வியாழன், 27 பிப்ரவரி, 2020

புத்தனின் ஞான குரு!புத்தம் சரணம் யசோதரா!


காலம்: கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு.

இடம்: உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் குஷிநகரம் - அன்றைய குஷ்வதி!

அந்த உச்சிவெயில்போதில் சூழ்ந்திருந்த சிஷ்யர்களின் மனதையும் முகத்தையும்போல வானம் இருண்டுகொண்டுவந்தது.

இது எதையுமே கவனிக்கும் நிலையில் இல்லாமல், கௌதமனின் மனம் ஒருமுகப்பட்ட தியானத்தில் ஆழ்ந்திருந்தது!

ஆயிற்று! எதற்கென்றே தெரியாமல் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கைச் சக்கரம் இதோ, தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளப் போகிறது!

காலையில் அந்தக் கொல்லன் காணிக்கையாகக் கொடுத்த உணவே தன்னுடைய கடைசி உணவாக இருக்கும் என்று அப்போது தோன்றவில்லை கௌதமனுக்கு!

கிழவனுக்குத் தரும் உணவு என்ற கவனத்தில், குழைய வேகவைத்திருந்தான் அந்தக் கொல்லன்!

அது பன்றி இறைச்சியா அன்றி அதுபோலவே மணக்கும் காளானா?

எண்பது வயதிலும், நாக்கு ருசி வேறுபாடு காண்கிறது!

இனி பிறப்பற்ற பரிநிர்வாணத்துக்கு தயாராக உடலும் மனமும் கைகோர்த்துக்கொண்டது புரிந்தது!

இதோ, இன்னும் சில மணித்துளிகள்!

சீடர்களை அருகழைத்து, மெலிந்த குரலில் சொன்னான்!
"என் பயணம் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது!
வினயா, என் அருகில் வா! இனி நீதான் இவர்களுக்கு ஆசான்!

அந்தக் கொல்லனை சாந்தப்படுத்து! அவன் தந்த உணவால் எனக்கு முடிவு வரவில்லை அன்றி, அவனுடையதே எனக்கான இறுதி அர்ப்பணம்!"

"குருவே, நிதர்சனம் எங்களை வருந்தச் செய்கிறது. தங்கள் இறுதி செய்தி ஏதும் உள்ளதா எங்களுக்கு?"

"எல்லா வடிவங்களும் ஒருநாள் குலைந்து அழியும்!"
சொன்னபடியே கண்களை மூடிக்கொண்டான் கௌதமன்!

அதோ, தெரிகிறது எனக்கான ஒளி
இதன் மறுபக்கம் எனக்கான மோட்சம் காத்திருக்கும்!

உள்ளுக்குள் உற்று நோக்கிய கௌதமன் உறைந்துபோனான்!
அந்த ஒளிவடிவம் கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணுரு கொண்டது!

யாரது?”

தெரியவில்லையா மாயாதேவி மைந்தனே!

இல்லை! இல்லவே இல்லை! நான் இப்போது சாக்ய முனி! மறுப்பதுபோல் இடவலமாக வேகமாக ஆடியது புத்தனின் தலை!

யசோதரையின் சிரிப்பு மண்டைக்குள் ரத்த நாளங்களை உறையவைத்தது!

"நீ என்றைக்கும் சுத்தோதன புத்திரனும், யசோதா பதியும்தான் சித்தார்த்தா!
உனக்கு நம் கடைசி சந்திப்பு நியாபகம் இருக்கிறதா?

நாற்பத்தைந்து ஆண்டுகள் நியாபக அடுக்கில் நீ பொத்திவைத்து காக்கும் அந்த சந்திப்பை சற்றே மனத்திரையில் ஓடவிடு!
நான் சொன்னது பலித்ததா இல்லையா என்பது உனக்கே புரியும்!"

எப்படி மறக்கமுடியும்  அந்த தவிர்த்திருக்க வேண்டிய சந்திப்பை!

லும்பினி கிராமத்தில் சூரியனின் ஒளிக்கீற்றுப்போல பிறந்தது அந்தக் குழந்தை!

கோசல அரசின் சிறு பகுதியான சாக்கியக் குடியரசின் தலைமைப் பொறுப்பிலிருந்த குழுவின் மூத்த அதிகாரி சுத்தோதனன் ஒரு பூவை வாங்குவதுபோல் தன் கையில் ஏந்திக்கொண்டான் அந்த ஆண் மகவை!

அரண்மனை சோதிடன் கண்ணகல வியந்து பார்த்தான்!

என்ன இது, இந்தக் குழந்தை ஒரு மாமனிதனுக்கான முப்பத்திரண்டு அடையாளங்களோடும் முழுமையான மகானாக அவதரித்திருக்கிறது?
இவன் ஒரு மகத்தான அரசனாகவோ அன்றி ஒரு இணையற்ற ஆன்மீக குருவாகவோ வளருவான்!

சுருக்கென்று தைத்தது சுத்தோதனனுக்கு!

ஷத்ரியனாகப் பிறந்த என் மகன் பார் புகழும் மாமன்னன் ஆவதுதான் சாலச் சிறந்தது!

இலக்கை அடைபவன் என்று பொருள்படும் சித்தார்த்தன் என்ற நாமகரணம் சூட்டப்பட்ட அந்த ஞான சூரியனை அதிகநாள் கொஞ்சும் பாக்கியமற்று ஒரு நள்ளிரவில் மரித்துப்போனாள் மாயாவதி!

மஹா ப்ரஜாபதி கௌதமி வளர்ப்புத் தாயானாள்!

தலைநகர் கபிலவஸ்துவில் வெளி உலகமே அறியாமல் வளர்க்கப்பட்டான் சித்தார்த்தன்!

காலக்கிரமத்தில் யசோதரையை கைப்பிடித்தான்!

அந்தச் சூரியனிலிருந்து பிறந்தது ராகுலன் என்னும் நிலவு!

எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது - அந்த விதி புன்னகைத்த நாள் வரும்வரை!

வளர்ந்து, கிருஹஸ்தன் ஆகிவிட்ட மகன் இனி ஆன்மிகம் திரும்ப வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில், நகர்வலத்துக்கு தோழனுடன் குதிரையில் புறப்பட்ட சித்தார்த்தனை வழியனுப்பிவைத்தான் சுத்தோதனன்!

அன்று கண்ட காட்சிகள் சித்தார்த்தனுக்குள் ஆயிரம் கேள்விகளை விதைத்தன!
மூப்பு, நோய், இறப்பு, பிணம்!
இத்தனையும் ஒரேநாளில் காண நேர்ந்தது பாதை மாற்றியது!

நள்ளிரவில், மாரில் தவழ்ந்த யசோதரையின் கையை மென்மையாக விலக்கி, திரும்பிப்பாராமல் நடந்தான்!


தலைமுடி மழித்து, மரவுரி தரித்து ஆண்டிக்கோலம் பூண்டான் சித்தார்த்தன்!

ஓயாத தத்துவ விசாரங்கள்- துயரங்களையும் அதன் முடிவுகளையும் கண்டுணர!

மகதப்பேரரசன் பிம்பிசாரன்தான் முதலில் உணர்ந்தவன்- சித்தார்த்தனுக்குள் இருந்த கௌதமனை!

தன் அரசின் சரிபாதியை காணிக்கையாக அளித்ததை மறுதலித்து நகர்ந்தான் சித்தார்த்தன்!

எத்தனை குருமார்கள், எத்தனை வியாக்கியானங்கள், எதுவுமே நிறைவைத் தரவில்லை!

கால்போன போக்கில் நாடுகளை நகரங்களைக் கடந்து அலைந்து திரிந்தவனை விதியோ அல்லது ஏதோ ஒன்று அவனது முப்பத்தைந்தாவது அகவையில் அந்த அரண்மனை வாயிலில் பிட்சைக்கு நிறுத்தியது!

உள்ளிருந்து ஓடிவந்த சேடிப்பெண் பாதம் பணிந்து அழைத்துப்போனாள்!

"துறவியே, உம்மை அரண்மனைக்குள் அழைத்துவரச் சொன்னார் மஹாராணி!"

தயங்கிய சித்தார்த்தனை நெட்டித் தள்ளியது விதி!

அவன் போய் நின்றது பட்டத்தரசி யசோதரை முன்பு!

"என்ன துறவியாரே, தேடிய ஞானம் கிட்டியதா தங்களுக்கு?" அவள் இதழ் விரியா கண் நகைப்பில் வெந்தது சித்தார்த்தன் ஆவி!

பதில் தேடி தலை குனிந்தான் துறவி!

"வாருங்கள். அந்தப்புரத்துக் குளக்கரைக்கு! சற்றே ஆன்மீக விசாரத்துக்கு!"

தலை குனிந்தபடியே பின்தொடர்ந்தான் சித்தார்த்தன்!

அமர்ந்தபின் கேட்டான் " சொல்லுங்கள் தாயே!"

"சித்தார்த்தா, ஒரு கோழையைப்போல் கட்டிய மனைவியை, பெற்ற மகனை நள்ளிரவில் கைவிட்டுச் சென்றாயே, கிடைத்ததா நீ தேடிய ஞானம்?"

கேள்வி சாட்டையாய் சொடுக்கியது!

"இல்லை தாயே, சூறைக்காற்றில் சருகுபோல் அலைகிறது என் மனம்
எதைக் கண்டறியப் பயணிக்கிறேனோ அதை இன்னும் என்னால் அடையாளப்படுத்திக்கொள்ள முடியவில்லை!"

"எப்போதுதான் உன் இலக்கு உனக்குப் புரிந்தது ராஜகுமாரா? அன்றும், இன்றும் அறியாமையும் குழப்பமும்தான் உன் தோழமைகள்!"

"கடும் சொற்கள் தாயே! இது தங்கள் ஆத்திரத்தின் வெளிப்பாடு என்பதை நான் அறிவேன்!"

"முட்டாள்தனமாக உளறாதே சித்தார்த்தா!
நான் என்றோ தெளிந்துவிட்டேன்
என் பாதை, என் பயணம் இதுவென எனக்கு உன் இன்மை புலப்படுத்திவிட்டது
என் மனம் சொல்லும் பாதையில் பயணிக்கும் என் வாழ்வில் உனக்கென்று ஒரு இடமே இல்லாதபோது, உன்மீது எனக்கென்ன கோபம்?

இருந்தும், உன் இலக்கற்ற தேடல் என்னை வருத்துகிறது!

உனக்கு ஆன்மீகமும் புரியவில்லை, அரச நீதியும் புரியவில்லை!

நம் அகண்ட பாரத நாடு எத்தனையோ துறவிகளை அரசனாகவும், அரசர்களை துறவியாகவும் கண்டெடுத்திருக்கிறது!

உன்னுடைய இலக்குதான் என்ன?"

"மக்களின் பிறவித் துயருக்கு மருந்தும் மாற்றும் தேடுவதும், அதை கண்டறியும் ஞானத்தை அடைவதும்!"

"முதலில் உன் இலக்கு, உனக்கான முக்தியா அன்றி மக்களுக்கான மீட்சியா என்பதில் தெளிவுகொள்!

கடும் தியானமும், உடலை வருத்தும் தவமும் ஒரு போதகனுக்குத் தேவையில்லை!

நீ முற்றும் துறக்க நினைத்தால், உனக்கான பாதை இதுவல்ல!
கானகம் ஏகு, கடுந்தவம் புரி!

ஒரு மார்க்கம் கண்டடைந்து மக்களுக்கு போதனை செய்வதெனில், ஞானத்தை வெளியே தேடாதே, உனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமான ஞானச் சுடர் அவரவருக்குள்ளே கனன்றுகொண்டிருக்கிறது!
உன்னுள்ளே அதைத் தேடு
அந்தச் சுடரை உன் மனத்திரியில் ஏற்று
அதற்கான அகலாய் உன் உடலை அர்ப்பணி!
மக்களுக்கான ஞான விளக்காய் நீ மாறுவாய்!

ஆனால், கவனம் சித்தார்த்தா!
இது ஒரு விபரீத விளையாட்டு
இதில் வென்றவர்கள் வெகு குறைவே!

போதனைகள் மக்களைச் சேர, ஒரு இயக்கம், அமைப்பு தேவைப்படும்!
அது, ஒருவேளை எலி பிடிக்க வாங்கிய யாகசாலைப் பூனையாக உன்னை மீண்டும் ஒரு க்ருகஸ்தன் ஆக்கக்கூடும்!

கவனம் சித்தார்த்தா!

போய்வா!
இன்றே உன் ஞானத்தேடலை உன்னுள் துவங்கு!

கிட்டும்வரை அசையாது அன்னம் விலக்கிக் காத்திரு!

மயானம் ஏகினும், ஞானம் கிட்டும்வரை போராடு
நலமே விளைக!

சொல்லியவாறு விலகிப்போனவளை கும்பிட்ட கை விலக்காது வீதியேகினான் சித்தார்த்தன்!

நகர எல்லை அரசமரத்தடி அயர்ந்து அமர, ஆரம்பமானது உள்நோக்கிய ஆன்மத் தேடல்!

ஏழுநாள் தவம், அவனுக்குள் ஞான தீபம் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தபோது புடம்போட்ட சொர்ணமாய் தேகம் ஜொலிக்க ஆரம்பித்தது!


நாற்பத்தைந்து ஆண்டுகள் உருண்டுபோயின அதற்குப்பின்!

நிகழ்வுகள் நிரம்பிய நாற்பது நெடிய ஆண்டுகள்!

அன்றைக்கு அந்த அரசமரத்தடியில் தான் எடுத்த முடிவு பிழையோ என்று இப்போது தோன்றியது!

முழு துறவியாகாமல், மக்களுக்கு பிணி, மூப்பு, துன்பங்களோ மறு பிறப்போ இல்லாத முக்தியடையும் ஞான மார்க்கம் போதிக்கும் ஒரு போதகராக முடிவெடுத்த அந்த கணம் ஆசீர்வதிக்கப்பட்டதா சபிக்கப்பட்டதா?

புதிதாக ஒரு மதத்தை, மார்க்கத்தை, வழிமுறையை ஆரம்பித்ததும்
மெல்ல மெல்ல அதனால் ஈர்க்கப்பட்டு மக்கள் இணைந்ததும்
கடல் கடந்தும், கண்டம் தாண்டியும் இந்த வாழ்க்கை நெறி பரவியதும்...

பிறவிப்பயனை அடைந்த தருணங்கள் எனில்

அதற்குள் நடந்த அரசியல்களை என்ன சொல்வது?

தேவதத்தன் தலைமைப்பொறுப்பை அடைய முயன்றதும்
உறவினனாக இருந்தபோதும், தன்னையே கொல்ல முயன்றதும், துரதிர்ஷ்டவசமாக மன்னன் அஜாதசத்ரு அவனுக்குத் துணை போனதும் 

என்னவிதமான தருணங்கள்?

எத்தனை பேரரசர்கள் எத்தனை மக்கள் எத்தனை நாடுகள் என் போதனையை ஏற்றபோதும், பௌத்தம் ஒரு உலகளாவிய சங்கமாக மாறுவதை என் காலத்திலேயே பார்க்கமுடியும் என்ற என் ஒற்றை அவாவும் நிராசையாய்ப் போனதையும் எந்த தருணம் என்று கணக்கிடுவது?

ஆசைகள் முற்றும் துறந்தவன் நான் எனில், இப்போது யசோதரையின் வடிவம் ஏன் என்னைத் துணுக்குற வைக்கிறது?

அன்றைக்கு நான் ஞானமுக்தி அடையும்போதும் இன்று மஹாநிர்வாணம் அடையும்போதும் 
யசோதரா என் அருகில்!

இது என்னவகையான விதி?

ஒருவேளை உண்மையில் இவள்தான் என் ஞானகுருவோ?

யசோதரையின் குரல் நிகழ்காலத்துக்கு இழுத்த்துவந்தது புத்தனை!

"என்ன கௌதமா, இன்னொரு தத்துவ விசாரமா?"

"இல்லை தாயே, நீதான் என் ஞானகுருவோ என்று யோசித்துக்கொண்டிருந்தேன்"

"தாயே என்று என்னை அழைக்காதே கௌதமா, படு செயற்கையாக இருக்கிறது அது!

நீ யார் என்பதை நீ உணர்ந்தாயா என்பதே எனக்கு பெரிய சந்தேகமாக இருக்கிறது. 
மேலும், இன்னும் உன் மனம் எல்லா உயிரும் சமம் என்ற உன் போதனையை ஏற்காமல் இரட்டை வேடம் போடுகிறது என்று என்னால் உறுதியாகக் குற்றம் சாட்ட முடியும் கௌதமா!"

"என்னை காயப்படுத்துவதே உன் தர்மமாகக் கொண்டிருக்கிறாய் பெண்ணே! அது உனக்கு மகிழ்வு தருமாயின் அதுவே எனக்கும் நிறைவு தரும்!"

" சொற்கள், மேலும் சொற்கள்
இதுதானே உங்கள் ஆயுதம் கௌதமா
இதை வைத்துக்கொண்டுதானே நீங்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்துகிறீர்கள்?

பிற உயிரினங்களை விடு
என்றைக்காவது பெண்களை உனக்கு நிகரென்று எண்ணியதுண்டா கௌதமா?"

" இது என்ன அபாண்டம் பெண்ணே? ஒரு துறவிக்கு ஏது பாலின வேறுபாடு?"

"மரணத்தின் வாயிலில் நிற்கும்போதுகூட உன்னால் உன் தன்முனைப்பை விடமுடியவில்லையே கௌதமா? 
உனக்கு உன் வளர்ப்புத் தாயை நினைவிருக்கிறதா?

நீ பெற்ற மகன் ராகுலன் துறவறம் பூண்டபோது உடனே ஒரு பிக்குவாக ஏற்றுக்கொள்ள முடிந்த உன்னால், உன் தாயை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?"

"உளறாதே யசோதரா, இந்த சங்கத்தின் முதல் பிக்குனி யார் தெரியுமா உனக்கு?"

"எப்படி ஏற்றாய் அவரையும், அவர் கூட வந்த பெண்களையும்
அவர்கள் பிடிவாதமாக மன்றாடிக்கேட்டபின், குருதர்மா என்று பெயரிட்டு, எட்டு நிபந்தனைகளை விதித்தாய்
அவர்கள் அதை ஏற்றபிறகே அவர்களை சங்கத்தினுள் அனுமதித்தாய்
இது எந்தவகை சமத்துவம் கௌதமா?"

"அறியாததுபோல் வாதத்துக்காகப் பேசுகிறாய். பெண்கள் துறவறம் பூணும்போது அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் அதிகம் தேவைப்படுவது இயல்புதானே?"

" ஏன் அப்படி சாக்யமுனிவரே?

வெறும் சதைத் திரட்சி இடம் மாறியிருப்பதால் பெண், உங்களைவிட தாழ்ந்தவரா?

ஒரு பெண் உள்நுழைவதால் இந்த மன்றத்தின் கட்டுப்பாடும், கட்டுக்கோப்பும் குலையும் என்றால், உங்கள் ஆண்மை என்ன அவ்வளவு வலிமையற்றதா?

அன்றி, பெண் எப்போதும் சம்போகத்துக்கே அலையும் மிருகமா?

ஏன் இந்த ஆண்கள் விலங்கினும் கீழாய் யோசிக்கிறீர்கள்?

சமத்துவம் பேசும் அருகதை உங்களுக்கெல்லாம் இருப்பதாக நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?

சரி, அதை விடும்
இந்த விவாதம் இன்னும் ஆயிரம் நூற்றாண்டுக்கு முடிவிலியாய் தொடரும்.

உன் மன்றத்தில் ஒரு புரட்சி நிகழ்ந்த சமயம், உன் தலைமைக்கு ஆபத்து தேவதத்தன் ரூபத்தில் வந்தபோது நீ என்ன செய்தாய் கௌதமா
அஜாதசத்ரு போரில் மகத, கோசல மன்னர்களை வென்றபோது ஏன் உன் மனம் ஏமாற்றமுற்றது
பதில் சொல் கௌதமா?"

துணுக்குற்றுத் தலை குனிந்து அமர்ந்திருந்தான் கௌதமன்!

"உன்னால் பதில் சொல்லமுடியாது என்று எனக்குத் தெரியும்!

ஏன், இந்த வருட யுத்தத்தில் நீ உஜ்ஜயினி மன்னனுக்கு உபதேசித்த அந்த எட்டு வழிமுறைகளுக்கு என்ன அர்த்தம் சொல்லப்போகிறாய் கௌதமா?"

முகம் இருள, கண்கள் கலங்கி கரம் குவித்தான் கௌதமன்!

"தாயே, என் அந்திமம் அருகிவரும் இந்த வேளையில் உன் கேள்விகள் என்னை கூர்வேலாய் குத்திக் கிழிக்கின்றன
என் மனமாரச் சொல்கிறேன்
என் ஞானத் தாய் நீ
என்னுள் ஞானவிளக்கேற்றியவள் நீ!

இன்று என்னுள்ளே சுடர்விடத் துடிக்கும் மோட்ச விளக்கை அணையாது காக்க வந்தவளும் நீ!

லௌகீக வாழ்வில் நான் உனக்கு ஏதாவது தீங்கிழைத்திருப்பின் என்னை மன்னியுங்கள் தாயே!

உங்கள் மதிப்பீட்டில் நான் இவ்வளவு தாழ் நிலையிலிருந்து உயர என்ன செய்யவேண்டும்
என் நாற்பதாண்டு போதனைகளும், தத்துவ விசாரணைகளும் கடைசியில் என் பிறப்புச் சங்கிலி அறுக்கும் கூர்மையற்றுப் போயினவா
எனக்கு மோட்சம் கிடைக்குமா தாயே?"

"கலங்காதே கௌதமா. நாம் உள்மனதில் நடத்தும் இந்த வாதம் வெளியுலகு அறியப்போவதில்லை!

நீ உன்னதமானவன்
ஆனால், குழப்பவாதி!

முப்பத்திரண்டு மகா அடையாளங்களுடன் பிறந்தவன் நீ!

அன்றே விதிக்கப்பட்டது நீ சக்கரவர்த்தியோ அன்றி, மதகுருவாகவோ சிறப்புற வாழ்வது!

உன் தந்தை, உன்னை தன்னுடைய பொருளாக நினைத்தார்
தன் கௌரவம், தன் மகனின் வாழ்வில்தான் இருப்பதாக எண்ணும் சராசரி தந்தை அவர்!
நீயோ, என்னை ஒரு பொருளாக நினைத்தாய், வேண்டும்போது உபயோகித்து, வேண்டாதபோது சுருட்டி எறியும் எச்சில் இலையாய்!

கடுமையான வார்த்தைகள் தாயே!

நீ தாயே என்று விளிப்பது படு செயற்கையாக இருக்கிறது கௌதமா!
மன்னன் மகளாய்ப் பிறந்து மன்னனுக்கு மாலையிட்டேன், ஆயிரம் கனவுகளுடன்!

சுகித்தாய், புணர்ந்தாய், கலைந்தாய், களைத்தாய், உணர்ந்தேன் என் பெண்மையின் வேட்கைகளை! தட்டி எழுப்பிய சுநாதங்கள் கேட்க விதிக்கப்பட்ட ஒற்றைச் செவி நீ!
உனக்கு ஞானம் தேடப் போகத் தோன்றியபோது, என் தேவைகள் குறித்து சிந்தித்தாயா?

மீட்டாது கிடக்கும் யாழின் தந்திகள் தளர்ந்துபோகுமென்று தோன்றவில்லையா உனக்கு?
உன் தேடல்கள் உயரியவையாகவே இருக்கட்டும்! அதை ஆயிரம் பேரிடம் கேட்டு அலையலாம் நீ!
என்னுள் நீ பற்றவைத்த நெருப்பை யார் அணைப்பது உனையன்றி?

வேறொருவன் அணைக்கத் தேடின், பரத்தை என்பாயோ எனை நீ!

பெண்ணே, உடல் தேவை என்பது வம்ச விருத்திக்கானது! அந்த சிற்றின்ப வேட்கையின் முற்றுப்புள்ளி ஒரு வாரிசின் உதயம்! அத்தோடு அது முற்றுப்பெறுகிறது!
அதன்பின் அந்த வேட்கை சுமந்தலைவது அசிங்கம் தாயே!

ஆண்களின் உலகில் பெண்களுக்கு எங்கே நியாயம் கிடைக்கப்போகிறது கௌதமா? 
துறவு பூண்டாலும் நீ ஒரு ஆண் மகன்! உனக்கு எல்லா உயிரும் சமம்! பெண்களும் அவர்தம் உணர்வுகளும் மட்டும் நீ மழித்தும் நீட்டியும் விளையாடும் மயிருக்கு சமம்! அப்படித்தானே?
என் நெருப்பை நான் எப்போது வளர்க்க, எப்போது அணைக்க, இதை தீர்மானிக்கும் உரிமை உனக்கா, எனக்கா சித்தார்த்தா? இது ஆணாதிக்கத்தின் உச்சம்!

எனக்கு வியப்பாக இருக்கிறது யசோதரை! கீழ்மையான உடல் இச்சைக்கு இத்தனை முக்கியத்துவமா? ஞானத்தேடலின் முதல் எதிரியே இந்த உடல் சார்ந்த வேட்கை என்பதை உணராதவரா தாங்கள்?

அபாரம்! உடல் வேட்கை கீழ்மை எனில், அதன் விளைவாய் ஜனித்த நாமெல்லாம் யார் சித்தார்த்தா?
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உணரும் ஐம்புலனையும் ஒன்று சேர நிறைக்கும் இந்த வேட்கை பிழையெனில், நாவுக்கும் வயிற்றுக்கும் இரையிடும் மற்ற வேட்கைகள் அதனிதும் கீழ்மையல்லவா?

இது ஆண் குலத்தின் கையாலாகாத்தனம் மறைக்கும் கேவல உத்தி கௌதமா!

உங்களில் எவரேனும், என்றேனும், சுகிக்குமுன் பெண்ணிடம், உனக்கும் உளதா வேட்கை எனக் கேட்டதுண்டா? இருவரும் பகிர்ந்துண்ணும் விருந்தில், உன் போலவே என் பசியும் தீர்ந்ததா எனக் கேட்டதுண்டா?

உனக்குப் பசிக்கிறது என என்னைப் பகிர்ந்துண்ண விளைவதுபோல், எனக்குப் பசிக்கிறது, உன்னைப் பகிர்ந்து தா எனக் கேட்கும் உரிமை பெண்ணுக்கு ஏன் வழங்கப்படவில்லை கௌதமா?

அப்படிக் கேட்கும் பெண்ணுக்கு உங்கள் சமூகம் தரும் பெயர் என்ன தெரியுமா உனக்கு?

உன் பசிக்கான ஒரு பண்டம் பெண்! உனக்கு அது  தணிந்ததும் அவளுக்குத் தீர்ந்ததா வேட்கை எனக் கேட்பதும் அவசியமில்லை!
இந்த அலட்சியத்தை என்ன பேரிட்டு அழைப்பது கௌதமா?

ஒரே ஒருமுறை, என் வேட்கை இன்னும் தணியவில்லை என்றோ, இவ்வளவுதானா நீ என்றோ ஒரு பெண் கேட்டால் ஞான வேட்கை துறந்து மோட்சம் தேடியிருப்பாய் கௌதமா!

பசித்து சுகித்தேனா சகித்துக் கிடந்தேனா என்று கூட கேட்கத் தோன்றாத உனக்கு, உன்னையன்றி வேறு யாரிடமும் தேட முடியாத ஒழுக்கநெறி தடுக்கும் பசி இனி எனக்கு வாராதா என்று கேட்கத் தோன்றாதது வியப்பில்லை கௌதமா!

இது, இந்த நிலையில் உன்னோடு விவாதிக்கும் பொருளல்ல கௌதமா!
வேண்டும்போது மேய்ந்துவிட்டு விட்டு விலகும் மேய்ச்சல் நிலம்தான் பெண் என்னும் இந்த அவல மேட்டிமையோடா அனைத்து உயிரும் சமம் என்று போதிக்கத் துணிந்தாய்?

எல்லா உயிரும் உயர்வு! பெண்ணும் அவள் உணர்வுகளும் தவிர! அப்படித்தானே?

பெண்ணை மதிக்க, அவளை சமமாய் உணரத் தலைப்படாத எல்லா மதமும் மார்க்கமும் நாடகக் கொட்டகை கௌதமா!
உங்கள் உபதேசங்கள் வேரில்லா நீர்த் தாவரம் கௌதமா!

ஆண்கள் எழுதும் சரித்திரத்தில் உன் போன்றோர் துறவு நிலை போற்றப்படலாம்! ஆயின், உண்மைத்துறவி நாங்கள்தான் கௌதமா!

உன் உணவுக்காக இன்று கொன்று சமைக்கப்பட்ட பன்றியிடமும், உன் தேடலுக்காக வேட்கை கொன்று உலவவிட்ட என்னிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என்பதே உங்கள் அற்ப ஆண்மனநிலை 
கௌதமா!

இதை பேசிப் பலனில்லலை! இது இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆண்களுக்குப் புரியாது! 
சரி, ஆரம்பித்த கதைக்கு வருவோம்!
உன் விதி உன்னை புது வாழ்க்கைநெறி தேடும் ஞானியாக்குவது!

உன் கர்மா, நீ இரண்டையும் சேர்த்துக் குழப்பிக்கொண்டாய்!

நான் உன்னை அன்றே எச்சரித்ததுபோல் உன்னை அறியாது அரசியல் புதைகுழிக்குள் நீ சிக்கிக்கொண்டாய்!

ஒரு புதிய அஹிம்சை வாழ்க்கை நெறியை போதிக்கவந்த நீ, அதற்கென ஒரு மடாலயம் ஸ்தாபித்தது முதற்பிழை!

அந்த நெறி உலகாள வேண்டும் என்று ஆசைப்பட்டது இரண்டாவது பிழை!

துறவிக்கு ஆசை முதல் சத்ரு கௌதமா!

அதனால்தான் உன் இறுதிப்பாதைத் தாழ்ப்பாள் இறுகிக்கிடக்கிறது
அதை திறக்கவந்த கருவி நான்
அவ்வளவே!

எதற்காக உனக்குள் இத்தனை மனப்போராட்டம்?

இந்தப் பேரண்டத்தில் ஒரு சிறு துளி இந்தப் புவி!
இதன் அணுவின் ஒரு துகள் நாம்!

இதில் நாம் எதையோ சாதிக்கத் துடிப்பது அறிவீனம்!

இது எங்கோ ஆரம்பித்து எங்கோ முடியும் மாபெரும் வடம்
அதில் ஒரு சிறு இணைப்புக்கண்ணி இப்பிறவி!

இதில் நான் என்றும், நீ என்றும் ஏது பிரிவினை கௌதமா?

கேள்விகளை கேட்டது பிழையில்லை கௌதமா
ஆனால், ஒரு கட்டத்தில் வெளியே கேட்பதை நிறுத்தி, உனக்குள் கேட்க ஆரம்பித்திருக்கவேண்டும்
ஆனால், உலகை உய்யவைக்கவேண்டும் என்ற பேரவா உன்னை திசை திரும்பிவிட்டது!

சும்மாயிரு.
அதுபோதும். தேடல்களை ஒரு புள்ளியில் நிறுத்து!

உன்னை, உனக்குள் நீ உணரத் தலைப்படு!
அதுதான் உண்மையான ஞானத் தேடல்!

நீ என்பதும் நான் என்பதுமே அர்த்தமற்றவெளியில் நீ யாருக்கு உபதேசிக்க நினைத்தாய்?

இப்போது பேசும் நான் நீயாகவோ, கேட்கும் நீ நானாகவோ இருக்கவும் வாய்ப்பிருக்கும் சாத்தியத்தை சிந்தித்துப்பார் கௌதமா!

நித்தியம், அநித்தியம் இரண்டுக்கும் ஒரே பொருள் என்பதை ஏன் என்றுமே நீ உணரவில்லை?

எதுவுமே நீயுமில்லை, உனதுமில்லை என்றானபின் எந்தப் பிறவி உனக்கு வாய்த்தால் என்ன?

நீயே நீயில்லாதபோது இன்பம் எது, துன்பம் எது என வரையறுக்க நீ யார்?

பிறப்பும், இளமையும், ஆரோக்கியமும் இன்பம்,
முதுமையும் நோயும் சாவும் துன்பம் என வரையறை செய்வது அபத்தமாக நீ உணரவில்லையா கௌதமா?

இதுதான் நீ என்று நீயாக முடிவு செய்துகொண்டால், இன்னொரு வலி இருக்கிறது உனக்கு!

இருபத்தைந்து நூற்றாண்டு கழித்து, பரதத்தின் தென்கோடியில் இன்னும்சில நாளில் உருவாகக்கூடும் தீவில் உன் பெயரை, உன் மதத்தை கருவியாக உபயோகித்து சக மனிதனை கொன்று குவிக்கும் அவலம் நேரிடப்போகிறது!


அதற்கான பாவம் உன்னைச் சேருமா கௌதமா?

மக்களை நெறிப்படுத்துவதாய் ஆரம்பிக்கும் எல்லா மதமும், தான் சொல்வதே உயர்வு என்று குரலை உயர்த்தும்போதே தோற்றுப்போகின்றன!

ஏற்கனவே பூமியை அழுக்காக்கிக் கொண்டிருக்கும் மதக் குப்பையில் இன்னும் ஒன்றைச் சேர்த்துதவிர நீ எதையும் செய்துவிடவில்லை!

நீ இப்பிறப்பில் புனிதன்!
ஆனால், நீ அறியாமையில் செய்த பிழை இது!

உனக்குள் காதுகொடுத்துக் கேட்டுப்பார் கௌதமா!

எல்லா நிலைகளிலும் ஒரு குரல் நீ செய்வதில் உள்ள பிழைகளை சுட்டிக்கொண்டே இருக்கும்!

ஆனால், உன்னுள் இருக்கும் ஓயாத இரைச்சல் அதை கேட்கவிடாது!

அதை உன்னித்துக் கேட்க ஆரம்பிக்கும்போதே நீ புனிதனாகிவிடுவாய்!

தாயே, பிறவிப்பிணி அற்றுப்போகும் முக்தி எனக்குக் கிட்டாதா? அதை நோக்கிய என் உபதேசங்கள் வீணா?"

"முதலில் பிறவிப்பிணி என்பது என்ன கௌதமா?

பிறப்பதும் இறப்பதும் எது?

இந்த நிணமும் ஊணுமான உடலா?
அன்றி, அவை நாறிப்போகாது உள்ளுலாவும் காற்றா?
எது நீ?

இதில் பிறப்பது எது, இறப்பது எது?

மேலும் உபதேசம் எது குறித்து?

பாவம், புண்ணியம் நன்மை தீமை என்பதெல்லாமே ஒப்பீட்டுத் தொனிகள்தானே?
அன்பைப் போதிப்பதாய் நீ ஆரம்பித்த சங்கத்தின் தலைமை சீடனே பதவிக்காக உன்னை கொல்லத் துணிந்தான்! அந்த முதல் சறுக்கலிலேயே விழித்துக்கொண்டிருக்கவேண்டும் நீ!
மனிதர்கள் போதனைகளை தங்கள் வசதிக்கு திரித்துக்கொள்வதில் சமர்த்தர்கள்! போதனைகள் எங்கோ ஒருவனை நெறிப்படுத்தலாமேயன்றி, உலகைத் திருத்த போதனை என்பது அவல நகைச்சுவை!

ஒன்றைப் பாவம் என்றும் புண்ணியம் என்றும் யாருடைய பார்வை தீர்மானிப்பது?

ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல் கௌதமா!

மலரைப் பறித்து பூஜிப்பது பாவமா புண்ணியமா?
கொய்வது அதன் உயிரறுக்கும் பாவமெனில், பூஜிப்பதால் ஏது புண்ணியம்?

கேள்விகளால் உன் மண்டையை நிரப்பிக்கொள்ளாதே கௌதமா!

நான் முன்பே சொன்னபடி, நீ என்று நினைக்கும் ஒன்று, நாளை பூவாகப் பிறக்கலாம், புழுவாகப் பிறக்கலாம், எங்கோ ஒரு நட்சத்திரமாய் நிலைக்கலாம்!

இதை யார் முடிவு செய்வது?

அப்படி ஒரு சங்கிலி இருக்குமெனில், அது அறுபடுவதால் உனக்குக் கிடைக்கும் மோட்சம் என்பது என்ன
அதை உன்னால் அறுதியிட்டு விளக்கமுடியுமா?

தேவையற்ற கேள்விகளை தலை முழுகு!

இந்த நொடியில் கபடின்றி  இரு! அதுவே தர்மம்! அதையே சாகும் வினாடிவரை தொடர்ந்து செய் - என்ன இடர் வரினும்!
அதுவே முக்தி!

இந்த வேடம் களையும் நேரம் உனக்கு வந்துவிட்டது கௌதமா!

யார் கண்டது? இன்றே நீ ஒரு புழுவாய்ப் பிறக்கலாம்,

பிறவிகள் மாறும் சுழற்சியில், இன்னுமொரு இருபத்தைந்து நூற்றாண்டு கழிந்து இதையே நீ வாசிக்க நேரலாம் - மீண்டுமொரு மானிடப் பிறப்பெடுத்து!

அன்றைக்கும், இதே பாரதத்தின் தலைநகர் மதவாதிகளால் பற்றியெரியலாம்!"

ஒளிரூபம் மறைய, கௌதமனின் மூளை நரம்பொன்று வெடித்துக் குருதியில் நனைய, ஒளிரூபமாய் உயிர் பிரிந்தது!


யசோதரையின் வாக்குப் பலித்ததை,
இதைப் படிக்கையில் உணர்வாய் கௌதமா!