நாடு
கெட்டுக் குட்டிச்சுவராகிக்கொண்டிருக்கிறது!
அரசியல்வியாதிகளின்
அக்கிரமம் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது.
அரசு
அலுவலகங்களில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுகின்றன!
என்ன
செய்வார்கள் மக்கள் எனும் பாவப்பட்ட ஜீவன்கள்?
நாடும் நாட்டுமக்களும் நாசமாகப் போய்க்கொண்டிருக்க இந்த அரசியல்கட்சிகளுக்கும் அதன் தலைமைகளும் மட்டுமே காரணம்!
சொரிந்துகொள்ள
இதமான புலம்பல்கள்!
நம்மால்
என்ன செய்யமுடியும்?
நாமெல்லாம்
எவ்வளவு நல்லவர்கள்,
நமக்கேன் இப்படி நடக்கிறது?
நாம்
என்றாவது விதிமுறைகளை மீறியிருக்கிறோமா?
பிறகெப்படி
உருவானார்கள் இந்தக் கேடுகெட்ட ஊழல்வாதிகள்?
சாலையில்
நாம்
என்றாவது அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமாக விரைந்திருக்கிறோமா?
சிக்னல்களில்
கோட்டை தாண்டி நிறுத்தியிருக்கிறோமா?
ஆளில்லாத
நேரத்தில் சிக்னலை மதிக்காமல் பறந்திருக்கிறோமா?
ஹாரனை
அலறவிட்டுக்கொண்டும்,
முகப்பு விளக்கை எரியவிட்டுக்கொண்டும் ராங் சைடில் சாகசப்பயணம் செய்திருக்கிறோமா?
ஓடும்
வண்டியிலிருந்து எச்சில் துப்பியிருக்கிறோமா அன்றி, ரோட்டில் குப்பையை, தண்ணீர்
பாட்டிலை தூக்கியெறிந்திருக்கிறோமா?
நம்
உயிர் காக்கும் தலைக்கவசத்தை கட்டாயம் என்று சொன்னபின்பும் பெட்ரோல் டாங்கிற்கு அணிந்து அழகு பார்த்திருக்கிறோமா?
வாகன
சோதனை நடைபெறும்போது மட்டும் ஓடும் வண்டியிலேயே தலைக்கவசம் லாவகமாக அணிந்து சர்க்கஸ் செய்திருக்கிறோமா?
அல்லது
வாகன சோதனையில் நிற்காமல் பறந்திருக்கிறோமா?
அன்றி,
அங்கு
வாகன சோதனை நடக்கிறது என்று யாரையாவது எச்சரித்து விதிமுறை மீற தூண்டியிருக்கிறோமா?
மூக்குமுட்டக்
குடித்துவிட்டு பிறர் உயிரையும் குடிக்கும்வண்ணம் வண்டி ஓட்டியிருக்கிறோமா?
எல்லாவற்றுக்கும்
மேலாக,
கழுத்து
சுளுக்குப் பிடித்தவன்போல போனை இடுக்கிக்கொண்டு பேசிக்கொண்டோ, அல்லது வலதுகையில் போனை வைத்துக்கொண்டு இடதுகையால் மட்டுமே கியரையும் ஸ்டியரிங்கையும் இயக்கி சாகஸப் பயணம் செய்திருக்கிறோமா?
போனை
குனிந்து நோண்டிக்கொண்டே சாலையில் நடந்து கடந்திருக்கிறோமா?
பொதுவெளியில்
குடிபோதையில்
சாலை ஓரத்தில், சாக்கடையில் விழுந்து கிடந்திருக்கிறோமா?
கூச்சமின்றி
சாலையோரங்களில் ஜிப்பை இறக்கி சிறுநீர் கழித்திருக்கிறோமா?
குப்பைத்தொட்டியை
சுற்றி குப்பையை இறைத்திருக்கிறோமா?
பக்கத்துக்
காலிமனையை குப்பைக்கிடங்காய் பயன்படுத்தியிருக்கிறோமா?
திறந்துகிடக்கும்
சாக்கடை மூடியை காலாலாவது தள்ளி மூடாமல் போயிருக்கிறோமா?
சாலையை
மறித்து செத்தாலும் பிறந்தாலும் கல்யாணமா செய்தாலும் காத்து குத்தினாலும் பேனர் வைத்திருக்கிறோமா?
நடிகன்
கட்டவுட்டுக்கு பாலும் பீரும் அபிஷேகம் செய்து கும்மாளமிட்டிருக்கிறோமா?
பொதுவெளியில்
கெட்டவார்த்தை பேசுவதுதான் கெத்து என்று திரிந்திருக்கிறோமா?
பஸ்ஸுக்கோ,
ரயிலுக்கோ க்யூவில் நிற்காமல் முண்டியடித்திருக்கிறோமா?
பாவம்
தொலைக்க கோவிலுக்குப் போனாலும் காசு கொடுத்து முன்னால் போய் நின்றிருக்கிறோமா?
இலக்கு
வைத்து சாராயம் விற்கும் அரசுக்கு எதிர்பார்ப்புக்குமேல் வருமானம் பெருக்கிக் கொடுக்க மறந்திருக்கிறோமா?
ஐநூறு
ரூபாய் செலவு செய்ய மனமின்றி ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விட்டுவைத்திருக்கிறோமா?
தவறு
செய்தவனுக்கு சென்சேஷன் ஏற்றி ஐம்பது லட்சமும் அரசு வேலையும் வாங்கிக்கொடுக்க மறந்தோமா?
மாஞ்சா கயிற்றால்
குழந்தைகளை கழுத்தறுத்துக் கொன்றோமா?
சாதி
பார்த்து, கட்சி பார்த்து, வன்புணர்வைக்கூட நியாயப்படுத்திப் பேசினோமா?
அரசு அலுவலகங்களில்
வாகனத்
தணிக்கையின்போது அபராதத் தொகையைவிட குறைந்த அளவில் லஞ்சம் கொடுத்து தப்பியிருக்கிறோமா?
விதிமுறை
மீறி கட்டிய கட்டிடங்களை, வியாபாரத்தை காசு கொடுத்து பூசி மெழுகியிருக்கிறோமா?
செலவானால்
பரவாயில்லை, இதை முடித்துக்கொடுங்கள் என்று லஞ்சத்தூண்டில் வீசியிருக்கிறோமா?
வரிசை
மீறி காரியம் முடிக்க அன்பளிப்போ, சிபாரிசோ பயன்படுத்தியிருக்கிறோமா?
வியாபாரத்தில்
சட்டவிரோதமாக
பில்லில்லாமல் வியாபாரம் செய்திருக்கிறோமா?
நகைக்கடையில்
பில் வேண்டாம் என்று துண்டுசீட்டில் வரியில்லாமல் வாங்கியிருக்கிறோமா?
வருமானவரியோ
சொத்துவரியோ மறைத்துக் கட்டாமல் விட்டிருக்கிறோமா?
அரசியலில்
நேர்மையாளர்களுக்கு
வாக்களிக்க மறந்திருக்கிறோமா?
காசு
வாங்கிக்கொண்டு இருப்பதிலேயே பெரிய திருடனுக்கு வாக்களித்திருக்கிறோமா?
சாதி
மதம் பார்த்து நிறுத்தப்படும் வேட்பாளரை புறக்கணிக்காமல் கொண்டாடியிருக்கிறோமா?
நமக்குப்
பிடித்த கட்சியோ தலைமையோ தவறு செய்யும்போது தட்டிக் கேட்கத் தயங்கினோமா?
அவன்
மட்டும் யோக்கியமா என்று நடுநிலை மறந்து முட்டுக்கொடுத்திருக்கிறோமா?
ஊரைத்திருத்துவேன்
என்று வந்த உதயமூர்த்தி போன்றோரை
நோகடித்துக் கொன்றோமா?
அவர்
இயக்கத்தின் பெயரை படத்துக்கும், அவர் பெயரை நடிகனுக்கும் வைத்து அதிலும் கல்லாக் கட்டினோமா?
இப்போதும்
எப்போதும் தகுதியற்றவனையே தலைவன் என்று கொண்டாடியிருக்கிறோமா?
இப்படி எந்தக் குற்றமுமே செய்யாத அப்பழுக்கற்ற நமக்கு எங்கிருந்து வந்து வாய்த்தார்கள் இந்தக் கேடுகெட்ட அரசியல் வியாதிகளும், ஊழலில் கொழுத்த அதிகாரிகளும்?
இந்த
அப்பாவி ஜனங்களுக்கு ஏன் இந்த தண்டனை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக