"உங்கள் கணவர் இறந்துவிட்டார்!
எட்டு மணிக்கு ஜி ஹெச் மார்ச்சுவரிக்கு வந்துடுங்க! அதிகபட்சம் எட்டு பேருக்குத்தான் அனுமதி! உங்க வழக்கம் எரிப்பதா புதைப்பதா என்பதைப் பொறுத்து பாடியை நேராக சுடுகாட்டுக்கோ, இடுகாட்டுக்கோ எடுத்துப்போகலாம் - போலீஸ் பாதுகாப்போடு!
வீட்டுக்கெல்லாம் எடுத்துப்போக அனுமதி இல்லை!"
கதறலோடு எழுந்து பதட்டமாக ஃபோனை வெறித்தாள் கல்யாணி!
என்ன ஒரு கொடூரமான கனவு!
அது கனவுதான் என்று உறுதிப்படுத்திக்கொள்ளவே கொஞ்ச நேரமானது!
மெதுவாக எழுந்து லைட்டைப் போட்டுப்பார்க்க மணி நள்ளிரவு இரண்டு!
அப்பா, அப்பா என்று அழுது அரற்றி களைத்துப்போய் படுத்திருந்தாள் ராகவி!
ராகவன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போகப்பட்டு இன்றோடு பதினோரு நாள்!
என்ன ஒரு கொடூரமான நாட்கள்!
அந்த சபிக்கப்பட்ட நாளில் ஊரடங்குத் தளர்வு நேரத்தில் காய்கறி வாங்கப் போன ராகவனை கைத்தாங்கலாக போலீஸ் ஜீப்பில் வீட்டுக்கு கூட்டிவந்தார்கள்!
கல்யாணியின் பதட்டமான கேள்விகளுக்கு ஒரே பதில்!
"இவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம்!"
"ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கிறது! அதற்குள் இவருக்கு தேவையான அடிப்படை உடைகளை ஒரு பையில் போட்டு எடுத்துவாருங்கள்!"
ராகவனை வீட்டுக்குள் அனுமதிக்கவோ கதறிய ராகவியை, கல்யாணியை அவனை நெருங்கவோ விடவில்லை!
ஆம்புலன்ஸ் வந்ததும் அத்தனை சடுதியில் எல்லாம் நடந்து முடிந்தது!
வீட்டு வாசலில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது!
கல்யாணிக்கும் ராகவிக்கும் அடிப்படை சோதனைகள் செய்தபின் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள்!
அவர்களை தினமும் ஒரு மருத்துவக்குழு வந்து பரிசீலிக்கும் என்று சொல்லி, இருவர் கையிலும் ரப்பர் ஸ்டாம்ப் அடிக்கப்பட்டது - தனிமைப் படுத்தப்பட்டதன் அடையாளமாக!
“நீங்கள் வீட்டைவிட்டு வெளியே வர அனுமதி இல்லை!
உங்கள் சார்பாக யாரும் இவரை வந்து பார்க்கவும் அனுமதி இல்லை!
ஏதாவது நடந்தால் நாங்களே தகவல் சொல்லுவோம்! நீங்கள் அனாவசியமாக எங்களுக்கு ஃபோன் செய்து தொந்தரவு செய்யக்கூடாது!”
இயந்திர கதியில் சொல்லிவிட்டு ராகவனை ஏற்றிக்கொண்டு பறந்தது ஆம்புலன்ஸ்!
‘ஏதாவது நடந்தால் ? அப்படியென்றால்?’
புரிந்த அர்த்தத்தில் பதறிப்போய் நின்றாள் கல்யாணி!
அக்கம் பக்கம் யாவும் அச்சத்தோடு விலகி நின்று வேடிக்கை பார்த்தன!
ஆம்புலன்ஸ் நகர்ந்ததும் அத்தனை கதவுகளும் அறைந்து சாற்றப்பட்டன!
என்ன நடந்தது என்பதே முழுதாக உறைக்காமல் மலைத்து நின்றாள் கல்யாணி!
இதோ, பதினோரு நாட்கள் நத்தையைவிட மெதுவாக நகர்ந்து போய்விட்டன!
இன்னும் அதே மலைப்போடுதான் வளைய வந்துகொண்டிருக்கிறாள் கல்யாணி!
வாட்ஸ்ஆப்பில் வருத்தம் தெரிவித்ததே அதிகம் என்று விலகிக்கொண்டன சொந்தமும் நட்பும்!
எட்டு வருட தாம்பத்யத்தில் ராகவியைத் தவிர எதையுமே சம்பாதிக்கவில்லை என்பது தாமதமாகப் புரிந்தது கல்யாணிக்கு!
ராகவனை கூட்டிப்போன மறுநாள் பரிசோதிக்கவந்த நர்ஸ் கடுமையான குரலில் சொன்னார்!
"இப்படி அழுதுகொண்டே சாப்பிடாமல் கிடந்தால், வீக்னெஸ் காரணமாக உங்களையும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போக நேரும்!
யாரிடமும் விடமுடியாத நிலையில் உங்கள் குழந்தையை என்ன செய்வதாக உத்தேசம்?"
உண்மை முகத்தில் அறைந்தது!
அப்பா, அப்பா என்று ஓயாமல் அரற்றிக்கொண்டிருந்த ராகவியைத் தேற்றுவதுதான் பெரும்பாடாக இருக்கிறது!
நேற்றிரவு கூட பதினொருமணி வரை தேம்பிவிட்டே களைத்து தூங்கிப்போனாள்!
இதோ, இப்போது இந்தக் கொடூரமான கனவு வேறு!
என்னவோ அதுதான் நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு வேறு ஓயாமல் சொல்லிகொண்டே இருக்கிறது!
கன்னத்தில் வழிந்த கண்ணைக்கூடத் துடைக்கத் தோன்றாது படுக்கையில் விழுந்தாள் கல்யாணி!
அசையக்கூட சக்தியில்லாமல் கிடந்தான் ராகவன்!
இன்றோடு எத்தனை நாளாகிவிட்டது?
நாட்களா, மாதங்களா, வருடங்களா?
எப்படித் தெரியும்?
இரவா, பகலா என்று அறியமுடியாத ஒரே மாதிரியான அரையிருட்டு!
உறுமும் ஏசியின் சத்தத்தை மழுப்பும் உயிர்காக்கும் இயந்திரங்களின் ரீங்காரம்!
வெவ்வேறு சுருதியில் பீப் பீப் என்று ஒலியெழுப்பும் மானிட்டர்கள்!
அசைய நினைத்தாலும் முடியாதபடி இரண்டு கைகளிலும் ஒயர்கள்! அதில் சொட்டுச் சொட்டாய் இறங்கும் திரவங்கள்!
அடிக்கடி வந்து ஊசி போடவோ, சோதனைக்கு ரத்தம் எடுக்கவோ செய்யும் நர்ஸ்கள், டாக்டர்கள்!
எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்பது இன்னும் தெளிவாக நியாபகத்தில் இருந்தது!
எப்போது என்னைத் தொற்றியிருக்கும் இந்தப் பாழாய்ப்போன உயிர்கொல்லி வைரஸ்?
ஒருவேளை அன்றைக்கு காய்க்கடையில் அடையாளம் கண்டு பேசிய சாஸ்திரிகள் இந்த மாதம் வரப்போகும் அம்மாவின் திதி பற்றி விசாரித்துவிட்டு திரும்பும்போது அடக்கமுடியாமல் தும்மியபோதா?
அல்லது இன்னொருநாள் வழியில் நிறுத்தி விசாரித்த அலுவலக நண்பனின் கைகுலுக்கலிலா?
இரண்டு நாட்கள் கொஞ்சமாக இருமல் இருந்தது!
மூச்சுவிடுவது மட்டும் கொஞ்சம் சிரமமாக இருந்தது. சொன்னால் பயந்துவிடுவார்கள் என்று சொல்லாமல் மறைத்தது தவறோ?
ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற சாக்கை வைத்து லேப் டாப்போடு தன் அறையிலேயே கிடந்தான்.
கடைசி இரண்டு இரவுகளும் படுத்தால் தகர சிலேட்டில் ஆணி வைத்துக் கீறியதுபோல சத்தம்!
யாரோ மார்மேல் ஏறி அமுக்குவதுபோல மூச்சு விட சிரமம் வேறு! எழுந்து நின்றால் லேசான தலைசுற்றல் வேறு!
எட்டு வருடமாயிற்று கல்யாணியை அடம் பிடித்துக் கல்யாணம் செய்து!
ஊரை, உறவை எதிர்த்துச் செய்த கல்யாணம்!
இந்த எட்டு வருடத்தில் பார்க்க நேர்ந்தபோது ஒரு ஹலோ சொல்வதோடு ஒதுங்கும் உறவுகள்!
புதிதாக வந்த ஊரில் பெரிதாக ஒட்டாத சிநேகம்!
அலுவலகம் தவிர பெரிதாக போக்கிடம் ஏதுமில்லாத வாழ்க்கை!
ஒரே ஆறுதல் நான்கு வயது ராகவி!
பேருக்கு பத்துநாள் வந்து கூட இருந்துவிட்டு, பிரசவம் முடிந்ததும் ஊருக்கு கிளம்பிப்போன அம்மாவுக்கு போன வருடம்தான் போய் கொள்ளி வைத்து வந்திருந்தான்!
இதோ, திதி கொடுக்க இன்னும் பதினைந்து நாட்கள்!
கூடப்பிறந்தவர்களோடும் ஒட்டமுடியாத இடைவெளி!
இந்த எட்டு வருடத்தில் கைக்கும் வாய்க்குமான சம்பாத்தியம்.
மாத வருமானத்தில் கடனுக்குக் கையேந்தாமல் ஓரளவு கௌரவமான வாழ்க்கை!
சேமிப்பென்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாகவே நகர்ந்தன நாட்கள் அந்த நாள் வரைக்கும்!
அன்றைக்கு வழக்கம்போல் காய்கறி வாங்க வந்தவன், ஏற்கனவே தீர்மானித்திருந்தான் - மதியம் ஆஸ்பத்திரிக்குப் போய் டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிடுவதென்று!
ஆனால், எல்லாமே சட்டென்று மாறிப்போனது!
பழமுதிர் நிலைய வாசலில் பாம்பாய் நீண்ட வரிசை மெதுவாக நகர, வாய் ஓயாமல் இருமி, அப்படியே முன்னால் நின்றவர் மேல் சரிந்து விழுந்தான் ராகவன்!
பதறி விலகியது கூட்டம்!
சுதாரித்து எழுவதற்குள் ஓரம் கட்டப்பட்டான். இரண்டு நிமிடத்தில் போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டு வீடு!
அதற்குப்பின் இதோ, எத்தனை யுகமாகவோ இந்தப் படுக்கை!
கண்ணுக்கு எட்டியவரை படுக்கைகள்!
அதில் அசையாது கிடைக்கும் உருவங்கள்!
ஆக்டொபஸ் போல நீண்டு எங்கெங்கோ இணைக்கப்பட்டிருக்கும் குழாய்கள்!
தூக்கமோ மயக்கமோ வரும்போது இரவு, விழித்துக்கொண்டு கண்ணைத் திறக்கமுடியாமல் படுத்துக் கிடக்கும்போது பகல்! அவ்வளவுதான் இங்கு நாட்களின் கணக்கு!
முகத்தில் சிரிப்போ சலனமோ இல்லாமல் வந்துபோகும் டாக்டர்கள், நர்ஸ்கள்.
எப்போதாவது அவர்கள் பரபரப்பாகும்போது, முழுதாய்ப் போர்த்தப்பட்டு இங்கிருந்து ஏதாவது வெளியே போகும், அல்லது ஆக்சிஜன் பொருத்தப்பட்டு இன்னொன்று வந்து ஒரு படுக்கையில் விழும்!
இப்போது அப்படியான பரபரப்புக்களுக்கு இடைவெளி குறைந்துபோயிருக்கிறது!
வார்டிலிருந்து போக்கும், வரத்தும் அதிகமாகியிருக்கிறது உணர்வற்ற நிலையிலும் நன்கு புரிகிறது!
வந்த நாளில், தொண்டைக்குள் எதையோ விட்டுப் பரிசோதித்ததில் வலி உயிர் போனது!
அப்படியே மடங்கி விழுந்தவன் எப்போது கண்விழித்தான் என்று தெரியவில்லை!
உணர்வு வந்தபோது மூக்கையும் வாயையும் அடைத்து குழாய்கள் மட்டுமே!
இமைகளின் பாரத்தால் கண்ணைத் திறக்க முடியவில்லை!
நேற்று, அல்லது இன்றைக்கா? வந்து பரிசோதித்த டாக்டர் உதட்டைப் பிதுக்கி நகர்ந்தபோது அடிவயிற்றில் கவலைப் பந்து!
கல்யாணியும் ராகவியும் எப்படி இருக்கிறார்களோ, அவனது இந்த நிலை அவர்களுக்குத் தெரியுமா?
தனியாய் எப்படித் தவித்துக்கொண்டிருக்கிறார்களோ!
கடவுளே, நான் இல்லாவிட்டால் இரண்டுபேரும் அனாதையாகிப் போவார்களே, யார் கவனிப்பும் இல்லாமல் எப்படி ராகவியை வளர்க்கப் போகிறாள் கல்யாணி?
அனாதையாக சிக்னலில் பிச்சையெடுக்கும் இரண்டு உருவங்கள் மனதில் தோன்ற கட்டுப்படுத்த முடியாமல் கண்ணோரம் வழிந்தது நீர்!
ஒருவேளை, ஒருவேளை அவர்களும் இப்படி பாதிக்கப்பட்டு இங்கேயே எங்காவது படுத்திருக்கிறார்களோ?
அந்த நினைவு வந்ததும் தூக்கிப்போட ஆரம்பித்தது உடம்பு!
பதறிப்போய் ஓடிவந்த நர்ஸ் எதையோ எடுத்து மூக்கில் நுழைக்க, சட்டென்று தொண்டைக்குள் கசப்பாய் இறங்கியது அந்தத் திரவம்!
பளிச்சென்று கண் குருடாவதுபோல் ஒரு மின்னல் வெளிச்சம்!
அதற்குப்பின் வெறும் இருட்டும் அமைதியும்!
மெதுவாக தனக்குள் நழுவ ஆரம்பித்தான் ராகவன்!
எத்தனை நாளாயிற்று என்றே தெரியாமல் ஏதோ சத்தம் கேட்டுக் கண் விழித்தபோது, உடம்பிலிருந்த எல்லா இணைப்புகளும் அகற்றப்பட்டு, அந்த அரையிருள் அறையிலிருந்து வேறெங்கோ கிடந்ததை உணர்ந்தான்!
கண்ணைக் கூசியது வெளிச்சம்!
கடவுளே, நான் செத்துப் போய்விட்டேனா? உடம்பில் வலி, உணர்ச்சி எதுவுமே தெரியவில்லை. போதாக்குறைக்கு இந்த வெளிச்சம் வேறு!
இதென்ன சொர்க்கமா, நரகமா?
மிஸ்டர் ராகவன், ராகவன் என்று அதட்டலாக ஒரு குரல்!
சிரமத்தோடு கண்ணைத் திறந்து பார்க்க, சின்னப் புன்னகையோடு அந்த டாக்டர் முகம்!
'யூ ஆர் லக்கி!
]பிழைத்துவிட்டீர்கள்!
இனி உங்களுக்கு ஏதும் ட்ரீட்மெண்ட் தேவையில்லை!
இன்னும் ஒரு மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டி எல்லாம் முடித்து ஆம்புலன்ஸில் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்!
இன்னுமொரு பதினைந்து நாட்கள் ஜாக்கிரதையாக இருங்கள்!"
உங்கள் மனைவிக்கு ஃபோன் செய்து தருகிறேன், நீங்களே பேசுங்கள்!
சொல்லியபடியே கால்மாட்டில் தொங்கிய சீட்டைப்பார்த்து டயல் செய்ய ஆரம்பித்தார் டாக்டர்!
மறுமுனையில் ஹல்லோ என்ற தயக்கமான சத்தம் கேட்டதும் ஒரு வார்த்தை பேச வராமல்
வெடித்து அழ ஆரம்பித்தார்கள் கணவனும் மனைவியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக