சனி, 11 ஜனவரி, 2020

அதிரன் - மலையாளக் கரையோரம் இன்னொருமுறை கால் நனைக்க!அதிரன்!


எப்படி என் கண்ணில் படாது போனது இந்தப்படம்?

திருவிழாக் கரகாட்டத்தில் காணாமல்போன நாதஸ்வரம்போல ஆர்ப்பாட்டமாக வந்த "பெரிய" படங்களின் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டது போல!

கதைக்களம் மிக எளியது
அதை சொல்லியவிதம் அதைவிட எளிமை!

ஒரு சிற்றோடைபோல் இயல்பாக நகர்கிறது கதை!

கொஞ்சம் பிசகியிருந்தால் அரண்மனை டைப் த்ரில்லராக மாறியிருக்கவேண்டிய படம், அற்புதமான கதை சொல்லும் நேர்த்தியால் நம்பகத்துக்கு மிக அருகில்!


விவேக் - அறிமுக இயக்குனராம்!

நம்முடைய பிரம்மாண்ட இயக்குனர்களுக்கு கைவராத அல்லது அவர்கள் முயற்சிக்காத கலையம்சம் இயல்பாக வந்திருக்கிறது!

தான் ஒரு படைப்பாளி என்பதை உணர்ந்த இயக்குனர் இப்படித்தான் படம் எடுக்க முடியும்!

தன் வித்தையில் நம்பிக்கையுள்ள எந்த கலைஞனும், படைப்பாளியும் வெற்று பிரம்மாண்டத்தை நம்பவோ, நடிகனுக்காக படம் எடுக்கவோ மாட்டான்!

ஒரு நடிகனின் கால்ஷீட் கிடைத்ததும் ஏதோ புதையல் கிடைத்ததுபோல் அந்த நடிகனுக்காக கதை(?) எழுதுவது,
அங்குமிங்கும் நாலு சீனைத் திருடி தூவுவது,
லாஜிக் பற்றியெல்லாம் எதையுமே கவலைப்படாமல் ரோட்டுக்கு ரயிலுக்கு பெயிண்ட் அடித்து பிரம்மாண்டம் என்று கதைவிடுவது.
இது எல்லாவற்றையும்விடக் கேவலம், தாங்கள் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக மைக் கிடைத்தால் அளந்துவிடுவது!

- இதுதான் நம் இயக்குனர்களின் இலக்கணம் இன்றைக்கு!

தனக்கென்று ஒரு தனித்துவமோ, ஆளுமையோ இல்லாத இவர்கள் இயக்குனர்கள் அல்ல - நடிகர்களின் எடுபிடிகள்!

 ஏன் இதுபோல குறைந்த பட்ஜெட் படங்கள் தமிழில் வருவதில்லை?
வந்தாலும் ஏன் ஓடுவதில்லை?

தமிழர்கள் ரசிக்கமாட்டார்கள் என்று இவர்களே முடிவுசெய்து, வெறும் குப்பைகளை அலங்கரித்து நம் தலையில் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள்!

நாமும் சாக்கடை நாற்றம் பழகிப்போய், பூக்கடைகளை மூக்கைப் பொத்திக் கடக்கப் பழகிவிட்டோம் வராகங்களைப்போல்!

நூறு கோடி, ஆயிரம் கோடி என்று வசூலை எட்டுவதுதான் இவர்களின் வெற்றிக்கான இலக்கும், இலக்கணமும்!

திரைப்படம் என்பது கலை என்பது மறந்து வியாபாரம் என்றாகிப்போனதின் வினை!

டாஸ்மாக்கில் விற்கும் மட்டமான சரக்கே தமிழனுக்குப் போதும் என்று முடிவு செய்த அரசாங்கத்தைப்போலவே திரையுலகமும் நம்மை நடத்துகிறது!
கொடுமை!

படத்தில் ஃபகத் ஃபாசிலுக்கும், சாய் பல்லவிக்கு அப்படி ஒரு போட்டி!


சைக்காலஜிஸ்டாகவும், சைக்கோவாகவும் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிகிறது ஃபகத்தை!

ஒரு ஃப்ரேமில்கூட ஃபகத் ஃபாசில் தெரியவில்லை!

டாக்டர் கண்ணன் நாயரும், விநையனும்தான்!

இதுதான் ஒரு நடிகனின் வேலை - தான் எங்குமே துருத்தித் தெரியாமல், நான் எப்பேர்ப்பட்ட நடிகன் பார் என்று நடித்துக் காட்டாமல், கதாபாத்திரத்தை நம் கண்முன்னே வாழவைப்பவன்தான் "நல்ல" நடிகன்!

ஃபகத் ஃபாசில் உன்னதமான நடிகன்!


சாய் பல்லவி - என்ன சொல்ல?

இங்கே வந்தால் ரௌடி பேபியாகத்தான் ஹீரோவைச் சுற்றி ஆட்டோ ஓட்டமுடியும்!

மலையாளத்தில் அதகளம் செய்கிறார்!

இது மூன்றாவது படம்
மூன்றும் மூன்று விதம்!

இதில் அவர் கடைசிவரை பேசுவது மூன்றோ, நான்கோ வார்த்தைகள்தான்!
ஆட்டிஸம் பாதித்த பெண் நித்யாவாக - படம் நெடுக கண்களும் பாவனைகளும் மட்டுமே நிறை நடிப்பில்!

பொதுவாக ஆளைச்  சாய்க்கும் பாவனைகளும், கண்களும் சேச்சிகளுக்கு இயல்பிலேயே வாய்த்தது!

சாய் பல்லவி அதில் டாக்டரேட்!

ஜிப்ரன்தான் கொஞ்சம் மிகை! தமிழ்ப்பட சகவாசம்  அவரை கொஞ்சம் இரைய வைத்திருக்கிறது!

ஐயா, தமிழ்ப்பட இயக்குனர்களே, சினிமா சர்க்கஸில் சிங்கங்களை ஆட்டிவைக்கும் ரிங் மாஸ்டர்கள் நீங்கள்!

அதை உணர்ந்து ஆளுமையோடு, நல்ல கதைக்களத்தில், ரசனையோடு படம் எடுத்துத் தொலையுங்கள்!

குறைந்த செலவில் எடுக்கும் ரெண்டுபடம் ஓடாவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகப் போவதில்லை!

உங்கள் பிரம்மாண்டக் குப்பைக்கிடங்குகளை விட்டு வெளியே வாருங்கள்!

நடிக சிகாமணிகளே
நீங்கள் கலைஞர்கள் என்பதை முதலில் உணர்ந்து செய்யும் தொழிலைக் கொஞ்சம் நேர்மையோடும் ஈடுபாட்டோடும் செய்யுங்கள்!

ஆச்சியைப் பிடிப்பேன் அப்பத்தாவைப் பிடிப்பேன் என்ற அரசியல் கனவுகளோடு மிகையாக கனவில் மிதக்காதீர்கள்!

காசுகொடுத்து படம் பார்க்கும் ரசிகனை முட்டாளாகவே வைத்திருந்து தலையில் ஏறி மிளகாய் அரைக்க முயலாதீர்கள்!

அட்லீஸ்ட் திரைப்படங்களாவது எங்களுக்கு நேர்மையானவையாக, உயரியவையாக கிடைக்கட்டும்!

எங்கள் கோவணங்களைப் பிடுங்கிக்கொண்டு எங்களை ரட்சிக்க எடப்பாடியும் ஸ்டாலினும் போதும்!

நீங்கள் வேறு குறுக்கு வழியில் புகுந்து வந்து குறுக்குசால் ஓட்டாதீர்கள்!

1 கருத்து:

  1. மலையாளப் படம் மலையாளப்படம் மலையாளப் படம் தான். தமிழ்ப்படத்தில் எதார்த்தத்தை எதிர் பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு