செவ்வாய், 19 மே, 2020

பெரியத்தை என்னும் பேரன்புச் சுரங்கம்!முன்னோருக்கு முன்னோரெல்லாம் தொடரின் (அனேகமாக) கடைசி பதிவு!

மழை பொழியும்போது பார்த்திருக்கிறீர்களா?

அது எல்லோர் மீதும் ஒன்றுபோலவே விழும்!
வாங்கிக்கொள்ளும் தன்மையைப்பொறுத்தே பலன்!

மரமும் செடியும் தழைக்கும், மண் உள்வாங்கிக் குளிரும், கான்க்ரீட் காடுகளின் மீது பொழிவது ஆவியாய்க் கரையும்!

அதுபோலத்தான் சிலர் அன்பும்!
அவர்களுக்கு பேதம் பார்த்துப் பொழியத் தெரியாது
அவர்கள் அறிந்தது அன்பு செய்வது!

என்ன, சிலர் அன்பு அடித்துப்பெய்யும் பெருமழைபோல!

அது மலருக்கு வலிக்கும் என்று அங்கு மட்டும் மென்மையாய் தூவுவதில்லை!

அப்படித்தான் அவர்!

அக்கா இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு தாய்கள் என்று சொல்வதுண்டு!

அது நூறு சதவிகிதம் உண்மை என்று சொல்வார்கள் கொடுத்து வைத்த என் அப்பா பெரியப்பா, சித்தப்பாக்களும், அத்தைகளும்!

தன் தாயின் அன்பும் கனிவும், அதே சமயம் அவரது கண்டிப்பும் என ஆயாவின் முழுமையான மறு பதிப்பு அவர்!

ஆறாண்டோ ஏழாண்டோதான் வாய்த்தது அவருக்கு இல்லறம்
வசதியான இல்லத்தில் வாழ்க்கைப்பட்டுப் போனவர் அவ்வளவு சீக்கிரம் பட்டுப்போனது விதி!

வாழ்ந்ததன் அடையாளமாக ஒரு குழந்தை இல்லாதது அவருக்கு ஒரு குறையாக இருந்திருக்கும் என்று தோன்றவில்லை!

அவருக்கு உடன் பிறந்தவை ஆணும் பெண்ணும் சரி விகிதத்தில் எட்டுக் குழந்தைகள்!

அவர்களுக்குப் பிறந்த இருபத்தேழும் பேரன் பேத்திகள்!

இடையே தாய் மறைவுக்குப்பின் தகப்பன் ஒரு தலைச்சன் குழந்தை
இத்தனை போதாதா ஒரு தாய்க்கு?

எப்படி யோசித்துப் பார்த்தாலும் யாருக்கும் அவர் பாரபட்சம் காட்டியதே இல்லை.

கொஞ்சம் நோஞ்சான் குழந்தைக்கு தாய் அதிகம் கவனிப்பைக் கொடுப்பதுபோல சிலருக்கு அவருடைய கவனிப்பும் கவனமும் மட்டும் சற்றே அதிகமாக இருந்திருக்கலாம் -அது தாய்மையின் இயல்பு!

ஈன்றவருக்கு, எங்கள் ஆயாவுக்கு ஒரு மகளாக இல்லாமல் ஒரு தோழியாகவே அவரை காண நேர்ந்திருக்கிறது!

எல்லா விஷயங்களிலும் அவரது உடன்பிறப்புகள் எல்லோருமே, அம்மா என்ன சொல்கிறார் என்று கேட்டதோடு அக்காவின் அபிப்ராயமோ அறிவுரையோ என்ன என்று கேட்காமல் இருந்ததே இல்லை - அப்பா கூட மூன்றாமிடத்தில்தான்!

முன்பே சொன்னதுபோல் எங்கள் குடும்பம் தேனீக்களின் கூடு!

சமயங்களில் அறிவுரையோ, கண்டிப்போ ஒவ்வாமையானதாக இருந்தபோதும், தேனில் குழைத்து மருந்து கொடுத்ததில்லை அவர்!

நலம் தரும் மருந்து கசக்கத்தான் செய்யும்!

டேய் சுப்பரமணி, என்ன இது?” என்று தம்பிகளை பெயர் சொல்லி விளித்தும், தங்கையையும் வாழவந்தோரையும் அடியே இவளே என்றும் அதட்டிச் சொல்லும் அறிவுரைகளுக்கு முரண்பட்டாலும், தமக்கையை எதிர்த்து ஒரு முணுமுணுப்புக்கூட காட்டியதில்லை உடன் பிறந்தோர்!

அதற்கு ஒரே ஒரு காரணம்தான்
அக்கா நமக்கு நல்லது மட்டுமே நினைப்பார் என்ற எக்காலத்தும் பொய்த்துப்போகாத, உண்மையான அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது அவர்களுக்கு!

நான் அவதானித்தவரை அம்மாவும் அக்காவும் இருந்தவரை அவர்கள் யாரும் கோவிலுக்குக்கூட அதிகம் போனதில்லை!

அவர்கள் இருவரும் இல்லாது போனபிறகே கடவுளைத் தேடிக் கோவிலுக்குப் போக நேர்ந்தது என் தகப்பன்மார்களுக்கு!

தாத்தாவின் முன்கோபத்தால் ஏற்பட்ட நெருக்கடியின்போது மஞ்சள் பையில் பணத்தை அள்ளிப்போட்டுக்கொண்டு தன் சகோதரனைக் கூட்டிக்கொண்டு ஒவ்வொரு இடமாகப்போய் கடன் தீர்த்து அவர் சொத்தை மீட்ட கதையை கண்ணீர் வழிய நினைவு கூர்வார் என் தந்தை!

உள்ளூரில் ஒரு சின்ன சறுக்கலும் இல்லாமல் தன் தகப்பன் தலை நிமிர்ந்துவாழ வரம் தந்த சாமி அவர்!

உலகத்தின் எல்லா உடன்பிறப்புகளைப்போல அவர் மீதும் கோபங்கள் இருந்ததுண்டு தம்பி தங்கைகளுக்கு.

ஆனால் அவை அன்பென்ற பெரும் கடலில் கரைந்த கைப்பிடி உப்பு!

வேலையைத் தொலைத்துக்கொண்டு வியாபாரம் செய்யவும், படிக்க மறுத்து நாடகம், கலை என்று சிலநாள் வாழ்ந்து, மீண்டும் பொறுப்போடு வாழ்வைத் தொடரவும் தம்பிகளுக்கு முடிந்தது "பெரியக்கா இருக்காங்க" என்ற அபார நம்பிக்கையால்தான்!

உள்ளூரிலேயே ஒரு பேரழகனுக்கு வாழ்க்கைப்பட்டு
கணவன் மீது தீராக்காதலும்
தன் குழந்தைகள் போலவே உடன்பிறந்தோர் குழந்தைகள் மேல் பேரன்புமாக வாழ்ந்து மறைந்த பாப்பாத்தி அத்தைக்கு பத்துக் குழந்தைகளைப் பெற்று பெரு வாழ்வு வாழும் தைரியம் இவரில்லாவிட்டால் வந்திருக்குமா என்ன?

தாயினும் மீறிய அன்பும் வாஞ்சையுமாக தங்கை குடும்பத்தை தன் தோளில் சுமந்தார் பெரியத்தை!

சிறுகக் கட்டிப் பெருவாழ்வு வாழ தங்கைக்கு அன்னையாய் நின்று காத்தார் வள்ளியம்மாள்!

அது மட்டுமா, எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு பொங்கலும் தேர்த் திருவிழாதான்!

வீடு கொள்ளாத கூட்டம் - அத்தனை பேரும் வாரிசுகளோடு வந்தே ஆகவேண்டும் என்ற ஆயாவின் கட்டளையால்!

போதாக்குறைக்கு வருடம் தவறாமல், கல்யாணம், காதுகுத்து, புனித நீராட்டு என்று கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லை!

எந்நேரமும் நிரம்பிவழியும் சமையல் கூடத்தில் எது குறைகிறது என்பதைப் பார்த்து நிரப்பும் வேலை அவருடையது!

காய்கறி முதல் மளிகை வரை வாங்க சந்தைக்குப் போவது, அத்தனை பேர் துணியையும் சுமந்துபோய் வாய்க்காலில் துவைத்து அலசி வருவது என்று எல்லாமே அவர் விரும்பிச் செய்த காரியங்கள்!

உடலும் மனமும் தளர்ந்து போகும்வரை இதையெல்லாம் ஒரு பெரு விருப்பத்தோடு செய்த பேரன்புச் சுரங்கம் அவர்!

சொந்த மாமன் மகனை மணந்து எல்லோரையுமே வாரிசாய் ஏற்றவர் அவர்!

அவர் கணவருக்கும், அத்தை மகன்கள் -  மைத்துனர்கள்மீது அத்தனை பிரியம் என்பது செவிவழிச் செய்தி!

அதிலும் என் தகப்பன் மீது அவருக்கு ஒரு தனி அன்பு! அதன் வெளிப்பாடுதான் எனக்கு அவர் பெயரே வைக்கப்பட்டதும்!

அன்பைப் பகிர்ந்துகொள்வதில், எல்லோரினும் எனக்குக் கொஞ்சம் கூடுதல் அதிர்ஷ்டம் என்பது பெரிய அத்தை விஷயத்திலும் உண்மையாய்ப் போனது!

தன் கணவர் பெயரை எனக்கு வைத்ததால் கடைசிவரை என்னை பெயரிட்டு அழைத்ததில்லை அவர் -"இந்தாடா இவனே" என்று கூப்பிடும் குரலிலும் எப்போதும் ஒரு துளி அதிக வாஞ்சை!

குடும்பத்தில் அத்தனை பேரும் ஒருமுறையாவது தோற்று, திகைத்து நின்றபோதெல்லாம், தார்மீக ஆதரவு தந்து கூட நின்றவர் பெரியத்தை!

போனாப் போகுது போ! எல்லாத்தையும் மறந்துட்டுப் போய் ஆகவேண்டியதைப் பாரு!” அவர் சொல்லும்போதே யானை பலம் வரும்!

அந்த மன உறுதியும் தைரியமும்தான், அவரை குடும்ப விருட்சத்தில் இலைகளோடு சில கிளைகளும் வீழ்ந்தபோதும், பெற்றெடுத்த ஆணிவேர் இற்றபோதும், விழுதாய் வேர் பிடித்து  அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து நிற்க வைத்தது.

மற்றவர்கள் பற்றி எனக்கு முழுமையாய்த் தெரியாதிருக்கலாம். ஆனால் என் தகப்பன் சொல்லி நான் அடிக்கடி கேட்ட ஒரு சொற்றொடர்
"பெரியக்கா இல்லைன்னா நான் இருந்த இடத்தில் எப்போதோ புல் முளைத்திருக்கும்" 

கொஞ்சம் ஒருபக்க சார்பாக அவர் வாழ்ந்தார் என்று சொல்வதுபோல் இருக்கிறதோ
நிச்சயமாக இல்லை!

அவரது பிறந்த இடத்து சொந்தத்தில் ஒரு இழை நான் என்பதால் இந்தப்பக்கத்து அனுபவங்கள் இந்தப் பதிவு முழுமையும்!

புகுந்த இடத்திலும் அதே ஆளுமையும் அன்பும் ஈடுபாடுமாகவே இருந்தார் பெரியத்தை!

இங்கிருந்த அதே உரிமையும், அதிகாரமும் மதிப்புமாக!

எந்த சூழலிலும் தன் புகுந்த வீட்டை விட்டுக்கொடுத்ததே இல்லை - கணவர் இறந்து ஏறத்தாழ முப்பது நாற்பது ஆண்டுகள் ஓடியபின்பும்!

தன் இறுதி விருப்பம்போல், தான் வாழ்க்கைப்பட்ட இடத்தில் தன் இறுதி மூச்சை விட்டு, இரு வீட்டுப் பெரும் கூட்டத்தின் அன்பு மரியாதையில் கரைந்தது அவர் ஆத்மா!

இறுதி வருடங்களில் கொஞ்சம் உடல்நலக் குறைவு காரணமாக எந்நேரமும் ஒரு மாத்திரைப் பெட்டியோடே அவர் இருந்த காரணத்தால், பேரன் பேத்திகளுக்கு அவர் மாத்திரை அம்மாயி, மாத்திரை ஆயா!

எங்களுக்கு, கொஞ்சம் கண்டிப்பும், காதலும் சரிவிகிதத்தில் கலந்த பெரியத்தை, பெரியம்மா!

எங்கள் மூத்த தலைமுறைக்கோ

அவர் தாயன்பின் பேருருவம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக