https://youtu.be/Ru09Bk2_rRk
நாம் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்போம்!
சட்டென்று எங்கிருந்தாவது இந்த ராட்சஷனின் பாடல் ஒன்று காதில் விழுந்து தொலைக்கும்!
அவ்வளவுதான்!
நினைவுச் சுழல் நம்மை எங்காவது கடந்த காலத்துக்குள் கொண்டு சொருகிப் போய்விடும்!
அப்படித்தான் ஆனது இன்றும்!
பிறந்தநாள் வேறு என்பதால் டைம்லைன் முழுக்க ராஜா!
நிகர்நிறை அவர்கள் பகிர்ந்த பாடல் ஒன்று பொறியை வீசிவிட்டுச் சென்றுவிட, பற்றி எரியுது மனச் சருகு!
இந்தப்பாடல் என் எல்லாச் சூழலுக்கும் பொருந்தி, எனக்கே எனக்கென்று தனிப்பட்ட முறையில் போட்ட பாடலாய் உருவெடுத்த மாயக்கணம் ஏதென்று இன்றுவரை தெரியாது!
இத்தனைக்கும், இந்தப்படம் வந்து பத்துப் பதினைந்து வருடங்களுக்கு இந்தப்பாடல் எனக்கு அறிமுகமே இல்லாமல்தான் இருந்தது!
எப்போதாவது கேட்க நேர்ந்தாலும், பெரிதாக ஏதும் தோன்றாது கடந்துபோனதே அதிகம்!
ஒருவேளை, காலம் என் முதிர்ச்சிக்குக் காத்திருந்ததுபோல!
ஒரு மர்மம் போல, ஒரு த்ரில்லர் படம் போல, நாளொரு திருப்பமும், பொழுதொரு மாற்றமுமாக என் திருமணம் நடந்து முடிந்த காலம்!
பொதுவாகவே, பெண்களென்றால் ஒரு மென்மையான அணுகுமுறை உள்ளவன் வாழ்வில், நீதான் வேண்டுமென்று அடம் பிடித்து ஒரு பெண் வந்து சேர்ந்தால் என்னாகும்?
அதுதான் நேர்ந்தது!
ஆரம்பகாலப் புரிதல் குழப்பங்களுக்குப் பிறகு பானுப்ரியா இடுப்பைப்போல் வழுக்கிக்கொண்டு ஓடியது வாழ்க்கை!
தம்பதிகள் என்றால், இவர்களைப்போல் இருக்கவேண்டும் என்று, காதலுக்கு இலக்கணமாய் வாழ்ந்த என் மாமாவே பலமுறை சொல்லுமளவு!
காலம் எதையுமே அப்படி சலனமற்று ஓடப் பொறுப்பதில்லை!
எதிர்பாராத ஒரு இடத்தில் செத்துவிடலாம் என்று வலிக்குமளவு ஒரு கத்தியைச் செருகி வேடிக்கை பார்க்கும்!
வீடு முழுக்கப் பெண் குழந்தைகளாய்ப் பெற்று நிரப்பிவிடவேண்டும் என்ற ஒற்றை லட்சியத்தோடு கல்யாணம் பண்ணிக்கொண்டவனுக்கு, மனைவியும் அதே ஆசையோடு அமைந்தது வரம்!
முதல் ஆறு மாதங்கள் எந்த இடைஞ்சலும் இல்லாது கழிய,
மெதுவாக, ஒரு முணுமுணுப்பாய் ஆரம்பித்த ஒரு கேள்வி, யாரைச் சந்தித்தாலும், எங்கு போனாலும் பெரும் அலறலாய் உருவெடுத்தது!
"அப்புறம்…, ஏதும் விஷேசம் உண்டா?"
ஆவலாய், அக்கறையாய், அனுதாபமாய், குத்தலாய், பொறாமையாய் ஆளுக்கேற்றவாறு உருமாறி எங்கள் மேல் வீசியெறியப்பட்ட ஒற்றைக்கேள்வி!
எல்லா விசேஷங்களுக்கும் சந்தோஷத்தோடு போய் சங்கடமும், துக்கமுமாய் திரும்பிவர வைத்த கேள்வி!
குறை ஏதுமில்லை என்று சொல்ல, அடுத்தடுத்து கருச் சிதைவுகள்!
எல்லாக் கனவுகளும் குதூகலமும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் சிதைந்து கரையும் அவலம்!
அப்படியான ஒரு சபிக்கப்பட்ட மாலையில்தான்,
"ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்"
மடியில் போட்டுத் தாலாட்டும் குரல்!
தலைவருடித் தூங்கவைக்கும் இசை!
ஒரே நேரத்தில் இருவரும் தனிமை தந்த சுதந்திரத்தில் கேவி அழ ஆரம்பிக்க,
சட்டென்று அடுத்த வரி!
"உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்"
அன்று இரவு முழுக்க இருவருக்கும் சாப்பாடே இந்த ஒரு பாடல்தான்!
ஒவ்வொருமுறை கேட்கும்போதும், ஒவ்வொரு கதவுகளைத் திறந்த பாடல் ஒன்று இருக்குமானால் அது இதுதான்!
அன்றிலிருந்து எங்கு பயணிக்கும்போதும், இந்தப்பாடல் இருக்கும் சிடி இல்லாமல் கிளம்பியதே இல்லை!
அப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்திருந்த செயற்கைக் கருத்தரிப்பு என்ற விஷயம்!
அதில் அப்போது முன்னோடியாய் இருந்த ஒரு பிரபல மருத்துவரிடம் ஒரு ஜனவரி ஒன்றில் அடைக்கலம்!
காலை முதல் மாலைவரை வெவ்வேறு சோதனைகள் முடித்து, மாலை சந்தித்த பெண் மருத்துவர் சாந்தமாகச் சொன்னார்!
"உங்கள் இருவருக்கும் இயற்கையாக குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை!"
அந்தப் புத்தாண்டு மாலை, பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவு வரை காரைவிட்டு இறங்காமல், திரும்பத் திரும்ப இந்த ஒற்றைப்பாடலோடு கரைந்தது!
அதற்குப்பின், அதே மருத்துவரிடம் சில மாத முயற்சிக்குப்பின் இன்னொரு கருச்சிதைவு!
இனி இந்தமாதிரி முயற்சிகளே வேண்டாம் என வெறுத்துப்போயிருந்த நிலையில்,
கடவுள் ஒரு பெண் மருத்துவர் உருவில்!
ஈரோட்டில் மருத்துவர் பூங்கோதை!
“உங்களுக்கு குழந்தை பிறக்காது என்று யார் சொன்னது?” என்று உரிமையோடு அதட்டியவர், வெறும் ஹார்மோன் கோளாறு என்று சிகிச்சையை ஆரம்பிக்க, பெரிய நம்பிக்கை ஏதுமில்லாமல் மாதங்கள் நகர,
மீண்டும் இன்னொரு கர்ப்பம்!
இது எப்போது சிதையுமோ என்ற அவநம்பிக்கையோடு பெரிதாக பிடிப்பில்லாமல் நகர்ந்தன நாட்கள்!
முதல் முறையாக நான்காவது மாதம்!
ஸ்கேனில் தெரிந்த சலனம் மெல்ல நம்பிக்கையை விதைக்க அன்றிரவு முழுக்க,
"வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்"
இப்போது ஒரு நம்பிக்கை ஒளியாய் அதே பாட்டு!
மெல்ல மெல்ல நம்பிக்கையும் கருவும் வளர, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நாளும் வந்தது!
காலையிலேயே இடுப்பு வலி என்று கதறியவளை என் தாயும், எங்கள் எல்லோருக்குமே தாயான எங்கள் அத்தையும் துணைவர மருத்துவமனைக்கு!
சேலத்திலிருந்து இன்னொரு அன்புச் சகோதரி மருத்துவரும் வந்து இணைந்துகொள்ள, வலி, வலி என்று கதறியது சகிக்கமுடியாமல் அறுவை சிகிச்சை செய்யச் சொல்லிக் கெஞ்சிய எங்கள் இருவரின் மன்றாடலை முற்றாக நிராகரித்து,
பொறுமையாய்,
சுகப்பிரசவமாய்
மருத்துவர் பூங்கோதை என் கையில் கொடுத்த
என் உயிர்ப்பூங்கொத்து எங்கள் கனவுப்படியே ஒரு தேவதை!
அன்றிலிருந்து இன்னுமே, இந்தப்பாடல் ஒரே முறையோடு ஒலித்து நின்றதில்லை!
எப்போது கேட்டாலும், எங்கள் இருவருக்கும் கண்கள் கலங்காமல் இருப்பதில்லை!
சமயங்களில் எங்களோடு பயணிக்க நேரும் யாருமே கேட்பதுண்டு -
"அப்படி என்ன இருக்கிறது இந்தப்பாட்டில், இப்படித் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள் இருவரும்?"
உண்மைதான்!
பாட்டில் என்ன இருக்கிறது?
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கடத்தும் உணர்வில் இருக்கிறது,
மற்றையோரால் புரிந்துகொள்ள முடியாத எல்லாமே!
அருமை!
ReplyDeleteஅருமை!
ReplyDelete