செவ்வாய், 3 செப்டம்பர், 2019

காலத்தே உணரப்படாத ஓர் உன்னதம்!
V M - இந்த இரண்டெழுத்தில்தான் அறிமுகம் அவர் எல்லோருக்கும்
அதற்குப்பின்னால் மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று பின்னிணைப்பு அவரவர் உறவுக்கேற்ப!

எனக்கு அவர் VM சித்தப்பா!

எப்போதுமே அவர் எனக்கு ஒரு பிரமிப்பாகவே இருந்திருக்கிறார்!

நான் மண் தின்று விளையாடிய குக்கிராமத்துக்கு முதலில் வந்த கார் (பிளசர் கார்) அவருடையது!

எப்போதாவது சித்தியோடு அவர் காரில் வந்து இறங்குவது எங்களுக்கு ஒரு திருவிழா கொண்டாட்டம்!

டயர் வண்டியை உருட்டிக்கொண்டு ஒவ்வொரு சந்தாய் போய் சத்தம் போட்டுக்கொண்டு ஓடிவருவேன்!
"எங்க மீனாட்சியம்மா கார்ல வந்திருக்கறாங்க!"

கொஞ்சம் தோரணையோடே அவர் பேசிக்கொண்டிருப்பதை பிரமித்துப் பார்த்துக்கொண்டே நிற்பேன்!
அடுத்த கொஞ்ச நாள், வளவில் அவரைப்போலவே ஸ்டைலாய் கார் ஒட்டிக்கொண்டு ஓடுவதுதான் பிடித்த விளையாட்டு!

கொஞ்சம் வளர்ந்து பெரியவனானபின்பு பள்ளி விடுமுறை நாட்களில் அவர் வீட்டுக்குப் போனபோதுகூட அவரிடம் நேரில் நின்று பேச ஏனோ தைரியம் வந்ததில்லை!

ஃபோன் அடிக்கும்போது எடுத்து "மயில்வாகனன்..' என்று ஆரம்பித்து அவர் பேசும் ஆங்கிலத்தை விழி விரியப் பார்த்து நின்ற காலம் அது!

அப்போதெல்லாம் அவரை ஒரு மரியாதையான உயரத்தில் வைத்தே பார்க்கப் பழகிப்போனது!
அவரைப்போல வரவேண்டும் என்பது சொந்தத்தில் என் வயதொத்த எல்லோருக்குமே அப்போது தோன்றியிருக்கும் ஆசை!

மாநில அரசு நிர்வாக இயந்திரத்தில் மிக உயர் பதவி!
அலுவலகத்துக்கு அழைத்துப்போக, கொணர்ந்துவிட வரும் வெள்ளை அம்பாசிடர் கார்! –
இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஃபேண்டஸி!

ஒருவழியாக டிகிரி முடித்து அடுத்தது என்ன என்ற கேள்விக்குறியோடு அலைந்த காலத்தில், PSG யில் MBA சீட் வாங்கித்தர அவர் முயன்றபோதுதான் எனக்கும் அவருக்கும் ஒரு சின்ன நெருக்கம் உண்டானது!

ஏதோ ஒரு உந்துதலில் CA படிக்க முடிவெடுத்தபிறகே எனக்கு அவர் நேரடி நிழலில் வாழும் அதிர்ஷ்டம்!

ஆரம்பகால பிரமிப்பு தந்த இடைவெளியை உடைத்து அவரோடு சமமாகி உட்கார்ந்து பேசவே சில மாதங்கள் ஆனது!

ஆனால்,
அந்தப் பிரமிப்பை குறையவிடாமல் அடிக்க எத்தனை காரணங்கள்!

பெட்டி பெட்டியாக ஆபீஸிலிருந்து ஃபைல் வரும்!

வீட்டின் நுழைவாயிலுக்குக் குறுக்கே ஒரு பிரம்பு நாற்காலி!
அதில் உட்கார்ந்து கதவில் கால் நீட்டி சாய்ந்துகொண்டு உட்காருவதுதான் அவரது சிம்மாசனம்!
விரலிடுக்கில் புகையும் கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்
-"டேய் இவனே, டீ குடிக்கப் போகும்போது ஒரு பாக்கெட் கிங்ஸ் வாங்கிட்டு வா. ஷர்ட் பாக்கெட்ல பணம் இருக்கும்.  எடுத்துக்கோ!"

நள்ளிரவு தாண்டி கண்ணெல்லாம் எரிகிறது என்று புத்தகத்தை மூடிவைத்துப் படுக்கும்போதும், வாசல் அறையில் விளக்கெரியும், மென்மையான சிகரெட் மணத்தோடு!

எப்போது படுப்பர் என்றே தெரியாது!
காலையில் பார்த்தால் எல்லா ஃபைலும் பார்த்து முடித்திருப்பார். பச்சை மசியில் குறிப்புகளோடு, சில இடங்களில் அடிக்கோடிட்டு கையெழுத்து போட்டிருப்பார்!

அந்த சேரில் ஆசையாக உட்கார்ந்து பார்ப்பேன்! கொஞ்சம் மிதப்பதுபோல் இருக்கும்!

எதற்காகவும் யாருக்காகவும் விதிமுறைகளை மீறி நான் பார்த்ததில்லை!

அத்தனை பெரிய பதவியில் இருந்தும் மாதக் கடைசியில் கையில் காசு இல்லாமல் போவது வெகு சகஜம்!
கை அத்தனை சுத்தம்!

எனக்குத் தெரிந்து அவருக்கு என்று எந்த சலுகையையும் எடுத்துக்கொண்டதில்லை!

அந்த நேர்மைதான் அவரை யாரோடும் ஒட்ட முடியாது செய்தது!

குடும்பத்தின் இரண்டு தரப்பிலிருந்தும் வேலைவாய்ப்பு கேட்டும், கல்லூரி அட்மிசன் கேட்டும் எப்போதும் யாராவது ஒருத்தர் வந்துகொண்டே இருப்பது வழக்கம்!

விதிமுறைகளுக்கு உட்பட்டு, தன்னால் என்ன முடியுமோ அதை செய்ய அவர் எப்போதுமே தயங்கியதில்லை - கேட்டவர் யாராக இருந்தாலும்!

விதிமுறைக்குப் புறம்பாய் யாருக்கும் எதையும் எக்காலத்தும் செய்ததில்லை,தனக்கும், தன் குழந்தைகளுக்குமாக இருந்தாலும்!

பலன் கிடைத்தவர்கள் நன்றி காட்டுகிறேன் பேர்வழி என்று தப்பித்தவறி ஏதாவது ஸ்வீட், பழம் என்று வாங்கிவந்துவிட்டால் தொலைந்தார்கள்!
"என்ன, லஞ்சமா?" என்று முகத்தை சுளித்துக்கொண்டு அவர் கேட்கும்போதே பார்க்கும் வயிறு கலங்கும்!
ஒன்றுவிடாமல் அவர்கள் எடுத்துக்கொண்டு வெளியேறும்வரை விடமாட்டார்!

சட்டத்துக்குப் புறம்பாய் செய்ய மறுத்து ஏமாந்துபோனோர் திட்டுவதுகூட பரவாயில்லை!
செய்துகொடுத்தும் திமிர் பிடித்தவர் என்று பெயர் வாங்குவது அவருக்கு கைவந்த கலை!

ஆனால் அவர் அதுகுறித்து மயிரிழை அளவு கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை!

அப்போது நானே பலமுறை யோசித்ததுண்டு
இவர் ஏன் இப்படி இருக்கிறார்? இதே வேறு யாராவதாக இருந்தால் தன் சொந்தம், ஜாதி என்று எத்தனை பேரை கைகொடுத்து தூக்கிவிட்டிருக்கலாம் என்று!

அந்த நேர்மை, அது தந்த ஒப்பற்ற திமிர் இதெல்லாம் எனக்கே புரிபட பல ஆண்டுகள் ஆனது!

யாரிடமும் வளைந்து குழைந்து அவர் பேசி இன்றுவரை நான் பார்த்ததே இல்லை!

தன்னுடைய வளைந்துகொடுக்காத நேர்மையால் பலராலும் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட உயர்ந்த மனிதர்!

யாரைப்பற்றியும் முகத்துக்கு நேராக, முதுகுக்குப் பின்னால் என்று இரண்டு அபிப்ராயம் அவருக்கு இருந்ததே இல்லை!
மனம் நினைப்பதை தயக்கமின்றி முகத்துக்கு நேராகப் பேசுவது அவரது ஒப்பற்ற பண்பு!

மிகத் தீவிரமான பக்திமான்!
பொட்டலம் கட்டிவரும் காகிதத்தில் இருக்கும் சாமி படத்தைக்கூட தூக்கி எறியமாட்டார்! ஏதோ ஒரு ஓரத்தில் பத்திரமாக மடித்துவைப்பார்!
ஆனால் அந்த பக்தியையும் அவர் எப்போதும் வெளிச்சம் போட்டுக் காட்டியதே இல்லை
 - அவருள் கனிந்துகொண்டிருந்த அன்பையும் காதலையும்போல!

முதலில் அலுவலக விஷயங்களை முடித்துவிட்டு அதற்கு வருவோம்!

ஒரு மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்து, வறுமை என்பதை என்னவென்றே தெரியாத வளர்ப்பு.

சிறப்பாக கற்று, அரசு அலுவலகத்தில் மிக உயரிய இடத்தில் ரிட்டையர்மெண்ட் வரை இருந்தவர்.

அலுவலகத்தில் கடும் சிம்ம சொப்பனம்
எவரையும் தள்ளி நிற்கச்சொல்லும் நேர்மை.

எனக்குத் தெரிந்து அவர் ஆசைப்பட்டது ஒன்றே ஒன்றுக்குத்தான்!
அந்த கௌரவம் அவரைவிட பலபடிகள் குறைந்தோருக்கும், வேறு காரணங்களுக்காகக் கிடைத்தபோதும், கடைசிவரை அவருக்குக் கிட்டவில்லை!

ஆனால், இந்த ஊழலில் புழுத்த அமைப்பில் அது அவருக்குக் கிடைத்திருந்தால்தான் அதிசயம்.
அந்தப் பட்டம் அவருக்குக் கிடைக்காததில் இழப்பு அவருக்கு இல்லை!

இது ஆபீஸர் VM முகம்.

அவருடைய பர்சனல் முகம் - சொந்தத்திலும்  நிறையப்பேருக்கு தெரியாத முகம்.

எனக்கே, அவர் நிழலில் வளரும் வாய்ப்புக் கிடைத்தும், அன்று புரியாமல் மிகக் காலதாமதமாகப் புரிந்த முகம்!

எதையும் அழகிய ரசனையோடும் கொண்டாட்ட மனநிலையோடும் அணுகும் முகம்!
தனக்குப் பிடித்த பாடகியின் பெயரை மகளுக்கு வைக்குமளவு இசையில் ஈடுபாடு!

அவர் வெகு அபூர்வமாக இறங்கிவந்து தோழமை காட்டும் வெகு சிலரில் நானும் ஒன்றானபின் நான் பார்த்த இன்னொரு VM சித்தப்பா!
அவரிடம் எதைப்பற்றியும் என் சகவயது தோழமைகளோடு பேசுவதுபோல் பேசமுடியும்.
ஃபைல் கட்டை தூக்கி வைத்துவிட்டு வாசலில் பிரம்பு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துவிட்டால், ஜாலி VM.

சுசீலா, எஸ்பிபி, ஜேசுதாஸ் என்று ஆரம்பிக்கும் உரையாடல், என் கூடப்படிக்கும் பெண்கள், அன்றைய செய்தி வாசிப்பு சூப்பர்ஸ்டார் சோபனா ரவி, பத்மினியின் நாட்டியம், ஸ்ரீதேவியின் மூக்கு, ஸ்ரீப்ரியாவின் உதடு என்று எல்லையே இல்லாமல் படரும்!

சுசீலா குரலில் அவருக்கு அப்படி ஒரு ஈர்ப்பு!
எஸ்பிபியின் "நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா" அவருடைய இன்னொரு போதை!

வாசலில் உட்கார்ந்து மணிக்கணக்கில் நீளும் அரட்டையின்போது மெல்லிய ரேடியோ இசையும் கூட வரும்.
அவருக்குப் பிடித்த பாடல்கள் வரும்போது மட்டும் அமைதியான ரசிப்பில் நகரும்!

இரவு ஒன்பது மணிக்கு மேல், சாப்பாட்டுக்குப் பிறகு எங்களோடு சில நாட்கள் கட்டிய லுங்கியோடு நடந்துவருவது சகஜமான ஒன்று.

தமிழக அரசின் ஒரு முக்கியமான துறையை கட்டி ஆள்பவர், முக்கால் காலுக்கு தூக்கி மடித்துக் கட்டிய லுங்கியும், கையில் வேர்க்கடலை பொட்டலமும் சிகரெட்டுமாக பெல்ஸ் ரோட்டில் மெதுநடை போடுவதை நம்பமுடியாது சிலர் பார்த்துப்போவர்!

திருவருட்செல்வர் படத்தில் ஆரம்ப காட்சிகளிலேயே ஒரு பாடல் வரும் -"மன்னவன் வந்தானடி தோழி!"

சுசீலா ஒரு ராக ஆலாபனையோடு இசை வேள்வியே நடத்தியிருப்பார்!
கூடவே பேரழகாய் பத்மினி!
அந்தப் பாட்டுக்கான நாட்டியத்தில் ஒரு சூறாவளி!

அப்போதெல்லாம் பாரகன் தியேட்டரில் வெள்ளிக்கிழமை தோறும் படம் மாற்றுவது வழக்கம் - அது அடுத்த வியாழன்வரை ஓடும்!

திருவருட்செல்வர் அப்படி வந்தபோது, ஏழு நாளும் இரவுக்காட்சிக்கு லுங்கியோடு போய், அந்தப் பாட்டு முடியும்வரை உட்கார்ந்திருந்துவிட்டு வந்துவிடுவோம்.

எங்கள் இருவரையும் பைத்தியம் என்று தலையில் அடித்துக்கொள்வார் மீனாட்சியம்மா!

இந்திரா காந்தியின் கொலைக்குப் பின்னால் இருந்த அரசியல் போன்ற கனமான விஷயங்களிலிருந்து அன்றைய நாளிதழ் கிசுகிசு வரை எல்லாமே பேசமுடியும் அவரிடம்!

ஆனால், அவர் மீது எனக்கு ஒரு மிகப்பெரிய குறை இருந்ததுண்டு!

எங்கள் இருவருக்கும் நெருங்கிய சொந்தம் ஒருவர் இருந்தார். அவருக்கு பெண்டாட்டியே தெய்வம்!

அவரை வரைமுறை இல்லாமல் எங்களோடு சேர்ந்துகொண்டு முகத்துக்கு நேராக கலாய்ப்பார்.

எனக்குத் தெரிந்து மீனாட்சி அம்மாவிடம் அவர் ஆசையாய் நெருங்கிப்பேசி நாங்கள் யாருமே பார்த்ததில்லை!

இவ்வளவு ஜோவியலாக இருக்கும் அவர் ஏன் மற்றவர்களைப்போல் மனைவியிடம் நெருக்கம் காட்டுவதே இல்லை என்பது எங்களுக்கு ஒரு பெரிய குறை!

ஒருவகையில் மேல் சாவனிஸ்ட் என்றுகூட நினைக்குமளவு!

இன்னொன்று, குடும்பத்தில் யார் வந்திருந்தாலும், வயதில் மூத்தவர்களே ஆனாலும், கொஞ்சமும் தயங்காது அவர்கள் முன்னிலையிலேயே சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு, விரலிடுக்கில் புகையப் பேசுவார்.

பார்க்கலாம், நாளைக்கு மருமகன் என்று ஒருவர் வந்தால் தானே அடங்கிப்போவார் என்று கொஞ்சம் ஆவலாகவே நினைத்ததுண்டு!
திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்த மருமகன் (முன்கூட்டியே சொந்தமும்கூட) ஏதோ வேலையாக வெளியே கிளம்ப,
 "கனகு, வரும்போது ஒரு பாக்கெட் கோல்ட்ஃப்ளேக் கிங்ஸ் வாங்கிட்டு வந்துடு!"
இவராவது இறங்குவதாவது!!

அலுவலக காரில் அனாவசியமாக மனைவியை வெளியே அழைத்துப்போனதில்லை, அன்பாய் தானாக ஒரு முழம் பூ வாங்கிவந்து யாரும் பார்த்ததில்லை, திருமண நாள், பிறந்த நாட்களில்கூட நெருங்கி அமர்ந்து மனைவியிடம் பேசியதில்லை!

இதை ஒருமுறை நேரில் கேட்டபோதும் "எல்லாத்தையும் எக்சிபிட் பண்ண, நான் என்ன சென்னிமலைக்காரனா" என்று பதில் கேள்வி!

ஆபீஸராகவே இருந்து மரத்துப்போய்விட்டார் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன் - சில வருடம் முன்புவரை!

மகள் வீட்டுக்கு கனடா சென்றிருந்தபோது ஒரு எதிர்பாராத விபத்தில் மண்டையில் அடிபட்டு அவர் மனைவி பழையன எல்லாம் மறந்து மனதளவில் ஒரு மூன்று வயதுக் குழந்தையாக மாறிப்போனார்!

கும்பிட்ட கடவுள்கள், கடைப்பிடித்த நேர்மை, பலனே கருதாது செய்த உதவிகள் அத்தனையும் கைவிட்டுவிட,
இதற்கு மருத்துவமே இல்லை என்று கைவிரித்துவிட்டார்கள் மருத்துவர்கள்!

ஆனால் இப்போது நினைத்துப்பார்த்தால், அவரது உண்மை அன்பு, காதல் நேசம் அத்தனையும் எங்களுக்குப் புரிவதற்காகவே அவருக்கு அந்தத் தாளமுடியாத சோதனையைக் கொடுத்தான் இறைவன் என்று படுகிறது!

ஏறத்தாழ ஒரு கைக்குழந்தையாகவே மாறிப்போன சித்திக்கு சித்தப்பாவைத் தவிர யாரையுமே முழுமையாக நியாபகம் இல்லை
கூடப் பிறந்தவர்கள், தான் பெற்ற பிள்ளைகள் என எல்லோருமே அவ்வப்போது நியாபக அடுக்கில் வந்துவந்து போன விருந்தாளிகள்!

விழித்திருக்கும் எந்நேரமும் அப்பா அப்பா என்று அவர் கையை விடாமல் பற்றிக்கொண்டே இருப்பார்!
எல்லா விஷயத்திலும் அவர் கூடவே இருந்து செய்யவேண்டும் என்று கைக்குழந்தையாய் அடம்!

ஒரு நிமிடம் கூட முகம் சுளிக்காமல் அருவெறுப்பு காட்டாமல் எல்லாவற்றையும் செய்ததோடு, கடைசிவரை அவர் மீண்டு வருவார் என்று முழு நம்பிக்கையோடு காத்திருந்தார்!

கைவிட்டுப் போனால் போதும் என்று ஒரு சலிப்பான வார்த்தை அவர் வாயிலிருந்து எப்போதுமே வந்ததில்லை!

வீட்டுக்குள்ளேயே தோரணை மாறாத ஆபீஸர், கட்டிய மனைவிக்கு தாயுமானவனாய் முழுமனதாய் ஓயாது பணிவிடை செய்துகிடந்தார்!

வாழும் காலத்தில், பருவத்தில் வெளிப்படையாக காட்டாத அன்பையும் பரிவையும் காதலையும் உணராத நிலைக்குத் தள்ளப்பட்டவரிடம் எந்தவொரு தடையும் இல்லாமல் வாரி வழங்கினார்!

உண்மையான அன்பும் காதலும் எந்த நேரத்தில் வெளிப்படையாக காட்டப்பட வேண்டும் என்பதை செயலில் காட்டினார்!

நான் உட்பட, மனைவியிடம் காதலாகி கசிந்துருகுவதாய் காண்பித்துத் திரியும் யாரும் அவ்வளவு பரிவோடு அந்த  வயதில் நடந்துகொள்வோம் என்று ஒரு துளியும் எனக்கு நம்பிக்கை இல்லை!

அந்த வகையில் ஈடு இணையற்றவர் எங்கள் VM சித்தப்பா!

அடுத்தது, என் தந்தைக்கும் அவருக்குமான ஒரு லவ் ஹேட் உறவு!
இருவருக்கும் அப்படி ஒரு தோழமை சிறுவயது முதல்!

இவரைக் கலந்துகொள்ளாமல் அவரோ, அவரிடம் ஆலோசனை கேட்காமல் இவரோ எதுவுமே செய்ததில்லை!

ஆனால், இருவரும் இரண்டு துருவம்!

சித்தப்பா விதிமுறைக்கோட்டை விட்டு விலகாமல் நடப்பவர். அவர் சொல்லும் வழிமுறைகளும் அப்படித்தான்!

அப்பா, ஒரு டிபிகல் பிசினெஸ் மேன்! வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று கொஞ்சம் வழிமுறைகளைத் தள்ளிவைத்து நடப்பவர். எப்படியாவது வினை முடிப்பது அவர் குறி!

ஆலோசனை சொன்ன வழி போகாமல் அவர் இஷ்டத்துக்கு ஏதாவது செய்து, சமயங்களில் வரும் இடர்களை திட்டிக்கொண்டே சரி செய்தும் கொடுப்பார்!

SS எல்லாமே கேட்டுக்குவார், ஆனால் அவர் இஷ்டத்துக்குத்தான் செய்வார் என்று இவரும் , உங்க சித்தப்பா அவர் இஷ்டத்துக்குத்தான் செய்வார் என்று அவரும் சொல்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வு!

ஆனால், அடுத்த முறை ஒருவரை கேட்காமல் மற்றொருவர் முடிவெடுத்ததில்லை!

இடையில் குடுமபத்துக்குள் நடந்த சில குளறுபடிகள் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப்போட்டபோதும் அவர்களுக்குள் இருந்த அந்தப் புரிதல் மாறவே இல்லை!

என் தந்தை படுத்த படுக்கையாய் சில மாதங்களை கடக்க நேர்ந்தபோது எப்படிப்பா இருக்கு, என்று அடிக்கடி போனில் கலங்குவார்!

சென்ற ஆண்டு அவர் மறைந்தபோது பாதிவழி வந்து திரும்பிப்போக வேண்டிய ஒரு நிர்பந்தம் வந்தபோது வீடியோ காலில் தன் பால்ய நண்பரின் உடலைப்பார்த்து கதறி அழுதது மறக்கமுடியாத வலி!

எதற்குமே கலங்காத VM சித்தப்பா அழக்கூட செய்வார் என்பதையே அன்றுதான் பார்க்க நேர்ந்தது!

குடும்பக் குழப்பங்களால் இரு அணிகள் பிரிந்து நிற்கவேண்டிய நிலை வந்தபோது அவர் வேறுபக்கம் நிற்கவேண்டிய நிர்பந்தம்!

தொடர்புகள் முற்றாய் அழிந்துபோய் ஒருவரை மற்றொருவர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புகளே அற்றுப்போன ஏறத்தாழ இருபது ஆண்டுகள்!

படிக்கும் காலத்தும், அவர் நிழலில் வாழ்ந்த காலத்தும் வெளிப்படையாய் தெரிந்த அவரது கண்டிப்பான முகம் மட்டுமே மனதில் நிலைத்து நிற்க, உள்ளூடாய் ஓடிய அன்பைப் புரிந்துகொள்ளாமலே கடந்துபோனது காலம்!

கண்ணை மறைத்துப் பட்டை கட்டிய பந்தயக் குதிரையாக பணத்தை, பொசிஷனை உறவுகளை தேடி ஓடிக்கொண்டிருந்த காலத்தில் அவரைப்பற்றிய நல்லவற்றை காண முடியாமலே போய்விட்டது!

 எனக்கு மட்டும் தன்னால் எதுவும் உதவி செய்யமுடியவில்லை என்று ஒருமுறை என் தந்தையிடம் அவர் சொல்லி வருத்தப்பட்டதாய் அறிய நேர்ந்தது!

அப்படி அவர் வருந்தியிருக்கவே வேண்டியதில்லை!

பெற்ற குழந்தைகளிடம் எப்படி தோழமையோடு இருப்பது என்பதை,
எந்த சூழலிலும் மனம் கலங்கக்கூடாது என்பதை,
விமர்சனங்களைப் புறம் தள்ளி மனம் சொல்லும் நேர்வழி நடக்கும் உரத்தை,
எந்நிலை இருப்போரிடமும் ஒருநிலை வைத்துப் பழகுவதை,
பிரதிபலன் என்ற வார்த்தையை நினைத்தும் பார்க்காமல் உறவுக்கும் ஏனையோருக்கும் உதவுவதை,
தன்னெஞ்சறிவது பொய்யற்க என்று உள்ளுரை நேர்மையை
என
விலைமதிப்பற்ற இத்தனை செல்வங்களை நான் அவரிடமிருந்து மட்டுமே கற்றுக்கொண்டேன் என்பதைவிட வேறென்ன அவர் தனிப்பட்டு எனக்கு செய்திருக்கமுடியம்?

இன்றும், தான் நேசிக்கும் ஒரு குழந்தைக்கு தீவிரக் கற்றலில் நேர்ந்த மனக்குழப்பத்துக்கு தனி மனிதனாய் முதுமை தரும் சோதனைகளை மறந்து தீர்வு காண ஓடிக்கொண்டிருக்கும் வல்லமை அவரது தீரா சொத்து!

பலராலும் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்ட முட்பலா அவர்.

காலம் போன காலத்தில் இவ்வளவு தாமதமாக அந்த பொக்கிஷத்தை புரிந்துகொள்ள வாய்த்திருக்கிறது.
இருபது வருடகாலம் எந்த நேரிடையான காரணமும் இல்லாமல் அந்த அன்பான ஆத்மாவிடமும் தொடர்பின்றி காலம் கடந்திருக்கிறது!

இப்போது இறையிடம் ஒரே பிரார்த்தனைதான்!

இன்னுமொரு நூறாண்டு அவர் தன் இயல்பு மாறாது நிறைவாழ்வு வாழ இறை அருளட்டும்!

அடுத்த பிறப்பிலும் நாங்கள் இதே உறவோடு பிறந்து அவரை காலத்தே புரிந்துகொண்டு அவர் நிழலிலேயே என் காலம் கடக்கட்டும்!1 கருத்து:

  1. Fantastic. Very good explanation. The way of narration is nice. None other than you, can write the history of a person like this. Each scene is blooming in front of anybody's eyes. All the best.

    பதிலளிநீக்கு