மாண்புமிகு பிரதமர் ஐயா அவர்களுக்கு!
நேற்றைய உங்கள் உரை அற்புதமாக இருந்தது!
தங்கள் முக பாவனைகளும், நிதானமான வாக்கிய உச்சரிப்பும்..
தாங்கள் மிகச் சிறந்த நடிகர்!
ஆனால், தங்கள் வசனகர்த்தாதான்எப்போதுமே தங்களைக் காலை வாரி விடுகிறார்!
தேசம் தங்களிடம், எங்கள் அன்புக்குரிய "ப்ரதான் மந்திரி"யிடம் எதை எதிர்பார்க்கிறது?
அற்புதமான நடிப்பையா
அன்றி,
நானிருக்கிறேன் என்ற அபய கரத்தையா?
தாங்கள் எங்களுக்கு, இந்த நாட்டு மக்களுக்கு தகப்பன் போன்றவர்!
உங்கள் நிழலில் நாங்கள் நிம்மதியாக இளைப்பாற முடியும் என்ற நம்பிக்கையில், உங்களை எங்கள் ஆண்டவனாக வரித்துக்கொண்டோம்!
உங்கள் மாறுபட்ட வேஷங்களையும் அதன் பலனாய் தெருவில் இரவு பகல் பாராது வரிசையில் நின்றதையும் மறந்து, என்றைக்கேனும் எங்களுக்கு, எங்கள் உயிருக்கு ஆபத்து என்று வரும்போது நிச்சயம் உங்கள் கரம் எங்களுக்காக நீளும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்!
நேற்றிரவு, அந்த எங்கள் நம்பிக்கை உச்சமாக இருந்தது!
உலகம் முழுவதும் யாருடன் போரிடுகிறோம் என்றே தெரியாமல், எங்கிருந்து சாவு வருகிறது என்றே புரியாமல் பதறித் தவித்தபோதும், நாங்கள் நம்பிக்கையோடு காத்திருந்தோம்!
என் நாடு மிக அதிகமான ஜனத்தொகை நெருக்கம் கொண்டது!
இங்கு, ஒருவன் மூச்சுக்காற்று நூறுபேர் ஸ்வாசித்த பிறகே ஓய்வெடுக்கிறது!
எங்களில் 80 சதவிகிதம் பேருக்கு இன்னுமே அன்றாடம் காய்ச்சி வாழ்க்கைதான்!
உங்களுக்குத் தெரியாததில்லை!
உதாரணமாக நாள் முழுக்க ரயில்வே பிளாட்ஃபாரத்தில் ஓடி ஓடி தேநீர் விற்றால்தான் அன்றைக்கு இரவில் பலர் வீட்டில் அடுப்பெரியும்!
எல்லோருக்கும் பசியோடு காத்திருக்கும் மனைவி குழந்தைகள்!
ஒரு நாள் அல்ல, ஒருமணிநேர ஓய்வென்பது எட்டாக் கனவு எங்களுக்கு!
ஆனாலும், ஓடிக்கொண்டே இருக்கிறோம், எங்கள் ஆண்டவர்கள் எங்களைக் காப்பீர்கள் என்ற நம்பிக்கையில்!
நேற்று, உங்கள் உரை அந்த நம்பிக்கையை தகர்த்ததா அன்றி வளர்த்ததா என்பதை கொஞ்சம் நீங்களே சொல்லிவிடுங்களேன்!
நாங்கள் எங்கள் டீ கேன்களை ஓரத்தில் வைத்துவிட்டு, அன்றைய பிழைப்பை மறந்து, உங்கள் உரையை ஆவலோடு எதிர்பாத்தோம்.
எங்கள் அரசு, எங்கள் ப்ரதான் மந்திரி மூலம் எங்களுக்கான வாழ்க்கைத் திட்டத்தை அறிவிக்கும் என்று!
நாங்கள் உங்கள் எழுச்சி உரையில் எதிர்பார்த்தது,
இந்த அரசு கொரோனா வைரஸை எதிர்கொள்ள எடுத்திருக்கும், எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றிய விவரத்தை!
பாதுகாப்பு மையங்கள், மருத்துவ சிகிச்சை,கண்காணிப்புக் கூடங்கள் எப்படி மேம்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதை!
ஒரு நாள் ஓட்டத்தை நிறுத்தினாலே ஒழிந்துபோகும் எங்கள் வாழ்க்கை வாரக்கணக்கில், மாதக்கணக்கில் கூட்டுக்குள் அடைந்துகிடக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்பதை உணர்ந்த
எங்கள் அரசு எங்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற அறிவிப்பை!
வெளியே அலைந்தால் மடிந்துபோவோம் எனில், அடைந்து கிடந்தாலும் பசியால் மரித்துப்போவோம் என்ற அச்சத்தில் இருப்போருக்கு மாற்று வழி என்ன என்பதை!
மாதக்கணக்கில் தொழிற்கூடம் மூடப்பட்டால், வட்டிக்கு கடன் வாங்கி நேர்மையாக மாதம்தோறும் திருப்பிக் கட்டிக்கொண்டிருக்கும் எங்களுக்கு இந்தக் காலகட்டத்தில் எங்கள் அரசாங்கம் என்ன உதவிகள் செய்யும் என்பதை!
கடனைக் கட்டும் நோக்கமே இல்லாமல், வெளிநாட்டுக்குத்
தப்பித்து பறந்துபோகுமளவு நாங்களெல்லாம் ஆயிரம் கோடிகளில் கடன் வாங்கவும் இல்லை, எங்களில் பலருக்கு கடவுச் சீட்டும் இல்லை!
வெறும் ஆயிரங்களில் கடன் வாங்கிவிட்டு, கடனாளியாக சாகக்கூடாது என்ற நேர்மையோடு, வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இந்த மண்ணில்தான் என்று வாயையும் வயிற்றையும் கட்டி மாதாந்திர தவணைத் தொகையை தவறாமல் கட்டிவிடுகிறோம் - லட்சம் கோடிகளை வாரிக்கொடுத்து மல்லையாக்களை வெளிநாட்டில் வாழவைக்க ஏதுவாக!
இந்த கடையடைப்பு, உள்ளிருப்பு நாட்களில் ஏற்படப்போகும் இழப்புக்கு எங்கள் அரசாங்கம் எங்களுக்கு என்ன செய்யப்போகிறது என்பதை!
எங்கள் நேர்மையே எங்களுக்கு எமனாய்ப் போனதால், குறைந்தபட்ச வைப்புத் தொகைகூட இல்லாமல் அதற்கும் தண்டம் கட்டிக்கொண்டிருக்கும் எங்களுக்கு, இனி வரப்போகும் இருண்ட நாட்களில் என்ன ஒளி காட்டப்போகிறது எங்கள் அரசு என்பதை!
வரும் 22ம் தேதி உள்ளிருப்பு என்பது- ஜனதா கர்ஃப்யூ - எவ்வளவு யோசித்துப் பெயர் வைத்திருக்கிறீர்கள்!
அதே யோசனை, இந்த முன்னோட்டம் வெகு விரைவில் தொடர்கதையாக நீளும்போது, எங்கள் வாழ்வும் வயிறும் வாடாதிருக்க எங்கள் மீட்பர் என்ன செய்யப்போகிறார் என்ற திட்டத்தை!
பொது சுகாதாரத்துக்கு இந்த அரசு எவ்வளவு தொகை ஒதுக்கியிருக்கிறது என்ற புள்ளிவிவரத்தை!
கோடிக்கணக்கில் செலவு செய்து அப்போலோவில் இட்லி சாப்பிட்டு செத்துப்போகும்
யோகம் எங்களுக்கில்லை!
அரசு மருத்துவமனைகளே எங்களுக்கு அப்போலோ!
எங்கள் உயிரைக்காக்க
இந்த அரசு செய்துள்ள ஏற்பாடுகள் என்ன என்பதை!
இந்த பேரிடர் காலத்தில் எங்கள் கடன் கழுத்தை நெறிக்காதிருக்க வங்கிகள் என்ன செய்யப்போகிறது என்பதை!
அன்றாடம் காய்ச்சிகளின் சோற்றுக்கு இந்த அரசு என்ன வழி செய்திருக்கிறது என்பதை!
கூடற்று தெருவில் உறங்குவோர் உயிர் பாதுகாப்புக்கு எத்தனை கூடங்களை அரசு அமைத்திருக்கிறது என்பதை!
உலகமே மாதக்கணக்கில் பதறி திட்டமிடும் நிலையில், எங்கள் அரசாங்கம் வகுத்த திட்டங்கள் பற்றிய அறிவிப்பை!
இப்படி ஏதாவது இருந்ததா ஐயா உங்கள் எழுச்சி உரையில்?
வழக்கம்போல் சவசவ என்று நீர்த்துப்போன வசனங்கள்.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று ஒரு சிறு குறிப்பும் இன்றி, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்ற கட்டளைகள்!
ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம் கைதட்ட, மணியடிக்க வேண்டும் என்ற நாடகத் திட்டத்தை!
இந்த ஐந்து மணிக்கு கை தட்டுவது,
ஆறு மணிக்கு மணியடிப்பது,
நள்ளிரவில் மொட்டை மாடியில்
டார்ச் அடிப்பது,
இதெல்லாம் எலைட் க்ளாஸ் அபத்தங்கள்!
எங்களுக்கு சோறும், கூரையும், உடுப்புமே போராட்டமாக இருக்கையில்
இதெல்லாம் எரிச்சலைக் கிளப்பும் விஷயங்கள்!
ஐயா, தாங்கள் நாடகக் கம்பெனி நடத்தவில்லை - ஒரு நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறீர்கள்!
நாடு நெருக்கடியில் இருக்கும்போது பிரதமர் உரை எப்படி இருக்கவேண்டும்?
எது நடந்தாலும் இந்த அரசு நமக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை, தைரியத்தைத் தருவதாக!
உங்கள் நேற்றைய பேச்சு அப்படித்தான் இருந்ததா பிரதமரே?
நாடு நெருக்கடியில் இருக்கும்போது பிரதமர் உரை எப்படி இருக்கவேண்டும்?
எது நடந்தாலும் இந்த அரசு நமக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை, தைரியத்தைத் தருவதாக!
உங்கள் நேற்றைய பேச்சு அப்படித்தான் இருந்ததா பிரதமரே?
உலகமே தயார் நிலையில் இருக்கும்போது,
இனிமேல்தான் நிதியமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்கிறீர்கள்!
இத்தனை நாள் என்ன .... கொண்டிருந்தீர்கள் என்று கேட்கத் தோன்றியது என் பிழையா?
அப்படிக் கேட்டு, தேசவிரோதி என்று பட்டம் சூட்டப்படுவதைவிட, மூடிக்கொண்டு விதி காட்டும் வழி பயணிப்போம் என்று முடிவு செய்வது தவிர எங்களுக்கு ஏது வழி?
எங்கள் வாழ்க்கையை நாங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் எனில் எங்களுக்கு எதற்கு ஒரு ப்ரதான் மந்திரி என்று உங்களிடம் எதிர் கேள்வி கேட்பதைவிட,
நமக்கு நாமே என்று எங்கள் ஒழுக்க விதிகளை நாங்களே அமைத்துக்கொண்டு,
எங்கள் குடும்பத்துக்காக,
எங்களை நம்பியிருக்கும் உயிர்களின் நல்வாழ்வுக்காக
என்னவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்துகொள்கிறோம்!
எங்களுக்கு இதற்கும் ஆறுதல் இருக்கிறது - தீதும் நன்றும் பிறர் தர வாரா!
நாங்கள் படைத்த ஆண்டவர்கள் எங்கள் தொல்லை தாங்காமல், கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் பூட்டிக்கொண்டு
ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்!
நாங்கள் தேர்ந்தெடுத்த ஆள்பவர்களோ, எங்களை கூடிநின்று கைதட்டச்
சொல்லி குறளி வித்தை காட்டுகிறீர்கள்!
வீடற்றவர்களை விடுங்கள்.
90 விழுக்காடு ஒற்றைப் படுக்கையறை வீட்டில் வசிக்கும் மக்கள், நோய்த் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால், வீட்டிற்குள் மற்றவரை பாதிக்காமல்
எவ்வாறு தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ள முடியும்?
எல்லோரும் மாளிகைகளில் வசிக்கவில்லை
என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?
அவ்வாறு பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் தர என்ன
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
இதெல்லாம் எங்களுக்கு யார் சொல்லுவார்கள் ப்ரதான் மந்திரி அவர்களே?
நல்லது!
நாங்கள் இதையும் கடந்து வருவோம்!
நீங்கள் நிதானமாக திட்டங்கள் தீட்ட ஆரம்பியுங்கள்,
ஒருவேளை,
அதற்கிடையில் நாங்கள் கொத்துக் கொத்தாய் செத்துவிழுந்தால்,
எங்கள் பிணங்களை எரிப்பதா புதைப்பதா என்பதையாவது இப்போதே முடிவு செய்துகொள்ளுங்கள் - அழுகி நாறிப்போகும் எங்கள் பிணங்கள் உங்கள் மேட்டுக்குடி சுகாதாரத்துக்குக் கேடு!
ஞாயிற்றுக்கிழமை கைதட்டுகிறோமோ இல்லையோ, இப்போது தெருவோரம் தரையில் உட்கார்ந்து நம்பிக்கையோடு உங்கள் பேச்சைக் கேட்ட எங்கள் புட்டத்தில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு பிழைப்பைப் பார்க்கப் போகிறோம்!
பிழைத்துக் கிடந்தால் உங்களை அடுத்த தேர்தலின்போது பார்க்கிறோம்!
அப்படியே, உங்கள் சவலைப்பிள்ளை எதிரி, இத்தாலியின் இளவரசர் எங்காவது
தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், எழுப்பி, எங்கள் அன்பைச் சொல்லுங்கள்!
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக