சனி, 25 ஏப்ரல், 2020

ரமணிசந்திரனும் ரயில் ஸ்நேகமும்இரண்டு நாட்களாக ஏனோ இணையம் ரமணி சந்திரன் பற்றி அதிகம் பேசிக்கொண்டிருந்தது!

எனக்கு அந்தவகை ஒரே டெம்ப்ளேட் நாவல்கள் கொஞ்சம் அலர்ஜி!

ரொம்பவுமே வலிந்து எழுதப்பட்ட ஃபீல்குட் கதைகள்
மோதல், காதல் &சுபம்!

இந்த பதிவு ரமணி சந்திரன் பற்றி அல்ல!

கொஞ்சநாள் எதுவும் எழுதக்கூடாது என்ற விரதத்தை முறிக்கவென்றே ஊமைக்கு மூக்கைச் சொரிந்து விட்டாற்போல்
இன்றைக்கு ரயில் ஸ்நேகம் பற்றி ஒரு சின்ன்ன உரையாடல்!பொதுவாகவே இந்த தொலைகாட்சி நாடகங்கள் எல்லாம் சுத்த நான்சென்ஸ் என்று இடதுகையால் ஒதுக்கிப் போவது வழக்கம்!

தூர்தர்ஷனில் பாலச்சந்தர் இயக்கத்தில் இந்த நாடகம் தொடராக வந்ததாக  நியாபகம்!

ஒருநாள் எதேச்சையாக எங்கோ ஜேசுதாஸ் பாடிய இந்த வீணைக்குத் தெரியாது என்ற பாடல் கேட்க நேர்ந்தது!

ஆளைக் கட்டிப்போடும் குரலில் கதை மொத்தமும் சொல்லும் வரிகள்!

அட .. என்று ஆச்சர்யமாக இது எந்தப்படம் என்று கேட்க, அது உங்களுக்குப் பிடிக்காது - சீரியல் பாடல் என்று பதில் வந்தது!

நம்பமுடியாமல் இன்னொருமுறை கேட்க, விக்கிரமாதித்தன் தோளேறி வேதாளம்போல் ஏறி உட்கார்ந்துகொண்டது இந்தப்பாடல்!

பொதுவாக ஒருபாடல் பிடித்துப்போனால், அலுக்கும்வரை திரும்பத் திரும்பக் கேட்கும் கிறுக்கு எனக்கு!

அப்போது இதே பாடல் சித்ரா பாடியதும் கேட்க நேர்ந்தது!

அப்புறம் தேடித்தேடி விசாரித்ததில், இசை V S நரசிம்மன் என்ற அடுத்த ஆச்சர்யம்


மலையாளத்தில் கொடிநாட்டிய அற்புதமான வயலினிஸ்ட்
ஏனோ, தமிழ்ப்படங்களில் தன்னை ஒரு நல்ல இசையமைப்பாளராக நிலை நிறுத்திக்கொள்ளவே முடியாமல் போனவர்! 

https://youtu.be/rypwo6H9mr4 - சித்ரா
https://youtu.be/cnaH3MM8riQ - ஜேசுதாஸ்

அடுத்த தகவல் என் அபிமான எழுத்தாளர்களில் முன்னணி வரிசையில் இருக்கும் வாஸந்தியின் மூலக்கதை என்று!

இது போதாதா என்ன?

அண்ணா சாலை ராஜ் வீடியோ விஷனில் சொல்லிவைத்து வாங்கிய வீடியோ கேஸட் தேயும்வரை போட்டுப் பார்த்த - என் நாடகம் பார்ப்பதில்லை என்ற சபதம் முறித்த, அநேகமாக நான் பார்த்த ஒரே டிவி நாடகம்!

பாலச்சந்தரின் அற்புதமான ட்ரீட்மெண்ட் - நிழல்கள் ரவி, மற்றும் அந்தப் பெயர் நியாபகம் இல்லாத நாயகியின் வெகு இயல்பான நடிப்பு என்று, வழக்கமான பாலச்சந்தர் க்ளிஷேக்களைத் தாண்டி ரசிக்க வைத்த நாடகம்!அதற்கு முக்கியக் காரணம் அந்த இரண்டு பாடல்கள் மற்றும் இசை!

மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே
தரையில் வழுக்கி விழுந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது

சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லி தெரிந்த முறை தானே
சொர்க்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இருக்கிறது
உதிரப் போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திடத்தான் துடிக்கிறது

வார்த்தைகளும் வரிகளும் இசையோடு அவ்வளவு இசைவாகப் பொருந்திப்போக எப்போது கேட்டாலும் மனதுக்குள் ஏறி உட்கார்ந்துகொள்ளும் பாடல்!

சஹானா ராகத்தில் அமைந்த பாடல் என்பதால், அந்தக் குழந்தைக்கு சஹானா என்றே பெயர் வைத்திருப்பார்!

இன்னுமே என் அபிப்ராயம் மாறிவிடவில்லை!
டிவி நாடகங்கள் எல்லாம் இன்றுவரை நான்சென்ஸ்தான்!

அந்த அபிப்பிராயத்தை மாற்ற இத்தனை வருடங்களில் யாரும் கொஞ்சமும் முயற்சிக்கவே இல்லை என்பதை, பாடல்கள் கேட்கையில் இடைவரும் விளம்பரங்கள் நிரூபிக்கின்றன!

ஆனால், இந்த நாடகம் அதில் ஒரு விதிவிலக்கு!

கண்டிப்பாக ரசிக்கத் தகுந்த நான்சென்ஸ்!

ரமணி சந்திரன் அபிமானிகளுக்கு ரொம்பவே பிடிக்கும்!

இந்தப் பாடல்(கள்) என் ஆல் டைம் ஃபேவரிட் என்பதால் 
எனக்கும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக