வெள்ளி, 6 மார்ச், 2020

இளையராஜாவின் இன்னொரு ஆச்சர்யச் சுரங்கம்! பூ மலர்ந்திட....


பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே....இளையராஜா ஒரு ஆச்சர்யச் சுரங்கம்!

அதிலும் சில பாட்டெல்லாம், காதலி மனைவியானதும் எடுக்கும் அவதாரம் மாதிரி, ஒரு வடிவத்தில் ஆரம்பித்து எதிர்பார்க்காத தருணத்தில் சட்டென்று தலைகீழாக மாறும்!

இன்றைய பயணத்தில் தற்செயலாக அப்படி ஒரு பாடல்!

பூ மலர்ந்திட நடனமிடும் பொன்மயிலே....

முதல் ஒரு நிமிடம் வெறும் மிருதங்கமும் ஜதியுமாக மடிசாரும் மடியுமாக ...
இப்படியே கர்நாடகமாக நகர்கிறதே என்று யோசிக்கும்போது ஒரு சின்ன முத்தாய்ப்பு... கிடாரில்!

மிகச் சிறிய அமைதிக்குப்பின் ஜென்சி
"பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே...

அரைப் பழுப்பாக, ஓட்டில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும் பருவத்தில் புளியங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா?

பச்சையும் மஞ்சளும், பிரௌனும் என்று கலவையான வண்ணத்தில்,
இனிப்பா புளிப்பா என்று சொல்லமுடியாத சுவையில்...

அப்படித்தான் இருக்கும் ஜென்சி குரல்!

நகம் வெட்டி இழுக்கும் கடைசி சுருக்,
சிலேட்டில் பென்சில் கொண்டு எழுதும்போது எதிர்பாராமல் பல் கூச்ச வைக்கும் கிரீச்...
இப்படி!

ஜென்சி அந்த வாக்கியத்தை முடிக்க, மறுபடி ஒரு வரி ஜதி!
இந்தமுறை ஜேசுதாஸ் குரலில்!

நான் நடமிட உருகிய திருமகனே.. காதல் சொட்ட ஜென்சி முடிக்க,
லவ் யூ  லவ் யூ என்று ஜேசுதாஸ் (!!!) குறும்பாய் இணைய...

அந்தக் காலகட்டத்து ஜேசுதாஸ் குரல், ஒரு விளைந்த கஞ்சாத் தோட்டம்! தேன் நனைந்த பலாச்சுளை!
ஒரு விடலைப் பையனின் காதலைச் சொல்ல ஏற்ற சரியான பதம்!


இத்தனை நேரம் அடக்கிவைத்ததே பெருசு என்று மதகு திறந்த நொடி வெள்ளமாக வயலினும், கிடாரும் குதூகலமாக ஆர்ப்பரிக்க,

இளையராஜாவின் இன்னொரு க்ரஷ் - வயலின் கொஞ்சம் தள்ளி இணைந்துகொள்ள, ஒரு நிமிட அதகளத்துக்குப் பிறகு...

ஜென்ஸி பாடி முடித்து ஜேசுதாஸ் ஆரம்பிக்கும்போதே மாப்பிள்ளைத் தோழனாய் வயலின்!

ஏன் இந்தக்கோபம்?
யார் செய்த சாபம்?
ஒவ்வொரு கேள்விக்கும் கூடவே முத்தாய்ப்பாய் வயலினும் பேசுகிறது
ப்ளீஸ்.. ப்ளீஸ் என்று!

நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று அடுத்த இடையிசையில், பேஸ் கிடாரும் செல்லோவும் கீ போர்டும் பியானோவும் சட்டென்று பாடலை மேற்கத்திய இசைக்கு இழுத்துப்போகும் ட்ரான்ஸ்மிசன் ...

அதன்பிறகு இருவரும் இணைந்து பாடும் சமாதான வரிகளில் அதே வயலின், ப்ளீஸ் என்று கெஞ்சாமல், ஆற்றங்கரை நடக்கும்போது கூடவரும் நீரின் ஆனந்த சலசலப்பாய்....
எஸ், எஸ் என்று புதுக்கணவனாய் தலையாட்டிக்கொண்டு கூடவே வருகிறது!ஏறத்தாழ ஐந்து நிமிடப் பாடலை,பொன்மயிலேஏஏ...
என்று தேனில் குழைத்து ஜேசுதாஸ் நிறுத்தும்போது,

சேலத்தில் சிம்ரன் இடுப்பைப்போல அபாயகரமாய் வளையும் அந்த மேம்பாலத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன்!

பாடல் தந்த சுகந்தமும், அந்த மேம்பாலத் திருப்பமும், பாடல் முழுக்க மனதில் ஓடிக்கொண்டிருந்த மாதவியின் அத்தனை பெரிய ரெண்டு
கண்ணும்
தந்த கிறுகிறுப்பில், முன்னால் டூவீலரில் போய்க்கொண்டிருந்த பெண்ணை மறித்து, லவ் யூ லவ் யூ என்று பாடத் தோன்றியது!

நல்லவேளை, ஏற்கனவே அப்படிப் பாடி மாட்டிக்கொண்டிருப்பது சரியான சமயத்துக்கு நியாபகம் வந்தது!

அமைதியாய் அந்தப்பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள், பார்க்கும் முதல் பெண்ணையே முத்தமிடத் தோன்றும்!

வீடியோ லிங்க்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக