செவ்வாய், 30 ஜூன், 2020

சீக்கிரம் கதவைத் திறங்கள், செய்யவேண்டியது ஏராளம் இருக்கிறது!

இந்த இரண்டு பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் ஒரு உவமையின் ஒற்றுமை எண்னை ஆச்சரியப்படுத்தும்!

இரண்டுமே அடிக்கடி கேட்கும் பாடல்கள் வேறு!

"வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
சாயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் உறவிலே"
இது கண்ணதாசன் - சிவாஜிக்காக!


அன்னை இல்லம் படத்தில் திரையிசைத் திலகம் இசையில் ஒரு அற்புதமான பாடல்
"மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்"
டி எம் சௌந்தர்ராஜன் அனுபவித்துப் பாடியிருக்கும் மெலடி!


"கார்குழலும் பாய் விரிக்கும்
கண்சிவந்து வாய் வெளுக்கும்"
இது புலமைப்பித்தன் - எம்ஜியாருக்காக!


அதே திரையிசைத் திலகம் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உருகியிருக்கும் பாட்டு. தமிழ்த் திரையுலகின் கதவுகளை பாலுவுக்கு அகலத் திறந்துவிட்ட பாடல்!


அடிமைப்பெண் வந்தது 1969ல்
அன்னை இல்லம் வந்தது 1963!

இருவருமே காப்பியடிக்க அவசியம் இல்லாத பாடலாசிரியர்கள்!
இவர்கள் இருவரையும் அப்படி எது ஒன்றாய் சிந்திக்க வைத்திருக்கும்?

இது போகட்டும் என்று பார்த்தால்,
"ஒரு நாயகன் வரக்கூடும்
உங்க வாய் வெளுக்க
இரு விழி சிவக்க"
இது சித்தார்த்துக்காக வாலி!
அதுதானே, இந்த ஆள் இல்லாமல் உவமையா?காவியத்தலைவன் படத்தில் ரகுமான் இசையில் ஹரிச்சரண் பாடியது .
படம் வெளிவந்த ஆண்டு 2014.


இந்த உவமை இத்தனை ஆண்டுகள் சாகாமல் கவிஞரின் மனதில் துடித்துக்கொண்டிருக்கிறது என்றால், நிச்சயம் இதற்கொரு இலக்கியப் பின்னணி இருந்தே தீரும் என்று தேட,

அட, நம்ம வாலிபக்கவிஞர்!
"ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க"இது அமலாவுக்காக!
இளையராஜா இசையில்!


இதற்குமுன்பே ஒரு வார்த்தைப் பால் விளையாட்டில் மெல்லக் குழைத்திருப்பார் வாலி!

விழி சிவப்பால் வாய் வெளுப்பால்
இடை இளைப்பால் நிலை புரிந்தேன்!

வாலிபக்கவிஞர் - எம்ஜிஆருக்காக!

ரகசிய போலீஸ் 115  (1968 ம் வருடம் வெளிவந்த) படத்தில் மெல்லிசை மன்னர் இசையில்!


வாலியின் வரிகளை வாழ்ந்திருப்பார்கள் டிஎம்எஸ்ஸும், எல்ஆர் ஈஸ்வரியும்!


அப்படியானால் இதற்கு ஆணிவேர் கண்டிப்பாக வேறெங்கோதான் ஆழமாக ஊடுருவி இருக்கவேண்டும் என்று நூல் பிடித்துப்போனால், அது நேராக பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கொண்டு இறக்கிவிட்டுப் போய்விட்டது!முதலாம் குலோத்துங்க சோழனின் (கி.பி. 1112ல் நடந்த) கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார் எழுதியது!
போருக்குப்போய் வென்று, தினவெடுத்து இணைதேடி வந்த படை வீரர்கள் தாமதமாக வந்தார்கள் என்று கதவைத் திறக்க மறுத்த மனைவியரைப்பார்த்து அவர்கள் பாடும் பாட்டு!

வாயின் சிவப்பை விழி வாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க
தோயக் கலவி அமுது அளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ!

இடையறாத முத்த உறிஞ்சலில் உங்கள் இதழ்ச் சிவப்பு வெளுத்து,
கலவி நீட்சியில் கெட்ட தூக்கத்தால் விழியின் வெண்மை சிவந்தது!
இதழுக்கும் விழிக்கும் வண்ணங்கள் இடம் மாற்றம்!

விடிவதற்குள் இதுபோக என்னென்ன எங்கெங்கு இடம் மாறியது என்பதை கொஞ்சமும் சந்தேகத்துக்கு இடம் வைக்காமல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் செயங்கொண்டார்!

சீக்கிரம் கதவைத் திறங்கள், இன்னும் திறக்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்று ....

அந்தக் காலத்தில் விளையாடியிருக்கிறார்கள் நம் ஆட்கள்!

இடையில்தான் இந்த ச்சீய் அசிங்கம் என்ற போலிக் கலாச்சாரம் புகுந்ததுபோல!

என்ன செய்ய,
செயங்கொண்டாரைப் படித்து கற்றுக்கொள்ள வேண்டியதை சரோஜாதேவி படித்துத் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது நம் தலையெழுத்து!

யாரும் அடிக்க வராவிட்டால்,
தினம்தோறும் ஒரு பாடலை எடுத்து என் பாணியில் பொருள்விளக்கம் தர உத்தேசம்!
பார்ப்போம்!
  
இதைக் கம்பன் ஒரு அழகான ஒப்பீடாய் எடுத்துரைத்திருப்பான்.12ஆம் நூற்றாண்டில் (கி.பி. 11801250) வாழ்ந்த கம்பர்,
கம்ப ராமாயணம், பாலகாண்டத்தில் (ஹை, கம்பனுக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கிறது), நீர்விளையாட்டு படலத்தில்,

செய்ய வாய் வெளுப்ப, கண் சிவப்புற,
மெய் அராகம் அழிய, துகில் நெக,
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்,
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே!
என்று இன்னொருபடி ஏறியிருக்கிறார்!

நீரில் இறங்கிக் குளிக்கும் பெண்களைப் பார்க்கும்போது, காதலரைக் கூடிய மகளிர்போல காணப்படுகிறதாம்.

சிவந்த வாய்கள் வெளுத்து,
வெண்ணிற விழிகள் சிவந்து,
உடலெங்கும் பூசிய சந்தானம் அழிந்து,
ஆடைகள் முற்றாக நனைந்து தளர்ந்து,
தனங்கள் தளர்ந்து தொய்ந்து போகின்றன!

கூடலின் விளைவே குளியலிலும்!
அடங்கோ!

ஒரு உவமையை இன்னொரு செயலின் விளைவுக்கு உவமையாகச் சொல்கிறான் கம்பன்!

இத்தனை இருக்கிறதா இலக்கியத்தில்?

பேசாமல் தமிழய்யா பொண்ணு பின்னாடியே போயிருக்கலாம் போல!
தமிழ் இன்பத்தில் தோய்ந்து விளையாடியிருக்கலாம்!

ஒரு சினிமாப்பாட்டு எத்தனை தூரம் இழுத்துப் போயிருக்கிறது பாருங்கள்!
சமயத்தில் வெட்டியாய் இருப்பதிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது! எல்லாவற்றிலும் ஆழமாய் நுழைந்து திளைக்க முடிகிறது!

தமிழ் அமுதம் எங்கிருந்து பருகினாலும் திகட்டாமல் இனிக்கத்தான் செய்கிறது!
உண்மையிலேயே தமிழ், அமுதுதான்!