புதன், 31 ஜூலை, 2019

வேகமாக நலிந்துவரும் தொழிலும் கண்டுகொள்ளாது உறங்கும் அரசும்!
தவறுகளிலிருந்து பாடம் கற்கும் மனநிலையிலேயே இல்லை போல இந்த அரசு.

மோட்டார் வாகனங்கள் மீதான இந்த அரசின் பார்வை மிக ஆபத்தானது!

எல்லாவற்றையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற விடலை மனோபாவத்திலிருந்து முதலில் விடுபடவேண்டும் நம் பிரதமர்!

சுற்றுச் சூழல் மீது திடீரென்று ஏற்பட்டிருக்கும் இந்த மிகு அக்கறை பயத்தைத்தான் ஏற்படுத்துகிறது!

நான் உட்பட பலரும் சில்லறையை சிதறவிட்ட டீமானிடைசேஷன் தவறான நடைமுறைப்படுத்தலால் எவ்வளவு பெரிய தோல்வியில் முடிந்தது என்பது ஷேகர் ரெட்டிகள் சொல்லிக்கொடுத்த பாடம்!

எதையும் தான்தான் முதலில் செய்தேன் என்று சொல்லிக்கொள்ளும் பேரவசரம் மோடிக்கு!

வளர்ந்த நாடுகளே படிப்படியாக அமல்படுத்த முயலும் ஒரு மாற்றத்தை எந்த ஒரு கால அவகாசமும் கொடுக்காமல் உடனே உடனே என்று செயல்படுத்தத் துடிப்பது கடைந்தெடுத்த அரைவேக்காட்டுத்தனம்!

முதிர்ச்சி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்போல நம் பிரதமர்!

பெட்ரோல் டீசல் வாகனங்களை உடனே ஒழித்து, நாளைக் காலை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது அத்தனை சுலபம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரா மோடி?

அவருடைய ஆலோசகர்கள் என்ன செய்கிறார்கள்?


எதற்காக இத்தனை தகவல்கள் அவசர அவசரமாக கசியவிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன?

நாட்டில் நடப்பது ஏதாவது பிரதமர் பார்வைக்குப் போகிறதா?

சென்னையில் முதன்முதல் துவங்கப்பட்ட ஜப்பானிய கார் நிறுவனம் இப்போது வாரத்துக்கு மூன்று நாட்கள் விடுமுறை விட்டிருப்பது

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் கொரிய கார் நிறுவனம் ஒரு ஷிஃப்டை குறைத்திருப்பது

ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தி சாலை வாரத்தின் மூன்று நாட்கள் மட்டுமே இயங்குவது 

மாருதி உட்பட எல்லாக் கார் தயாரிப்பு நிறுவனங்களிலும் குப்பையாகத் தேங்கிப்போன வாகனங்களின் எண்ணிக்கை

ஏறத்தாழ 30 சதவிகிதம் சரிந்திருக்கும் வாகன விற்பனை

இதில் ஏதும் அரசின் கவனத்துக்குப் போகவே இல்லையா?

எனில், இதற்கு அரசு எதற்கு?

தெரிந்தே மௌனம் சாதிக்கிறது அரசு எனில், திரைமறைவில் வேறு ஏதும் பேரங்கள் நடக்கிறதா?

அதானி வளர்ச்சி மட்டுமே நாட்டின் வளர்ச்சி ஆகாது பிரதமரே!

ஒரே இடத்தில் மட்டும் வளர்ந்தால் அது வீக்கம். எல்லாத் துறையும், எல்லாத் தொழிலும் வளர்ந்தால்தான் அது வளர்ச்சி!

`மோட்டார் வாகனத் தயாரிப்பு என்பது ஒற்றைத் தொழில் அல்ல!

அது சார்ந்த ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களின் தயாரிப்புத் தொழிற்சாலைகள்
அதில் ஈடுபட்ட பல்லாயிரம் தொழிலதிபர்கள்
வேலை செய்யும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம் இது!

நான் சந்திக்கும் அத்தனை தொழிலதிபர்களும் ஒரு காலத்தில் மோடி புகழ் பாடியவர்கள்.

துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவருமே மோட்டார் வாகன பாகங்கள் தயாரிப்பவர்கள்!

நேற்று ஓசூரில் ஒரு ஜெர்மன் நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைக்கு சென்றபோது பத்து நாள் லே ஆஃப் முடிந்து நேற்று முன்தினம்தான் வேலை ஆரம்பித்ததாகச் சொன்னார்கள்!

இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை என்று கவலையோடு பேசியதை பார்க்கமுடிந்தது!

பல நிறுவனங்களில் இந்தமாத சம்பளம் கொடுக்கவே முடியாது என்ற சூழல்!

தயாரிக்கப்பட்ட பாகங்கள் வண்டிவண்டியாக குவித்துவைக்கப்பட்டு எல்லோர் கண்ணிலும் ஒரு கலக்கம்!


இது தேசத்தை எவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது என்பது அரசுக்குத் தெரியாதா?

நடுத்தர வர்க்கம் வெறும் வதந்திகளை நம்பி மொத்தமாக வாங்குவதையே நிறுத்திக்கொண்டபின் இத்தனை வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் என்ன செய்யும்?

இந்த வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றனவா?
அன்றி,
அவை உண்மைதானா?

அரசு இவ்வளவு குறுகிய அவகாசத்தில் எல்லா வாகனங்களையும் அழித்து மின்சார வாகனங்களை மட்டுமே இந்தியாவில் இயக்கமுடியும் என்று உறுதியாக நம்புகிறதா?

அதன் முதல் படிதான் இந்த 1000, 2000 மடங்கு பதிவுக்கட்டண உயர்வு பரிந்துரையா?

எனில், உலகிலேயே, இந்தியாதான் மற்ற எல்லா நாடுகளையும் விட பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை எரிபொருள் வாகன இயக்கத்தை முற்றாக தடை செய்யப்போகிறதா?

அதற்கான முழு தயார் நிலையில் இருக்கிறதா இந்த அரசு?

குஜராத், ராஜஸ்தான், வேறு எந்த மாநிலங்கள் மின்மிகை மாநிலங்களாக இருக்கின்றன?

கோடிக்கணக்கில் இயங்கும் வாகனங்களை இயக்கப் போதுமான மின்சார உற்பத்தி அடுத்த சில மாதங்களில் ஆரம்பித்துவிடுமா?

அல்லது ஒரு யூனிட் மின்சாரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலும் வாங்குமளவு மக்கள் செழிப்பாக இருக்கிறார்களா?

அதற்கான மின்சார உற்பத்தி ஆலைகள் எங்கெங்கு நிறுவப்பட்டு, உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கிறது?அரசின் அதிகபட்ச வருவாய் பெட்ரோல் டீசல் மீதான வரிவிதிப்பால் கிடைப்பதே!
அதை முற்றாக இழந்தாலும் எந்த இழப்பும் இல்லாத அளவுக்கு வருமானத்தை பெருக்க இந்த அரசு எடுத்திருக்கும் தொழில் வளர்ச்சி நடவடிக்கைகள் என்னென்ன?

யாருக்கும் தெரியாமல் நிலவில் அந்தத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றனவா?

இத்தனை உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மாற்று ஏற்பாடு என்ன செய்திருக்கிறது அரசு?

வேலை இழந்து நிற்கப்போகும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன வழி செய்திருக்கிறது அரசு?

நடைமுறைப்படுத்தவே முடியாத ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அரசே வதந்தியை பரப்பிவிடுவது என்ன திரைமறைவு பேரத்துக்காக?

அல்லது நாட்டிலிருக்கும் எல்லாத் தொழிற்சாலைகளையும் ஒரே நிறுவனம் வாங்கிக்கொள்ளப் போகிறதா?

இரண்டாம் முறை மிருக பலத்தோடு நாடாள அனுமதித்திருக்கிறார்கள் மாக்கள் என்பதால் மிருகமாகவே ஆகிவிட்டதா அரசு?

இவ்வளவு நலிவையும் கூக்குரல்களையும் வாயே திறக்காமல் வேடிக்கை பார்க்குமளவு அரக்கத்தனம் அரசின் ரத்தத்தில் ஊறிவிட்டதா?

மிகமிக கவலைதரும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி தலை குப்புற விழுந்துகொண்டிருக்கிறது நாடு!

ஏதும் அறியாததுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டு கள்ள மௌனம் சாதிக்கிறது அரசு!

இந்தியாவை எத்தியோப்பியா ஆக்குவதற்கு உங்களுக்கு வாக்களிக்கவில்லை மக்கள்!

அத்தனை அவசரக்கோல அள்ளித் தெளிப்புகளுக்குப் பிறகும், உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, தின்னும் ஒருபிடி சோற்றையும் பிடுங்கிக்கொண்டு தெருவில் நிறுத்திவிடாதீர்கள்!

ஏழை அழுத கண்ணீர் எத்தனை சாம்ராஜ்யங்களை அழித்திருக்கிறது என்பதை கொஞ்ச நேரம் ஜெய் ஸ்ரீராம் சொல்வதை நிறுத்திவிட்டு வரலாற்றைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்!

இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கின்றன!

உருப்படியான, நடைமுறைப்படுத்தத்தக்க, பல திட்டங்களை செயல்படுத்தலாம்!

மேடைபோட்டு புளுகுவதை விட்டு, மனதார மக்களுக்காக உழைக்கலாம்!
செய்தால் பட்டேல் சிலையைவிட மக்கள் மனதில் உயரலாம்!

முதல் படியாக,
உடனடியாக கள்ள மௌனம் கலைத்து நசிந்து குற்றுயிராகிக் கொண்டிருக்கும் நடுத்தர, குறுந்தொழிற் சாலைகளை உயிர்ப்பிக்கட்டும் அரசு.

இல்லை, 
எனக்கு இதுதான் உவப்பான பாதை என்று இறுமாந்து நடந்தால், வரலாறு காறி உமிழும்!

தான் எவ்வாறு வரலாற்றில் நினைவுகூரப்பட வேண்டும் என்பதை மோடியே தீர்மானிக்கட்டும்!

அதற்கான விலையை

குருட்டுத்தனமான நம்பிக்கையில் வாக்களித்த ஆட்டு மந்தைகளோடு சேர்ந்து முதுகெலும்போ செயல்திட்டமோ இல்லாத எதிர்க்கட்சிகளும் அனுபவிக்கட்டும்!

மக்கள் நலனை மயிரளவுகூட மதிக்காத அரசியல்வியாதிகளை வளர்த்துவிட்ட
சிந்திப்பதையே நிறுத்திவிட்ட தலைமைகள் சூழ் நாட்டில் வாழ சபிக்கப்பட்ட நாமும்
அவர்களோடு .....
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக