“தலைவலி மண்டையைப்
பிளக்கிறது! எனக்கு ஒரு டீ போட்டுக்கொடேன்!” என்று ரம்பாவுக்கு நூல் விட்டுக்கொண்டிருந்தபோதுதான் கேசவனுக்கு அந்த அழைப்பு வந்தது!
வேறு யார்? சிஈஓ ருத்ரன்தான்!
“இந்தக் கிழத்துக்கு வேற வேலையே இல்லை!”
முனகிக்கொண்டே செய்தியைப் படிக்க, மதியம் 12 மணிக்கு ஒரு லன்ச் ஆன் மீட்டிங்!
ப்ராடெக்ட் டிவிஷன் சீஃப் சதுர்முகனும், மெய்ன்டனன்ஸ் ஹெட் கேசவனும் மட்டும் கலந்துகொள்ளும் ஹை லெவல் கமிட்டி மீட்டிங்!
இன்னைக்குத்தான் புதுசா வேலைக்கு சேர்ந்த பெண்ணை லஞ்சுக்கு கூட்டிப்போய் புதுக்கணக்கு போட நினைத்திருந்தபோது ஏழரையைக் கூட்டியிருக்கிறது கிழம்!
டெலி கான்ஃபரன்சிங், கூகுள் மீட் என்று ஏதாவது வசதி செய்து தராமல் இப்படி நேரில் கூப்பிட்டு வைத்து கழுத்தறுக்கிறது!
புலம்பிக்கொண்டே கிளம்பிப்போனான் கேசவன்!
அங்கு முன்கூட்டியே வந்திருந்த சதுர்முக் முன் பாதி காலியான சோமபானக் கோப்பை!
நல்லது! இனி ரெண்டும் தண்ணிபோட ஆரம்பிச்சா மீட்டிங் சீக்கிரம் முடிஞ்சா மாதிரிதான்!
“எனக்கு நிறைய வேலை இருக்கிறது. லெட் அஸ் மேக் இட் ஷார்ட்!”
ருத்ரன் ஆரம்பிக்க,
இங்கிலிஷ் வேறு ஒரு கேடு!
“ஓகே! லெட் அஸ் ஹேவ் எ க்விக் ரெவ்யூ!
சொல்லுங்கள்!”
“என்னத்தைச் சொல்ல, வரவர ப்ராடெக்ட் கண்ட்ரோல் பல்லிளிக்கிறது!
மந்தை மந்தையாக தயாரித்து அனுப்பி என்ன செய்ய,
கொஞ்சம்கூட தரமே இல்லாத ஆட்டுமந்தைகளை கூச்சமே இல்லாமல் அனுப்பித் தொலைக்கிறார் கிழவனார்!
அந்தக் கருமங்களை பராமரித்துத் தொலைப்பதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது!
பேசாமல் ரிட்டையர் ஆகி இளைய சமுதாயத்துக்கு வழிவிடலாமே?”
“கேசவ், நீ மெய்ன்டைன் பண்ணும் லட்சணம்தான் சந்தி சிரிக்கிறதே?
அந்த புதிதாய் வேலைக்கு சேர்ந்த ஹவுஸ் கீப்பிங் பெண்ணோடு நேற்று உன்னை நான் பிருந்தாவனத்தில் பார்த்தேன்!
லஜ்ஜையே இல்லாமல் ஆபீஸ் நேரத்தில் அவள் இடுப்பைப் பிடித்துக்கொண்டு அலைந்துகொண்டிருந்தாய்.
இந்தக் கறுப்புத் தோலுக்கே இத்தனை ஆட்டம், இன்னும் கொஞ்சம் கலராகப் பிறந்திருந்தாயானால்..”
- இது சதுர்முகன்!
“போதும், உங்கள் சண்டைகளை வீட்டுக்குப்போய் வைத்துக்கொள்ளுங்கள்!
கேசவா, நானும் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன், உனக்கு வரவர வாய் நீளுகிறது!”
“உண்மையைச் சொன்னால் கசக்கத்தான் செய்யும் ருத்ரா!
இது சமீப காலமாக தயாரித்து அனுப்பும் லட்சணத்தை நீரே பாரும்!
முழுமையாக எதையும் ஒரே இடத்தில் செய்யாமல்,
தொண்ணூறு விழுக்காடு அவ்ட் சோர்ஸிங்!
அதிலும் மூளைக்
கேந்திரத்தை!
பாதிக்கு மேற்பட்டதில் ந்யூரான் கனெக்டிவிட்டியே இல்லை,
மீதி அழுகல்!
இருபத்தோராம் நூற்றாண்டுக்கான இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான லாட்டை கொஞ்சம் செக் பண்ணிப்பாருங்கள்!
பாதிக்கு சேம்பர் காலி!”
ருத்ரனும், சதுர்முகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்ணடித்து சிரித்துக்கொண்டது
வேறு எரிச்சலைக் கிளப்பியது கேசவனுக்கு!
“சரி, நீங்கள் இருவரும் ஏதோ திருவிளையாடலை ஆரம்பித்திருக்கிறீர்கள்!
இப்போ எதற்கு இந்த மீட்டிங்?
அதைச் சொல்லுங்கள் - எனக்கு வேலை நிறைய கிடக்கிறது!”
“ஆமாம், ரம்பா டீ போட்டு வைத்திருப்பாள் போ!”
உளவு வேறு பார்க்கிறதா கிழம்?
“கேசவா, நான் கொஞ்சம் தரக்கட்டுப்பாடு பற்றி சர்வைவல் டெஸ்ட் சிலவற்றை உத்தேசித்திருக்கிறேன்!
சில ப்ராடெக்ட்டுக்கு
ஸெல்ஃப் டெஸ்ட்ரக்டிவ் ப்ரோக்ராமை செய்து அனுப்பியிருக்கிறேன்!
அவற்றுக்கு தேவையான பராமரிப்பு சப்போர்ட்டை அனுப்பிவை!”
“என்ன இழவு இது ருத்ரா?
தயாரித்து அனுப்பும்போதே டெஸ்டிங் எல்லாம் பண்ணித் தொலைக்கக் கூடாதா?
அதைப்பற்றிப்பேசவா
இந்த மொட்டை வெயிலில் இங்கே உட்கார்ந்திருக்கிறோம்?”
“இல்லை கேசவா, அடுத்த நூற்றாண்டு
திட்டம் பற்றிப்பேச வேண்டும்!”
“இப்போதென்ன திடீரென்று? இது ஒன்றும்
நூற்றாண்டின் ஆரம்பம் இல்லையே?
1943ல் என்ன நூற்றாண்டுத் திட்டம்?”
“இன்னும் நான்கே ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுதந்திரம்
கிடைக்கச் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன் கேசவா!”
“செய்யுங்கள்! ஆனால் அவர்களின் அடிமைப்புத்தி அதற்குப்பிறகும்
நூறாண்டுக்கு மாறப்போவதில்லை! சதுர்முகனின் டிசைனிங் லட்சணம் அப்படி!”
“இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேனே,
சுதந்திரம் கிடைத்து
ஆறு மாதங்களில் காந்தியை சுட்டுக்கொல்லும்படி ப்ரோக்ராமை மாற்றியிருக்கிறேன்!”
“உம்மை பித்தன்
என்று சொல்வதில் தப்பே இல்லை ருத்ரா!
எக்கேடோ கெட்டுத்
தொலையும்!
இந்த மீட்டிங்
எதற்கு?
அதை சொல்லிவிட்டு
உங்கள் சதியாலோசனையை தொடருங்கள்!
எனக்கு இதிலெல்லாம் ஈடுபாடோ உடன்பாடோ இல்லை!
த்வாபர யுகத்தில்
குருஷேத்திரத்தில் எனக்குக் கிடைத்த கெட்டபெயரே தலைமுறைக்கும் போதும்!”
“கேள் கேசவா, சுதந்திர இந்தியாவில்
வழக்கம்போல் வடக்கர்கள் எப்படியோ சப்பாத்தி, காசி, அயோத்தி, இந்து, முஸ்லீம், காங்கிரஸ், பாஜக என்று மூளையின்
உபயோகம் எதுவும் இல்லாமல் காலத்தை ஓட்டிவிடுவார்கள்!
இட்லியைப்போல் மென்மையானவர்கள்
அந்த தென்கோடி மக்கள்! அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது குறித்துத்தான் இந்த
மீட்டிங்!”
“உமக்கு சுடுகாட்டு புத்தி மாறவே இல்லை!
சாதிச் சண்டை, சாராயக்கடை, சினிமாப் பைத்தியம்
என்று அவர்களுக்கு எல்லா இம்சைகளையும் ப்ரோக்ராம் பண்ணிவிட்டு, எதற்கு இந்த
முதலைக்கண்ணீர்?
ஏற்கனவே, தங்களுக்குள் தாங்களே பிரிவினை பேசிக்கொண்டு அடித்துக்கொண்டு சாகிறார்கள்!
தொண்ணூற்று
ஒன்பது புள்ளி தொண்ணூற்றெட்டு மதிப்பெண் வாங்கினால், வெயிட்டிங் லிஸ்டிலாவது இடம் கிடைத்துக்கொண்டிருந்த
படிப்பில் நீட் என்று மண்ணை வாரிப்போடப் போகிறீர்!
தன் எடைக்கு
மேல் புத்தகம் சுமந்து, தகப்பனின் அந்தஸ்து வெறிக்குப் பலியாகும் குழந்தைகள்!
அமெரிக்க
நேரத்துக்கு வேலை செய்து இரவு பகல் மயக்கத்தில் ஐடி மக்கள்!
பெட்டிக்கடை
மாதிரி பெருகிப்போன என்ஜினீயரிங் கல்லூரியில் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு ஸ்விக்கி
டெலிவரிக்கு வண்டியோட்டித் திரியும் பொறியாளர்கள்!
போதாக்குறைக்கு
டாஸ்மாக்கில் மட்டமான சரக்கு,
சொந்தத் தயாரிப்பில் கொரோனா, எபோலா,
இயற்கை
என்ற பேரில் நீர் அனுப்பித் தொலைக்கும் வெட்டுக்கிளி, புயல், வெள்ளம்
என்று உங்கள் ஃப்யூச்சர் பிளான் வேறு பயமுறுத்துகிறது!
இத்தனை
புது தொந்தரவுகளை நான் எப்படி சமாளித்துத் தொலைக்க?
இதில் மூளைப்
பிராந்தியத்தை காலியாக அனுப்பப்பட்டு,
ஓட்டுக்கு காசு வாங்கி அடிமையாகவே வாழ்ந்து சாகும்
கூட்டம் வேறு!
இவர்களை மனநோய்
அண்டாமல்,
தற்கொலை செய்துகொள்ளாமல்
எத்தனை கஷ்டம் வந்தாலும் நானிருக்கிறேன் என்று தோள் கொடுக்க பூலோகத்தில் யாரும் இல்லாமல்,
நான் இங்கு உட்கார்ந்துகொண்டு
என்ன காக்கும் தொழிலை செய்து தொலைக்க?
எல்லா இடைஞ்சலையும்
செய்துவிட்டு என்ன நிராயுதபாணியாக நிறுத்திவிட்டு என் பட்டத்துக்கு வேட்டு வைக்கத்தானே
இந்த மீட்டிங்!”
“உனக்கு எல்லாவற்றிலுமே அவசரம் கேசவா, உன் நிலைமை என்ன
ஆகப்போகிறது என்று யோசித்து, உனக்கு உதவி செய்யவே இந்த மீட்டிங்!
ஒரே ஒரு ஆளை எங்களால்
உனக்கு உதவியாக பூமிக்கு அனுப்ப முடியும். அதுவும் தமிழ்நாட்டுக்கு!
அப்படி அனுப்பப்படும்
நபருக்கு என்னவிதமான க்வாலிஃபிகேஷன் வேண்டும் என்று கேட்டு, அதன்படியே ஒரு ஆளைப்
படைக்க உத்தேசித்தே இந்த அவசர மீட்டிங்!”
“லூசாய்யா நீங்க ரெண்டுபேரும்?
முன்பு சொன்ன
அத்தனை சீர்கேட்டோடு,
காதல் தோல்வி, வேலையில்லாத்
திண்டாட்டம், வெள்ளம், வறட்சி, வறுமை, துரோகம், ஏழ்மை, கேடுகெட்ட அரசியல்வியாதிகள்
என்று அத்தனையும்
தாங்கி, நிம்மதியும்
சந்தோஷமுமாய் மக்களை வாழவைக்கவேண்டுமானால்
ஒரு மந்திரவாதியைத்தான் படைத்து அனுப்பவேண்டும்!”
“எக்ஸ்சாக்ட்லி அதுதான் எங்கள் திட்டம்!
அப்படி ஒரு மந்திரவாதியைத்தான்
தமிழகத்துக்கு அனுப்ப உத்தேசம்!”
“முடிவு செய்துவிட்டு என்னை என்ன கருமத்துக்கு
மீட்டிங் கூப்பிடுகிறீர்கள்?
ஏதோ இந்த அளவுக்காவது
அந்த மக்கள் மீது ஒரு கருணை வந்து தொலைத்ததே!
செய்யுங்கள்!
அப்படி ஒருவனை இனியும் தாமதிக்காமல் உடனே படைக்கச் சொல்லுங்கள் இந்த முட்டாள் கிழவனை!
அந்தக் குழந்தைக்காவது
ப்ரோக்ராமிங்கை ஒழுங்காகப் பண்ணி அனுப்பப் சொல்லுங்கள்!”
“கவலைப்படாதே கேசவா, என்னுடைய நேரடி மேற்பார்வையில்
சீக்கிரம் தயாரித்து அனுப்புகிறேன்!”
“இந்த சீக்கிரம் என்கின்ற பஜனையே வேண்டாம்!
ரெண்டுபேரும்
இப்போதே, என் கண் முன்னாடியே
தயாரித்து அனுப்புங்கள்!
என் காக்கும்
தொழிலை சுலபமாக்குபவனை நான் பார்க்கவேண்டாமா?”
“சரி, தமிழகத்தில் எங்கு
இந்த மந்திரவாதியை பிறப்பிக்க?”
கேரள எல்லையில், மேற்குத்தொடர்ச்சி
மலை அடிவாரத்தில்?
இன்னொரு முக்கியமான
விஷயம்!
அந்த மந்திரவாதிக்கு
நூறாண்டு நிறைந்த ஆயுளையும் கொடுத்து அனுப்பு!
இல்லாவிட்டால்
உமக்கு சோற்றில் விஷம் வைக்கச் சொல்லிவிடுவேன் என் தங்கையிடம்!”
“அப்படியே ஆகட்டும்!”
அடுத்த சில நிமிடங்களில்,
தேனி பண்ணைப்புரத்தில் பிறந்த,
ஞானதேசிகன் என்று காரணம் தெரியாமலே பொருத்தமாகப் பெயர் சூட்டப்பட்ட,
அந்தக் குழந்தை,
எல்லோரையும்போல் வீறிட்டு அழுதபோதே,
தன் அழுகையை மனதுக்குள் சுரம்
பிரிக்க ஆரம்பித்தது!
அன்றைக்கு ஜூன்
மாதம் 2ம் தேதி!