சனி, 23 மே, 2020

தினம் தோறும் சுசீலா! முதல் 50!


இசைத் தேன் கடலின் ஒற்றைத் துளி!புதுப் புத்தக எழுத்து வாசம்,
பிறந்த குழந்தையின் தூக்கப் புன்னகை,
முதல் காதலியின் மூர்க்க முத்தம்,
மார்கழி மாதப் பனி,
ஆர்ப்பரிக்கும் அருவி,
அடித்துப் பெய்யும் மழை,
அலைக்கரம் நீட்டித் தொடும் கடல்,
பௌர்ணமி நிலவு,
அமாவாசைக் காரிருள்,
அதிகாலைப் பேரமைதி,
அடர்வனப் புட்குரல்
இவை எல்லாவற்றையும் நினைவுறுத்தும் ஒற்றைக் குரல்
- இசையரசி!
ஐந்து தலைமுறைக்கு இசை வரம் தரும் இன்னிசை தேவதை!

வீடடங்கி முடங்கிய பொழுதில் விளையாட்டாய் தினம் ஒன்று என்று பகிர ஆரம்பித்தது!
இன்றைக்கு ஐம்பத்தைத் தொட்டுத் தொடர்கிறது!

எனக்கே எனக்கெனப் பாடியது போன்ற பாடல்கள் முதல்,
எப்போதும் எல்லோருக்குமான பாடல்களில் அன்றன்றைக்கு நினைவுக்கு வந்த பாடல்கள்வரை முதல் ஐம்பது!

தேன்கூட்டிலிருந்து சொட்டும் ஒரு துளியை நுனி நாக்கில் தொட்டிருக்கிறேன்!
அவ்வளவே!

இவைதான் அவரின் சிறந்தன அன்று!
சிறந்தவற்றுள் வெகு சில!

இப்படி ஒரு பன்முகக் (வெர்சடைல்) குரலைக் கேட்கக் கொடுத்துவைத்தவர்கள் நாம்!

ட்விட்டர் அனுமதித்த அளவுக்குள், எனக்குத் தெரிந்த சிறு விவரணையோடு ஒரு ஒழுங்கில்லாப் பட்டியல்!

நேரமும் ஒத்த ரசனையும் உள்ளோர் பார்வைக்கு ஒரு சிறு பகிர்வு!

1. புரட்சிதாசன் என்ற பெரிதாக அறியப்படாத பாடலாசிரியரின் வரிகள்!
மெல்லிசை மன்னரின் அபார இசையமைப்பு!
நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை....
சூழலின் துயரம் பொங்கி வழியும் சுசீலாவின் உருக்கும் குரல்!


2. மெல்லிசை மன்னர் இசையில் கண்ணதாசன் வரிகளில் சுசீலாவின் மென்குரலில் இந்தப் பாடலை (தர்பாரி கானடா?) கேட்காத காதுகள் சபிக்கப்பட்டவை!
மிக இனிய மகிழ்வுணர்வு கடத்தி!


3. இப்படி ஒரு ஆறுதல் கிடைக்குமெனில் ஆயிரம் முறை கூட அவமானப்படலாம்!
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இசைக்குயில்!
கொடுப்பவன் எல்லாம் மேலாவார் கையில் கொள்பவன் எல்லாம் கீழாவார் தருபவன் அல்லவோ கர்ணா நீ! ...”
கண்ணதாசன் இழைத்த வரிகளில்!


4. கே.வி. மஹாதேவன் இசையில் கண்ணதாசன் வரிகள்!
ஏழு நிமிட ராகமாலிகை- பெரும்பாலும் கல்யாணி!
தேர்ந்த கர்நாடக இசைப் பாடகிகள்கூட இவ்வளவு அதகளம் செய்திருக்கமுடியாது!
சுசீலா என்னும் தேன்குடம்!
குறிப்பாக 5.40ல் மன்னவன்ன்


5. கலைக்கோவில் என்றொரு அதிகம் கேள்விப்படாத படம்!
பக்தியும் காதலும் கைகோர்த்த பாடலில் சிட்டிபாபு வீணைக்கும் சுசீலா குரலுக்கும் வெற்றி தோல்வியின்றி தேன்மழை!
ஶ்ரீராகத்தில் மெல்லிசை மன்னர் இழைத்திருக்கும் தேவராகம்!
தேவியர் இருவர் முருகனுக்கு...


6. மெல்லிசை மன்னர்கள் இசையில் கண்ணதாசன் வரிகளுக்கு உயிர் கொடுத்த இசையரசி!
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சந்நிதி...
டிவைன்!


7.  ராஜாவுக்கும் சுசீலாவுக்கும் பொதுவான கெட்ட குணம்-
இயக்குனரை முழுக் கதையும் சொல்ல விடுவதில்லை!
இவர்கள் சொன்ன மீதம்தான்!
இருவரும் ஒன்று சேர்ந்தால்
கூடவே மு மேத்தா வேறு ஆரம்ப ஹம்மிங்கிலிருந்தே மெல்லிய உருக்கம்! வீணையும் வயலினும்..

8. மெல்லிசை மன்னர், கவியரசர், கவிக்குயில்
இது இதயம் திருடவே சேர்ந்த கூட்டணி!
கன்னி விழிவேலைக் கண்ட வடிவேலன் தன்னை மறக்க
இந்தக் குரலில் அத்தனை சொக்குப்பொடி!
காதலா பக்தியா என்று பார்த்தால் காதலே முன்னிற்கிறது! தெய்வீகக்காதல்?

9. கே.வி. மகாதேவனின் மயிலிறகு இசை!
காதலில் நனைந்த கண்ணதாசன் வரிகள்!
இருந்தும் பூரணத்துவம் பெற ஒரு தேன்குரல் வேண்டாமா?
காதலின் முன்னே நீ..யும் நா..னும் வேறல்......!
அங்கே காதலின் இனிமையும் பிரிவுத்துயரும் பாலும் தேனும்!

10. வழக்கம்போல ஆர்ப்பாட்ட வடிவம் இந்த குட்டிப் பாடலை அறியவிடாது செய்துவிட்டது!
மிகக் குறைந்த வாத்தியங்களோடு நிதானமான ராகத்தில்
காதல் பா..ட்டுப் பா.... காலம் இன்னும் இல்லை தா....லாட்டுப்பாட, தாயாகவில்லை!
தொடரும் புல்லாங்குழல் சுசீலா குரல்போல!

11. கே.வி.மகாதேவனும் சுசீலாவும் சேர்ந்தாலே அது தேனிசை விருந்து! கண்ணதாசன் ஆண்டாளை நினைவு படுத்தினால் இசையரசி தேவயானை முதல் இந்நாள் காதலிவரை நியாபகப்படுத்துகிறார்! காதலின் தேடல் தெய்வீக ராகத்தில்!
12. இசையரசியின் இன்னொரு ஏக்கக்குவியல்!
பஞ்சு அருணாசலம் வைர வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில்! ஒன்றும் அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டு திறவாமல் எங்கே சென்றாயோ....
வார்த்தைகளின் கண்ணீர் குரலில் கரிக்கும்!
என்னை மறந்ததேன், தென்றலே....

13. கவியரசர், இசையரசி, மெல்லிசை அரசர்!
இதைவிட ஆளுமைக் கூட்டணி ஏது?
நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது என் பெண்உள்ளம் எதிரொலிபோல் நான் என்றது... பூவாகி கனியாகி காயானது நீயாகி நானாகி நாமானது!
காதலின் நேசத்தின் உச்சம்!

14. மூவர் கூட்டணியில் இன்னொரு உயிர் உருக்கி!
கண்ணில் நீரைக் காணாமல் கவலை ஏதும் கூறாமல் என்னை எண்ணி வாழாமல் உனக்கென நான் வாழ்வேன்...
சுசீலா என்னும் வரம்!

15. மெல்லிசை மன்னர்கள், கவியரசர், இசையரசி கூட்டணியில் இன்னுமொரு முத்து!
ஶ்ரீதருக்காக எப்போதுமே ஓவர்டைம் செய்யும் விஸ்வநாதனின் ப்யானோவும் ஹார்மோனியமும்!
மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை, பனிபோல் நானும் மறைவேன்! டிவைன்!

16. வேதா இசையில் கவியரசர் வரிகள்!
இசையரசி தேன் குரலில் அமானுஷ்யமும், சோகமும் சரி விகிதத்தில்! நானே.. வருவேன்...
17. “நல்லவர்க்குப் பொருள் எதற்கு, நாடிவரும் புகழ் எதற்கு? உன்னுடைய வசந்தத்திலே ஒன்றுமில்லை ரசிப்பதற்கு!
கவியரசர் அட் ஹிஸ் பெஸ்ட் ஆல்வேஸ்!
கேவி மகாதேவன் இசையில், ஜஸ்ட் மேட்டர் ஆஃப் ஃபேக்ட் தொனியில் சாடியிருப்பார் இசையரசி!

18. மூவர் கூட்டணியில் இன்னொன்று!
நான் இரவில் எரியும் விளக்கு நீ என் காதல் மணிமாளிகை!
உணர்வைத் தூண்டும் மெல்லிசை!
காதலும் ஏக்கமும் ததும்பி வழியும் இசையரசி குரலில்!என் மடியில் விடியும் இரவு நம் இடையில் வளரும் உறவு

19. மெல்லிசை மன்னர்கள், கவியரசு, கூடவே இசையரசி!
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் ஒருவரின் குரலுக்கு மயங்கவைத்தான் உண்மையை அதிலே உறங்கவைத்தான்
கள்ளில் கரைத்துப் புகட்டிய தாலாட்டு!

20. மூவர் கூட்டணியில்!
மாறும், கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும் ஏக்கம் வரும்போது தூக்கமென்பதேது!
கை நடுங்கிக் கண்மறைந்து காலம் வந்து தேடும் காணாத தூக்கமெல்லாம் தானாக சேரும்
பெண் வாழ்வின் அவலங்களை தாலாட்டில் கொட்டும் இசையரசி!

21. ராஜாவின் ஆர்ப்பாட்டமில்லா இசை, மு மேத்தா வரிகள்!
இசைரசி குரலில் ஓடைபோல் வழிந்தோடும் பாடல்
மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும் விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும் வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும் என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்

22. மெல்லிசை மன்னர்கள், கவியரசர்!
இசையரசிக்கு உகந்த விருந்து!
சென்ற இடம் காணேன் சிந்தை வாடலானேன் சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்!
பிரிந்த காதலின் தவிப்பும் ஏக்கமும் குரல்வழி நேரிடையாக இதயத்துக்கு!

23. இசையரசி மென்மையாக ஆரம்பிக்க, பிறகு வந்து இணைகிறார் எம்எஸ்வி!
உனை நாடி, உனை நாடி..... உறவாடவா
போகாதே என்று கை பிடித்து இழுத்து மடியமர்த்திக் கெஞ்சவைக்கும் கொஞ்சல்!

24. “நீரும் மாறும் நிலவும் மாறும் அறிவோம் கண்ணா மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா...
மூவர் கூட்டணியில் இன்னொரு வைரம்!

25. மூவர் கூட்டணி முத்துச் சிதறலில் இன்னொன்று!
எப்.....டிச் சொல்வே......னடி!
வெண்ணெயில் இறங்கும் கத்தியாக உள்ளம் இறங்கும் மென் குரலில்!

26. கே வி மஹாதேவன் மயிலிறகு இசையில்!
சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்து நீராடி கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடிகவியரசர் வரிகளில் வெட்கம், மகிழ்வு, பெருமிதம் சம அளவில் குழைக்கும் இசையரசி!

27. கண்ணதாசனும் மெல்லிசை மன்னர்களும் இந்தப் பாடல் இப்படி மெருகேறும் என்று நினைத்திருப்பார்களா?
தெரியா.....தா தெரியாதா..... என்று மாறிமாறி ஏக்கத்தையும் சோகத்தையும் கேள்வியாகக் கேட்கும் குரலில் எத்தனை சோகம்! பிரிவின் வலி இவ்வளவு கொல்லுமா?
28. மூவர் கூட்டணியில்! பேஸ் கிதாரும் வயலினும் கிறுக்குப் பிடிக்கவைக்க,
காலத்தில் வசந்தமடி... நான், கோலத்தில் குமரியடி..
துள்ளிசை, விரக்தி இரண்டும் சரி விகிதத்தில்!
இன்னொரு சிறப்பு, இசைஞானி மெல்லிசை மன்னரிடம் பணிபுரிந்த முதல் பாடல்!

29. இளையராஜாவின் செல்லக் குழந்தை புல்லாங்குழல்!
அதோடு சரியான போட்டி இசையரசிக்கு!
உன் சேதி வா....ரா....தா..., உள் நெஞ்சம் .....றா.....தா.....
தேனாற்றில் பாலோட, நானென்ன வாதாட
ஃபோட்டோஃபினிஷில் வெற்றி சுசீலாவுக்கே!
அதிகாலையில் ஒரு சுகராகம்!

30. “அவனைக் கண்டால் வரச்சொல்லடி அன்றைக்குத் தந்ததைத் தரச்சொல்லடி.. தந்ததை மீண்டும் பெறச்சொல்லடி தனியே நிற்பேன் எனச் சொல்லடி
கண்ணன் என சிறகு முளைக்கும் தாசனின் வார்த்தைகளுக்கு! வேதாவின் துள்ளிசையில் காதல் தூது விடும் மெல்லிசையரசி!

31. வாலியும் ராஜாவும்!
கூடவே இசையரசி!
வெள்ளந்திக் காதலின் அணையில்லாக் குதூகலம் சுசீலா குரலில்!கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நான்தானய்யா..

32. “அன்னை பெற்றாள் பெண்ணென்று அதனால்தானே துயரின்று கண்ணைத் தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகாதோ..
மூவரின் முத்துக் குவியலில் மேலும் ஒன்று!
வேதனையும் விரக்தியும் இசையரசி குரலில் - துன்பமான இன்பம்!

33. ராஜாவும் கண்ணதாசனும்
கூடவே இசையரசி!
எங்கெங்கோ கண்ணனின் லீலை ராதைதான் கண்ணனின் சோலைஎவ்வளவு high pitch போனாலும் கீச்சிடாமல், துளியும் பிசிறடிக்காத குரல் வேறு யாருக்காவது உண்டா என்ன?
பாவம் மாறாத ஏக்கம் வழியும் குரலில்!

34.  A M ராஜாவின் அற்புதமான இசை!
கண்ணதாசன் வரிகள்!
ஏழை விதியோடு விளையாடுவார் அன்பை மலிவாக எடை போடுவார்!பாடல் முழுக்க மேற்கத்திய துள்ளிசை!
சோகம் சிந்தும் இசையரசி குரல்!
ஐஸ்க்ரீமில் சுடச்சுட ஜாமூன் கலந்து சாப்பிடும் சுகமான சுவை!

35. வாலிபக் கவிஞரும், ராஜாவும்!
இசையரசிக்கு மெலடி மட்டும்தான் வருமா என்ன?
ராஜாவின் கோட்டைக்குள் புகுந்து ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறது குயில்!
பொல்லாத ஆசைக்கு ஏனிந்த அலைச்சல், கல்லாட்டம் இருக்கேனே நேக்கென்ன கொறச்சல்!
வெறித்தனம்!

36. மூவர் கூட்டணியில்!
வளரும் தென்னை மரமே, நீ வளர்ந்ததைப் போல் நான் நிமிர்ந்து நிற்பேன்! வணங்கி வளையும் நாணல், நீ வளைவதைப் போல் தலை குனிவதில்லை
உற்சாகத் துள்ளலில் இசையரசியின் குதூகலக் குரல்!

37. ரகுமான் இசையில் வைரமுத்து வரிகள்!
பாடலுக்கு அழகு சேர்க்கும் ஆனந்தமும் மோகமும் தளும்பும் குரல்!ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு
இசையரசி குரலழகில் தேன் சொட்டும் மொழியழகு!

38. “நான் யார் உன்னை மீட்ட, வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட...
மூவர் கூட்டணியில் மேலுமொன்று!
காதலின் தாபமும், கையறு நிலையும், வேதனையும் இசையரசி குரலில் உள்ளம் உருக்க!
39. “என் உயிர்த்தாயே நீயும் சுகமா இருப்பது எங்கே சொல் என்றேன்...” “வானத்தில் இருந்தே பாடுகிறேன் எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்..
இந்த மூவரும் சேர்ந்து தோண்டியதெல்லாமே வைரச்சுரங்கம்!
பாசத்தின் வலி இசையரசி தேன் குரலில்!

40. “பூவென்றால் தேனை வைத்து பழத்துக்குள்ளே சாறை வைத்து பிறவிக்கெல்லாம் பெரும்பயனை வைத்தானே! பாழும் அந்தக் குருவி என்ன பாவங்களை செய்ததென்று பரிசாக கண்ணீரைத் தந்தானே!பஞ்சு அருணாசலம் சொன்ன சோகத்தை ராஜா இசையில் பூரணம் செய்யும் இசைக்குயில்!
41. மெல்லிசை மன்னர்கள், கண்ணதாசன், இசையரசி!
துள்ளிசையோடு துவங்கும் பாடல் காதலின் சந்தோஷப் பூக்களை மனமெங்கும் வீசிச்செல்கிறது- குயில் குரலில் தேன் தடவி..அக்கம்பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம் அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்

42. “தனியறை ரகசியம் யாரறிவார் நான் தருவதை உனையன்றி யார் பெறுவார் சுவை தரும் கனியுண்டு கொடியினிலே அது கனிந்தபின் விழுவது மடியினிலே!
கவியரசர்!
ஆரம்ப ஹம்மிங்கிலிருந்தே விரகதாபமும் ஏக்கமும்!
இசையரசியின் இன்னோர் அவதாரம் சங்கர் கணேஷ் இசையில்!

43. வழக்கம்போல வேதா எடுத்தாண்டஇசை!
மெருகேற்ற இசையரசியும் கவியரசரும் இருக்க என்ன கவலை!கண்ணணோடு கண் சேர உன்னோடு நான் சேர தூ..து வே...ண்டுமா....


44. பாடல் முழுக்க வீணையின் ஆதிக்கம்! கூடவே இழையும் இசையரசி! சட்டென சோகம் விதைக்கும் ஷெனாய்! அந்த சோகத்தை, இன்மையை விருட்சமாக்கும் குயிலின் ஏக்கம்! மூவர் கூட்டணியில்!தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்

45. மெல்லிசை மன்னர்கள், கவியரசர், இசைப்பேரரசி, கூடவே ஒரு விசில்!நீ தரவேண்டும் நான் பெற வேண்டும் நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்!காதலின் சந்தோஷமும் பெருமிதமும் ததும்பி வழியும் குரலில்!


46. நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும் பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்மூவர்அணி அன்பை விதைத்த இன்னொரு தருணம்! பட்டுத்துணி போலொரு மென் குரலில் காதல் ராகம்!


47. அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ? என் நெஞ்சிலே நீ தந்த உறவு கனவாகி இப்போது நனவானதோ?” மெல்லிசை மன்னர், கவியரசர், இசையரசி! மூவரும் அதகளம் செய்திருக்கிறார்கள்! புல்லாங்குழல் மென்மையாக கூடவே வர, சுசீலாவின் காதல் ராஜாங்கம்!


48. வெளிவராத படம்! தெரிய வராத பாடல்! ராஜா, வைரமுத்து, இசையரசி!பூமாலை வாங்கி வச்சேன் வாசம் என்னாச்சு? காவல் இருந்த வண்டு தானே தின்னாச்சு!சுகமான சோக ராகம்!


49. திரையிசைத் திலகம், கவியரசர், கூடவே இசையரசி!பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோ...ழி... தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்நாதஸ்வரமா, தேன் குரலா, எது இனிமை?


50. ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே.. ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே..” TV ராஜு? இசை, பூவை செங்குட்டுவன் வரிகள்! இன்னொரு வேதா? இருந்தால் என்ன? அசலைவிட நகலை இனிக்கவைக்க இசையரசி போதாதா? பூந்தூறலாய் காதலை தூவும் குரல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக