வெள்ளி, 8 மே, 2020

இளையராஜா என்னும் முரட்டு சாமியார்

முதலில் பாடலின் இணைப்பு:
#தினம்தோறும்சுசீலா என்ற ஹேஷ் டேக்கில் தினமும் ஒரு சுசீலா பாடலைப் பகிர்ந்து வருகிறேன்!
பகிர்ந்து என்று சொல்வது தவறு
ஆளில்லாத இடத்தில் டீ ஆற்றுவதைப்போல எனக்கே எனக்கு என்று பதிந்து, நான் மட்டுமே படித்தும் கேட்டும் வருகிறேன்!
முடிந்தவரை என் மனம் கவர்ந்த, தனிக்குரல் பாடல்கள் மட்டும்!

இளைய ராஜா இசையில் இசையரசி பாடிய தனிப்பாடல்கள் கொஞ்சம் குறைவோ என்ற ஆதங்கத்தில் இணையத்தில் தேட, கோஹினூர் வைரம் போல் இந்தப் பாடல் வந்து மாட்டியது!


இன்றுதான் இந்தப்பாடலை முதல் முறையாகக் கேட்கிறேன்!
"உதய காலமே... நனைந்த மேகமே..."

இதை வழக்கமான என் ரகசிய இடத்தில் அடைக்க மனம் ஒப்பவில்லை!  
இப்படி ஒரு தனிப்பதிவாக எழுதினால் ஏதோ நான்கைந்து பேராவது கேட்பார்கள் என்ற ஆதங்கம்!

இளையராஜாவை சாமியார் என்று யாராவது சொல்லும்போது கொஞ்சம் மிகையோ என்று எரிச்சல்கூட வருவதுண்டு!
அது எவ்வளவு உண்மை என்பது இந்தப்பாடலைக் கேட்கும்போது புரிந்தது!

கவிஞர் வைரமுத்து கவிப்பேரரசு ஆகுமுன் எழுதிய பாடல்!

யூ ட்யூபில் யாரோ சொல்லும் குறிப்பைக் கேட்டு சமைப்பதை எல்லோரும் சாப்பிட்டு முடித்து சமயத்தில் கொஞ்சம் வீணாகும்போது என்னவோ என் உழைப்பே வீணாகிப்போனதுபோல ஒரு ஆயாசம் வரும்!

அவ்வளவு ஏன், வேகமாக விரட்டிச்சென்றும் முன்னால் போகும் ஸ்கூட்டிப் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியாமல் போனாலே, ஏதோ பெரிய உழைப்பு அவமதிக்கப் பட்டதுபோல ஒரு கோபம் வரும்!

இவ்வளவு நல்ல பாடல் அமைந்த படம் வெளிவராமல்,  இப்படி ஒரு அற்புதமான இசைப் புதையல் யார் கண்ணிலும் பட்டு, கொண்டாடப்படாமல் வீணாகிப் போகும்போது எப்படி இந்த ஆளால் நிம்மதியாக சிரித்துக்கொண்டு உலவ முடிகிறது?
உண்மையிலேயே இவர் சாமியார்தான்போல!

நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த பாடல்!

ராஜா என்று யாராவது எங்காவது சொன்னாலே நின்று ஏதாவது இசை காதில் விழுகிறதா கேட்டுவிட்டுப் போகும் என் போன்ற ரசிகனுக்குக் கூட அறிமுகமாகாமல் இப்படி காலத்துக்குள் புதைந்துபோகும் என்று நினைத்திருப்பாரா இந்தப்பாடலை இசையமைக்கும்போது?

ஒருவேளை தேடித்தேடி கேட்கும் சிலர் அறிந்திருக்கலாம் இந்தப்பாடலைப் பற்றி!
நாற்பது வருடங்களுக்கு முன் வந்த பாடல்
ஏறத்தாழ ஐம்பது வயதை அப்போது நெருங்கியிருப்பார் இசையரசி!
பதினாறு வயதுப் பெண்ணைப்போல ஒரு துள்ளிசை ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் பாடலின் டெம்போ, ஒரு இடத்தில் கூட கீழிறங்கவே இல்லை, கடைசி லல்லல்லா வில் முடிக்கும்வரை!
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பே எப்படி இசையைக் கோர்த்திருக்கிறார் இந்த அசுரன்!

புல்லாங்குழலும், வயலினும் ஒரு பெரிய போட்டியே நடத்தியிருக்கின்றன!
ஒரே தாளம் தவறாத இசைக்கட்டுக்குள், புல்லாங்குழல் கொஞ்சம் நிறுத்தும் இடத்தில் வயலின் அசுரப் பாய்ச்சலை ஆரம்பிக்கிறது!
வயலின் கொஞ்சம் ஒதுங்கும்போது குழல் மேலேறி உட்கார்ந்துகொள்கிறது!
ஒரு மேற்கத்திய மெல்லிசை, தனக்கே உரிய தாளக்கட்டில் கொஞ்சமும் விலகாமல்!
இந்த இசைக்கு கொஞ்சமும் சளைக்காத நியாயத்தை செய்திருக்கிறார் இசையரசி!

தன் வழக்கமான மயிலிறகு வருடலிலிருந்து கொஞ்சம் விலகி, ஓடை நீர் வழிவது போலொரு சற்றே அழுத்தமான குரலில் தன் அனுபவத்தைக் கொட்டியிருக்கிறார் இசையரசி!

இனி இந்தப்பாடல் என் எல்லா இசைப் பட்டியலிலும் இடம் பிடிக்கும்! இத்தனை வருடம் கேட்காமல் தவற விட்டதற்கும் சேர்த்து கேட்கவேண்டும்!

ராஜா கொஞ்சம் முன்னால் இசையமைக்க வந்திருக்க வேண்டும் - இந்த இருவர் கூட்டணியின் அடர் மழையில் நாம் தாகம் தீர , உள்ளம் குளிர நனைந்திருக்கலாம்!

ஒருவேளை வைரங்கள் அபூர்வமாக இருந்தால்தான் மதிப்பு என்பதால் இப்படி அமைந்ததோ என்னவோ!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக