திங்கள், 27 ஏப்ரல், 2020

டின்னருக்கு என்னங்க செய்யட்டும்?ஏங்க, நைட்டு என்ன சமைக்கட்டும்?

நீ என்ன சமைக்கப்போறே?

உங்களுக்கு என்ன வேணும்?

என்ன இருக்கு? அதை சொல்லு முதல்ல!

எல்லாமே இருக்கு, உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க!

சரி, மட்டன் பிரியாணியும், ஃபிஷ் ஃப்ரையும் செஞ்சுடு!

பரம்பரைக்கே வாய்க்கொழுப்பு! என்ன வேணும்னா எதுக்கு இப்படி குதர்க்கமான பேச்சு?

நீதானடி எல்லாமே இருக்குன்னு சொன்னே?

தப்புதான் சாமி! உங்ககிட்ட கேட்டேன் பாருங்க என் புத்திய...

சொல்லு, சொல்லு ஏதாவது ஹெல்ப் வேணுமா?

இப்படியே பேசிக்கிட்டு இருங்க, அப்புறம் எதை செஞ்சாலும் இதுதானான்னு மூஞ்சியைத் தூக்க வேண்டியது!

பிள்ளைகளை கேளேன், என்கிட்டேயே ஏன் வம்பு வளர்த்திக்கிட்டிருக்கே?

பிள்ளைகளா அதுக, அப்படியே அப்பன் புத்தி - என்னமோ செய், எல்லாமே கேவலமாத்தான் இருக்கப்போகுதுன்னு பதில் சொல்லுதுக!

அவ்வளவு தைரியமா நான் என்னைக்கும்மா பேசியிருக்கேன்? உனக்குப் பிடிச்சது ஏதாவது செய்.

ஹூம்! எனக்குப் பிடிச்சதை செய்ய உங்களை எதற்கு கேட்கணும்?
கேட்டா ஒருதடவையாவது நேரிடையான பதில் வந்திருக்குதா இத்தனை வருஷத்துல!

சரி, சரி. கத்தாதே, பூரி செய்யேன்?

நைட்ல எதுக்கு எண்ணெய் பலகாரம்? அப்புறம் ஜீரணம் ஆகாம மலைப்பாம்பு மாதிரி புரண்டுக்கிட்டே கிடப்பீங்க!

சரி, அப்போ சப்பாத்தி செய்!

தொட்டுக்க?

பிள்ளைகளுக்கு ஏதாவது குருமா செஞ்சுடு, எனக்கு கொஞ்சமா சட்னி!

இருக்கற நாலு பேருக்கு ரெண்டு வகை தேவையாங்க? எந்நேரம் கிச்சன்லேயே வேகறது?

சரி, சரி, எனக்கும் குருமாவே செஞ்சுடு!

என்ன குருமா செய்ய?

உருளைக்கிழங்குதான், வேறென்ன செய்யப்போறே நீ!

ஏன், அன்னைக்கு செஞ்ச செட்டிநாடு குருமாவை ஊத்தி ஊத்தி குடிச்சீங்களே அது என்னது?

அடியே, அது போன ஜென்மத்துல உங்க அப்பா அம்மா வந்தாங்கன்னு செஞ்சதுடி! அதுக்கப்புறம் ஒரு மாமாங்கமே ஆயிடுச்சு!

வம்சத்துக்கே நன்றி கிடையாது. போனவாரம் செஞ்சேனே அது என்ன?

அடிப்பாவி, அன்னைக்கு அவசர அவசரமா கதவை சாத்தலேன்னா வெளிய ஓடியிருக்கும் அப்படி பச்சைத் தண்ணியா இருந்துதே, அதுக்கு குருமான்னா பேரு வெச்சிருக்கே?

தெரியுதில்ல, அப்போ ஒரு நல்லா சமைக்கத் தெரிஞ்ச ஒருத்தியையே கட்டிக்குங்க! எனக்கும் சேர்த்து வடிச்சுக் கொட்டட்டும்!

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு! இன்னொரு முறை அதே தப்பு செய்ய நான் என்ன முட்டாளா!

ஹூம்! என்ன சமைக்கட்டும்ன்னு கேட்டதுக்கு எத்தனை பேச்சு?
எனக்கென்ன நான் போய் டிவி முன்னாடி உட்காந்துக்கறேன்!

மன்னிச்சுக்க தாயே! சாப்பாட்டு நேரத்துல மலையேறித் தொலைக்காதே!
என்னத்தையாவது பண்ணு!

மறந்தே போச்சு காய்கறி ஏதும் இல்லை! என்ன செய்யட்டும்?

அப்போ தக்காளி குருமா வெச்சுடு!

நேத்துத்தானே செஞ்சேன், இன்னைக்கும் அதேவான்னு நீங்க பெத்ததுக மூஞ்சியைத் தூக்கவா?

அப்போ, என்னதான் பண்ண முடியும்ன்னு நீயே சொல்லிடேன் ப்ளீஸ்!

மத்தியானம் செஞ்ச பாவக்காய் குழம்பு குண்டா நெறைய கெடக்குது!
அதென்ன, நல்லதெல்லாம் உங்க தொண்டைல இறங்கவே மாட்டேங்குது?

நீ கொஞ்சமா வெச்சுத் தொலைக்கவேண்டியதுதானே? சாராயம் காச்சற மாதிரி ஒரு பீப்பாய் நிறைய வெச்சா யாரு திங்கறது?

எனக்கென்ன, நாளைக்கு காலைல சட்டியை உருட்டிக்கிட்டு, எவனோ சம்பாதிக்கறான்னுதானே இப்படி வேஸ்ட் பண்றேன்னு கேட்டா கெட்ட கோபம் வரும், சொல்லிட்டேன்!

அதுக்கு? பாவக்காய் கொழம்பு எப்படி சப்பாத்திக்கு வெச்சு சாப்பிடமுடியும்?
நம்ம காம்பினேஷன் மாதிரி கன்றாவியா இருக்கும்டி!

ஏன், நீங்க அந்த பானுப்ரியாவை தேடிப்போய் கட்டியிருக்கலாம்ல, நானாச்சும் நிம்மதியா இருந்திருப்பேன்!

அடியே, இப்போ எதுக்கு இந்தக் கத்து கத்தறே?

ஆமா சாமி, நான் பேசுனாலே உங்களுக்கு கத்தற மாதிரிதான் இருக்கும்! என்ன டிஃபன் வேணும்ன்னு கேட்டதுக்கு எத்தனை பேச்சு!

சரி, மறுபடி ஆரம்பிக்காதே! சப்பாத்தியெல்லாம் வேண்டாம், தோசை வார்த்துடு. அதுக்கு வேணும்னா அந்தக் குழம்பே ஊத்திக்கலாம்!

அப்பாடா, இதை சொல்றதுக்குள்ள எத்தனை பேச்சு?
இப்போவே சொல்லிடறேன், மத்தியானம் பசங்க ரெண்டும் சரியா சாப்பிடல, சாப்பாடு அப்படியே கெடக்குது.
காலைல குப்பைத் தொட்டிய எட்டிப்பாத்துட்டு என்னை கத்தக்கூடாது!

விடு. காலைல பழைய சோறு தின்னுக்கறேன்!

வேண்டாம் சாமி! என் பையனுக்கு பழையசோறா போட்டுக் கொல்றான்னு உங்க அம்மா வந்தப்பவே ஒரே பாட்டு!
நாளைக்கு கரெக்ட்டா அவங்களுக்கு மூக்குல வேர்க்கும்!
மெனக்கெட்டு போன் பண்ணி என்ன சாப்பிட்டேன்னு கேப்பாங்க!
நீங்களும் சத்தியவந்தனாட்டம் பழைய சோறும்பீங்க!

அடியே, இப்போ என்னதான் சொல்லவர்றே?

நீங்க அந்த சாப்பாட்டைப் போட்டு பாவக்காய் கொழம்பு ஊத்தி சாப்பிட்டுடுங்க!
பிள்ளைகளுக்கு வேணும்னா தோசை சுட்டுக் கொடுத்துடறேன்!

இந்தக் கருமத்தை முதல்லயே சொல்லவேண்டியதுதானே, எதுக்கு என்ன டிஃபன் பண்ண அப்படின்னு வக்கணையா ஒரு கேள்வியும் இத்தனை பேச்சும்.

நான் பேசுனா அப்படித்தான் இருக்கும்! இதே உங்க தங்கச்சி பேசுனா அரைமணி நேரம் ஊம் ஊம்ன்னு கேக்கறீங்க?

சரி, மகராசி, நீ பேசு, நான் கேட்கறேன்!

அப்படி சடைஞ்சுக்கிட்டு ஒன்னும் என்கிட்டே பேசவேண்டாம். எல்லாம் என் தலையெழுத்து!

சரிடி. பசிக்குது. போய் அந்தக் கொழம்பை சூடு பண்ணு!

சூடு பண்ணுனா கெட்டியாய்டும், அப்புறம் தோசைக்கு நல்லா இல்லைன்னு அதுக ரெண்டும் ஆடும்!

இப்போ என்ன, ஆறிப்போன குழம்பும், மத்தியான சோறும் அதானே, அதுக்கு எதுக்குடி இத்தனை கேள்வி?

அக்கம்பக்கத்துல அவங்கவங்கள போய் பாருங்க. பொண்டாட்டிகிட்ட எவ்வளவு அணுசரனைய போட்டதை சாப்பிட்டுக்கிட்டு எவ்வளவு பொறுப்பா,  பொறுமையா இருக்காங்கன்னு!

சரி, நான் வேணும்னா அங்க போய் சாப்பிட்டுக்கவா? மீன் வறுக்கற வாசம் மூக்கைத் துளைக்குது!

இப்படியே பக்கத்து வீட்டை மோப்பம் பிடுச்சுக்கிட்டுக் கிடக்கற ஆளுக்கு எதுக்குப் பொண்டாட்டி!

ஏய், எங்கடீ போறே, சோறு?

நீங்களே போட்டு சாப்ட்டுக்குங்க!

படார்ன்னு கதவை சாத்தற சத்தம் உங்களுக்கு கேட்கலைதானே!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக