயனாளியாகிய நானும், இரண்டாம் தலைமுறை பயனாளியாகிய நீயும்!

4. உயரே ஏறி உட்கார்ந்துகொண்ட அதிர்ஷ்டசாலிகளான நமக்கு மற்றவர்களை மேலேற்றிவிடும் கடமை இருக்கிறது!

அதை செய்யாவிட்டாலும்,
தொடர்ந்து அந்தப் பலனை மேலேறிவிட்ட அட்வான்டேஜ் பொசிஷனை பயன்படுத்தி மற்றவர்கள் வாய்ப்பை தடுப்பது தங்களை உயர்சாதி என்று சொல்லிக்கொண்டு இத்தனை நாட்கள் நம்மைத் தடுத்தவர்கள் செய்கைக்கு கொஞ்சமும் குறைவானதல்ல!

நானும் நீயும் பெரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடவில்லை!
உன் குழந்தைகள் இதே இட ஒதுக்கீட்டில் பலன் பெறுவது நிச்சயம் பாவமல்ல!

ஆனால், நம்மிலும் கீழான நிலையில், இன்னும் ஒருமுறைகூட இந்த வாய்ப்பை அடையாத மிச்சம் 95 சதவிகித்தவருக்கு மறைமுகமாய் நாம் செய்யும் துரோகம் அது.
சட்டப்படி அது தவறில்லை, ஆனால் தர்மத்தின்படி தவறு.

எனக்குப் புரியவில்லை என்று நான் கேட்டபோது, அவர் சொன்ன பதில்.

இதில் புரிய எதுவும் இல்லை ரவி.

மனிதனுக்கு போதும் என்று எதிலுமே தோன்றிவிடாது!

எத்தனை இட்டு நிரப்பினாலும் நிரம்பாத ஓட்டை பாத்திரம் மனித மனம்

மனித நேயம் என்று ஒன்று நமக்குள் இருந்தால், இதை போராடி நமக்குப் பெற்றுத் தந்தவர்கள் லட்சியம் முழுமையாக ஈடேற வேண்டும் என்றால், நாம் சில தியாகங்களை மறைமுகமாக செய்வது நம் சமுதாயக் கடமை!

உன்னால், உன் பிள்ளைகளை கொஞ்சம் சிரமப்பட்டேனும் படிக்கவைக்கமுடியும் என்ற நிலை வருமானால்கூட, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பள்ளி, கல்லூரி அனுமதியை பெறாதே
அவர்களைவிட இன்னும் அதிகமாக அது தேவைப்படும், இன்னும் ஒருமுறை கூட வாய்ப்பைப் பெறாத முதல் தலைமுறையில் யாரோ ஒருவருக்கு அது போய் சேரட்டும்!

கால ஓட்டம், எங்கள் இருவருக்கிடையேயான பேச்சுவார்த்தையை நேரமின்மையால் கொஞ்சம் சுருங்கச் செய்தது

அவர் சொன்னதை நான் மறைமுகமாகச் செய்தேன்!

நல்ல வேளையாக என் மகளை அவர் விருப்பத்தோடு இட ஒதுக்கீடு தேவைப்படாத ஒரு படிப்பில் சேர்த்த விஷயத்தை அவரிடம் சொன்னபோது, என் கையை வாஞ்சையாகப் பற்றி அழுத்தி புன்னகைத்தார்!

என் மகனையும் அதுபோலொரு படிப்பிலேயே சேர்ப்பேன் என்று சொன்னபோது அவர் கண்கள் புன்னகைத்தன!

இன்னொரு விஷயம், அரசு இலவசமாகத் தரும் எதையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை அவர்கள் உழைத்து உயர்த்திக்கொள்ளும் நிலையை உருவாக்குவதே அரசின் கடமை. கல்வியை, மருத்துவத்தை இலவசமாகத் தரட்டும், மற்றவை அவர்களுக்கு எந்த வகையிலும் உதவாத ஓட்டுக்காக இறைக்கப்படும் கவர்ச்சி சில்லறைகள் என்பது அவர் கருத்து!

அவரோ, நானோ, கலைஞர் கொடுத்த இலவசங்களையோ, அதன்பிறகு ஜெ கொடுத்த எதையுமோ இன்றுவரை வாங்கியதில்லை!

இதை நான் அதை வாங்கிய மற்றவர்களை தாழ்த்த சொல்லவில்லை. ஆனால் ஒரு உண்மையான சுயமரியாதைக்காரனின் மனநிலையை இது பிரதிபலிப்பதாகவே நான் கருதுகிறேன்!

மன்னிக்கவும் கொஞ்சம் நீளமாகப் பேசிவிட்டேனோ?

இல்லை. தொடர்ந்து பேசுங்கள்.

ஒவ்வொருமுறை கலைஞரைப் புகழும்போதும், அண்ணா இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால், அண்ணா பற்றி எனக்கு நேரிடையான பிம்பம் ஏதும் இல்லாத நிலையில் அது ஒரு வகையில் கலைஞரை குறைத்து மதிப்பிடுவதாகாவே எனக்குப் பட்டதுண்டு.

ஆனால், அழகிரி மத்திய அமைச்சர் ஆனபோது அவர் கலங்கிச் சொன்ன வார்த்தைக்கு இன்று பொருள் புரிகிறது.

எந்தக் கலைஞரால் திமுக வளர்ந்ததோ அதே கலைஞரால் இந்த இயக்கம் அழிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
திமுகவின் கொள்கைகள் நீர்த்துப்போவதும், அதை உண்மையான கட்சி விசுவாசிகள் ஆதரிப்பதும், கட்சிக்கு மட்டுமல்ல, மொத்தத் தமிழக நன்மைக்கும் ஆபத்தானது.”

திமுக பல நேரங்களில் தடம் மாறியபோதும்,
அப்பட்டமாக அராஜகமும் ஊழலும் தலைவிரித்து ஆடியபோதும் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் திட்டிக்கொண்டாவது அவர்களுக்கே வாக்களித்தவர் அவர்.

அப்போதெல்லாம் நான் கேட்பதுண்டு உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? இப்படி தவறுகள் மலிந்த கட்சிக்கு இன்னுமா வாக்களிக்கிறீர்கள் என்று.

அப்போதும் அவர் வெகு நம்பிக்கையோடு சொல்வது திமுக இந்தக் களங்கங்களை நிச்சயம் களையெடுத்து  மீண்டு வரும்!

எனில் நீங்கள் தொடர்ந்து திமுகவிற்கு வாக்களித்ததில்லையா?

நிச்சயமாக இல்லை
ஒருவேளை என் தந்தைக்கு இருந்த நன்றி உணர்ச்சி எனக்குக் குறைவானதற்கு,  அவர் காலத்து திமுக செய்த நன்மைகளின் விகிதம் அதிகம் என்பதும், நேரடி பாதிப்பிலிருந்து மீண்ட முதல் தலைமுறை என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்!

என் வரையில் திமுக இப்போது தான் உருவான அடிப்படை நோக்கத்திலிருந்தே தடம் மாறி வெகுதூரம் வந்துவிட்டதாகவே உறுதியாகத் தோன்றுகிறது.

பெரியாரிடம் அண்ணா பிரிந்ததற்கு என்ன அடிப்படை காரணியோ, அதுதான் இன்று திமுகவை ஆட்டிப்படைக்கிறது என்பது காலம் செய்த விசித்திரம்!


ஒரு கட்சி எப்போதும் ஒரே கொள்கையில் தேங்கி நின்றுவிடமுடியாது அல்லவா, கால மாறுதல் சில கொள்கை மாற்றங்களை ஏற்படுத்துவது நியாயமான ஒன்றுதானே?

நல்லது.
அந்த வளர்ச்சி முன்னேற்றத்துக்கானதாய், நாட்டின் நன்மைக்கானதாய் இருக்கவேண்டும்.

ஸ்டாலினை யாருமே திணிக்கப்பட்ட வாரிசு என்று சொல்லமுடியாது. கட்சிக்காக ஏறத்தாழ மரணத்தின் விளிம்புவரை சென்று வந்தவர்.

 ஆனால், அவர் கட்சிப்பதவிக்கு நியமிக்கப்பட்டபோதுகூட வீரபாண்டி ஆறுமுகம், வைகோ உட்பட பலர் நேரடியாகவே கலைஞரிடம் பொதுக்குழுவில் ஆட்சேபித்து குரல் உயர்த்தமுடிந்தது.

அப்படிப்பட்ட உட்கட்சி ஜனநாயகம் இருந்த கட்சி இது.

இன்று கட்சிக்கு எந்தவகையிலும் சம்பந்தம் இல்லாத உதயநிதி ஸ்டாலினுக்குப்பிறகான கட்சித் தலைவர், அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதை எந்த முணுமுணுப்புமே இல்லாமல் ஏற்றுக்கொண்டிருப்பது கட்சி எப்படிப்பட்ட சிந்தனை வீழ்ச்சியை அடைந்திருக்கிறது என்பதை காட்டுகிறது.

இது அவர்களின் உட்கட்சி விவகாரம் அல்லவா? கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட ஆகாத உங்களுக்கு அதை விமர்சிக்க என்ன அருகதை, தகுதி இருக்கிறது?

கலைஞரோடு நேரடித் தொடர்பில் கட்சியின் அடிப்படைத் தொண்டன் கூட இருக்க முடிந்த கட்சி இது.

இன்று அதிகார மையங்கள் எட்டவே முடியாத உயரத்தில் உட்கார்ந்துகொண்டு எதையெல்லாம் எதிர்த்துக் கட்சி உருவானதோ, அதை, அந்த அடிமைத்தனத்தை நோக்கி தன்  கட்சியைத் தள்ளிப்போகும் நிகழ்வை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கடக்கமுடியாது!

இந்தக் கட்சி எங்களுடையது.

நெருக்கடி நிலை காலத்தில் ஏறத்தாழ தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் என் தந்தை. அதற்காக கட்சி முன்வந்து கொடுத்த உதவியையோ, மேலவை உறுப்பினர் பதவியையோ ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, கட்சிக்கு அதெல்லாம் தான் செய்யவேண்டிய நன்றிக்கடன் என்று நினைத்தவர்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர் என்று கலைஞர் கேட்டபோதெல்லாம் கட்சி நிதிக்கு தன் ஒருமாத சம்பளத்தை அள்ளிக்கொடுத்தவர்.

என் தந்தை வெறும் ஒற்றை உதாரணம்தான்!

லட்சக்கணக்கான இதுபோன்ற தொண்டர்களின் ரத்தத்தில், வியர்வையிலும் தியாகத்திலும் வளர்ந்த கட்சி இது.

இதற்கு எந்தக்காலத்திலும் ஒரு தனிப்பட்ட குடும்பம் உரிமை கோரமுடியாது.

உதயநிதி நியமனம் வெறும் கட்சிப்பதவிக்கு என்று முட்டுக்கொடுப்போர் கட்சியின் அழிவுக்கு மறைமுகமாய் துணை போவோர்!

இந்தக் கட்சியின் வரலாறு தெரியாதவர்கள்.

நாங்கள் எல்லோரும் கட்சி வளர நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாடுபட்டவர்கள்.

இன்று இந்த அவலங்களுக்கு எல்லாம் குடைபிடிப்பவர்கள் தாங்கள் வளர கட்சியை உபயோகித்துக்கொள்ளத் துடிப்பவர்கள்!

வாரிசு அரசியல் கூடாது என்று வேகமாக எதிர்த்த அத்தனை இரண்டாம் கட்டத் தலைவர்களையும், அவர்களது இடத்துக்கு வாரிசுகளை நியமிப்பதை கட்சியே ஊக்குவித்தது.

அவர்களும், தங்கள் பதவிக்கு வெளியே இருந்து போட்டி வர வாய்ப்பில்லை என்ற பாதுகாப்பு உணர்ச்சியில், இன்று உதயநிதி நியமனத்தை ஒரு சின்ன முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டதோடு அல்லாமல் "சின்னவரை" பார்த்து மரியாதை செய்யவும் வரிசையில் நிற்கிறார்கள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது பொய்த்து, பிறப்பால் ஒரு மனிதனுக்கு உயர்வு வரும் என்பது நவீன வர்ண சாஸ்திரம் அல்லவா?

பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன் என்ற பிராமண வாதத்தை எதிர்த்து வளர்ந்த கட்சி இன்று நவீன பிராமணீயத்தில் உழன்றுகொண்டிருப்பது எவ்வளவு கேவலம்?

உதயநிதி நியமனம் ஒன்று மட்டும்தான் உங்களுக்கு பிரச்னையா?

நிச்சயமாக இல்லை.

அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்த நேர்காணல் நீண்டுகொண்டே போகும். அதை வழக்கம்போல் உன் பெயரில் கட்டுரையாக எழுதிக்கொள்!

மூன்றாம் கலைஞர் தலைமைக்கு,
நான்காம் வீரபாண்டியார் சேலத்துக்கு,
இரண்டாவது பட்டத்தரசர் ஈரோட்டுக்கு
என்று ஒவ்வொரு மட்டத்திலும் வாரிசுகள்தான் இனி தலைமைக்கு என்று ஆனபின், தொண்டர்களுக்கு அங்கு என்ன வேலை?கொத்தடிமைகளை ஊக்குவிக்க, வளர்க்க, திமுக தேவையில்லை.

அடிமட்டத்திலிருந்து இனி இன்னொரு கலைஞர் வரப்போவதில்லை என்ற நிலை உறுதியானபின், ஆண்டை மகன் சின்ன ஆண்டை என்று கால் கழுவி விட, உணர்வுள்ள எவனும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

கொள்கையாவது மண்ணாவது என்று, கட்சி ஆரம்பித்த நோக்கத்தையே சிதைக்கும் அவலத்துக்கு, காசுக்காக கொடிபிடிக்கும் வெறும் சுயநலக் கூட்டம் மட்டுமே இனி அங்கிருக்கும்.

எங்கே இல்லை வாரிசு அரசியல்
காங்கிரசில் ஐந்தாம் தலைமுறை, அதிமுகவில் ஜெ வந்தவிதம், பாஜகவில் பல மாநிலங்களில் வாரிசு அரசியல் இல்லையா?

இதைவிட கேவலமான முட்டுக்கொடுத்தல் வேறில்லை!

பரம்பரை மன்னராட்சி, பரம்பரை உயர்சாதி இவற்றையெல்லாம் எதிர்த்து பகுத்தறிவு பேசி வளர்த்த கட்சி இது.

உட்கட்சி ஜனநாயகத்தில் இந்தியாவுக்கே பாடம் எடுத்த கட்சி இது.
இதில் நியமனத் தலைமை என்பது எல்லாவற்றிலும் கேவலம்!

என் கேள்வி அதுவல்ல
அவர்களை எதிர்க்காத நீங்கள் இதற்கு மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்வதும் கட்சிக்கு எதிராகப் பேசுவதும் ஏன் என்பதுதான் என் கேள்வி!

பக்கத்துவீட்டுப் பையன் கொலையே செய்தாலும் அவனை தண்டிக்கும் உரிமை எனக்குக் கிடையாது.

என் மகன் சிறிது பாதை மாறினாலும் அடித்தாவது திருத்தும் கடமையும் உரிமையும் எனக்கு உண்டு.
அதுபோலத்தான் இதுவும்!

இது என் அபிமானம், நம்பிக்கை இவற்றை நிபந்தனை இன்றிப் பெற்ற கட்சி!

இது பாதை மாறுவதை கண்டிக்கவேண்டியது என் கடமை.

இன்றைக்கு இதை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் நாளை கட்சி அடையப்போகும் பெரும் வீழ்ச்சிக்குசிறிய அளவிலேனும் காரணிகள். அப்படி இருக்க எனக்குச் சம்மதமில்லை!

ஏனெனில், நான் கலைஞர் ஆதியில் சொன்ன சுயமரியாதை, பகுத்தறிவு இவற்றை உள்வாங்கி வளர்ந்தவன்.
நன்றி!இதன்பின் நடந்த நெடிய உரையாடலை வேறொரு கட்டுரை வடிவில் தருவதே நல்லது
எனவே, ..... 🙏🙏