வியாழன், 7 மே, 2020

திட்டமிட்டு செயல்படக் கற்ற அரசு - மதுப் பிரியர்களுக்கு மகத்தான சேவையோடு!
பெருந்தொற்று (கொரோனா) இந்தியாவிலும் பரவ ஆரம்பித்ததும், அது முற்றாக ஒழியும்வரை அரசியல் பேசவே கூடாது என்றுதான் இருந்தேன்!

கொரோனாவும் ஒழிவதாக இல்லை, நம் அரசியல்வியாதிகளும் திருந்துவதாக இல்லை!

எனவே, இந்த சுபதினத்தில் மீண்டும்...

7.5.2020.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்!

முதன்முதலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில், சரியான நெறிமுறைகளை அரசு வகுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின!

பேருந்து நிலையங்களிலும், கடைகளிலும் முண்டியடித்த மக்கள் கூட்டம் அதை நிரூபித்தது!


அதன்பின்,
ஊரடங்குக்குள் ஊரடங்கு, சிறு தளர்வு, பெரும் அடைப்பு, அனுமதியோடு தளர்வு என்று ஒவ்வொருமுறை அரசு திண்டாடித் தெருவில் நின்றபோது
மக்கள் கோயம்பேட்டிலும், பேருந்து நிலையங்களிலும், இறைச்சிக்கடைகளிலும், காய்கறிக் கடைகளிலும், கொரோனாவை பண்டமாற்றாகப் பெற்றுப் போனார்கள்!


அரசு ஏனோதானோ என்று சில புள்ளி விபரங்களை அள்ளித் தெளித்துவிட்டு, கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தது!

இத்தனை நாட்களாக,
செயல்படாத, திட்டமிடத் தெரியாத, மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்று எதிர்க்கட்சிகளும், கட்சி சாராதோரும் வைத்த குற்றச்சாட்டிலிருந்து அரசு பாடம் படித்துத் திருந்திய பொன்னாள் இன்று!

நாட்டின் "குடி"மக்கள் சிரமம் போக்க தாயுள்ளத்தோடு முதல்வர் "மனமொப்பாமல்" இன்று முதல் மீண்டும் சாராயக்கடைகளைத் திறந்து மகத்தான மக்கள் கடமை ஆற்றப்போகிறது எங்கள் பொன்னான அரசு!

இத்தனை நாள் குளறுபடிகளில் பாடம் படிக்காமலா இருக்கும் இந்த மக்களுக்கான அரசு?

இந்த இரண்டு மாதத்தில் முதல் முறையாக மிகத் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறது அரசு!

என்னென்ன ஆவணங்களைக் கொண்டுவரவேண்டும், எப்படி சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என்று தெளிவான நெறிமுறைகள்!


வந்தவர் யாரும் ஏமாந்து திரும்பிவிடக்கூடாது என்ற வாஞ்சையோடு முன்கூட்டியே சரக்குகள் எல்லா இடங்களிலும் நிரப்பப்பட்டன.

பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காமல் மருத்துவர்களும் செவிலியர்களும் அவதிப்பட்டபோது கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்த்த அனுபவம் கற்றுத்தந்த பாடம்!
இப்போது கை கொடுக்கிறது!

காவலுக்கு போலீஸ் பட்டாளம் வேறு!

யார் யார் எந்த நேரத்தில் வரவேண்டும் என்ற வரைமுறைகளை முன்கூட்டியே வகுத்து அறிவித்த அரசு, அதிலும் மூத்த குடிமக்கள்மீது மிகுந்த வாஞ்சையைக் காட்டியிருக்கிறது!அக்னி நட்சத்திர வெய்யிலில் முதியவர்கள் வாடக்கூடாது என்று காலை நேரம் முதல் ஆட்களாக அவர்கள் வாங்கிக்கொள்ள ஏற்பாடு! அவர்களுக்குத்தான் அதிக நேர ஒதுக்கீடும்!

இதுவல்லவா தாயுள்ளம்
இதையா விமர்சிக்கின்றன இரக்கமில்லாத எதிர்க்கட்சிகள்?


இதிலும் ஒரு சிறப்பு ஏற்பாடாக, ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் தனித்தனி வண்ணத்தில் முதல்நாளே டோக்கன்கள் வேறு வழங்கப்பட்டிருக்கின்றன - வெய்யிலில் நிற்கும் நேரத்தை குறைக்கவும், தவமாய்த் தவமிருந்து வாங்கப்போகும் சாராயத்துக்கு காத்துக்கிடக்கும் அவஸ்தையை குறைக்கவும்!

எவ்வளவு தெளிவான திட்டமிடல் இது!
செயல்படத்தெரியாத அரசில்லை இது!
தேவையான நேரத்தில் புலிப்பாய்ச்சல் காட்டும் போர்த்திறன் மிக்க அரசு!

தன் தவறுகளிலிருந்து தானே பாடம் கற்றுக்கொண்டு, குடிமக்கள் நலனுக்காக துல்லியமாக திட்டமிட்டு செயல்படும் அரசு!

திட்டமிடத் தெரியாத அரசு என்று தூற்றிய மூடர்கள் இனி முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்வார்கள்?

கிராமத்துப் பக்கம் ஒரு சொலவடை உண்டு!
கி.ரா. அதை வெகு அழகாகச் சொல்லுவார்!

பிறந்ததிலிருந்தே பேசாத குழந்தை பேசவேண்டும் என்று ஊரூராக, கோவில் கோவிலாக அலைந்தாளாம் ஒரு தாய்!

தவத்துக்குப் பலனாய் பிள்ளை பேச ஆரம்பித்து பேசிய முதல்வார்த்தை " நீ எப்போ முண்டச்சி ஆவாய்"

அப்படி இருக்கிறது இந்த அரசு திட்டமிடக் கற்றுக்கொண்ட லட்சணம்!

அற்றுப்போன வேலை வாய்ப்புக்கு வழி சொல்லவில்லை
மூடிக்கிடக்கும் தொழிலகங்கள் திறக்க ஒரு தெளிவான வழிகாட்டுதலோ நெறிமுறையோ இல்லை!
அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வாதாரத்துக்கு வழிகாட்டல் இல்லை!
சாராயக்கடையை முதலில் திறக்கிறது அரசு!

கேட்டால் அக்கம் பக்கத்து மாநிலங்கள் திறந்துவிட்டன என்று ஒரு சாக்கு!

அவர்களிடமிருந்தது நல்லன கற்க அறிவற்ற அரசுக்கு கற்றுக்கொள்ளக் கிடைத்த விஷயம் இதுதான்!

சாராயக்கடையைத் திறக்குமுன் அங்கே கொண்டுவந்து கொட்ட காசு சம்பாதிக்கும் வழிமுறைகளை முதலில் திறந்துவிட வக்கற்ற அரசு, இனி இருக்கும் கொஞ்சநஞ்ச சில்லறைக் காசையும் அடித்துப் பிடுங்கிவந்து கொட்ட வழி செய்திருக்கிறது!

வெட்கமின்றி அதையும் பொறுக்கிப்போக காத்திருக்கிறது அரசு!

எவன் வீட்டில் இழவு விழுந்தால் என்ன, எனக்குத் தேவை நெத்திக்காசும் கோடித்துணியும் என்ற உயரிய மனநிலை!

உடனே, சாராயக்கடைகளை யார் திறந்தது, யார் மூடியது, யார் மீண்டும் திறந்தது என்று புள்ளிவிபரத்தை தூக்கிக்கொண்டு ஓடிவருவார்கள் வல்லுனர்கள்!

சாராயக்கடைகளை மூடக்கூடாது என்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு போய்விட்டதா என்ன முந்தைய அரசு?

உழவர் சந்தையையும், அண்ணா நூலகத்தையும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தையும் முந்தைய அரசு கொண்டுவந்தது என்று மூடத் துடிக்கும் அரசு, 'குடி குடியைக்கெடுக்கும் குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!' என்று சின்ன எழுத்தில் எழுதி வைத்துக்கொண்டு வெட்கமே இல்லாமல் இலக்கு வைத்து விற்பனை செய்கிறது!

இன்னொரு புள்ளிவிபரமும் உலவுகிறது!
அண்டை மாநிலங்களில் விற்கப்படும் சரக்குகளைவிட மட்டமான, உடல் நலத்துக்கு பெருந்தீங்கு விளைவிக்கும் சரக்கே நம் டாஸ்மாக் சரக்கு என்று

ஏதாவது தரக்கட்டுப்பாட்டு புள்ளிவிபரங்கள் உள்ளனவா இதை மறுக்க?

இதோ, இந்த நேரத்துக்கே வரிசை கட்ட ஆரம்பித்திருப்பார்கள் குடிமக்கள்!

இனி, தெருவோரமும் சாக்கடைக் குழிகளிலும் பள்ளிகொண்ட பெருமாள்களை மீண்டும் காணப்போகிறது நாடு!

வெகு விரைவான இயல்புநிலை திரும்பல்!

இனி, இத்தனை நாட்களாக குறைந்திருந்த வழிப்பறிகளும், அடிதடிகளும், பாலியல் குற்றங்களும் மீண்டும் பெருகும்
தமிழகம் தன் தனி அடையாளத்தை மீட்டெடுக்கும்!

இதில் நாம் கற்றுக்கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது!

யாரை பாதித்தால் என்ன, என் கல்லா நிரம்ப வேண்டும் என்று
அடிப்படை அறம், நேர்மை எல்லாவற்றையும் தூக்கிபோட்டுவிட்டு பணம் பணம் பணம் ஒன்றே குறி என்று அலைவதுதான் அது!

சாராயம் விற்பதுதான் ஒற்றை வருமான வழி என்ற தாழ்நிலையிலிருந்து மீள என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது அரசு?

ஏதாவது புதுத் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவா இந்த 40 % அரசாங்கத்தால்?

படிப்படியாக மற்ற வருமானங்களை உயர்த்தி, சாராய விற்பனையை குறைத்துக்கொண்டே போவதுதானே, தாயுள்ளத்தோடு நடந்துகொள்ளும் அரசின் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்?

தீபாவளி, பொங்கல், புதுவருடம் என்று ஆண்டுதோறும் இலக்குகளை நிர்ணயித்து சரக்கு விற்பதற்கு அரசென்ற ஒன்று எதற்கு?

எப்படியாவது பணம் சம்பாதிப்பது ஒன்றே குறி என்றால், அதை குடிமக்கள் நலனுக்காக 'மனம் ஒப்பாமல்' செய்வதே அரசின் கடமை என்றால்,
இதைவிட அதிகம் சம்பாதிக்க வழிமுறைகள் இருக்கவே செய்கின்றன!

கஞ்சா குடிப்பவனும், ஓபியம் இன்னபிற வஸ்துக்களை உபயோகிப்பவனும் குடிமகன் இல்லையா?

காமாத்திபுராவுக்கும், தாய்லாந்துக்கும் தேடிப்போய் அலைபவன் குடிமகன் இல்லையா?

அவர்களுக்கும் 'மனம் ஒப்பாமல்' சேவை செய்யலாமே அரசு?

சாராயம் காய்ச்சி விற்பதைவிட ஹெராயின் வாங்கி விற்கலாமே?
சிக்கு கல்லு, பெத்த லாபமு!

கஞ்சா விளைவிப்பதை சட்டப்பூர்வ விவசாயமாக்கி தானே கொள்முதல் செய்து விற்கலாம்!
முழுக்க நனைந்தபிறகு எதற்கு முக்காடு?

இந்தக் கட்டுரை திசைமாறி எங்கோ போகிறது!

சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றங்களே தலையிட முடியாது
இது ஜனநாயக நாடு வேறு!

அது எக்கோலமோ போகட்டும்.

ஆனால், அதை இந்த நிலையில் இவ்வளவு விரைவாக திறக்க வேண்டிய அவசியம் என்ன?

மூன்று நாளில் கொரோனா ஒழிந்துவிடும் என்ற முதல்வரின் சோதிடம் பலித்து முற்றாக ஒழிந்துவிட்டதா?
இனி சமூக விலகல் தேவையில்லையா?

நல்ல, சுய நினைவோடு இருந்தபோதே மக்கள் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு தெருவில் அலைந்தார்கள்!
சுயநிலை மறந்த மொடாக்குடியர்கள் எப்படி விதிமுறைகளை பின்பற்றுவார்கள்?

எனக்கு இன்னுமொரு சந்தேகம்,

அரசு கொரோனா பாதிப்பு என்று தினந்தோறும் வாசிக்கும் புள்ளி விபர எண்ணிக்கையில், கடந்த சில தினங்களாக பெரும் உயர்வு என்பது திட்டமிட்ட பொய் தகவலா?

டாஸ்மாக் திறந்ததால் மரணங்கள் அதிகரித்தால்
அதற்கு முந்தைய நாட்களிலும் அப்படித்தான் என்று சப்பைக்கட்டு கட்டவா இந்த திடீர் எண்ணிக்கை உயர்வு?

புத்திசாலித்தனத்தை தவறான வழிகளில் பயன்படுத்திய எவரும் உருப்பட்டதாக சரித்திரம் சொல்லவில்லை!

விதிமுறைகளை மீறி ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று கணக்கில் காட்டாமல் சம்பாதிக்கும் சொத்து உங்களுக்கு எந்த வகையில் உதவப்போகிறது?

அம்பானி செத்தாலும் ஆறுமுகம் செத்தாலும் ஆறடிதான்.
உண்ண ஒரு வயிறு, உறங்க ஒரு படுக்கை!
இதுதானே அதிக பட்சம்?

இப்படி ஊழலில் திளைத்து சம்பாதிக்கும் பணத்தை சாவதற்குள் உங்களால் அனுபவிக்கத்தான் முடியுமா?

நாய் முழுத் தேங்காயை உருட்டுவதுபோல் ரகசியமாய் உருட்டிக்கொண்டே இருந்து செத்தபின் அதை எவனோதானே அனுபவிக்கப் போகிறான்?

முறையாக சம்பாதித்த பணத்தில் எவ்வளவு ஆடம்பரமாகவும் வாழலாம், அரசோ சட்டமோ உங்களை எதுவும் கேட்கப்போவதில்லை!

திருட்டுத்தனமாக கொள்ளையடித்த பணத்தை நபும்சகன் பெண்ணைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - அதுவும் பயந்துகொண்டே!

போனவாரம் ஒரு சொகுசுக்காரில் பயணித்தது எத்தனை பூதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது பணிவு செல்வத்துக்கு?

அந்த ஆயிரக்கணக்கான கோடிகள் யார் அனுபவிக்க?

இப்போதெல்லாம் தெய்வம் நின்று கொல்வதில்லை, சாவதற்குள் பலனைக் காட்டிவிடுகிறது!

ஏழை விடும் கண்ணீர் நெருப்பில் வீரியம் அதிகம் அரசியல்வியாதிகளே!
அதை மறந்து விடாதீர்கள்!

வரலாறு விருப்பு வெறுப்பின்றி எல்லாவற்றையும் பதிந்துகொண்டுதான் வருகிறது.
அதில் நீங்கள் எப்படிப் பதியப்படவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!

கடைசியாக நீங்கள் எப்போது நிம்மதியாக பயமின்றித் தூங்கினீர்கள் என்று யோசித்துப்பாருங்கள் - உங்கள் வாழ்க்கை லட்சணம் உங்களுக்கே புரியும்!


பிகு: இன்னொரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் - இந்த அரசின் தமிழ் ஆராய்ச்சி!
குடிகாரர்களுக்கு இந்த அரசு கண்டுபிடித்து சூட்டியிருக்கும் புது நாமகரணம் - மது விரும்பிகள்!
வாழ்க இவர்களின் தமிழ்த் தொண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக