திங்கள், 4 மே, 2020

புதிதாக ஒரு தொடர்? முதல் கேரக்டர் - புத்திசாலி சிநேகிதி!ஒரு புத்திசாலி சிநேகிதி!


உபத்திரவமில்லாத சின்னச் சின்ன ரைட் அப்கள்!

மங்களகரமாக ஒரு பெண்ணிலிருந்து ஆரம்பிப்போம்!
முதலும் முடிவும் அவர்கள்தானே!

தினசரி காலை மாலை ரெண்டுவேளை ஒரு மைக்கருப்பு லேப்ரடார் வேகவேகமாக ஓட்ட நடையில் காலனி முழுக்க நான்கு ரவுண்டு போகும்!
வருஷம் 16 குஷ்பூ மாதிரி நல்ல வளப்பம்!
கூடவே நம் கதாநாயகி!

யாரை யார் இழுத்துட்டுப் போறாங்கன்ற சஸ்பென்ஸ் இன்னுமே உடையலை!

அந்த லேடிக்கு ஒரு முப்பது முப்பத்தஞ்சு வயசு இருக்கும்!

பார்த்தா அப்படி சொல்ல முடியாது - முப்பத்தஞ்சு நாற்பது சொல்லலாம்!

நல்ல உயரம்- நம்ம தமிழ் சினிமா கதாநாயகி மாதிரி 
- தாராளமா நாலு நாலரை அடி!

கேட்டுக்கு மேல் எப்போதுமே எட்டிப்பார்த்ததில்லை அவர்.
அவ்வளவு அடக்கமெல்லாம் இல்லை, வீட்டு கேட் அஞ்சரை அடி உயரம்!

ஆனால் எப்போது கேட்டைத் தாண்டும்போதும் பைபிள் மாதிரி ஒரு இங்கிலீஸ் வசனம் -
“Blackie, walk slowly, you are becoming so mischievous nowadays!”

ஒருவேளை இம்போர்ட்டட் வெரைட்டி ன்றதால அந்த நாய்க்கு இங்கிலீஸ்தான் தெரியுமோ என்னவோ!

ஆனாலும் தினசரி காதில் விழும் குரல் ஒரு ஆர்வக் குறுகுறுப்பை ஏற்படுத்த, ஒரு நாள் வாசல் செடிக்கு தண்ணீர் விடுவதுபோல் ஒரு பாவனையோடு டைம் பார்த்து நிற்க,

அழகான பையன்களைப் பார்த்தால் எந்தப் பெண்ணுக்குமே பேசத் தோன்றும் என்ற பொது விதி உந்த
ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலத்தில்
யூ ஆர் ஹாவிங் நைஸ் கார்டன் ன்னு ஆதிகால பிக் அப் லைன்ல சுபமாக ஆரம்பித்தது பேச்சுவார்த்தை!

நமக்கும் அந்த நேரத்துக்கு (எந்த நேரம் இருந்தது?) வேறு வேலை இல்லாததால் நாயம்மா (பெயர் தெரியாததால் வீட்டில் வைத்த பெயர்) கூட கொஞ்சம் இங்கிலீஸ் கடலை ரொட்டீன் ஆனது!

அந்த லேடிக்கும் கார்டனிங் இண்ட்ரஸ்ட் - எதேஷ்டம்!

காலை நேர இழுபறி ஓட்டத்தில் வீட்டு வாசல்ல ப்ளாக்கி நின்னு போறது வழக்கமாச்சு!

வீட்டுக்காரம்மா லேட்டா எழுந்துக்கறதுல இது ஒரு வசதி!
அதிகாலை நேரமா எழுந்துக்கச் சொன்ன முன்னோர்கள் எல்லாம் முட்டாள் இல்லை!

காலனிக்கு நுழையும்போது இடதுபுறம் முதல்வீடு நாயம்மாவுது!

எந்நேரமும் அந்தக் கருப்பு நாய் கார் பார்க்கிங்கில் படுத்திருக்க, இருபத்துநாலு மணி நேரமும் அதற்கு ஒரு ஃபேன் வேறு ஓடிக்கிட்டே இருக்கும்!

என்னைக்காவது வேலைக்காரி, தோட்டக்காரர் இவங்களோட நல்ல கொங்குத் தமிழ்ல்ல பேசிக்கிட்டிருக்கும் நாயம்மா (நானும் பேர் கேட்டுக்கல - ரோஸ் இஸ் ரோஸ் பை எனி நேம்ன்னு சுஜாதாவே சொல்லியிருக்காரு) நான் க்ராஸ் பண்ணும்போது மட்டும் ஆக்ஸ்ஃபோர்ட் மாடுலேஷனுக்கு மாறும்!
தீஸ் லேடீஸ்!

ஒருநாள் வீடே பரபரப்பாய் இருந்ததைப் பார்த்துட்டு என்னாச்சுன்னு கேட்டப்ப வீட்டுக்காரம்மாவுக்கு ஆக்சிடெண்ட் ஆனதை சொன்னேன் (அந்த வீர சாகசம் இந்த இடத்தில் நாட் ரெலெவன்ட்!)

ஏனோ அவங்களும் உள்ளே வந்து பார்க்கறேன்னு சொல்லல, நானும் உள்ளே கூப்பிடல

- எதுக்கு சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கணும்? இந்தக் காலை நேர கடலை சாகுபடி கட் ஆகணும்?

இப்படியே நாளொரு நலம் விசாரிப்பு அங்கங்கு தற்செயலாய் அண்ணாச்சி கடைல பார்க்கும்போது ஒரு சின்ன வழிசல்ன்னு போய்க்கிட்டிருந்தது!

ஆனா சும்மா சொல்லக்ககூடாது - எப்போது பேசினாலும் ஏதாவது ஒரு தத்துவம், நம்ம எஜுகேஷன் சிஸ்டத்தில் இருக்கும் குறைபாடு இப்படி ஒரே அறிவார்ந்த உரையாடல்கள்தான்!

உரையாடல் எல்லாம் இல்லை, 95 % அந்தம்மா பேச, 5% நான் பதில் சொல்ல, (வீட்டுக்காரன் அதுகூட பேசமுடியாதுன்னு நினைக்கிறேன்- ஒரே நான்ஸ்டாப் எக்ஸ்பிரஸ்) ஒரு ஒன் சைடட் சொற்பொழிவு!

சரி, கொஞ்சம் புத்திசாலிப் பெண்தான் போல அப்படின்னு கொஞ்சம் தள்ளியே நின்னுட்டேன்!நமக்கு புத்திசாலிப்பொண்ணுங்க கூட பேசறது கொஞ்சம் அலர்ஜி - போதாக்குறைக்கு குள்ளமான பெண்கள் கூட பேசும்போது ஒரு டிஸ்ட்ராக்சன் வேற - இதுவும் சுஜாதா சொல்லிக்கொடுத்ததுதான்!

நம்ம எவ்வளவு கஷ்டப்பட்டு டீசண்ட்டா காமிச்சுக்கிட்டாலும்,
 இந்த திருப்பூர் டீ ஷர்ட் தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம்கூட காமன் சென்ஸே கிடையாது - இல்லை, கொஞ்சம் அதிகமோ?

விடுங்க- ரூட் மாறுது!

அந்த ஆக்சிடெண்ட் என்கொயரிக்கு மூணு மாசம் கழிச்சு அப்பா தவறிட்டார்!
வீட்டு வாசல்ல சாமியானாவை பார்த்து பக்கத்து சந்தில் சுற்றிப்போக ஆரம்பித்தது நாலடியார்!

மறுநாள் அதிகாலை நான் வாசல் பந்தல் நிழல்ல உட்கார்ந்து காஃபி குடிச்சுட்டிருக்கும்போது சந்திலிருந்து நாயோடு எண்ட்ரி கதாநாயகி!

என்னைப் பார்த்ததும் தயங்கி நிற்க, மரபு மீறாமல் நான் அருகில் போக,

சாரிங்க, எப்போ ஆச்சு?”

நேத்து மதியம்!

என்ன ஆச்சு?”

ரொம்பநாளா உடம்பு சரியில்லை!

ஆமாம், சாரி நான்தான் மறந்துட்டேன்! ரெகவர் ஆகவே இல்லையா?”

இல்லைங்க, டாக்டர் வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டார்!

என்ன பண்றதுங்க, மனசை தேத்திக்குங்க. நேத்து நல்ல கூட்டம் போல, உங்களுக்கு நிறைய நண்பர்களோ?”

ஐயோ, அது எல்லாமே எங்க குடும்பத்து ஆட்கள்ங்க, எங்க குடும்பம் கொஞ்சம் பெருசு - வாட்ஸ் அப் குரூப்பே இருநூறு மெம்பர்!

! ஆனால் உங்களுக்குத்தான் இது பெரிய இழப்பா இருக்கும்!

ஆமாங்கஎன் கூடப் பிறந்த மூணு பேரோட சேர்த்து  எங்க நாலு பேருக்குமே!

ஆனாலும் உங்களுக்குத்தானே நேரடி இழப்பு?”

பாரேன், நம்ம குடும்பக் கதையெல்லாம் கேட்காமலே தெரிந்து வைத்திருக்கிறார் புத்திசாலிப் பெண்!

ஆமாங்க, நாலுபேர் இருந்தாலும் என் மேல அவருக்கு தனி பிரியம்!”

ஒரு மாதிரி யோசனையாக என்னைப் பார்த்தார் -

எத்தனை பேர் இருந்தால் என்னங்க, உங்களுக்கும், உங்க பிள்ளைகளுக்கும் இது தனிப்பட்ட இழப்பில்லையா?”

இதென்ன, குடும்பத்துக்குள்ளே அப்படி ஒன்னும் பிரிவினை இல்லையே?

யோசனை மாறாமல் சொன்னேன்,
"இல்லைங்க, அவருக்கு எங்க நாலுபேர் குழந்தைங்க எல்லார் மேலும் ஒரே மாதிரி பிரியம்தான்!
அதேமாதிரி எல்லாக் குழந்தைகளுக்கும் அவர் மேல உயிர்!"

விநோதமா பார்த்துக்கிட்டே அடுத்த கேள்வி
"எப்போ எடுத்தீங்க, சத்தமே கேட்கல?"

இல்லைங்க, என் தம்பி கல்ஃப்ல இருந்து வரணும் அதனால நாளைக்கு சாயங்காலம்தான் எடுக்கணும்!

இதற்குள் யார் மூலமாகவோ நான் யாரோடோ பேசிக்கொண்டிருப்பது கேட்டு, சம்பிரதாய நிமித்தம் என் பக்கத்தில் வந்து சேர்ந்துகொண்டார் சகதர்மிணி!

இருவருக்கும் அறிமுகம் இல்லாதபோதும்,

நீங்கல்லாம்தான் இவரையும், இவர் குழந்தைகளையும் இனி பார்த்துக்கணும். பாவம்!

நான் பார்த்துக்காம வேற யாருங்க இவரைப் பார்த்துக்க முடியும்? என்ன இருந்தாலும் அந்த இழப்பை நாம எப்படி ஈடு கட்ட முடியும்?”

நாயம்மா மூஞ்சி கொஞ்சம் மாறியதாகப் பட்டது!

அதெப்படிங்க அதுக்குள்ளே ரீப்லேஸ்மென்ட் பத்தி பேசறீங்க!

அதற்குமேல் ஏனோ அவருக்கு என் வீட்டம்மாகிட்ட பேசப்பிடிக்கல்ல!
மறுபடி என் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தார்!

இவ்வளவு சின்ன வயசுல இப்படி உங்களையும் பிள்ளைகளையும் தனியா விட்டுட்டு போயிருக்க வேண்டாம் அவர்!

ஆரம்பத்திலிருந்தே பேச்சு கொஞ்சம் நான்சிங்க் ஆகவே போய்க்கிட்டிருக்கறதா எனக்குப் பட்டது!

அப்படி ரொம்ப சின்ன வயசில்லைங்க ஹீ இஸ் மோர் தேன் எய்ட்டி!

எய்ட்டியா, யாருங்க செத்துப்போனது?”

ஏன், எங்க அப்பா!

கேட்டார் பார்க்கணுமே ஒரு கேள்வி
அதுவும் என் வீட்டம்மாவை பக்கத்துல வெச்சுக்கிட்டு!

அப்பாவா
உங்க ஒய்ஃப்க்குத்தானே ஆக்ஸிடெண்ட் ஆச்சு?
அப்போ செத்தது அவங்க இல்லையா?”கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக