வெள்ளி, 27 மார்ச், 2020

தன்னந்தனியே ஒரு பயணம்!!

பார்வதியின் பயணம்!

வாழ்க்கை சிலருக்கு சில வரங்களை அளிக்கிறது.

சிலருக்கு, எந்த ஒரு  தடங்கலும் இல்லாத நெடுஞ்சாலைப் பயணம். சிலருக்கோ, எந்த திசையில் போனாலும், வந்தவழி திரும்ப நேரும் முட்டுச்சந்து.

இயற்கையோ  இறைவனோ,
அப்படித் தடம் தேடி அலைய நேர்பவர்களுக்கு சில தனிப்பட்ட குணங்களை உறுதுணையாக வழங்க மறப்பதில்லை.
தன்னம்பிக்கை, துணிச்சல், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் – இப்படி!

நம் இன்றைய கதை நாயகி பார்வதி அப்படியான வரம் வாங்கி வந்தவர்.

தொட்டது துலங்கும் கணவன். கடின உழைப்பும், எந்தத் துறையில் கால்வைத்தாலும் அதில் வெற்றிபெறும்வரை கொஞ்சமும் தளராத முனைப்பும், குப்புசாமியின் குணங்கள்.
தனியார் வங்கித் தொழில் மற்றும், பரம்பரை கைத்தறி நெசவு. 
முதலாளி என்றால் மேலப்பாளையம் நினைவுக்கு கொண்டுவரும் வெகு சிலரில் ஒருவர்.
தவறிப் போன தம்பி, தானே வலிய வந்து குறைபட்டுப் போன பொன்னம்மாள் என்று வலிகளுக்கும் குறைவில்லாவிட்டாலும், வகைக்கு மூன்றாய் ஆறு குழந்தைகள். 
கடைக்குட்டி கனகசபாபதி கைக்குழந்தை.
வங்கி வேலைகளுக்காய் அடிக்கடி வெளியூர் பயணம்.

மெத்தை வீட்டுக்காரர் என்று புது அடையாளம் தந்த,ஊரே திரும்பிப் பார்க்கும் வண்ணம் கட்டிவந்த மாடிவீடு கட்டுமானம் முடியும் நேரம்.

அந்த, விதி ரகசியமாய் சிரித்த நாளிலும், கும்பகோணம் பயணம்.

வீட்டுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களை வாங்கி, வண்டியில் ஏற்றிவிட்டு, கும்பகோணத்தில் ஈரோட்டுக்கு ரயில் ஏறிய குப்புசாமி, அதற்குப்பின் என்ன ஆனார் என்பது, அறுபதாண்டு ரகசியம்.

கூட இருந்து வண்டி ஏற்றிவிட்ட செம்பணன் அறிந்ததும், அவர் ஈரோடு போவதாய் சொன்னது மட்டுமே.

ஏறத்தாழ, வருடம் ஒன்றாய்ப் பிறந்த ஆறு குழந்தைகள், சற்றே மனநிலை பிறழ்ந்த மாமியார், குறைபட்டு வீட்டோடு நிற்கும் தங்கை. கட்டுமானம் முடியும் நிலையில் குடியிருக்கும் வீடு.

இந்த நிலையில்
காற்றோடு கரைந்த கணவன்!!

படிப்பு வாசனை அற்ற பார்வதி கலங்கிய நேரம் குறைவு.

வேறு ஒருபெண்ணாய் இருந்தால், 
இன்னொரு நல்லதங்காள் கதை இந்த ஊருக்குக் கிடைத்திருக்கும்.

பிறந்தது முதலே துணிச்சல்காரி என்று பேர் வாங்கியவருக்கு, அதை இப்படி நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

கணவனின் ஆப்த நண்பர் முருகேசனின் ஆலோசனைப்படி, வங்கியை உடனே மூடும் நடவடிக்கையில் இறங்கி, அதை வெற்றிகரமாய் முடித்தார். இடைப்பட்ட அவகாசத்தில், வீட்டுக் கட்டுமான வேலைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார்.

தம்பி முறையாகும் செம்பணனை துணைக்கு வைத்துக்கொண்டு, தறிகளை மட்டும், எண்ணிக்கையைக் கூட்டி, நெறிப்படுத்தினார்.

வசதி குன்றிய குடும்பத்திலிருந்து வந்த செம்பணனை மட்டுமே, உறுதியாக நம்பி, எல்லாப் பொறுப்பையும் கொடுத்தார். காக்கை கூட்டமாய் மொய்த்த மற்ற உறவுகளை நிறுத்தவேண்டிய இடம் அறிந்து நிறுத்தினார்.

குப்புசாமி காணாமல் போனதால் கிளம்பிய புரளிகளைப் புறம்தள்ளி நிமிர்ந்து நின்றவர், எவரிடத்தும், எதற்கும் போய் நிற்பதில்லை என்பதிலும் உறுதியாகவே இருந்தார்.

1940, 50களில் ஒரு பெண் இவ்வளவு துணிச்சலாய்த் தன்னந்தனியே ஒரு குக்கிராமத்தில் தலையெடுப்பது என்பது எவ்வளவு நம்பமுடியாத விஷயம்?

அதிலும், தகப்பன் இல்லாத பிள்ளைகள் தறுதலைகளாய் மாறும் என்ற ஊர் எதிர்பார்ப்பை, செயலால் பொய்யாக்கினார்.

எப்போதும், பார்வதி பேசியது, செயல்கள் மூலமே.

மூத்த மகன், அந்த ஊரின் முதல் மருத்துவர்.

சென்னை மருத்துவக்கல்லூரியில் மகனைக் கொண்டு M.B.B.S. சேர்த்த அவரது துணிச்சல் எல்லார் வாயையும் அடைத்தது.

மூன்று மகள்களுக்கு, உள்ளூர் பள்ளி இறுதி வரை படிப்பு.

இரண்டாவது மகனையும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் கொண்டு சேர்த்த மெத்தை வீட்டுக்காரம்மாவை ஊரே வியந்தது.

தறிப்பட்டறை வருமானம், ஊருக்கு வடக்கே சோளக்காட்டு வெள்ளாமை எல்லாமே சிந்தாமல், சிதறாமல் மகன்கள் படிப்பாகவும், மேற்கொண்டு தறிகளாகவும் வளர,
மூத்த மகள் விஜயலட்சுமிக்கு படித்த மாப்பிள்ளைதான் என்பதில் உறுதியாய், தூரத்து சொந்தமாய், வேலூரிலிருந்து மணமகனைத் தேடிக்கொண்டு வந்தார். நாத்திகனாய் சிடுசிடுத்த மூத்த மாப்பிள்ளை, பின் மூத்த மகனாய் துணை நின்றது வரலாறு.

படிப்பில் சற்றே சுணங்கிய கடைக்குட்டி மகனையும், சென்னை பிரசிடென்சியில் பட்டப்படிப்புக்கு சேர்த்தபின்பே ஓய்ந்தார்.

மூத்த மகனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம்,
இரண்டாவது மகளுக்குஅதனினும் பெரிய இடத்தில் ASST DIRECTOR,EMPLOYMENT என்ற நிலையில் பணிபுரிந்த அரசு உயர் அதிகாரி, மாப்பிள்ளை.
இரண்டு மருத்துவ மகன்களுக்கும், அரசு மருத்துவர் வேலை.
இரண்டாவது மகனுக்கு, நன்றிக்கு அடையாளமாக செம்பணனின் மூத்த மகள் உமா.
சொந்தம் விடவேண்டாம் என்று, உள்ளூரில், படிக்காவிட்டாலும், தொழிலில் சிறந்த, வெகு குணவான் அண்ணன் மகன், மூன்றாவது மகளுக்கு.

கடைக்குட்டி கனகுக்கு, ஸ்டேட் பேங்க் வேலை. மாறுதல் வேண்டாம் என்று எழுதிக்கொடுத்து, தறிப் பட்டறையை ஒட்டியே, கட்டிடம் கட்டி, அதே பேங்க்குக்கு வாடகைக்கு விட்டு, உள்ளூரில் உத்தியோகம்.

இரண்டாம் மகள்வழிப் பேத்தியே கனகுக்கு மனைவி.

தான் சுமங்கலிதானா என்பதே கடைசி வரை தெரியாத வாழ்க்கை.

அத்தனை வஞ்சனை செய்த கடவுள்மேல் உள்ளூர உறைந்த வெறுப்போ என்னவோ
பெரிதாக கோவில் குளம் சென்றதில்லை.

இறுதிவரை எவரிடத்தும் தலை வணங்கி நின்றதில்லை.

மகனோ, மகளோ, தன் இறுதி மூச்சுவரை தன்னால் முடிந்த கடமைகளையும் சீர்களையும் குறைவின்றி நிறைவேற்றம்.

பிழைப்பது கடினம் என்று மருத்துவச்சி கை விரிக்க, மூன்றுநாள் போராடி, மூத்த மகளுக்கு தலைப் பிரசவம் முதல், பேரன் பேத்தி திருமணங்கள் வரை, நிறைவாய் முடித்து, தொண்ணூறு வயது வரை பெருவாழ்வு வாழ்ந்தார் பார்வதி.

எனக்கென்னவோ, “சோதனைகளையும் துயரங்களையுமே தருவேன், வாழ்ந்துகாட்டு பார்ப்போம் என்ற சென்னிமலை முருகனை, அவர் நிமிர்ந்து பார்த்து யாசிக்கவே இல்லை,

வென்றும் வாழ்ந்தும் காட்டிய அவர் வாழ்வை, அந்த முருகன்தான், மலை மீதிருந்து, தலை குனிந்து பார்த்து, வணங்கி வியந்து நின்றதாய்த் தோன்றுகிறது.

பார்வதிகள் அடிக்கடி தோன்றுவதில்லை.

தோன்றினாலும் இவர்போல் இத்தனையும் தாண்டி வென்றதில்லை.

பெண்மை வாழ்கவென்று பாரதி வியந்ததுபார்வதிகளைப் பார்த்தே!!.

வியாழன், 26 மார்ச், 2020

உலகின் கடைசி மனிதன்


உலகின் கடைசி மனிதன்!


அரை மயக்கத்தில் கிடந்த சார்லஸ் பால்டன் மண்டைக்குள் விர்ர்ர் என்று குழப்பமான சத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது.

இடையிடையே எதையோ நகர்த்தும் சத்தம்,
யாரோ நடமாடும் ஓசை.

கண்களின்  மேல் ஏதோ பெரும் பாரத்தை வைத்ததுபோல் இமைகள் கனத்து, இப்படிப் படுத்துக் கிடப்பதே ஒரு வகையில் வசதியாக இருந்தது.

நேற்றிரவு நடந்தது குழப்பமாக மனக்கண்ணில் ஓட, உடம்பு ஒருமுறை உலுக்கிப் போட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்போடு பேசிக்கொண்டே நடந்தது வந்ததுதான் கடைசியாக நியாபகத்தில் இருக்கிறது.

திடீரென்று அடித்துப் பெய்ய ஆரம்பித்த மழையில் நனையாமல் இருக்க ப்ரொடகால் எல்லாம் மறந்து வேகமாய் ஓடி வந்ததும், அதற்குப் பின் நடந்தவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக, பனி கரையும் காலைபோல, மனதுக்குள் விரிந்தது.

எத்தனை சொல்லியும் இந்த வேசி மகன்கள் கேட்காமல் இப்படி எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டார்களே என்று ஆத்திரம் பொங்கியது.

யாரைக் குறை சொல்வது?

இதில் தனக்கு மட்டும் பங்கில்லையா?

எண்ணெய், எண்ணெய் என்று அடித்துக்கொள்ளும்போதே, நாளைக்கு இது தண்ணீருக்காக நடக்கும் சண்டைக்கு முன்னோட்டம் என்று தலைப்பாடாக அடித்துக்கொண்டான் கிருஷ் - இந்தியாவிலிருந்து வந்த இளம் விஞ்ஞானி.

அவனைத் தன்னுடைய உதவியாளனாகப் போட்டதற்குப் பலமுறை டைரக்டரிடம் சண்டை போட்டிருக்கிறார்.

ஆனால் எல்லாமே அவன் சொன்னதுபோல்தான் நடந்தது.

எதையும் நேரிடையாகச் சொல்லாமல், அத்வைதம், த்வைதம் என்று குழப்படியாய் பேசுவான்.

எல்லா இந்தியர்களும் இப்படி பேசிப்பேசியே வீணாகிப் போனீர்கள். இனியாவது சொல்வதைச் செய் என்று கடிந்துகொள்வார்.

எல்லாம் கை மீறிப்போனபின்பு, போன வாரம்தான், அவரைப் பார்த்துப் புன்னகையுடன் உயிரை விட்டான்.

இளைஞன். இன்னும் பால்குடி மறவாத சிறு பிள்ளைபோல் முகம். ஆனால், அபாரமூளை.

"இந்த மூன்று வருடங்கள் இப்படித்தான்" என்று அவன் சொன்னபோது, நாஸாவே கைகொட்டிச் சிரித்தது.

இப்போது அப்படிச் சிரித்தவர்களில் யாருமே உயிரோடு இல்லை.

இதற்கு முந்தைய மழையில், எல்லோருமே நனைவதை, கண்ணாடிக்குள்ளிருந்து பார்த்தது ஞாபகம் இருக்கிறது.

மனித குல வரலாற்றில் மிகமிகத் துரிதமான மூன்று வருடங்கள்.

ஏசு பிறந்ததாய் சொல்லப்படும் காலத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களில் நடந்த மொத்த மாறுதல்களையும், தூக்கிச் சாப்பிட்ட மூன்று வருடங்கள்.

ஒபாமாவை கைகுலுக்கி வீட்டுக்கு அனுப்பிட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு வந்த சில மாதங்களில் போட்ட சில உத்தரவுகளை, "பேரழிவின் ஆரம்பம்" என்று வர்ணித்தான் கிரிஷ்.

மனிதன் உருவாக எடுத்துக்கொண்ட லட்சக்கணக்கான ஆண்டுகளை அழிக்கப்போகும் மிகச்சில வருடங்கள் இவை என்பது புரிய ஆரம்பித்தபோது
புதின், அழிவின் முதல் பட்டனை அழுத்தியிருந்தார்.

டென் கமெண்ட்மென்ட்ஸ் படத்தில் வருவதுபோல், பசிபிக் கடல் சுருங்குவதை, மலைகள் சிதைவதை, தாவரங்களும் உயிர்களும் கருகுவதை, கையாலாகாமல் வேடிக்கை பார்த்தபோது, அடுத்தது இதுதான் என்று மனதுக்குள் ஓடியது ஒவ்வொன்றும் இம்மி பிசகாமல் நடந்தது.

ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு அணு ஆயுதங்களையும், ரசாயன ஆயுதங்களையும் அடுக்கி வைத்துக்கொண்டே போனபோதே, இப்படி ஆகும் என்பது தெரிந்ததுதான்.

ஆனால், எப்படியும் இன்னும் பல நூறு தலைமுறை வரை இது நடக்காது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டது உலகம்.

திடீரென்று, ஒசாமாவுக்குப்பின் பலம்பெற ஆரம்பித்த மூர்க்க ஐஎஸ்ஐ முட்டாள்கள் கையிலா அந்தப் பாழாய்ப்போன ஆயுதங்கள் கிடைக்கவேண்டும்?

இலக்கில்லாமல் மொத்த மனித குலத்தையே எரிக்கும் வெறி, எல்லா நாட்டின் மேலும் அவற்றை வாரி இறைக்க,
விளைவைப் புரிந்தும், அமெரிக்கா மீதான வெறுப்பில், தன் ஆயுதங்களையும் வெடித்துதீர்த்தது ரஷ்யா.

அங்கங்கே, ராட்சஷ குடைகளாய் வெடித்ததில், எண்ணி மூன்றே மாதங்களில் மொத்த உலகமும் கருகிப்போனது.
 
போதாக்குறைக்கு சீனாவிலிருந்து குதித்த கொரோனா வைரஸ்!

புல்பூண்டு கூட மிச்சமில்லாத சுடுகாடாய்ப் போன உலகத்தில், அங்கங்கே, சிறு சிறு குழுக்களாக மீதி இருந்தவர்களுக்கும், வானத்திலிருந்து வந்தது ஆபத்து.

ஒற்றை உயிரினம் மிஞ்சாத நிலை. 
எந்த ஒரு கருவியோ, மின்சாரமோ, எதுவும் மிஞ்சாத ஏறத்தாழ காட்டுமிராண்டி வாழ்க்கை.

எப்போதோ, கட்டிவைத்த ஏழடுக்குப் பாதுகாப்பு இல்லத்தில், மூத்த விஞ்ஞானிகள், எஞ்சிய சில மனிதர்கள், இன்னும் பதவியை விடாத அமெரிக்க அதிபர் என்று ஒரு சிறு குழு.

மெல்ல முடிந்தததை எல்லாம் பசிக்குத் தின்றுகொண்டு, இருந்த அழுக்குத் தண்ணீரில் சொட்டுச் சொட்டாய் தொண்டையை நனைத்துக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிழைப்புக்கு வழியை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள்.

தொடர்பு சாதனங்கள் முற்றிலுமாக அற்றுப்போன நிலையில், இதுபோல் உலகில் வேறு எங்கும் சிலர் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகரும்போது, வந்தது அடுத்த ஆபத்து.

மேகங்கள் திரண்டு மழை அறிகுறி தோன்றியபோதே, கிரிஷ் சொன்னான்.
வெளியே போகவேண்டாம். கதிரியக்கம் கன்னாபின்னாவென்றிருக்கும் நிலையில் பெய்யும் மழை நல்லதல்ல.

அடித்துப் பெய்ய ஆரம்பித்த மழை கட்டுடைக்க, தாகத்தில் வெளியே பாய்ந்தது ஜனம்.

அந்தக் கோரம் இன்றுவரை மறக்கவில்லை.

பெய்தது அமில மழை.

நனைந்த எல்லோரும் கருகிச் சிதைந்து சுருண்டதை கையாலாகாமல் பார்த்தபோது, வாய்விட்டுக் கதறினார் ட்ரம்ப்.
என் தேவனே, எம்மை ஏன் கை விட்டீர்கள்?”

நாம்தான் கடவுளைக் கைவிட்டோம்.
இது பேரூழிக் காலம்". 
"இனி எல்லாம் நாட்கணக்குத்தான். ஏசுவோ, அல்லாவோ, கிருஷ்ணனோ, செய்ய ஏதுமில்லை என்று புன்னகையோடு சொன்னான் கிரிஷ்.

அப்படித்தான் அதுவும் நடந்ததது.

பெய்யும் அமில மழையில், கிரிஷ் உட்பட, ஒவ்வொருவராய்க் கரைந்தது, இப்போது மிஞ்சிய மூன்றடி சதுரத்தில், நேற்றிரவு, தான் மட்டும் ஓடிவந்து அடைந்தது நியாபகம் வந்தது சார்லஸுக்கு.

அதிபரும், எஞ்சி இருந்த ஒற்றை பாதுகாப்பு அதிகாரியும் நேற்றைய மழையில் கரைவதைப் பார்த்தது இப்போது நிழலாடியது.

அப்படியாயின், இப்போது கேட்கும் சத்தங்கள் என்ன?
யார் என்னை சுமந்துபோய் எதன்மீதோ கிடத்துவது?

எஞ்சியிருந்த வேறு ஏதோ குழுவா, அல்லது தேவன் அனுப்பிய மீட்பரா?

யாராய் இருந்தால் என்ன, பற்றிக்கொள்ள ஒரு துரும்பு கிடைத்துவிட்டது
.
சிரமப்பட்டுக் கண் விழித்தபோது.... 
அவர்களை, அல்லது அவைகளைப் பார்த்தார் சார்லஸ்.

எட்டடிக்குக் குறையாத உயரம்
என்ன வடிவம் என்றே சொல்லமுடியாத உருவத்திலிருந்து கைபோல் நீண்டிருந்த ஏதோ ஒன்று சார்லஸை அந்த மேஜை மீது அழுத்திப் பிடித்திருந்தது.

அவர்களின் தலைமீது ஏதோ, ட்ரான்ஸ்மிட்டர் போலிருந்த சாதனம் மெல்லக் கமறியது.

அசரீரியாக ஒரு குரல், மெஷின் போல் சிந்தசைசர் போல் ஒலித்தது.

நாங்கள் நேரோ கிரகஉயிர்கள். உங்கள் பூமியிலிருந்து, கோடிக்கணக்கான ஒளி வருடங்களுக்கு அப்பாலிருந்து வருகிறோம்.
பாலைவனம் போலும், எரிமலை போலும் கருகிக்கிடக்கும் உங்கள் கிரகத்தில், அசையும் பொருளாக நீ மட்டும்தான் இருந்தாய்.
உன் பெயர் மனிதன் என்பதும், உன் மொழியும் எங்கள் சாதனங்கள் சொல்லும் தகவல்.

உன்னை எங்களோடு எடுத்துச் சென்றால் ஏதும் பலன் உண்டா என்று பார்த்தோம்.

உன் தலைக்குள் இருக்கும் சாதனம், எதையும் அழிக்கும் வக்கிரம் வாய்ந்ததுஎனவே, உன்னை எடுத்து வரவேண்டாம் - என்று கட்டளை வந்து விட்டது.
நாங்கள் புறப்படுகிறோம்.

சொல்லிக்கொண்டே, மரம்போல் நின்றிருந்த ஒன்றில் ஏறிக்கொண்டு பறந்து விட்டன.

முழு பலத்தையும் திரட்டி எழுந்த சார்லஸ், தலைக்குமேல் ஏதோ, சத்தம் கேட்க, 
நிமிர்ந்து பார்த்தார்.

சோ வெனப் பெய்ய ஆரம்பித்தது அமில மழை.

கரைந்து மடிந்தார் உலகின் கடைசி மனிதர்.

அடுத்த உயிர் ஜனிக்ககோடிவருடத் தவத்தை ஆரம்பித்தது பூமி!திங்கள், 23 மார்ச், 2020

இளையராஜாவும் மேட்டுக்குடி சங்கீத விமர்சகர்களும்!

ஒரு ஒல்லியான கருப்பு உருவம் 1975ல் அன்னக்கிளி மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தது!

பஞ்சு அருணாச்சலம் பற்றவைத்த நெருப்பு பட்டி தொட்டியெல்லாம் பற்றியெரிய ஆரம்பித்தது!

திரை இசையில் ஒரு புயல் வந்து தென்றலாய் வீசிக்கொண்டிருந்த காலம்!

அதுவரை கேட்காத துள்ளல் நாட்டுப்புற இசை ஒருபுறம்!

மெல்லிசையா, சுத்தமான கர்நாடக இசையா, அன்றி மேற்கத்திய இசை கலந்த ஃப்யூஸனா எது கேட்டாலும் அந்த ஒற்றை ஆர்மேனியப்பெட்டி எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தது!

மேட்டுக்குடி இசை விமர்சகர்களுக்கு நல்ல நாளிலேயே சிலர் மீது ஒவ்வாமை!
ராஜா மீது ஒவ்வாமையோடு மலையளவு பொறாமையும்!

சில எலைட் வார இதழ்களில் சங்கீத மஹாவித்வான்கள், விமர்சகர்கள் சிலர் பலமுறை தங்கள் எரிச்சலை வெளிப்படையாகவே காட்டிக்கொள்வதுண்டு!

அவர்களுக்கு இளையராஜா என்றால் டப்பாங்குத்து மட்டுமே!

அதற்குமேல் அந்த ஆளிடம் வேறு சரக்கு கிடையாது என்று எள்ளல் வேறு!
மொட்டைக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி!

சாமியார் மனசுக்குள் அந்த ஊமைக்குசும்பு காத்துக்கொண்டே இருந்தது!
1981ல் ஒரு அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது!

ரங்கராஜன் இயக்கத்தில்,  கமல், கண்ணுக்கு நிறைவான மாதவிக்குட்டி நடித்த முழுநீள நகைச்சுவைப் படம் 
- எல்லாம் இன்பமயம்!

புகுந்து விளையாட அற்புதமான களம் ராஜாவுக்கு!

அட்டகாசமான ஒரு சிச்சுவேஷன்!

ஒரு பணக்காரப் பையன் குப்பத்துப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள, குப்பத்திலிருந்து பெண் வீட்டு சார்பாக கமல் ஆடிப்பாடுவதுபோல்!

வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் ராஜா!

பாடல் ஆரம்பிக்கும்போதே, தன் மீதான விமர்சனத்தை மறைமுகமாக அல்ல, நேரிடையாகவே எடுத்துக்கொண்டு ஒரு உரையாடல்!

டாய்!!
நிறுத்துங்கடா!!
நிறுத்துங்கடா டாய்!!
நிறுத்துங்கடா அல்லாரும்!!
இன்னாடா அடிக்கிறீங்க மோளம்
இங்க கல்யாணம் நடக்குதா
கரகம் ஆடுறங்களா!??
பெரிய பெரிய ஆப்பீசருலாம்
வராங்கடா இங்க.!!

சங்கராபரணம் மீஜிக்கு மாரி
டீஜண்டா அடிங்கடா.

உடனே
ஒரு டிபிக்கல் வெஸ்டர்ன் நோட்ஸ்!

மோளம் வோணும்ன்றவன் அத்த எட்த்துக்கட்டும்.
சங்கீதம் வோணும்ன்றவன் இத்த
எட்த்துக்கட்டும்!”

அதற்குப்பின் ஒரு அக்மார்க் இளையராஜா நாட்டுப்புறக் கொட்டு!

உடாதே, புடிச்சுக்கோ என்ற டிபிக்கல் குப்பத்துக் கூவல்!

தொடர்ந்து குப்பத்து பாஷையிலேயே முழுக்க தப்பட்டை மற்றும் மேற்கத்திய இசைக்கலவையில் பின்னணி இசையோடு பாடல்!

இதில்தான் அந்த மேட்டுக்குடி மடிசார் விமர்சகர்களுக்கு வைத்தார் ஒரு பலமான குட்டு!

கொஞ்சம்கூட, சம்பிரதாயம் விலகாத சுத்த கர்நாடக இசை மெட்டில் மொத்தப்பாட்டும்!

பிலஹரி ராகத்தை ம்யூசிக் அகாடமி மேடையில் சம்மணம் போட்டுக்கொண்டு நிரவல் சுரம் பாடும் வித்வான் கூட கொஞ்சம் ஸ்தாயி மாறும்போது பிசிறடிக்கலாம்!
இந்தப்பாட்டு முடியும்வரை ஒரு இடத்திலும் தடம் மாறாத சுத்தமான பிலஹரி!

அதற்குப்பின் அந்த விமர்சக ஜாம்பவான்கள் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்கவில்லை!

திரைப்படப் பாடலும் சில பிலஹரி ராகப்பாடல்களும் கீழே:
இசை என்று வந்துவிட்டால் எல்லா ஏரியாவிலும் ராஜாதான் சக்கரவர்த்தி!