வெள்ளி, 22 நவம்பர், 2019

சாந்திவனமும், ஆட்டுமந்தைகளும் சில குள்ளநரிகளும்!அது ஒரு அழகிய வனம்!

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே அந்த வனத்தின் தாரகமந்திரம்!

உலகில் எங்குமே இல்லாத அளவு பல வகையான வேறுபட்ட விலங்குகள் கூடிவாழும் சாந்திவனம்

ஒன்றிரண்டு வகைகள் வாழுமிடத்திலேயே ஓயாத சண்டைகளும் சச்சரவுகளும் மலிந்துகிடக்கும் புவியில் 
இத்தனை வகைகளும் ஒரே இடத்தில் பிரச்னைகளே இல்லாமல் கூடி வாழ்வது மற்ற எல்லா வனத்துக்கும் கொஞ்சம் உறுத்தல்தான்

சாந்திவனத்திலும் ஒரு சின்னப் பிரச்னை இருந்தது!ஒரு சின்னத் துண்டு நிலம் வெள்ளாட்டுக்கா, செம்மறியாட்டுக்கா என்று!

ஏற்றிவிடும் ஓநாய்களின் சூழ்ச்சியால் இரண்டுமே தத்தம் நிலையில் உறுதியாகவே இருந்தன!

தங்கள் முப்பாட்டன் பிறந்த நிலம் அது என்று செம்மறியாடுகளும் தங்கள் பாட்டன் வாழ்ந்த இடம் என்று வெள்ளாடுகளும் நம்பின

பகைத்தீயை அணையவிடாமல் ஊதிக்கொண்டே இருந்தன ஓநாய்கள்!

ஆடுகள் ஓயாது முட்டிக்கொண்டதில் சிந்திய ரத்தத்தை நக்கிக் குடித்துக் கொழுத்தன வஞ்சக ஓநாய்கள்!

ஆண்டுக்கணக்கில் ஆட்டு மந்தைகள் மோதிக்கொள்வது பொறுக்காமல், இரண்டு தரப்பிலும் சில மூத்த ஆடுகள் கூடி ஒரு முடிவுக்கு வந்தன!

இருதரப்பும் யானையிடம் முறையிடுவது என்று!யானையும் ஒற்றை நிபந்தனையோடு அந்த முறையீட்டை ஏற்றுக்கொண்டது!

"இரண்டு தரப்புமே பேசுவது பழங்கதை.
அதனால் இதில் ஒன்றுதான் உண்மை என்று தர்க்கரீதியாக என்னால் முடிவுசெய்ய முடியாது!
எனவே, மூத்த யானைகள் ஒன்றுகூடி, இருதரப்புக்கும் பெரிய அளவில்  பாதிப்பில்லாத ஒரு முடிவை அறிவிக்கிறோம்!
ஆனால், அந்தத் தீர்ப்பைத் தூக்கிக்கொண்டு வேறொரு யானைக்கூட்டத்திடம் பஞ்சாயத்துக்குப் போகக்கூடாது!
தீர்ப்பை எதிர்த்தோ விமர்சித்தோ இரு தரப்பும் மீண்டும் மோதிக்கொள்ளக் கூடாது"
- இதுவே அந்த நிபந்தனை!

இத்தனை வருட மோதல் தந்த வலியும் படிப்பினையும் இருதரப்பையும் யானை விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள வைத்தது!

சில ஆண்டுகள் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு ஆராய்ந்த யானை, உறுதியளித்தபடி இருதரப்புக்கும் பெரிய பாதிப்பில்லாத ஒரு தீர்ப்பை வழங்கியது!

ஆச்சரியப்படும்வண்ணம் இரு ஆட்டுமந்தையும் மகிழ்வோடு அப்படியே தீர்ப்பை ஏற்றுக்கொண்டு ஒன்றாய்க் கூடிக் கலந்தன!

வனத்தின் தென்கோடி முனையில் ஒரு குள்ளநரிக் கூட்டம் இருந்தது

அது அந்த இடத்தை தங்கள் வாழ்நாளில் பார்த்ததுகூட இல்லை

ஆனால் இத்தனை நாளும் தங்கள் அருகிலுள்ள ஆட்டு மந்தைகளை தூண்டிவிட்டு அவற்றின் ரத்தத்தில் வாழ்வது தவிர,  
உழைத்து வாழ்வது எப்படி என்றே மறந்துபோன அந்தக் குள்ளநரிக் கூட்டம்  இந்தத் தீர்ப்பையும், அதன் பிறகான அமைதியையும் நல்லிணக்கத்தையும் கண்டுபதைத்துப் போனது!

ஏதோ ஒரு தீர்ப்பு வரும். ஏதோ ஒரு மந்தை தனக்கு சாதகமில்லை என்று முரண்டுபிடிக்கும், மீண்டும் முட்டாள்களாக முட்டிக்கொள்ளும்!

நாம் வழக்கம்போல சிந்தும் ரத்தத்தை நக்கிப் பிழைப்போம் என்று காத்திருந்த நினைப்பில் மண் விழுந்ததை அந்த குள்ளநரிக்கூட்டத்தால் ஏற்கவே முடியவில்லை!

எந்த ஆட்டின் ரத்தம் சிந்தினால் என்ன, தாங்கள் நக்கிப் பிழைத்தால் போதும் என்று கூட்டம் கூடி யோசித்தன!

தங்களுக்கு சம்பந்தமே இல்லாத நிலத்தில் வந்த தீர்ப்பை வெள்ளாட்டுக் கூட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மேல் முறையீட்டுக்குப் போகவேண்டும், மறு ஆய்வு செய்யவேண்டும் என்று கூட்டம் போட்டுக் கோஷமிட்டன குள்ள நரிகள்!அவற்றுக்கு உண்மையில் வெள்ளாட்டுக் கூட்டத்தின்மேல் பாசம், அக்கறை ஏதுமில்லை!

உழைத்துப் பிழைக்கும் வழக்கம் மறந்துபோன தங்கள் வயிறு நிறைக்க இனி என்ன வழி என்ற பதட்டம்தான் அவற்றை கோஷமிடவைத்தது!

வெள்ளாடுகளும் செம்மறியாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து இந்தக் குள்ளநரிக் கூட்டத்தை ஓட ஓட விரட்டும் காலம் வந்துவிட்டதைப் பாவம் அவை அறியவில்லை!

 பி கு:
இந்தக் கதைக்கும், வேல்முருகன், திருமாவளவன், திருமுருகன் காந்தி போன்ற  சில ஒட்டுண்ணிகள் இன்று நடத்திய சுயநல ஆர்ப்பாட்டத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாய் நீங்கள் நினைத்தால் அது வெறும் தற்செயலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக