செவ்வாய், 29 அக்டோபர், 2019

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனும் அதைச் சுற்றி நடந்த நாடகங்களும்!


நான்கு நாட்கள் - நடந்த நாடகங்கள்!

ஒரு குடும்பத்தை மீளாத துயரில் ஆழ்த்தியிருக்கிறது ஒரு சிறுவனின் எதிர்பாராத மரணம்!

இது ஒரு ஈடுகட்ட முடியாத சோகம்

அந்தப் பெற்றோருக்கு மீண்டுவரும் மனவலிமையைத் தரட்டும் இறை!

ஆனால், அந்தத் துயரம் எத்தனை வக்கிரங்களுக்கு வடிகாலாகியிருக்கிறது இந்த நான்கு நாட்களில்!

பேரிடர் மீட்புப் பணிகளில் நாம் இன்னும் எவ்வளவு முன்னேற வேண்டியிருக்கிறது என்பதை இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்வும் அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றது!

ஆனால், நாம் எந்தக்காலத்தில் எந்தப் பாடங்களை கற்றிருக்கிறோம்?

இதுவும் சிலநாளில் கடந்துபோகும்
மற்றொரு பேனர் விழுந்தோ,
மற்றொரு கட்டிடம் இடிந்தோ,
மற்றொரு வாகனம் மோதியோ,
மற்றொரு மண் சரிந்தோ,
மற்றொரு நெருப்பில் எரிந்தோ,
மற்றொரு வெள்ளத்தில் சிக்கியோ
 இன்னொரு உயிர் போகும்வரை
மறந்தும் போகும்!  
அதற்குப்பின் அதுவும் மரத்தும்போகும்!

ஆனால், இந்த விபத்தும், அதனைத் தொடர்ந்த இழப்பும் வைத்து எத்தனை வியாபாரங்கள், எத்தனை ஆதாயங்கள், எத்தனை வன்மங்கள், எத்தனை கவன ஈர்ப்புக்கள்!

சாதி, மத, கட்சி பாகுபாடுகள் எப்படி நம் அத்தனை அணுவிலும் பார்த்தீனியம் போல் பரவியிருக்கிறது என்பது இன்னொருமுறை தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது!

இவை எல்லாவற்றையும்விட அசிங்கமாய் பல்லிளித்தது ஊடக வியாபார வெறி!

ஒட்டுமொத்த ஊடகமும் அங்கேயே குத்தவைத்து இடைஞ்சல் செய்தன!

போனவன், வந்தவன் எங்கோ இருப்பவன் என அத்தனைபேரின் அபிப்ராயங்களும் நேரிடையாகவோ, தொலைபேசி வாயிலாகவோ கேட்டு நொடிக்கொருதரம் பகிரப்பட்டன!

மைக்கைப் பார்த்த அத்தனைபேரும் மறக்காமல் தங்கள் மேதமையை காட்டினர்!

இடையிடையே நெஞ்சை உருக்கும் இசையோடு அந்தச் சிறுவனின் படம், தாயின் கதறல், தந்தையின் கண்ணீர் என்று என்டர்டைன்மெண்ட் வேல்யூ குறையாமல் பார்த்துக்கொண்டன ஊடகங்கள்!

அத்தனையும் முடிந்துபோனபின்பும், இன்று காலையும் அந்த சமாதியை சோக இசைப் பின்னணியோடு காட்டிக்கொண்டிருக்கின்றன வேசி ஊடகங்கள்!

தினத்தந்தி நாளிதழ் - செய்திகளை முந்தித்தரும் என்று பெயர் பெற்றது!

அதன் நிறுவனர் ஆதித்தனார் பற்றி ஒரு சேதி சொல்லப்படுவதுண்டு!

கென்னடி சுடப்பட்ட சேதி வந்தபோது, "கென்னடி சுட்டுக்கொலை!" என்று தலைப்புச் செய்தி போடச் சொன்னார் என்று சொல்வார்கள்!
இன்னும் சாவு சேதி வரவில்லை என்று சொன்னபோது, தலையில் சுடப்பட்டவர் பிழைக்க வாய்ப்பில்லை எனவே மரணம் என்றே செய்திபோடு என்று சொன்னாராம்!

அந்த நாளிதழ் நடத்தும் செய்தி சேனல், லதா ரஜினிகாந்த் தொலைபேசியில் துணை முதல்வரிடம் விசாரித்ததை ஆடியோவோடு பகிர்கிறது! என்னவொரு பரிணாம வளர்ச்சி!

நான்கு நாட்களும் அசையாமல் அங்கேயே குத்தவைத்திருந்தனர் மாநில  சுகாதாரத்துறை அமைச்சரும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும்!

உண்மையான ஈடுபாட்டோடு இருந்தார்களா  
அன்றி இந்த சம்பவத்தின் மைலேஜ் இன்னொருவருக்குப் போய்விடக்கூடாது என்று போட்டி போட்டார்களா என்பது அவர்கள் மனச்சான்றே அறியும்!

ஆனால், அந்தச் சிறுவன் மரணித்த சேதி அவர்களுக்கு முன்பே தெரியாது என்பதை யாரை நம்பச் சொல்கிறார்கள்?

எது செய்தியாகவேண்டும், எதை எப்போது நாம் பேசவேண்டும் என்பதை ஊடகங்களே தீர்மானிக்கின்றன - அவற்றை பின்னின்று அரசியல் கைகள் இயக்குகின்றன!

அந்தக் குழந்தையை உயிரோடு மீட்கமுடியாததற்கு எத்தனையோ காரணிகள் இருந்திருக்கலாம்!  
மண்ணின் தன்மை, குறுக்கிட்ட பாறைகள், தோண்டும்போது ஏற்பட்ட அதிர்வுகள் என்று!

ஆனால், நேற்று காலை பிரதமர் அறிக்கைவிடுகிறார் - சிறுவன் உயிரோடு மீண்டுவர பிரார்த்தனைகள் என்று!

எனில், பிரதமர் வரை பொய்யே சொல்லப்பட்டிருக்கிறது என்று அர்த்தமா

எதை எப்போது அறிவிக்கவேண்டும், அதுவரை எத்தனை பொய்களை பரப்பவேண்டும், மக்களை எத்தனைநாள் இருக்கை நுனியில் உட்கார வைக்கவேண்டும் என்பதையெல்லாம் யார் தீர்மானித்தது

இனி, அடுத்த பரபரப்புக்கு மைக்கையும் கேமராவையும் தூக்கிக்கொண்டு அலையும் இந்தக் கூட்டம்!

அது அவர்களின் வியாபாரம்!
ஆனால், அதைவிட இன்னொரு அபத்தக்களஞ்சியம்!

இந்த நான்கு நாட்களும் சலங்கை கட்டிக்கொண்டு ஆடியது இணையம்!

அவரவர் சார்புநிலைக்கு ஏற்ப எத்தனை வசவுகள் வன்மங்கள்!

ஒரு உயிர் அங்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையிலும் இங்கு எத்தனை வக்கிரங்களும் கவனஈர்ப்பு பிச்சைகளும்!

அவரவர் சார்ந்த கட்சி, இயக்கம் சார்ந்தே அனுதாபங்களும் அக்கறைகளும்!

குழந்தை நலமுடன் மீண்டுவரப் பிரார்த்தனைகளைக்கூட யார் சொல்லவேண்டும் என்பதையும் இவர்களே தீர்மானித்தார்கள்!

உன் கடவுள் கிழித்தார், உன் கடவுள் பிடுங்கினார் (நாகரீகம் கருதி இப்படித்தான் சொல்லமுடிகிறது! இங்கு இறைந்துகிடந்த சொற்கள் வேறு ரகம்!) என்று மதச் சண்டை ஒருபுறம்!

உன் கட்சிக்காரனுக்கு பேச என்ன யோக்கியதை இருக்கிறது என்று குடுமிப்பிடி

வழக்கம்போல் ஆத்திக நாத்திக சேற்றிறைப்புக்கள்! - இத்தனை வன்மமும் அந்தக் குழந்தைமீதான் அக்கறையால் என்று நம்ப முட்டாள் உள்ளம் வேண்டும்.

ஜோதிமணி ஸீன் போடுகிறார் என்று ஒரு தரப்பு!  
விஜயபாஸ்கர் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என்று ஒரு தரப்பு!

இதில், மருத்துவர்கள் வேலை நிறுத்தம் நடக்கும்போது இவருக்கு இங்கென்ன வேலை? அதையல்லவா அவர் போய் தீர்த்துவைத்திருக்கவேண்டும் என்று பேசியவர்கள் பகுத்தறிவு வியக்கவைக்கிறது!

அவர் போயிருந்தால், மருத்துவர்கள் போராட்டத்தை தீர்த்துவைத்திருப்பர் என்று நம்புவது எத்தனை பெரிய  மூடநம்பிக்கை!

இதுகூட அவரவர் சார்ந்த கட்சியைப் பொறுத்து மாறும் அபிப்பிராயங்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்!

ஆனால், ஒரு மரணத்தை எப்போது அறிவிக்கவேண்டும் என்பதை அங்கிருந்த யார் தீர்மானித்தது?  
அது கூட்டுக்களவாணித்தனம் இல்லையா?

இன்னொரு கூட்டம்!
போர்வெல் குழியில் விழுந்த குழந்தையை மீட்கமுடியாத நாட்டுக்கு ராக்கெட் தேவையா என்று மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு சினிமா வசனம் பேசிக்கொண்டிருந்தது!

ஒரு பதினைந்துவயது சிறுவனை தலைகீழாக கட்டி அனுப்பியிருக்கலாம் என்றொரு விஞ்ஞான தீர்வு வேறு!

இனியாவது இதுபோல் விழும் குழந்தைகளை மீட்க சரியான கருவியை கண்டுபிடிக்கவேண்டும் என்று சிலர்!

ஐநூறு ரூபாய்க்கு ஒரு எண்ட் கேப் வாங்கிப்போடுவது குழந்தைகள் விழாமலே தடுக்கும் என்பது ஒரு எளிய தீர்வு!  
அதை ஏன் யாரும் தீவிரமாய் வலியுறுத்தவில்லை?

காரணம் இதுதான்


இத்தனை சம்பவம் நடந்தும் திருந்தாத ஜனங்களை ஏதும் செய்யமுடியாது

விழுந்தால் வந்து தூக்கிவிடவாவது செய்யட்டுமே!

இதுதான் பொதுவான மனநிலை!
நாங்கள் எந்தவகையிலும் திருந்த மாட்டோம். எங்கள் கவனக்குறைவால்,அலட்சியத்தால், எது நேர்ந்தாலும் அரசுதான் பொறுப்பு!

ஆனால், இன்னொரு கேவலமும் நடந்தது!

இந்துக்களின் தீபாவளியை கெடுக்க சதி என்று ஒரு கூட்டம் ஆரம்பித்ததுதான் உச்சகட்ட கேவலம்!

ஒரு துளி மனிதாபிமானம் இல்லாமல், சக உயிர்களின்மீது எந்தஒரு மரியாதையும் இல்லாத, மதவெறி பிடித்த நாய்களால்தான் இப்படி ஒரு கோணத்தையே யோசிக்க முடியும்!

அவர்கள் கூற்று உண்மையாக ஒரேயொரு சாத்தியக்கூறுதான்!

அந்தக் குழந்தையை அதன் பெற்றோர்களே தூக்கி குழிக்குள் போட்டுவிட்டு எல்லோருடைய தீபாவளியையும் கெடுக்க முயன்றிருக்கவேண்டும் என்பதுதான்!

இவர்களை மனிதர்கள் என்று நம்புவதே மடத்தனம்!

இன்னொரு காமெடி க்ரூப்பும் இருந்தது - விஷயத்தின் தீவிரத்தை நீர்த்துப்போக வைக்க!

கவன ஈர்ப்புக்கு என்னஒரு கூவல்!

யார் தீபாவளி வாழ்த்து சொன்னாலும்,  
"ஆஹா, அங்கொரு குழந்தை சாகக்கிடக்கிறது, உனக்கு இதயமில்லையா, ஈரமில்லையா" என்று தடியைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தது!

இதற்கிடையே, ஸ்டாலின் ஏன் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை என்றொரு கூட்டம்வேறு கதறிக்கொண்டிருந்தது இன்னொரு முரண்!

"இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, எங்களுக்கு பண்டிகை இல்லை, என் மகனே மீண்டுவா சாவை வென்றுவா" என்று ஒரே மிகைக் கூச்சல்!

உச்சகட்டமாக ஒரு பதிவு!

" எமதர்மனே, உனக்கு ஒரு உயிர்தான் வேண்டுமென்றால் என் உயிரை எடுத்துக்கொள், அந்தக் குழந்தை உயிரை விட்டுவிடு!!"

எமதர்மன் என்று ஒருவன் இல்லை, அப்படியே இருந்தாலும் அவனுக்கு காது கேட்காது என்ற தைரியம்!

சரி கொடு என்று வந்திருக்கவேண்டும் எமன்!

மிகை உணர்ச்சி தமிழன் ரத்தத்தில் ஊறியது.
ஆனால்,  இணையத்தில் அது மிகமிக ஓவர்டோஸ்!

அந்தக் குழந்தை பிழைத்துவரவேண்டும் என்ற வேண்டுதல் ஒரு ஓரத்தில் இருந்தாலும்,
என் வழக்கமான பண்டிகைநாள் நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்ற எதார்த்தத்தை சொல்லியிருந்தால் இணையம் என்னைத் தேடிப்பிடித்து வெட்டிப் போட்டிருக்கும்

அப்படி ஒரு கொதிநிலை நான்கு நாட்களாக!
என்ன செய்ய,
Be a Roman at Rome என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை!

இதற்கிடையே, பஞ்சமி நில விவகாரம் அப்படியே புதைக்கப்பட்டதுதான் இந்த ஸ்க்ரிப்ட்டின் அடிநாதம்!

யாருமே நானோ, என் கட்சியோ பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்று சொல்லவில்லை! 
உன் கட்சி, நீ அந்த இடத்தில் ஆக்கிரமித்தாயே என்றுதான் மடை மாற்ற முனைந்தனரே தவிர, நான் யோக்கியன் என்று சொல்ல முடியவில்லை!

எல்லோரும் சிக்கிக்கொண்ட சேற்றிலிருந்து மீண்டுவர இந்த அவலம் அவர்களுக்கு உதவியிருக்கிறது!

பிணவியாபாரிகள் இந்த வாய்ப்பை கச்சிதமாகப் பிடித்துக்கொண்டார்கள்!

கீரியும் பாம்பும் சண்டை போட்டுக்கொள்ளவே போவதில்லை - வேடிக்கை பார்ப்பவன் வேட்டிவரை உருவப்படும்வரை!

இம்முறை, ஊடகங்களின் துணையோடு ஒரு பிஞ்சு உயிர் அந்தக் கேடுகெட்ட அரசியல்வியாதிகளுக்கு உதவியிருக்கிறது.

பி கு:
இதுபோன்ற நிகழ்வுகளில் நம் பங்கே இல்லையா என்பது குறித்து அடுத்த பதிவு சீக்கிரமே!
வசைபாடும் கும்பலின் வசதிக்கு!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக