புதன், 30 டிசம்பர், 2020

சொல்லாயோ வாய் திறந்து .....
மோகமுள் - அவ்வளவு எளிதாக படமாக்க முடியாத காவியம்!

பாபு, ஜமுனா, அப்பா, தங்கம்மா, வைத்தி, ரங்கு என யாரையுமே அந்த நாவல் சொன்ன உணர்வுகளோடு உருவமாக்குவது சாத்தியமே இல்லை!

தி ஜாவின் வார்த்தைகளும் வர்ணனைகளும் கண்ணுக்குமுன் விரிக்கும் படத்துக்குப் பக்கத்தில் வைக்கத் தகுந்த காட்சியமைப்புக்கு எங்கே போவார் இயக்குனர்? அதற்கு திஜாவின் தீர்க்கமும், வாசகனின் பார்வையும் வேண்டும்!

ஒவ்வொரு கதாபாத்திரமும் போகிறபோக்கில் உதிர்த்துப்போகும் கனமான வார்த்தைகள் வாசகர் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகளை அப்படியே ரசிகனுக்கு கடத்தும் இயக்குனரோ, நடிக நடிகையரோ தமிழகத்தில் இன்னும் பிறக்கவே இல்லை!

ஞான ராஜசேகரன் அரைக்கிணறு தாண்டிய அந்தப்படத்தில் அதகளம் பண்ணியிருப்பார் ராஜா!

அதிலும், பொதுவாக பக்தி ரசம் சொட்டும் சுத்தமான ஷண்முகப்ரியாவில் காதலின், விரகத்தின் ஏக்கத்தையும் தவிப்பையும் விரக்தி நிலையையும் அப்படியே வடித்திருக்கிறார்!

தன்னை சற்றே காதலித்த பாபுவை மணக்க முடியாச் சூழலில், பணம் கொடுத்து ஒரு கிழம் வாங்கிய கல்யாண பந்தத்தில் சிக்கிக்கொள்ளும் தங்கம்மாவின், ஏக்கத்தையும் தாபத்தையும் சொல்ல வாலியோடு கைகோர்த்துக் களமிறங்கியிருக்கிறார் இசைஞானி!

"ஆகாய சூரியன் மேற்கினில் சாய

ஏகாந்த வேளையில் மோகமுள் பாய

தூண்டிலில் புழுவாக திருமேனி வாட

தாமதம் இனி ஏனோ இருமேனி கூட"

 

இந்த வரிகளைப் பாடும்போது ஜானகி குரலில் ஒரு அழுகையும் கெஞ்சலும் என்றால், எம் ஜி ஸ்ரீகுமாரின் குரலில், கம்பீரமும் கலக்கமும் தாபமும் என ஒரு படி மேலே!
"அந்தி வரும் தென்றல் சுடும்

ஓர் விரகம் விரகம் எழும்

என்று வரும் இன்ப சுகம்

ஊன் உருகும் உருகும் தினம்

நாள் முழுதும் ஓர் பொழுதும்

உன் வண்ணங்கள் எண்ணங்கள்

நெஞ்சுக்குள் நிறைந்திடும்.

சொல்லாயோ வாய் திறந்து"

இந்த வரிகளின்போது ஸ்ரீகுமார் பல படிகள் மேலேறி நின்றுவிடுகிறார்.

ஒரு சங்கீத வித்வான் அல்லது மாணவன் தன் மன உருக்கத்தை, கலக்கத்தை, ஏக்கத்தை எப்படிச் சொல்லுவான் என்பது இசைஞானிக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது!

இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை ஸ்ரீகுமாரிடம் விட்டிருக்கிறார்!

காதலின்,  காமத்தின், விரகத்தின் வலி அறிந்த ஒவ்வொரு நெஞ்சிலும் கத்தியாய் இறங்குகிறது இசையும், வரியும் குரலும்!

மோகமுள் நாவலின் சிறப்பே,

ஆண்பெண் வேறுபாடின்றி அதில் வரும் ஒவ்வொரு பாத்திரத்திலும் தன்னை ஒரு கணமாவது வாசிப்பவர் பொருத்திப் பார்த்தே தீரவேண்டும்!

அப்படியான ஒரு எழுத்தின் வீரியத்தை சற்றும் குறையாமல் தன் இசைக்குள் குழைத்துத் தந்திருக்கிறார்.

 அதனால்தான் அவர் இசை "ஞானி"!

இந்தப்பாடலை ஆழ்ந்து கேட்க ஆரம்பித்து ஒருமுறையோடு நிறுத்திக்கொள்பவன்

யோகி!

https://youtu.be/jUZCHNA94Dg