திங்கள், 21 அக்டோபர், 2019

தினசரி ஒரு கவிதைப்பகிர்வு! நேற்றுவரை!!


இதுவரை பகிர்ந்தவை!

எல்லோரும் வைக்கிறார்களே, நாமும் வைத்தால் என்ன என்று தோன்றியதால் இந்த தேர்தல்!

தினசரி ஒரு கவிதை, எழுதியவர் யார் என்று!

எதிர்பார்த்ததைவிட அதிகமாக,  அதிகபட்சம் இருபதுபேர் (இதுவே எதேஷ்டம்!) கலந்துகொள்ள, வேதாளம் சுமந்த விக்கிரமாதித்தன் போல் இன்றுவரை தூக்கிக்கொண்டு அலைகிறேன்!

கவிதையில் ஒரு சௌகர்யம்!
நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று எதுவுமே இல்லை!

கவிதை - அவ்வளவுதான்! அது நல்லதா கெட்டதா என்பது அவரவர் பார்வையில்!

நேற்று முன்தினம் ஒரு தோழமையிடம் ஒரு தீவிரமான விஷயம் பகிரவேண்டும் என்று சொன்னபோது முதல் கேள்வி " Is it good or bad?"
பதில் இப்படித்தான் சொல்ல முடிந்தது! -
"It is not always necessary to define things as either good or bad dear!"
அதுபோலத்தான் கவிதையும்

கவிதைக்கு ஒரு வரைமுறைப்படுத்தப்பட்ட அர்த்தமே இல்லை! கவிதையின் பொருள் என்பது வாசிப்பவன் மனநிலையைப் பொறுத்தே!

ஒரே கவிதையை ஒருவரே வாசிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு அர்த்தம்!
அதனால்தான் அது கவிதை! ஒரு குழந்தையின் புன்னகையைப்போல, அழுகையைப்போல அவரவருக்கான அர்த்தங்கள்!

எழுதியவரின் அர்த்தம் அந்தக் குழந்தைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

கவிதைக்கு அருஞ்சொற்பொருள் தேட நினைப்பது வாழ்வின் காரணத்தைப் புரிந்துகொள்ள முயல்வதைப்போல் வெட்டி வேலை!

நான் பகிரும் இந்தக் கவிதைகளும் அதைப்போலத்தான்!  
அது படிப்பவர் மனதில் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறதோ அதைப்பொறுத்து அது ரசிக்கவோ தூற்றவோ!

எனக்கு இதைப் பகிர்வதில் ஒரு எளிய நோக்கம் இருக்கிறது!
இது யாரோ ஒருவரையாவது மறந்துபோன வாசிப்பனுபவத்திற்கு மீண்டும் கைபிடித்து இட்டுச்செல்லவேண்டும் என்பது!

நான் அடிக்கடி என் அம்மாவிடம் வாங்கும் வசவு
"நீ புத்தகம் வாங்கிய காசை சேர்த்துவைத்திருந்தால் ஒரு கோடீஸ்வரன் ஆகியிருக்கலாம்! இந்தக் குப்பையையெல்லாம் படித்த நேரத்தில் பாடத்தைப் படித்திருந்தால் இந்நேரம் பெரிய கலெக்டர் ஆகியிருக்கலாம்!"

நல்லவேளை, எனக்கு கோடீஸ்வரன் ஆகும் ஆசையும் இல்லை, இந்த நாட்டுக்கு இப்படி ஒரு அரைகுறை கலெக்டராக வரும் சாபமும் இல்லை!

பகிர்ந்த நாளிலிருந்து இன்றுவரை தொடரும் என்னைப்போலவே கிறுக்குப்பிடித்த இன்னொரு ஜீவன், என் அன்புத்தங்கையிடமிருந்து ஒரு கமெண்ட் - புத்தகங்களின் புகைப்படம் பகிரலாமே என்று!

அதை செய்துவரும்போது இன்று ஒரு தோழமையின் கருத்து - ஹாஸ்டேக் போடலாமே என்று!  
அதை நாளையிலிருந்து செய்துகொள்ளலாம் என்றாலும், இதுவரை பகிர்ந்தவற்றை அப்படியே தொகுத்துப் போடலாம் என்றொரு எண்ணம்!

படிக்கும் ஆசை வருவதே இன்றைய கேளிக்கை மலிந்த காலகட்டத்தில் பேரதிசயம். அதற்கு என்னாலான ஒரு சின்ன ஒத்துழைப்பு!  
அவ்வளவே!

ஆனால், இதில் எனக்கு ஒரு பெரிய  நன்மை! வருடக்கணக்கில் ஒழுங்கு படுத்தாமல் தூசி மண்டிக்கிடந்த என் புத்தக அலமாரியை ஆராய ஒரு வாய்ப்பு!

நாளை எல்லாவற்றையும் கொட்டி அடுக்க எண்ணம்! நாளை மறுதினம் பகிர புத்தகம் எடுத்தாக வேண்டுமே!

கடந்த சில நாள் தேடலிலேயே, ஒரு புதையல் வேட்டை ஆடிய அனுபவம்!

இன்னும் படிக்காத, எப்போது பார்த்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும் பல ரத்தினங்கள் - குப்பையில் இறைத்ததுபோல!

இன்னொருமுறை பாபுவோடும், ஜமுனாவோடும் காதல் உலா வரவேண்டும்!

இன்னும் நெகிழித்தாள் கிழிக்காமல் இருக்கும் புத்தகங்களை முதலில் படித்து முடிக்கவேண்டும் - அவை பாவம் நபும்சகனை மணக்க நேர்ந்த பேரழகிகளைப்போல் ஏங்கிக் கிடக்கின்றன!

சமீபகாலமாக போதுமென்ற ஒரு நிறைவும், கிளம்பிவிடலாம் என்றொரு அலுப்பும் வந்துவிட்டன வாழ்க்கையில்

இந்தப் புத்தகங்களைப் பார்க்கும்போது, ஓடும்வரை ஓடிவிட்டு, கொஞ்சநாள் சாய்வுநாற்காலியில் சாய்ந்து படித்துக்கொண்டிருக்கும்போதே செத்துப்போகவேண்டும் என்று ஆசையும் பிரார்த்தனைகளும்!

பார்ப்போம் - இதுவும் ஓடும்வரை ஓடட்டும்!எஞ்சியிருப்பவற்றையும் புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கலாம்! சோம்பேறித்தனம் கூடவே பிறந்து வளர்வதால், இதே அதிகம் என்று பட்டது! எனவே,....


"மதுக்குவளைகளில் தன்
முகம் பார்த்துக் கொண்டான்
நல்ல தமிழ்க் கவிதைகளில் தன்
நடை பார்த்துக் கொண்டான்
இளைய மயில்களிடம்
எடை பார்த்துக் கொண்டான்"
கண்ணதாசனை இப்படிச் சொன்னது
-         மு. மேத்தா

பாழும் பஸ் நெரிசலில்
பாவையரின் இடிதாங்கி
பாவம், இவர்களுக்குப்
பைகளொரு பாதுகாப்பு..
கர்ணனுக்கு கவசகுண்டலம்
கண்ணகிக்கு காற்சிலம்பு
காரியாலயம் செல்லும்
காரிகையர்க்கோ
கைப்பையே கவசம்!
-         முத்துலிங்கம்
சைக்கிளின் பின்னே
மாமிசம் போக காக்கை
அதனை துரத்திக் கொத்த
சேலையைப் பார்த்ததும்
பார்வையில் துரத்தினேன்
காக்கைக்கும் எனக்கும்
வேறென்ன வேலை
-         பாலகுமாரன்

பொட்டச்சியா?
கருமம்!
ஈரத்துணியால்
கழுத்தை இறுக்கி
கதையை முடி!
கொல்ல மனம் வரவில்லையா?
கிடக்கட்டும் விடு கழுதையை!
தண்ணீர் சுமக்க
துணி துவைக்க
கடவுள் அனுப்பிய
கூலியென்று
நினைத்துக்கொள்!
வளர்கிறபோதே
அடிமைத்தனத்தை
புத்தியில் ஏற்று
சாகும்வரை
அடுத்தவர் நிழலிலே
ஒண்டச் சொல்!
-         உமா மஹேஸ்வரி
முட்டி மோதிப் பார்க்கிறது கடல்
மணலைத் தன் நீலப்புடவைக்குள்
சுருட்டிக்கொள்ள,
மிகப் பாசத்தோடும்
நேசத்தோடும் மணல்,
பாறை மலையாய் நிற்கிறது
மூன்றில் ஒரு பங்குதான் என்றாலும்
இது நீருருண்டை அல்ல
மண்ணுருண்டைதான்.
-         ஆத்மாநாம்


கோணலாகப் பார்க்கும்
காக்கைக்கு ஒன்றும்
நேராகத் தெரிய முடியாது
மாணவனாக இருந்த காலத்தில்
மார்க்ஸாக உலகைப் பார்த்தேன்
முதுமை அடைந்த இப்போது
முட்டாக்கிட்ட சங்கரனாகப் பார்க்கிறேன்
ஆனால் தோன்றுகிறது,
எல்லாம்
பலன் ஒன்றுதான் என்று
-         காசியபன்
இந்த வாசலில்
மிகவும் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறேன்
ஆனால் எப்போதும்
யாராலும் விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச்செண்டுகளாய்
அனுப்பப்படுகின்றன
-         சல்மா

மேத்தா நான் என்பதால்,
மேத்தா நான் என்பதால்...
தாத்தா பற்றிப் பாடவந்துள்ளேன்
தா தா என்றாலும்
தா தா என்றாலும்
தராதவனெல்லாம் தாத்தாவோ...
- கவியரங்கக் கவிதைகளை இப்படி ஓட்டியவர்
- சோ. ராமசாமி 
ஒரு பூவைப்போல்
சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப்போல்
பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாயப்படுத்தும்
-         அப்துல் ரகுமான்

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது
அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது
இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது
பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கி உன் கைகளில்
தெரிந்த நேசத்தை
ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?
-         கனிமொழி
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர்வாரும் உற்சவம்
வருடத்துக்கொருமுறை
விசேஷமாய் நடக்கும்
ஆழ்நீருக்குள் அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்
...............
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறார்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க
-         நா. முத்துக்குமார்

உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவநல்லூர்
நீயும் நானும் ஒரே மதம்
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வகுப்பும்கூட
உன்றன் தந்தையும் என்றன் தந்தையும் சொந்தக்காரர்கள் மைத்துனன்மார்கள்
எனவே செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே
-         மீரா
தன் தோலை உரித்தவன்
கண்களில் நீர் வர வைக்கிறது
வெங்காயத்தின் சுயமரியாதை.
அதனால்தான் பெரியாருக்கு
அதிகம் வெங்காயம் பிடிக்கிறது
 - வாலி

இன்னொரு சுதந்திரம் வேண்டும்
இரவில் எதைக் கொடுத்தான்?
எதை வாங்கினோம்
எவர் வாங்கினார்
ஏதும் தெரியவில்லை
ஒரு பகற்பொழுதில்
உச்சி வெயிலில்
ஒரு சுதந்திரம் வேண்டும்!
-         தமிழன்பன்   

கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து வளைந்து
பெருக்கிப் போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு
-         கல்யாண்ஜி
கோடிக் கனவுகள் ஆடிவருகுது-
மலர்க் கூட்டம் எழுந்துயிரோடு வருகுது
காலக்கடலிலோர் ஓடம் வருகுது-
மனக் காட்டை உழுதிடப் பொன்ஏர் வருகுது
-         நா. காமராசன்
சிலப்பதிகாரம்
பால் நகையாள்
வெண்முத்துப்
பல் நகையாள்
தன் கால்நகையால்
கழுத்துநகை
இழந்த கதை!
-         அப்துல் ரகுமான்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக