புதன், 29 ஏப்ரல், 2020

எளிய மனிதர்களின் நிபந்தனையற்ற அன்பைச் சொல்லும் படம் - சூடானி ஃப்ரம் நைஜீரியா!


பார்க்கலாம் பார்க்கலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த ஒரு படம் இன்று பார்க்க நேர்ந்தது!

"சூடானி ஃப்ரம் நைஜீரியா"

ஒரு தெள்ளிய நீரோடையின் மெல்லிய சலசலப்பு போல நகர்கிறது கதை!

கதை என்று சொல்ல பெரிதாக ஏதுமே இல்லை. ஆனால் எல்லாமே இருக்கிறது இந்தப் படத்தில்!

எளிய மனிதர்களின் நேசத்தை இவ்வளவு இயல்பாக எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாமல் எப்படிக் காட்ட முடிந்திருக்கிறது அந்த இயக்குனருக்கு - அதுவும் தன்னுடைய முதல் படத்திலேயே!

ஜக்காரியா ஒரு இடத்தில்கூட "பார் இவர்கள் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள்" என்று அடிக்கோடிட்டுக் காட்டவில்லை!

அன்போடிருப்பது அவர்களின் இயல்பு - அதனால் அவர்கள் அன்போடிருக்கிறார்கள்
அவ்வளவே!

படத்தில் வரும் யாருமே வசதியானவர்கள் இல்லை!
ஆனால் வெகு இயல்பாக மற்றவர் பிரச்னைக்கு தோள் கொடுக்கிறார்கள், புதுப் பெண்டாட்டியின் நகைகளை அடகு வைக்கிறார்கள்!
நாளை பற்றிப் பெரிதாகக் கவலைப்படாமல் இன்றைக்கு மற்றவர்கள் மேல் கருணையைப் பொழிகிறார்கள்!

படத்தில் இரண்டு ஹீரோயின்கள்
அவர்களைப்பற்றித்தான் முதலில் சொல்லவேண்டும்!
இருவருக்குமே வயது அறுபதுக்கு மேல்!


அம்மா ஜமீலாவாக வரும் சாவித்ரி ஸ்ரீதரன்,
அவரது தோழியாக வரும் சரசா!

எவ்வளவு வெள்ளந்தி அம்மா அவர், தன்னோடு முகம் கொடுத்துக்கூடப் பேசாத மகன் மீது அன்பைக் கொட்டுவதுகூட சாதாரண விஷயம்தான்!

ஆனால் கால் உடைந்த நோயாளியாக வேற்று நாட்டான் ஒருவன் வந்து வீட்டுக்குள் படுத்த படுக்கையாகக் கிடக்க, அவனை மகனுக்கு மேலாக நேசிக்கும்போது ஒரு இடத்தில்கூட இயல்பு மாறி பிசிறு தட்டவில்லை!

அவன் கருப்பானாக இருந்தால் என்ன, வேற்று மதத்தவனாக இருந்தால் என்ன, பேசும் மொழி புரியாதவனாக இருந்தால் என்ன, என் மகன் வயதுக்காரன் எல்லாமே எனக்கு மகன்தானே என்ற எளிமையான அன்பு!

அதிலும், மகனைப்பற்றி அவனிடமே புலம்பித் தவிக்கும் அந்த அப்பாவித்தனம்!

பக்கத்து வீட்டுக்காரி தோழியாக  இருப்பதே ஆச்சர்யம்- அதிலும் இவ்வளவு அந்நியோன்யமும் அன்புமாகவா!


சாமுவேலாக சாமுவேல்
ஏதாவது ஒரு ஃப்ரேமில் அவர் நடிப்பாரா என்று பார்த்துக்கொண்டிருந்தால், ஜஸ்ட் லைக் தட் வாழ்ந்துவிட்டுப் போகிறார்!

உணர்ச்சிவசப்பட ஆயிரம் காரணங்கள் இருந்தும், தன் சோகக்கதை சொல்லும்போதுகூட மெல்லிய கண்ணீரோடு பேசும்போது மனது கனத்துப் போகிறது!

ஒரு வார்த்தைகூட மலையாளம் புரியாவிட்டாலும், அந்தத் தாயின் புலம்பலை ஒருதுளி விடாமல் புரிந்துகொள்கிறார்
தாய்மையின் அன்பைச் சொல்ல மொழி எதற்கு?


அப்பாவாக வரும் அப்துல்லா
தளர் நடை மூலமாக மட்டுமே எல்லையில்லாத ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் சொல்லத் தெரிந்த அவருக்கு சாமுவேல் கூட அந்த உரையாடலில்லா உரையாடல் காட்சி ஒன்றே போதுமானதாக இருக்கிறது அவர் உணர்வை மொத்தமாக நமக்குக் கடத்த!


ஹீரோ- சோப்பின் (சவ்பீன்?) சாஹிர்!

ஃபுட்பால் டீம் மேனேஜர்!
எவ்வளவு இயல்பாக நடிக்கிறார்!

கோபம், விரக்தி, சந்தேகம் - எல்லாமே அளவோடு கலந்த கலவை!

மெல்ல மெல்ல அவருக்கும் சாமுவேலுக்கும் இடையே மலரும் புரிதல், ஸ்நேகிதம் எல்லாவற்றுக்கும் மேலான அன்பு!

பாஸ்போர்ட் தொலைந்துபோனதும் வரும் குற்றவுணர்ச்சியும், தவிப்பும் அத்தனை அழகு!

எப்படியாவது அவரை நைஜீரியாவுக்கு அனுப்பிவிடவேண்டும் என்ற தவிப்பும், ஏர்போர்ட்டில் கண்களில் தெரியும் பெருமிதமும் பிரிவுத் துயரும்- அற்புதம்!


நிச்சயம் இதைவிட நல்ல ஆங்கில, கொரியப் படங்கள் வந்திருக்கக் கூடும்!

உலக சினிமாத் தரம் என்ற வார்த்தைக்குள் இந்தப்படம் அடங்குமா என்பதும் தெரியாது!

ஆனால், எனக்கு வெறும் இருபது கிலோமீட்டர் தொலைவில் இப்படி ஒரு நல்லபடம் எடுக்க முடிந்திருப்பது என்னை ஆச்சர்யப்படுத்துகிறது!

வழக்கமாக மலையாளப்படம் பார்க்கும்போது லொகேசன், சீனரி, இசை என்று ஏதோ ஒரு காட்சியிலாவது கவனம் சிதறும்!
இந்தப்படத்தில் அப்படி எதுவுமே நம்மை தடம் மாற விடவில்லை!

எளிய மனிதர்களுக்கு இடையேயான அன்பு மட்டுமே படம் முழுவதும் வியாபித்திருக்கிறது!

ஹீரோவின் நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டுப் பொடியன்கள், அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று எல்லோருமே இயல்பு மாறாமல் அடிநாதமாக மாறா அன்புடன்!

கடைசியில் அப்பாவைத் தேடி அந்த ஏடிஎம்முக்கு ஹீரோ போவது மட்டுமே மிகச் சற்றே சினிமாத்தனத்துடன்!

ஆனால், என்போன்ற எமோஷனல் இடியட்டுக்கு அதுவுமே உறுத்தவில்லை!

படம் பார்த்த அடுத்த ஒரு மணிநேரத்துக்கு மனம் அன்பில் திளைத்துக் கிடந்தது. உடனே இதை எழுதி எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளச் சொன்னது!

இந்தச் சின்னக் கட்டுரையில் எத்தனைமுறை அன்பு என்ற சொல்லைப் பயன்படுத்த வைத்திருக்கிறது இந்தப்படம்!

என்ன செய்ய,

சீஸன் நேரத்துக் குற்றால சாரல்போல படம் முழுக்க ஈரமாக விரவிக்கிடக்கிறது அன்பு!