செவ்வாய், 15 அக்டோபர், 2019

நான் ஏன் கோவிலுக்குப் போவதில்லை?இனி என்ன இருக்கிறது இறையிடம் வேண்ட?7.10.2019
காலை ஆறரை மணிக்கு ஆரம்பித்தது வீடு நோக்கிய பயணம்!

வரும் வழியெங்கும் மொபைல் நெட்ஒர்க் இல்லை!
ஏறத்தாழ ஒருமணிநேர பயணத்துக்குப்பின், கவரேஜ் வந்துவிட்டது என்று சொல்லும்விதமாக மொபைலில் Hi என்றொரு மெசேஜ் வந்த மறுநொடி அழைத்துவிட்டேன்

மறுமுனையில் ரிங் போகும் சத்தம் கேட்குமுன், ஹலோ என்றொரு பதட்டமான குரல், தொடர்ந்து ஓவென்று அழுகை!

அழுகை அடங்க சில வினாடிகள் ஆனது!
எப்போதும் அவ்வளவு சுலபமாக வலியைக் காட்டிக்கொள்ளாத மகன், அத்தனைபேர் கூட இருக்கும் சூழலில் அழுவது எனக்கு ஆச்சர்யமான புது அனுபவம்!

கொஞ்சம் பெரியமனிதத்தனம், தன் பிம்பம் பற்றி மிகுந்த ஜாக்கிரதை உணர்வுள்ள பதின்ம வயதினன்

அப்படி அத்தனைபேர் முன்பு அழுதது கொஞ்சம் அதிரவைத்தது!

என்ன ஆச்சு தம்பி என்று கேட்டதற்கு,
இரு, நான் போய் சாப்பிட்டுவிட்டு வந்து கூப்பிடுறேன்! எல்லோரும் எனக்காகக் காத்திருக்கிறாங்க!”

“என்ன ஆச்சுன்னு சொல்லிட்டுப்போ தம்பி!”

“ஒரு பத்து நிமிடம் பதட்டமாகவே இரு அப்போதான் உனக்கு என் இடத்தில் இருந்து யோசிக்கத் தோணும்!”
சொல்லியபடி போனை துண்டித்துவிட்டான்!

குறுகலான மலைப்பாதை - லேசான பதட்டத்தோடே ஒட்டிக்கொண்டு வரும்போதே, தொடர்ச்சியான அழைப்புக்கள்- என், மனைவியின், மகளின் என எல்லோர் அலைபேசிக்கும்!

அழைத்தவர்கள் எல்லாம் கேட்ட ஒரே விஷயம்,
ஆர் யூ சேஃப்?
ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?

மெதுவாக கதைவசனம் புரிய ஆரம்பித்தது!

பத்துநாள் பள்ளிச் சுற்றுலாவில் பையன் குஜராத் சென்றுவிட, வீட்டில் முகத்தறைந்த வெறுமை

இடையில் மகளின் பிறந்ததினம் வர, ஒரு மாறுதலுக்கு எங்காவது போகலாம் என்று சட்டென்று முடிவெடுத்து,
இரண்டுநாள் பயணமாக மூணாறு!

தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், ஊரும் சாலைகளும் நிரம்பி வழிய, இரண்டாம் நாள் மாலையில் ஊர்ந்து ஊர்ந்து ஊரைவிட்டு வெளியே வரும்போதே எட்டு மணி!

கொஞ்சம் குறுகலான மலைப்பாதை!
தொடர்மழையால் வெகுவாக சேதமுற்ற பாதையில் எதிரில் வரும் வண்டிக்கு வழிவிட்டு ஒதுங்குவதுகூட வெகு சிரமம்!

நல்ல மழை, கண்ணில் வந்து அப்பிக்கொள்ளும் இருட்டு! யானை நடமாட்டம்  அதிகம் என்ற ஆயிரம் காரணிகள்!

இருந்தும், நள்ளிரவுக்குள் ஊருக்குப் போய்விடலாம் என்ற முரட்டுப் பிடிவாதம்! கூடவே, இன்னும் ரத்தத்தில் மீதமிருக்கும் சூடு!

வழக்கம்போல் ஒன்பது மணிக்கு ஃபோன் செய்த மகனிடம், நான் சொன்னது,
"எப்படியும் பதினோரு மணிக்கு ஊருக்குப் போயிடுவோம் தம்பி!"

என்னிடமும், அவன் அம்மாவிடமும் மாறிமாறி, ஜாக்கிரதையாகப் போகச் சொல்லி நான்கைந்துமுறை சொன்னவன்,
காலையில் எட்டு மணிக்குள் இங்கிருந்து கிளம்பணும், நான் போய் தூங்கணும், காலைல கூப்பிடுறேன்!”

ஃபோனை வைக்குமுன் அக்காவிடம் கொடு என்று சொல்லி, அவரிடமும். " அப்பா முரட்டுத்தனமா ஓட்டப்போறார், பார்த்துக்கோ!"

இதற்குப்பின் நடந்ததுதான் எதிர்பாராத திருப்பம்!

இரண்டுநாள் ஓயாத அலைச்சலில், மறையூர் வருவதற்குள்ளாகவே மனைவிக்கும் மகளுக்கும் கொஞ்சம் அசதி!

இங்கேயே சாப்பிட்டுவிட்டு, தங்கி, காலையில் போகலாம் ப்ளீஸ்! ரொம்ப முடியலை!

ஓயாத கூட்டத்தில் மறையூரில்கூட ஒரு இடத்திலும் ரூம் கிடைக்கவில்லை

அப்பா, தாயே என்று கெஞ்சி, காலை ஏழு மணிக்குள் கிளம்பிவிடணும் என்கின்ற நிபந்தனையோடு, ஒற்றை அறை கிடைத்தது என் போன தலைமுறை செய்த பூர்வ புண்ணியத்தால்!

சாதாரணமான நாளில் அந்த ஹோட்டலில் காலைக்கூட எடுத்துவைக்காத மற்ற மூவரும், இது கிடைத்ததே அதிர்ஷ்டம் என்று ஒப்புக்கொள்ள, அடித்துப்போட்டது போன்ற அசதியில் கரைந்தது இரவு!

நான், மனைவி, மகள், தம்பி மகள் என்ற நான்கு பேர் கையிலிருந்த ஐந்து அலைபேசியுமே தொடர்பு எல்லைக்கு வெளியே!

ஓடோஃபோன், ஏர்டெல் என எந்த நெட்ஒர்க்கும் இல்லை

அதிர்ஷ்டம் இருந்தால் ஏதோஒரு தேவ கணத்தில் பிஎஸ்என்எல் மட்டும் சில மைக்ரோ வினாடிகள் வேலை செய்யும் ஒரு சிற்றூர் அது!

எல்லா கைபேசியும் செத்துக்கிடக்க, ஏழு மணிக்குள் கிளம்பவேண்டும் என்கின்ற கழுத்துக் கத்தியில், மகனோடு பேசவேண்டும் என்பதே மறந்துபோனது!

மாறிமாறி நான்குபேர் செல்லுக்கும் கூப்பிட்டுப் பார்க்க, அத்தனையும் ஸ்விட்ச் ஆஃப் அல்லது அவுட் ஆஃப் கவரேஜ் என்று திரும்பத் திரும்பச் சொல்ல, பயந்து போய்விட்டான் பாவம்!

வேறு வழி எதுவும் புலப்படாததால், என் அலுவலக நண்பர் உட்பட, தெரிந்த அத்தனைபேருக்கும் என்னிடமிருந்து ஏதாவது போன் வந்ததா என்று கேட்டிருக்கிறான்!

டூருக்கு வராத அவன் பள்ளித்தோழன் ஒருவனை பிடித்து, "ரங்கா,, கொஞ்சம் என் வீட்டுக்குப்போய் வண்டி நிற்கிறதா என்று பார்த்துச்சொல்” என்று சொல்ல,
அவன் பார்த்துச் சொன்னது இன்னும் பயமுறுத்தியிருக்கிறது!
"வீடு பூட்டியிருக்கிறது, வண்டியும் இல்லை!"

ஏற்கனவே பயந்திருந்தவன், என் தங்கை வீட்டுக்கு ஃபோன் செய்து கதறியிருக்கிறான்!

யார் சொன்ன ஆறுதலும் மண்டைக்கு ஏறாமல், பித்துப் பிடித்தவன் போல் மொபைலையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்!

ஒரு நிமிடம் தேவையில்லாமல் எல்லோரையும் தொந்தரவு செய்துவிட்டான், ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதிப் பெரிது பண்ணிவிட்டான் என்று தோன்றினாலும், அவன் வழமையான நடவடிக்கைகளோடு பொருத்திப்பார்க்கையில் உள்ளுறை அன்பும் அக்கறையும் புரிந்தது!

எப்போது ஆஃபீஸ் போகும்போதும் ஒருமுறையாவது ஜாக்கிரதையாகப்போ என்று சொல்லாமல் விட்டதில்லை!

ஏதாவது வேண்டும் என்றாலும், தவிர்க்கமுடியாத கட்டத்தில்தான் இதுவரை கேட்டிருக்கிறான்

அப்படியே வாங்கிக்கொடுத்துவிட்டாலும், நானே கோபிக்குமளவு, உனக்கொன்றும் சிரமம் இல்லையே என்று பலமுறை கேட்டுக்கொண்டால்தான் அவனுக்கு மனம் ஆறும்!

வீட்டில் இன்னொரு ஜீவன் இருக்கிறது!

மூத்தது
- மகள்!

இரண்டு நாட்களுக்கு முன் நான் கிளம்பி பத்து நிமிடம் கழித்து ஒரு ஃபோன் "அப்பா, எப்போ கிளம்புனே?"

கேட்கும்போதே தெரிந்துவிட்டது கேள்வி எதற்கென்று!

கொஞ்சம் குரல் உள்வாங்கச் சொன்னேன், "ஏன்டா, இப்போதான் பத்து நிமிஷம் ஆச்சு!"

“ஏன் என்கிட்டே சொல்லாம போனே?”

"இல்லடா, நைட்டு ரெண்டு மணி வரைக்கும் முழிச்சுட்டிருந்தியே, தூங்கட்டும்ன்னு.."

“இந்தக்கதையெல்லாம் வேண்டாம், எப்பவும் சொல்லிட்டுத்தானே போவே, இன்னைக்கு ஏன் சொல்லாம போனே?”
 
“சாரிடா”.

“பேசாதே, போனை வை!”

அதற்கப்புறம் மூன்று முறை கால் செய்து சமாதானம் செய்யவேண்டியிருந்தது!

“போன் நோண்டிக்கிட்டு ட்ரைவ் பண்ணாதே,
ஸ்பீடா போகாதே,
டைமுக்கு சாப்பிடு!”
இதெல்லாம் புறப்படும்போது!

மதியம் போன் பண்ண நேர்ந்தால், முதல் கேள்வி,
சாப்பிட்டாயா? எத்தனை மணிக்கு சாப்பிட்டே?”

எங்காவது வெளியூர் போனால், மூணு மணிக்கு கட்டாயம் ஒரு கால் வரும்சாப்பிட்டாயா? என்ன சாப்பிட்டே? பொய் சொல்லாதே!”

நான் சொல்வது பொய்யென்று குரலை வைத்தே கண்டுபிடித்துவிடும் சாமர்த்தியம் வேறு!

மாலை ஆறு மணி ஆனால், முதல் கால், “எப்போ வருவே?”

வெளியூர் போயிருந்தால், எட்டு மணி ஆனதும், அரை மணிக்கு ஒரு ஃபோன்

எங்க வந்துக்கிட்டிருக்கே? வேகமா பறந்துக்கிட்டு வராதே. வண்டி ஓட்டும்போது ட்விட்டரை பார்க்காதே!”

வீடு வந்து சேரும்வரை வாசல் கதவு திறந்திருக்கும்.
பார்வை வாசலில் இருக்கும்!

வீட்டுக்குள் என்றைக்காவது அலுவலக கவலைகளை சுமந்துபோய்விட்டால் தொலைந்தேன்!

ஏன் உன் மொகரை இப்படி இருக்கு?

ஒன்னும் இல்லடா
 
பொய் சொல்லாதே!

ஒன்னும் இல்ல ராஜா
 
சரி, மேல வா!

மேலே போனதும்,
இப்போ சொல்லு”

வாயைக் கிளறி, சொல்லவைக்காமல் ஓய்வதில்லை

சொன்னால், எல்லாம் சரியா போய்டும்ப்பா. இதுக்கு எதுக்கு கவலைப்படறே? எனக்கெல்லாம் சொல்லுவே, கவலைப்படறதால எந்தப் பிரச்னை தீரப்போகுதுன்னு?

இப்போ, நீ மட்டும் ஏப்பா இப்படி இருக்கே? சரி, ஃப்ரெஷ் அப் பண்ணிக்கிட்டு வா, டீ போட்டுத் தர்றேன்!

ஒரு நிமிடம் என் முகம் வாடப் பொறுக்காது!

இல்லைன்னா, டூவீலரை எடு, ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வரலாம்!

மருதமலை அடிவாரம் வரைக்கும் சும்மா போய்வந்தாலே, கவலையெல்லாம் காணாமல் போகும்!

இப்போதான் உன் மூஞ்சி பார்க்கற மாதிரி இருக்கு. எதுக்கு அப்படி மூஞ்சிய உர்ருன்னு வெச்சுக்கறே?

இது ஒன்று.

என்ன டிரஸ் பண்றே நீ? ஆபீஸுக்குப் போகும்போது நீட்டா போகவேண்டாமா?

என்னடா காம்போ இது, மேட்ச்சே ஆகலே! போய் சட்டையை மாத்திக்கிட்டு வா. இல்லை. நீ இரு நீ இன்னும் கேவலமா போட்டுக்கிட்டு வருவே, நானே எடுத்துக்கிட்டு வர்றேன்!

மாற்றிக்கொண்டு வராமல் கிளம்ப விட்டதில்லை!

ஏன் இன்னைக்கு ஷேவ் பண்ணலே
ஏன் இன்னும் முடி வெட்டிக்கலே

ஸ்வீட்டா சாப்பிடாதே, ராத்திரியில நெய் சேர்த்துக்காதே,
அம்மா. அவரு நெய் கேட்டா கொடுக்காதே!
அரை டம்ளராவது பால் குடிச்சுட்டுப் போய் படு
 
இதெல்லாம் என்னைப் பெற்றவள் சொல்லிக்கூட நான் கேட்டதில்லை!

ஏனோ இன்னைக்கு தலை வலிக்கற மாதிரி இருக்கு! மனைவியிடம் சொன்னால், எப்படித்தான் தெரியுமோ
அடுத்த இரண்டாவது நிமிடம்,
அம்மாகிட்ட தலைவலின்னு சொன்னாயாமே? வேஸோகிரைன் வேணுமா

வேண்டாம்ன்னு சொன்னா,
போய் படு சீக்கிரம்!

ஒருநாள், ஒரு பொழுது என் முகம் வாடப் பொறுத்ததில்லை இரண்டும்!

ஞாயிறன்று வெளியே போவதென்பது எனக்கு ஹிமாலயன் டாஸ்க்!

ஒருநாள் ரெஸ்ட் எடுக்கமுடியாதா உன்னாலே? அப்படி என்ன ஆபீஸ்?

நோப்பா. இனிமேல், நீ சண்டே ஆபீஸுக்கு போனே, எனக்கு கெட்ட கோபம் வரும்!

அடடா...
என்ன சொல்ல ஆரம்பித்து எதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்?

நான் ஏன் கோவிலுக்குப் போவதில்லை

அதைத்தான் எழுத ஆரம்பித்தேன்!

இப்படி தன்னையே இரண்டாய் பிரித்து என்னோடு அனுப்பிவிட்டு,
கருவறை இருட்டில் வெறும் கல்லாய் நின்றுவிட்ட இறைவனிடம் கேட்க
இனி வேறு என்ன இருக்கிறது எனக்கு?
2 கருத்துகள்: