வெள்ளி, 22 மே, 2020

ஒரு குக்கீ பாதைமாறி அல்வா ஆன கதை!
இந்த மெஷின் இந்த வாரத்தில் வெளியே போகாவிட்டால், அடுத்த மாத சம்பளம் போட என்ன செய்வது?
 ICU ஸ்க்ரீன் ரிமோட் மானிட்டரிங் சிஸ்டத்துக்கு ப்ரோட்டோ டைப் எப்போது ரெடியாகும்
அதை எந்த மருத்துவமனையில் வேலிடேசனுக்கு கொடுப்பது?
- இப்படி உப்புச்சப்பில்லாத விஷயங்களைப் பற்றிப் பேச அலுவலக மீட்டிங்கில் உட்கார்ந்திருந்தபோதுதான் வாட்ஸ்அப்  அந்த முக்கியமான நோட்டிஃபிகேஷனோட சிணுங்கியது!

மைதா,
வெண்ணெய்
யோகர்ட்
பேக்கிங் சோடா
வெனிலா சிரப்
பால்
அலுமினியம் ஃபாயில் ஷீட்
கூடவே மறக்காமல் இரண்டுகிலோ உப்பு!

மீட்டிங் முடிந்து ஓய்வாக உட்காரும்போது மறுபடி ஒரு ரிமைண்டர்!

காலையில் நடந்த உரையாடல் நியாபகத்துக்கு வந்தது!

அப்பா இன்னைக்கு அம்மா குக்கீஸ் செய்யறாளாம்!

குக்கீஸ்ன்னா பிஸ்கட்தானே?”

உன்னை மாதிரி பட்டிக்காடுகதான் அப்படிச் சொல்லும்! எங்கம்மா அல்ட்ரா மாடர்ன்!

அது சரி! சத்தியமங்கலம் கரட்டடி நியூயார்க்தான்!

அப்பாவுக்கும் பொண்ணுக்கும் என்னைப்பற்றி பேசாட்டா சாப்பாடு செரிக்காதே! - இது உள்ளிருந்து அசரீரி!

அதை விடு, நம்ம வீட்ல யாருக்குமே குக்கீஸ் பிடிக்காதேடா, வீரா கூட மோந்து பார்த்துட்டுப் போயிடுவானே?”

உனக்கென்னப்பா, விடேன், அவளே மனசு வந்து இட்லி தோசை தவிர வேற ஒன்னை சமைக்கறேன்ன்னு சொல்றா!

சரி விடு, அவ எக்ஸ்பெரிமெண்ட்ட யாருமே சாப்பிடாத ஐட்டத்துல பண்றதே பெட்டர்!

உன் வாய் இருக்கு பாரு!” -  இதை மட்டும் மெதுவா சொல்லிட்டு,
உனக்கு எங்கம்மா எங்கே உன்னைவிட நல்ல குக் ஆயிடுவாளோன்னு பொறாமை- சத்தமா சொல்லிட்டு கண்ணைச் சிமிட்டி சிரித்தாள் மகள்!

வீட்டுக்குக் கிளம்புமுன் மறுபடி ஃபோன் செஞ்சு சந்தேக நிவர்த்தி!

குக்கீஸ் செய்ய உப்பு எதுக்குடா, அதுவும் ரெண்டு கிலோ!

அப்பா, நம்ம செஃப் வழக்கமான மாதிரி பேக் செய்யப்போறதில்லை!
கடாய்ல உப்பைக் கொட்டி, அதில் ஃபாயில் ஷீட் வெச்சு...

மொதல்ல இந்த யூட்யூபை கட் பண்ணனும்டா!
அப்புறம், அலுமினியம் ஃபாயில் ஒரு ரோல் இருக்கே?”

அவளுக்கு அந்த பிராண்ட்தான் வேணுமாம். வாங்கிட்டு வந்து கொடுத்துடேன், அப்புறம் அதனாலதான் போச்சுன்னு சொல்லிடுவா!

எல்லாம் வாங்கிக்கொண்டு போயாச்சு! - மத்தியானம் சோறு கிடைக்கணுமே!


சாயங்காலம் சமையல்கட்டு ரகளையா கிடந்தது!

நமக்கெதுக்கு வம்புன்னு நான் ஹாலில்!

ஏங்க, வெண்ணெய் அரை கிலோவா இருக்கே, எப்படி நூறு கிராம் எடுக்க?”

"ஸ்கேல் வெச்சு அளந்து அஞ்சுல ஒரு பங்கு கட் பண்ணி எடுத்துக்க!"

உண்மையாகவே வந்து ஸ்கேலை எடுத்துக்கிட்டு போனபோதுதான் நம்ம பேச்சையும் எவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டாங்கன்னு புரிஞ்சுது

கண்ணுல ஜலம்  வெச்சுண்டேன்! 

ஒரு மணி நேரத்துல திடீர்ன்னு எல்லா சத்தமும் நின்னுபோச்சு!

என்னடா விஷயம்ன்னு எட்டிப்பார்த்தா,
ஒரு வாரமா வெந்துக்கிட்டே இருக்கு - வெறும் மூணு பீஸ்!

இந்த வேகத்துல சமைச்சா, கலந்துவெச்ச மாவையெலாம் சுட்டு முடிக்க ஒருவாரம் ஆகும், துபாய்ல இருந்து டைரக்ட் காஸ் லைன் வாங்கித்தான் அடுப்பெரிக்கணும் ன்னு புரிஞ்சாலும், முகத்துல எந்த ரியாக்சனும் காமிக்காம வந்து உட்கார்ந்துக்கிட்டேன்

(எத்தனை வருஷ அனுபவம்!)

ஆறு மணி வாக்குல எல்லாத்தையும் மூட்டை கட்டியாச்சு!

"என்னடி ஆச்சு?"

சரியா வரலீங்க, அதனால மாவை எடுத்து ஃப்ரிட்ஜ்ல வெச்சுட்டேன்! சிரிச்சீங்கன்னா காஃபீல விஷத்தை கலந்து கொடுத்துடுவேன்!

பரதேவதை செஞ்சாலும் செய்வா! இருக்கவே இருக்கு, கொரோனா, கேஸை அது பேர்ல எழுதிடுவா!

மறுநாள் ஒன்னும் சத்தமே இல்லை!

அதுக்கு அடுத்த நாள், நேற்று ராத்திரி பேச்சு வாக்கில் கேட்டேன்!

என்னடா ஆச்சு அந்த குக்கீஸ் கலவை?”

அது அப்படியேதான் ஃப்ரிட்ஜ்ல இருக்கு! அதை வெச்சு வேற ஏதாவது செஞ்சு பார்க்கணும்!

ரைட்டு! அது பத்து நாள் கழிச்சு அப்படியே குப்பைக்குத்தான் போகப்போகுது - குலவழக்கப்படி!

இன்னைக்கு ஆபீஸுக்கு எட்டரை மணிக்கு கிளம்பினா போதும்ங்கறது காலைல நாலு மணிக்கு எழுந்ததும்தான் ஞாபகம் வந்தது!

நேரத்தை எப்படி கொல்ல?

அப்போதான் ஃப்ரிட்ஜ்ல இருக்கற சரக்கு நியாபகம் வந்தது!

எப்படியும் குப்பைக்குத்தான் போகப்போகுது, நாம கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்த்தா என்ன?

எடுத்து வெளியே வெச்சுட்டு, காஃபி குடிச்சுட்டு,
அரட்டை பகிர்ந்திருந்த பூண்டுத் துகையல் செஞ்சுட்டு பார்த்தால், குளிர்ச்சியெல்லாம் போய் மாவு பதம் திரும்ப வந்திருந்தது!

சரி, ஜாமூன் மாதிரி நெய்யில் பொரிச்சு எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டுறலாம்!

நேத்து வாங்கிட்டு வந்த நெய் வேற உறுத்திக்கிட்டே இருந்துச்சு!

அபார நம்பிக்கைல உருட்டி வெச்சுட்டு, மொதல்ல பாகு காச்சியாச்சு!

தாலி வாங்கி வெச்சுட்டு ப்ரொபோஸ் பண்ற பிறவி குணம்!

ராஜா கைய வெச்சா, அது ராங்கா போனதில்லைன்னு பாட்டு வேற!

நெய்யில போட்ட முதல் உருண்டையே செம்புலப்பெயல் நீர்போல,  
இல்லை, நீரில் விழுந்த செம்மண் போல  நெய்யில ஒண்ணுக்குள்ள ஒண்ணா கரைஞ்சு ஓட,

ரைட்றா, அரைப்படி நெய்யும் கோவிந்தா, போதாக்குறைக்கு சர்க்கரைப்பாகு வேறு!

வீட்டுக்குள்ளேயே இருக்கற எதிர்க்கட்சிக்கு இன்னைக்கு நாமதான் தீனி! மென்னு துப்பப்போறாங்க!

கவலையோட என்ன செய்யறதுன்னு செகண்ட் டோஸ் காஃபி கலந்துக்கிட்டு வந்து உட்கார்ந்துட்டேன்!

பகல் நேரமா இருந்தாக்கூட எல்லாத்தையும் தடயமே இல்லாம கீழ கொட்டிட்டு வேற வாங்கிவந்து நிரப்பிடலாம்!

இதையே இன்னும் நூறு வருஷம் சொல்லிக்காட்டுவாங்களே!  
போச்சுடா..

செகண்ட் டோஸ் காஃபி நல்லா வேலை செஞ்சிருக்கு!

டக்குன்னு எல்லா உருண்டையும் ஒன்னு சேர்த்து, நெய்யில் கொட்டி, கூடவே அந்த சர்க்கரை பாகையும் சேர்த்து, கை விடாம கிளற,

கடவுள் இருக்கான் குமாரு!

நல்லா, டீன் ஏஜ் காதலி மாதிரி திரண்டு வர

அருமையான டெக்ஸரில் வெனிலா வாசத்தோடு அல்வா ரெடி!அடுப்பை அணைச்சிட்டு வெளியே வர, சகதர்மிணி என்ட்ரி!

என்னடா, எட்டு மணிக்கு முன்னாடி அம்மணிக்கு திருப்பள்ளியெழுச்சி ஸ்க்ரிப்ட்லயே கிடையாதேன்னு யோசிச்சா
மூக்கை சுழிச்சுக்கிட்டே கேள்வி!

"என்னது, நெய் வாசம் அடிக்குது?"

நல்ல மோப்ப சக்தி!

கேட்டுக்கிட்டே ஒரு ஸ்பூனில் எடுத்து வாயில போட்டாங்க!

மெள்ள மெள்ள, மெல்ல மூஞ்சி மாறுச்சு

"ம்ம்ம்... நல்லாத்தான் இருக்கு!"

சொல்லிக்கிட்டே ஒரு கப் நிறைய,  

அதிகமில்லை ஒரு அரைகிலோ பக்கமா, 

எடுத்துக்கிட்டு கையில ரிமோட்டோட தன்னோட  யதாஸ்தான சிம்மாசனத்துல சாஞ்சாச்சு!

இன்னொரு அரை மணி நேரத்துக்கு வாய் எதுக்கும் திறக்காது 
- நிம்மதி!

நல்லவேளை, இப்போதைக்கு நமக்கு வீட்ல இருக்கற ஒரே கிரீடம் - செஃப் பதவிக்கு ஆபத்தில்லைன்னு நிம்மதியாச்சு!

ஆனாலும்,எனக்கு இப்போ ஒரு பெரிய மண்டைக்குடைச்சல் 

- நம்ம அமர காதல் லிஸ்ட் மாதிரி இத்தனை இன்கிரிடியன்ஸ் இருக்கற இந்த அல்வாவுக்கு என்ன பேர் வைக்க?
3 கருத்துகள்:

 1. நகைச்சுவையுடன் கூடிய உங்களின் எழுத்துக்கு நான் தீவிர ரசிகை.. 👌 🙏.. அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி! எல்லாமே தங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கம்!

   நீக்கு
 2. இப்படி ஏதாவது ஒரு சம்பவத்தை,
  நாமும் இவ்வளவு நகைச்சுவையுடன் எழுத வேண்டுமென்று தூண்டும் சூப்பர் 'லா லா
  லா'பதிவு! சுஜாதா காபி போடுவது பற்றி
  எழுதிய பதிவு நினைவில்! கண்டுபிடித்து
  படியுங்கள்! மகிழ்வீர்கள்!

  பதிலளிநீக்கு