பலாப்பழ இணை!
இப்படித்தான் சொல்லவேண்டும் இவர்களைப் பற்றி!
உள்ளே அத்தனை இனிப்பை மறைத்துக்கொண்டு முட்போர்வை போர்த்தியே வாழ்ந்த தம்பதிகள்!
அன்பை, அக்கறையைக்கூட அதட்டலாகவே சொல்லத் தெரிந்த இருவர்!
ஒரு உரையாடல் சாம்பிளுக்கு!
"சாப்பிட்டுட்டு போடா மாப்ள"
"இல்ல அத்தை, லேட் ஆயிடுச்சு"
"சரி. கிளம்பு. சாப்பிட நேரமில்லாத பெரிய மனுஷன், இனிமேல் இங்க வராதே!"
"சரி, சோறு போடுங்க!"
"கைகால் கழுவிக்கிட்டு வாடா! நாய் மாதிரி ஊரெல்லாம் சுத்திட்டு அப்படியே சாப்பிட உட்கார்றது என்ன பழக்கம்?"
அப்படி அந்த சாப்பாட்டை சாப்பிடத்தான் வேண்டுமா என்று எரிச்சல்தான் வரும்!
ஆனால், சாப்பிட உட்கார்ந்த பிறகுதான் தெரியும்,
என்றைக்கோ பேச்சு வாக்கில் எண்ணெய்க் கத்திரிக்காய் பிடிக்கும் என்று சொன்னதை நியாபகம் வைத்துக்கொண்டு அத்தனை உடல் உபாதைகளிலும் சிட்லப்பாக்கம் சந்தையில் போய் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து
நாளைக்கு அவன் வருவான் செஞ்சுகொடுன்னு மாமா சொல்லிட்டுப் போனதும்,
நான் வருவது தெரிந்து அத்தை செய்து வைத்திருந்ததும்!
இதை,
"உனக்குப் பிடித்த கத்திரிக்காய் செய்து வைத்திருக்கிறேன், சாப்பிட்டுட்டு போடா"ன்னு சீரியல் அத்தை மாதிரி சொல்லத் தெரியாது!
அதுதான் தங்கராசு அத்தையும் முத்துசாமி மாமாவும்!
செய்துவைத்திருந்த அத்தனையும் முழுமையாக என் தட்டில் போட்டு முடித்தால்தான் திருப்தி!
வளர்ற பையன், சாப்பிடுற லட்சணத்தைப்பாரு! சோத்தை கொறிக்காதே, அள்ளி சாப்பிடு! அதட்டலோடுதான் தட்டில் விழும்!
ஆனால், அமிர்தமாக இருக்கும் சுவை! ஏனென்றால் அதன் முக்கிய சேர்மானம் அன்பு!
சாப்பிட்டு முடிக்கும்போதே தெரியும், இப்போதைக்கு கிளம்ப முடியாது என்று!
“இந்த மெட்றாஸ் வெய்யில்ல ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போய் என்ன கிழிக்கப் போறே? நாலு மணிக்கு இங்கயே பஸ் வரும் அதுல போ!”
அதற்குப் பிறகு சகஜமாக கேலியும் கிண்டலுமாக அரட்டை போகும்!
எனக்கு வாய்த்த நான்கு அத்தைக்கும் எனக்கும் மற்றவர்களைவிட கொஞ்சம் நெருக்கம் ஜாஸ்தி!
அவர்களுக்கும், ஏதோ ஒரு வகையில் அவர்களின் பிரியத்துக்கு சொந்தமான சகோதரனை நான் நியாபகப் படுத்துவதால் என் மீது கொஞ்சம் ஸ்பெஷல் வாஞ்சை!
அதனால், வரைமுறை இல்லாது கேலிப்பேச்சு!
சந்தோஷமாகப் பொழுது போகும்!
சரி, பஸ் வந்துடும், நீ கிளம்பு,
சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் நுழையும்போதே அடுத்த தாக்குதலுக்கு ரெடியாகிவிடும் வயிறு!
ஒரு தட்டு நிறைய ஏதாவது சிறுதீனி! ஒரு பெரிய டம்ளரில் டீ!
கத்தரிக்காயையே ஜீரணம் செய்ய முடியாமல் வயிறு தவித்தாலும், மறுத்தால் விழும் வசவுக்கு பயந்து சாப்பிட்டுத்தான் கிளம்பவேண்டும்!
"இப்போவே பெரிய ஆபீஸர் மாதிரி அலட்டிக்காதே, மரியாதையாக வாரம் ஒருதடவையாச்சும் வந்துட்டுப்போ!"
பஸ் ஏறி திரும்பிப் பார்த்தால், காம்பவுண்ட் சுவற்றோரம் கண் மறையும்வரை அத்தை தலை தெரியும்!
இரண்டு முறைக்கு ஒருதடவை எத்தனை மறுத்தாலும் சட்டைப் பாக்கெட்டில் திணிக்கப்படும் சிறு தொகை!
இதற்குக் காரணம் மாமா!
ஒவ்வொருதடவையும் அங்கே போகும்போது ஏதாவது வாங்கிக்கொண்டுதான் போகவேண்டும் என்பது அப்பா சொல்லிக் கொடுத்த பழக்கம்!
ஒவ்வொருதடவையும்,
"படிக்கற பையனுக்கு என்னடா பழக்கம் இது?
அப்படியே உங்க அப்பன் புத்தி!"
எங்க அண்ணன் மாதிரியெல்லாம் எவனும் வரமுடியாது - கொஞ்சம் பெருமிதமாகவே வந்து விழும் அத்தை பதில்!
என்னடா, மாப்ள, படிப்பெல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கு? இப்படி ஆரம்பிக்கும் பேச்சு, எகனாமிக்ஸ், அக்கௌண்டன்ஸி இதற்கெல்லாம் எது நல்ல புத்தகம் என்று பெரிய லிஸ்டில் போய் முடியும்!
மறுமுறை பார்க்கும்போது நியாபகமாய் கேட்பார்!
என்ன, அதெல்லாம் படிச்சியா?
நான் சி ஏ சேர, அவர் ஒரு முக்கிய காரணம்!
எம்பிஏ வா, சி ஏவா என்று குழப்பத்தில் இருந்தபோது அவர்தான் சொன்னார்!
"எனக்கு சி ஏ பண்ணனும்னு ரொம்ப ஆசைடா மாப்ள! ஆனா ஒரு ஆடிட்டர்கிட்ட போய் கேட்டபோது அதெல்லாம் எங்க பசங்களுக்குத்தான் வரும், உனக்கு அது ஒத்துவராதுன்னு சொல்லிட்டாருடா! நீ படிடா! நம்ம பையன் ஒருத்தன் ஆடிட்டர் ஆகணும்!"
ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, முதல் தலைமுறை பட்டதாரி ஆனவர்கள் அவர், என் பெரியப்பா, அப்பா, சித்தப்பா எல்லோருமே!
சொல்லிவைத்ததுபோல் எல்லோருமே போஸ்ட் கிராஜுவேட்!
பெரியப்பா மேல் மரியாதையும், சித்தப்பாக்கள் மேல் மாறாத அன்பும்!
ஆனால், சம வயதுத் தோழன் என்பதாலோ என்னவோ, அப்பாவோடு அவருக்கு கொஞ்சம் அதிக நெருக்கம்!
புள்ளியியல் துறையில் பெரிய பதவி!
கொஞ்சம்கூட அந்த தோரணை இல்லாத மனிதர்!
ஆனால் என்ன, எப்போது பேசினாலும் படிப்பு, புத்தகம் இதுதான்!
அவுட் ஆஃப் த சிலபஸ் படிக்கச் சொல்லிக்கொடுத்தவரும் அவர்தான்!
இயல்பிலேயே வாசிக்கும் ஆர்வம் இருந்ததால், என் வயதை ஒத்த மற்ற பையன்களைவிட, அவரோடு கொஞ்சம் நெருக்கம் அதிகம்!
நிறைய பேசுவார்!
தோட்டக்கலை பற்றி,
படிப்பு பற்றி,
எதிர்காலம் பற்றி!
(அதையெல்லாம் நான் பின்பற்றவில்லை என்பது வேறுவிஷயம்! வெள்ளத்தனைய மலர் நீட்டம்!)
ஒவ்வொரு வார்த்தையிலும் அக்கறை தெரியும்!
மாமாவோடு உலக அரசியல், பொது அறிவு படிப்பு - அத்தையோடு ஊர் வம்பு!
பேசிக்கொண்டே பொழுது போவது தெரியாமல் உட்கார்ந்திருப்போம்!
அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது ஒருநாள் கேட்டார்!
" மாப்ள, ஆபீஸுக்கு, இன்ஸ்டிட்யூட்டிக்கு எப்படிப் போற?"
காலையில் பஸ்ஸிலும், மாலை வீடு திரும்ப நடந்தும் என்று சொன்னபோது அப்படி ஒரு கோபம் வந்துவிட்டது அவருக்கு!
முட்டாள்பயலே, பனைமரம் மாதிரி நெடுநெடுன்னு வளர்ந்திருக்க, ஒடம்புல கிள்ள சதையிருக்கா பாரு?
ஏன், உங்கப்பன் பணம் அனுப்பறதில்லையா?
அவருக்கெங்கே ஊருக்கு செய்யவே நேரம் சரியாக இருக்கும்! பையனுக்கு அனுப்பத் தெரியாதா?
இல்லை மாமா, எனக்கு நடக்கப் பிடிக்கும். அதனால்தான் என்று எத்தனைமுறை சொல்லியும் சமாதானமாகவில்லை!
எல்லோருக்கும் பார்த்துப்பார்த்து செய்யற எங்க அண்ணனுக்கு பெத்த பையனுக்கு செய்யத் தெரியாதா? அத்தை குரலுக்கும் சமாதானமாகவில்லை அவர்!
அதனால்தான், அடிக்கடி என் பாக்கெட்டில் திணிக்கப்படும் காசு!
வழக்கம்போல் அத்தனைக்கும் புத்தகம்!
குழந்தை இல்லாத தம்பதிகள் மற்ற குழந்தைகள் மேல் காட்டும் நாடகத்தனமான பாசம் இருவரிடமுமே இருந்ததில்லை!
அதுதான் அவர்களின் பலமும் பலவீனமும்!
அதட்டலான அன்பைப் புரிந்துகொள்ள எல்லோராலும் முடிவதில்லை!
மேலும், மாமாவின் படிப்பு, ஒழுக்க, வாழ்க்கை நெறி என்ற கொஞ்சம் போதனை கலந்த பேச்சும், அத்தையின் சிடுமூஞ்சி கரிசனமும் எல்லோருக்குமே புரியும் என்று எதிர்பாப்பதும் பிழைதானே!
மாப்ள, கொஞ்சம் இந்த நகத்தை வெட்டிவிடு, என்று உரிமையோடு கேட்கும் மாமாவின் வாஞ்சை இன்னும் என் காதுகளில்!
சினிமாவை மிஞ்சும்வகையில் நாளொரு திருப்பமாய் என் திருமணம் நடந்து முடிந்தபோது எங்களை வீட்டுக்கு அழைத்து அத்தையும் என் மனைவியும் சமையல்கட்டில் இருக்கும்போது தனியே அவர் என்னோடு பேசியவை அத்தனையும் உண்மையாக மாறியபோதுதான் மனிதர்களைப் பற்றிய அவரது புரிதலை அறிய முடிந்தது!
என்ன, அது புரியும்போது அவர் இல்லை!
கல்யாண தேதி முடிவானபோதே, ஓசூருக்கு மனைவியை அழைத்துப்போகாதே, மெட்றாஸிலேயே ஒரு வேலை தேடிக்கொள் என்று சொன்னதோடு, சில இடங்களில் எனக்காக சிபாரிசும் செய்தார்!
அப்பாவின் கடலளவு தொடர்புகள் அதை சுலபமாக சாதித்தபோதும், அந்த அறிவுரையை முதலில் சொன்னது அவர்தான்!
எல்லா விஷயங்களிலும் ஒரு தீர்க்கமான பார்வை!
பெரியவர் சின்னவர் என்ற வேறுபாடின்றி யார் சொல்வதையும் சரியாக இருக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை!
ஆனால் அவரிடமும் ஒரு குறை!
முறைசாரா மருத்துவத்தில் அவருக்கு இருந்த ஈர்ப்பு, ருமாட்டிசத்தை வெல்ல முடியாமல் செய்ய, கூடவே வந்த உப உபத்திரங்கள் அந்த அற்புத மனிதரின் வாழும் காலத்தை வலி மிக்கதாக்கியதைவிட, அவரது ஆயுளையும் வெகுவாகக் குறைத்ததுதான் கொடுமை!
நல்லன நீண்டநாள் வாழும் வரமற்றது இப்புவி!
பிறக்கும்போதே நான் ஒரு வரம் வாங்கி வந்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்!
உன்னதமானோரோடு எனக்கிருக்கும் உறவு ஆயுளுக்கும் மறக்கமுடியாத அளவுக்கு ஏதோ ஒரு பிணிப்பை ஏற்படுத்திவிடுகிறான் இறைவன் - வாழ்விலோ இறப்பிலோ!
என் திருமண முதலாண்டு நிறைவு நாள்!
காலையிலேயே வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்ட நண்பர்கள் கூட்டம்!
கீழ்வீட்டு தொலைபேசி சொன்னது அந்தத் துயர சேதியை!
நோயின் கடுமை தாங்காது அந்தக் காலையில் மீளா உறக்கத்துக்குப் போனார் மாமா -
என் ஆயுளுள்ளவரை அவர் இறந்த தினத்தை மறக்கவிடாது செய்து!
அன்றைக்கு அவர் உடல் தாங்கிச் சென்னை முதல் பாண்டமங்கலம் விரைந்ததுதான் என் வாழ்வில் நான் ரசிக்கமுடியாத பயணம்!
அதன்பிறகு நீண்டநாள் இருக்கவில்லை அத்தை!
மூன்று ஆண்டுகள்!
அவர் வாழ்விலும் எனக்கொரு கொடூரமான பாத்திரம்!
இனி பிழைக்கமாட்டார் என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்ட நிலையில் அவரிடம் அந்தச் செய்தியை சொல்ல யாருக்குமே துணிவில்லை!
கண்ணீர் திரையிட சித்தப்பா இருவரும் மருகித் தயங்கியபோது, நானாக முன்வந்தேன் அதை அவரிடம் சொல்ல - அவருடனான என் நல்லுறவு தந்த துணிவில்!
அன்றைய தினம் அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இன்றும் வரிக்குவரி நினைவிருக்கிறது - அந்த மருத்துவமனை காட்சி மனக்கண்ணில் விரிய!
"பழனிசாமி, இவன் நான் செத்துப்போய்டுவேன்னு சொல்றான்டா" என்று தன் தம்பியின் கையைப் பிடித்துக்கொண்டு கலங்கினார்!
அதற்குப்பின் நீண்ட நாள் வாழ்வில்லை அவர்!
அத்தையை வேலூர் ஆற்றங்கரையில் அக்னிக்குக் கொடுத்துவிட்டு வந்த மறுநாள் அதிகாலை!
வழக்கமான தனிமை நடை பயிற்சியில் நானும் என் வாழ்நாள் ஆப்தன் தமிழ்ச் செல்வனும்!
காலை பதினோரு மணிக்கு, ஆற்றங்கரைக்குப்போய் எரித்த இடத்தில் குடம் குடமாய் தண்ணீர் விட்டு, எஞ்சிய சில எலும்புகளை நீர்க்கடனுக்காக சேமிக்கத் திட்டம்!
ஏதோ உறுத்தலில், இருவரும் இடுகாட்டுக்குப் போய் பார்த்துவிடுவது என்று தோன்றியது!
போனது எவ்வளவு நல்லதாகப் போயிற்று!
நெஞ்சுக்கூடு மட்டும் அப்படியே வேகாமல் சாம்பல் மேட்டில்!
அவசர அவசரமாக அக்ரஹாரத்துப் பெட்டிக்கடையில் கெரசின் வாங்கி முற்றாக எரித்துவிட்டு, எரிந்ததை உறுதி செய்துகொண்டே வீடு திரும்பினோம்!
எந்த ஆசை நிறைவேறாது போனாரோ என்ற தீராத உறுத்தல் அவரது சகோதர சகோதரிகளுக்கு ஏற்படாமல் காக்க,
இயற்கையோ, இறையோ அல்லது ஏழாம் அறிவின் உந்துதலோ, அன்று எங்களை ஆற்றங்கரைக்குத் துரத்தியிருக்கிறது!
எங்கள் அன்பான அத்தைக்கு எங்களாலான இறுதி அஞ்சலி!
ஏதோ ஒரு வகையில் அவரை நாங்கள் மறந்துவிடவே கூடாது என்பதற்காகவே நிகழ்ந்ததுபோல அது!
No comments:
Post a comment