வெள்ளி, 10 ஜனவரி, 2020

கழக ஆதரவாளனாய் கடைசி மடல்!
இணையம் கற்றுக்கொடுத்த இன்னொரு பாடம்!எனக்கு எவர்மீதும் ஒரு பிரமிப்பே இருந்ததில்லை!
வளர்ப்பு அப்படி!

யாரையும் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளாதே, உன் பாதை உன்னால் அமைக்கப் பட்டதாக இருக்கட்டும் என்பது என் தந்தை எனக்கு எப்போதோ ஒருமுறை சின்ன வயதில் சொன்னது!

அந்தக் கணத்தில் தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதித்தன போலும்!
ஆனால், கலைஞர் மீது மட்டும் ஒரு மாறாத நன்றி உணர்ச்சி!

அதுவும் என் தந்தை சொன்ன அவர் பால்யக் கதைகள் கேட்டும், என் கண்ணாறக் கண்ட சில நிகழ்வுகள் வைத்தும்!

இணையத்துக்கு ஒரு விபத்தாய் வந்தபோது, அப்போது இங்கு கலைஞர் மீது வாரியிறைக்கப்பட்ட சேற்றைக்கண்டு வந்த சின்னக் கோபம் அவர் மீதும் கழகத்தின் மீதும் ஒரு தீரா அபிமானமாக மாறியது!

இவர்களின் வன்மம் பார்த்தே இளையராஜா, கலைஞர், ரஜினி மீது வந்த அபிமானம் இப்போது ரஞ்சித் மீதும்!
3:24 PM · Jul 23, 2016·Twitter for iPhone

எவ்வளவுதான் நடுநிலையாக யோசித்தாலும் நேற்றுவரை என் பதிவுகள் யாவுமே, கொஞ்சமாவது கழகத்தின் சார்பானவைதான் - நான் அறிந்தவரை!

என்ன, என் பதிவுகளில் சுய விமர்சனம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்!
மற்றவன் எப்படி இருந்தால் என்ன, நீ ஒழுங்கானவனாக இரு என்ற ஒரு உபதேசத் தொனி!

இதுவரை என் தேர்தல் காலத்து பதிவுகளில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கழகத்துக்கு வாக்களியுங்கள் என்ற சேதி இல்லாமல் இருந்ததில்லை!

கூடவே, கொஞ்சம் நீங்களும் திருத்திக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையும்- உண்மையான அக்கறையால்!
ஆனால், எப்போதுமே குருட்டு சார்பை நான் எடுத்ததில்லை!

அந்தந்த நிகழ்வுகளில், என் பார்வைக்கு எது சரி என்று தோன்றியதோ, அதை ஆதரித்தும், விமர்சித்துமே என் நிலைப்பாடு இருந்தாலும், கழகத்தை ஆதரிப்பதில் மறுபட்டதில்லை!

ஆனால், அது இத்தனை சீக்கிரம் மாறும் என்று நான் நினைத்ததுமில்லை!
கலைஞர் காலத்துக்குப் பிறகான இணையம் வேறுமாதிரி இருக்கிறது!

மற்றவர்கள் சாக்கடை வார்த்தைகளில் புரண்டபோதும், தர்க்கரீதியாக, கண்ணியதோடு வாதங்களை வைப்பது கழகம் சார்ந்து பேசுவோரிடம் அன்று அதிகமாக இருந்தது!

இப்போது இணையத்தில் இறக்கிவிடப்பட்டுள்ள வெற்றிகொண்டான்கள் வேறுமாதிரி நினைக்கிறார்கள்!

நரகலை முகர்ந்து பார்க்காதே என்று சொன்னால், தான் பசு என்பதை மறந்து, அந்த நாய் நக்குகிறதே என்று தாங்களும் வழித்துத் தின்ன ஆரம்பித்திருக்கிறார்கள்!

தடுப்பவனை, விமர்சிப்பவனை, தரம் தாழ்ந்து பேசுவதும், சங்கி என்று குதறுவதும் வாடிக்கையாகிப்போய்விட்டது!

கலைஞரின் தீந்தமிழ்ப் பேச்சும் உழைப்பும்தான் கழகத்தை உய்வித்தது என்று நான் நம்புகிறேன்!
வெற்றிகொண்டானின் குதர்க்கப் பேச்சே அதைச் செய்ததென்று இன்றைய இளைய தலைமுறை நம்புகிறது!

வாழ்த்துக்கள்!

நரகல் நடை அவ்வப்போது விசிலடிக்க, கைதட்ட உதவுமே அன்றி,
நிச்சயம் கண்ணியம் குலைக்கும்!
நடுநிலை சிறுபான்மை முகம் சுளித்து விலகச் செய்யும் 
- என்பது ஏனோ இவர்களுக்கு நம்பமுடியாததாக இருக்கிறது!

காலம் பாடம் புகட்டட்டும் - எனக்கோ, அன்றி அவர்களுக்கோ!

தன் குழந்தையே ஆனாலும் தவறுக்கு முட்டுக்கொடுப்பது அவர்களை அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பது எனக்கு சொல்லப்பட்ட பாடம்!
குருட்டுச் சார்பில், நான் செய்வதெல்லாம் மட்டுமே நல்லது என்று அதட்டலாக வாதாடுவது இவர்கள் கற்ற பாடம்!
இரண்டும் இணைய முடியாது எக்காலத்தும்!

என்னைப்போன்றோர் பெரும் சுமை அவர்களின் வேகப் பயணத்துக்கு!

இயல்பை மறைத்து நடித்து உறவையே நட்பையோ தக்கவைத்துக்கொள்ள நிஜவாழ்க்கையிலேயே முயலாத எனக்கு, இந்தஒவ்வாத கூட்டத்தோடு பயணிப்பது இயலாத காரியம்!

கலைஞரின் மீதான இணைய வன்மம், என்னை கழகத்தை ஆதரிக்க வைத்தது!
இன்று அதே கலைஞர் மீது கட்டமைக்கப்படும் கடவுள் பிம்பம் என்னை முகம் சுளித்து விலக வைக்கிறது!

கலைஞரை அவரது குறை, நிறைகளோடே ஆதரிக்கமுடிந்த என்னால், கடவுளாக கும்பிட முடியவில்லை!

என், பழைய பதிவின் இணைப்பு!

இந்தப்பார்வை என்றுமே மாறப்போவதில்லை!
கலைஞர் என் வரை ஒரு உயர்வான தலைவர்! கடவுள் அல்லர்!

எதையும் எதிர்பார்த்து, கார்ப்பெட் விற்கவோ, ஜமுக்காளம் விற்கவோ, கட்சியை ஆதரித்தவன் இல்லை என்பதால், மூன்றாம் கலைஞருக்கு முட்டுக்கொடுக்கும் லாவகம் எனக்குக் கைகூடவில்லை!

இந்த நிமிடம்வரை, தமிழர்களுக்கு இதைவிட வேறொரு தகுதியான மாற்று இல்லை என்ற என் நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை!

ஆனால், மூன்றாம் கலைஞரும், நான்காம் வீரபாண்டியாரும், முப்பதாம் பெரியசாமியும் கழகத்தை உய்விக்க முடியும் என்று நான் நம்பவில்லை!

அவர்களுக்கு பல்லக்குத் தூக்க, ஒரு காலத்தில், உட்கட்சி ஜனநாயகம் கொடிகட்டிப் பறந்த கழகத்தைக் கண்டவன் என்ற வகையில் எனக்கு சம்மதம் இல்லை!

இனி, என் பதிவுகள் அந்த சின்ன சார்பும் இல்லாமல், ISSUE BASED நடுநிலை விமர்சனங்களாகவே இருக்கும் - அது கழகத்துக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ!

இதற்கும்,
ஐயோ, இனி கழகம் என்ன ஆகும் என்ற நையாண்டி விமர்சனங்களோ,

ரோமம் உதிர்ந்தது என்றோ, சங்கி நாய் ஓடிப்போனது என்றோ 
"கண்ணியமான" விமர்சனங்களோ,

அன்றி,

இணைய வெற்றிகொண்டான்களின் நரகல் வசைகளோ வரும்!

அவற்றுக்கும்,
என் நன்றியும் அன்பும்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக