வியாழன், 4 ஜூலை, 2019

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையா அரசியல் வியாதிகள்?

கிரண்பேடி சொன்னதால் மட்டுமே அது பிழையென்று ஆகுமா? கடந்த இரு நாட்களாக கொந்தளித்துத் திரிகிறார்கள் தமிழக அரசியல்வியாதிகள்!

எப்போதுமே அவர்கள்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நேரடியான பதில் சொல்லும் வக்கற்ற இந்தக் கூட்டம் இந்தமுறையும் அதே கீழ்த்தரமான யுக்தியை கையாளுகிறது!

விமர்சனங்களுக்கு இந்த அரசியல்வியாதிகள் நேர்மையாக பதிலோ விளக்கமோ சொல்வதை நிறுத்தி பல யுகங்கள் ஆகிவிட்டன!

விமர்சனம் செய்தவன் யோக்கியமா என்பதும், அவனை வந்தேறி என்பதும், அப்படியானால் இன்னொரு கட்சி, அதன் தலைவர் செய்தது உனக்கு கண்ணில் படவில்லையா என்பதும்தான் இவர்களுக்குத் தெரிந்த ஒரே பதில்!
தான் தவறு செய்யவில்லை என்பதோ, அல்லது செய்திருந்தால்அதை நேர்மையாக ஏற்று திருத்திக்கொள்கிறேன் என்பதோ மறந்தும் இவர்கள் வாயில் வராத பதில்!

ஒவ்வொருமுறையும் சொன்னதில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்பதைவிட சொன்னவர் யார் என்பதுதான் இவர்களுக்கு பிரச்னை ஆகியிருக்கிறது!

இந்தமுறை அது கிரண்பேடி!

இவர்களை விமர்சிக்க கடவுள்தான் பிறந்துவரவேண்டும் போலிருக்கிறது!
அதிலும், உன் கடவுள் யோக்கியமா என்றுதான் கேட்பார்கள்!

கிரண்பேடி சொல்லியிருப்பது என்ன?தமிழ் ஹிந்து தன் மொழிபெயர்ப்பில் சொல்கிறது:  
மேற்படி பதிவில்
மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரத்தால் சென்னையில் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும்,
மக்களின் சுயநல எண்ணமும் கோழைத்தனமான அணுகுமுறையும் கூட வறட்சிக்குக் காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார் என்று!

ட்விட்டர் பதிவில் அப்படி மக்களைக் குறிப்பிட்டு எதுவும் இல்லை!
ஒருவேளை வாட்ஸப் பதிவில் இருக்கலாம்!

சொன்னது கிரண்பேடியாக இருக்கட்டும், அல்லது வேறு எவராகவோ இருக்கட்டும்! அவர்களை அப்புறம் விமர்சித்துக்கொள்ளலாம்!

உங்களில் குற்றமற்றவர் யாரோ, அவர் மட்டும் கல்லெறியுங்கள் என்று கூவினால் இன்று எல்லாக் குற்றவாளிகளும் ஒரு கல்லடி கூட படாமல் தப்பித்துத் திரிவர்!

அவர் சொன்னதில் உண்மை இல்லை என்று ஐந்தாம் தலைமுறை அரசியல் தலைமையோ, மூன்றாம் தலைமுறைக்கு முனைப்புக் காட்டும் தலைமையோ, அன்றி அடிமை வேடம் போட்டு அரசை பிடித்த தலைமையோ மனச் சான்றோடு மறுதலிக்குமா?

அவர் சொன்னதில் என்ன பிழை?

மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் இவை இந்த நிலைக்கு காரணம் இல்லையா?

மக்களுக்காக உழைக்கவே குடும்பம் குடும்பமாக வந்து கொள்ளையடிக்கும் அரசியல் வியாதிகள் ஏதாவது ஒன்று, ஏரிகளின் ஆக்கிரமிப்பில், நீர்வழிச் சாலை மறிப்பில், நிலத்தடி நீர் திருட்டில், மணல் கொள்ளையில் தங்களுக்கு பங்கில்லை என்று சொல்லுமா?

அப்படி தாங்கள் ஏதுமே செய்யாத உத்தம சிகாமணிகள் என்றால், அப்படிச் செய்திருப்பவர்கள் மீது தங்கள் ஆட்சிக்கால நடவடிக்கைகள் என்ன என்பதை பட்டியல் இடுமா?

ஏரிகளை குளங்களை கண்மாய்களை ரவுடித்தனமாய் ஆக்கிரமித்து இன்று கல்வி வள்ளல்கள் என்று வேடம் போடும் முன்னாள் பொறுக்கிகளைரியல் எஸ்டேட் முதலைகளை, தண்டிப்பது பற்றி, நீர்நிலைகளை பறிமுதல் செய்து அவர்கள் செலவில் சீர்படுத்த வைப்பது பற்றி, ஏன் எந்த அரசும், கட்சிகளும் பேசுவதே இல்லை?

இவர்கள் பங்குதாரர்களாக, உடந்தையாக இருக்கும் தைரியம்தானே அவர்களை ஆட்டம் போட வைக்கிறது?

ஆட்சியில் இருக்கும்போது ஒரு அணுகுமுறையும், எதிர்க்கட்சி ஆகும்போது தலைகீழான மாறுபட்ட அணுகுமுறையும் எல்லா அரசியல்வியாதிகளின் பொது புத்தி!

பள்ளிக்கரணை சதுப்புநிலம் சுருங்கிக்கொண்டே போவதுபற்றி ஏன் எந்த மக்கள் தொண்டனும் கவலைப்படுவதே இல்லை?

நீர்நிலைகளை தூர்வாராததும், கட்டடங்கள் முளைத்த இடங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் மோசமான ஆட்சி இல்லாமல் வேறென்ன?

இதற்கு துணை போவதும், எல்லோரும் சேர்ந்து கூட்டுக்கொள்ளை அடிப்பதும் ஊழல் அரசியல் இல்லாமல் வேறென்ன?

இந்த ஆக்கிரமிப்புக்களும், கட்டுமானங்களும், அனுமதி பெறப்படும், அங்கீகாரம் வாங்கியும்தானே செய்யப்பட்டன?
இதற்கு முதலில் அனுமதி கொடுத்தது யார்? அந்த அதிகாரி, அதன்பின் அதை கண்டுகொள்ளாது மேலும் மேலும் அங்கீகாரம் வழங்கிய அதிகாரி இவர்களெல்லாம் செய்வது அலட்சிய அதிகாரம் இல்லாமல் வேறென்ன?

இவர்களுக்கு மானம் போனதென்று பொங்க என்ன அருகதை இருக்கிறது?

சென்னையிலோ, வேறு எங்கோ, ஏதாவது கட்டிடத்தில் தீப்பிடித்தாலோ, இடிந்து விழுந்தாலோ,
உடனே, அந்தக் கட்டிடம் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்ட அளவைவிட உயர்த்திக் கட்டப்பட்டது என்றோ பேட்டியும் அறிக்கையும் கொடுத்த அதிகாரிகள் அதுநாள்வரை அதை ஏன் கவனிக்க மறந்தார்கள் என்று தண்டிக்கப்பட்டது இதுவரை உண்டா?

ஒரு தனி மனிதன் தன் வீட்டில் கால் அடி அதிகப்பரப்பில் கக்கூஸை கட்டிவிட்டான் என்று தாண்டிக்குதித்து கைநீட்டும் அதிகார வர்க்கம் மடிமேல் மாடி அனுமதியின்றி கட்டப்பட்டதை எப்படி கண்டுகொள்ளாமல் இருக்கிறது?

அவர்கள் அப்படி ஒன்றும் ரகசியமாக செய்வதில்லை!

ஆசியாவிலேயே பெரிய ஷோ ரூம் என்றும், உயரமான ஷோ ரூம் என்றும் வினாடிக்கு ஒருமுறை விளம்பரப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள்!
அந்த சமயத்தில் மட்டும் இந்த நெருப்புக்கோழிகள் மண்ணுக்குள் தலை புதைத்துக்கொள்ளும் போல!

பணியிடை நீக்கம் என்பது ஒரு கேவலமான கண்துடைப்பு!

அது அப்போதைக்கு போக்குக்காட்டும் சில்லறை விளையாட்டு!

வெள்ளமும் தட்டுப்பாடும் ஒரே இடத்தில் மாறிமாறி வருகிறது என்றால் அங்கு அரசாங்கம் எதற்கு, அதிகாரவர்க்கம் எதற்கு?

தேர்தல் திருவிழாவில் மட்டும் மாறுவேடதாரிகளாய், நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்புக்கொடுங்கள் என்று தங்கள் மாய உலகத்திலிருந்து இறங்கிவந்து
எங்கள் டீக்கடைகளில்,
குடிசைகளில்
புகுந்து புறப்படும் அரசியல்வியாதிகளுக்கு அதற்குப்பின் எப்படி கொம்பு முளைக்கிறது?

எப்போதுமே அணுகமுடியாத அடியாள் பாதுகாப்போடு வலம்வரும் இவர்கள் என்ன பாகிஸ்தானிலா உலா வருகிறார்கள்?

மக்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள்,
அவர்களால் போற்றி வணங்கப்படவேண்டிய ஆளும் வர்க்கம் என்று மனதில் ஏறிப்போன மமதையையும்,
அதை தட்டிக்கேட்க துணிவில்லாத மக்களின் கோழைத்தனத்தையும்
யார் சாடினால் என்ன?

தேர்தலுக்குத் தேர்தல் வீசியெறியும் பணத்தையெல்லாம் வெட்கமின்றிப் பொறுக்கிக்கொண்டு இந்த கொள்ளைக்காரர்களின் வால் பிடித்துத் திரியும் மாக்களை கோழைகள் என்று சொன்னால்தான் என்ன தவறு?

இணையமும், தமிழினமும் முதல்வர் வேட்பாளர் என்று கொண்டாடிய சகாயம் பிஹார் தேர்தலைப்பற்றி சொல்லி மறைமுகமாக உங்கள் அத்தனை பேர் முகத்திலும் காறி உமிழ்ந்திருந்ததை
ஊடகங்கள் கையிலிருக்கும் வசதியால் மறைத்து துடைத்துக்கொண்டு நகர்ந்த உங்களை யார் விமர்சித்தால் என்ன?


ஒருவரை ஒருவர் தூற்றுவதுபோல் போலிச்சண்டையிட்டு மக்களுக்கு தெருவோர மோடி மஸ்தான் போல் போலி  வித்தை காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்!

மாற்று அரசியல் வரவே வராது என்று ஆணவமாய் திரியாதீர்கள்!
தனக்கான தலைமகனை இந்த மண் தாமதமானாலும் நிச்சயம் வலிமையோடு கொணரும்!

முன்னூறு ஆண்டுகள் ஆண்டவர்களை,
இந்த அடிமைக்கூட்டம் எங்களை என்ன செய்யும் என்று மதர்த்துத் திரிந்தவர்களை
எரித்த பெரு நெருப்பு தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு பாரிஸ்டர் வடிவில் அஹிம்சை ஆயுதம் ஏந்தி வந்தது!அதன்பின் நடந்தது வரலாறு!

உங்கள் கயமை நாடகத்தையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!
என்றாவது அவர்கள் உணர்ந்துகொள்ளவும் ஆரம்பிப்பார்கள்!

காலம் அப்போது உங்களை கேள்வி மட்டும் கேட்காது!
உங்கள் ஆட்டத்துக்குத் தகுந்த பதிலையும் சொல்லும்!

இந்த மண் மகத்தானது!
இரவில் வாங்கியதால் இன்னும் விடியவில்லை என்று மருகியிருக்கும் கூட்டம், சிலருக்குமட்டும் எப்படி விடிந்தது என்பதை கேள்வி கேட்க ஆரம்பிக்கும்

அப்போது உங்களுக்கு ஒளிந்துகொள்ள இந்த மண்ணில் இடமிருக்காது!

மூட்டை முடிச்சுக்களோடு ஓடிப்போகக் காத்திருங்கள்!

அதுவரை ஆடுங்கள்!

அமைதியாகக் காத்திருக்கிறோம்!
1 கருத்து:

  1. If the offials joined hands against corruption and following the rules and act

    No politicians will grow and speak

    Our country needs non corrupted c as, advocates i a s, i p s and law makers

    பதிலளிநீக்கு