என்னைச் செதுக்கிய உளிகள் என்று எழுதியபோதே இவரைப்பற்றிக் கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்!
ஒருவேளை, அன்பானவர்கள், மரியாதைக்குரியவர்கள் என்ற இரண்டு பிரிவிலும் சமமாக விரவியிருப்பவர் என்பதால் விடுபட்டது என்று நினைக்கிறேன்!
அக்கா!
இப்படிக் கூப்பிடும்போதே அன்னை வடிவம் கண்ணுக்குள் வரும் உறவு அமைவது மாபெரும் வரம்!
முப்பது ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆனபோது ஏற்பட்ட அன்பும் பிரமிப்பும் இன்றுவரை வளர்ந்துகொண்டே போகும் அமுதசுரபி!
ஊசலாட்டத்தில் இருந்த பருவத்தில் ஆண்டவன் அனுப்பிவைத்த அன்புப்புதையல்!
படிப்பின் முக்கியத்துவத்தை ஓயாது உபதேசித்து, பட்டயக்கணக்காளர் படிப்பென்னும் வேகத்தைடையை ஒரே தாவலில் தாண்டவைத்த முக்கியக்
காரணிகளில் தலையாயவர்!
அந்த வயதிலும், எல்லா விஷயங்களையும் ஒரு முதிர்ச்சியோடு அணுகத் தெரிந்தவர்!
சென்னை வெயிலில் அன்னை நிழல் தந்த குளிர் மேகம்!
என் வாழ்வின் முக்கியமான, இனிய தருணங்கள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் தட்டாது வந்து கலந்துகொண்ட அன்பு மனம்!
படிக்கும் காலத்திலும், மணமான புதிதிலும் முக்கியமான நேரங்களில் அவர் அறிவுரையின் ஒரு சதவிகிதத்தைக் கேட்டு நடந்திருந்தாலும் இன்றைக்கு என் நிலையே வேறாக இருந்திருக்கும்!
வாழ்க்கைப் புயல் வேரோடு பிடுங்கி எறிந்த சூழலில், ஏறத்தாழ பத்தாண்டுக்கு மேற்பட்ட பிரிவு!
யாரோடும், எந்தவிதத் தொடர்பும்,அற்றுத் திரிந்த நேரம்!
ஈரோட்டிலிருந்து கோவை வரும்போதெல்லாம் சேரன் டவர்ஸ் எதிரிலிருக்கும் பழமுதிர் நிலையத்தில் ஏதாவது வாங்கிச் செல்வது வாடிக்கை!
அப்போது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தினத்தில் மீண்டும் சந்திக்கநேர்ந்தது!
அதே அன்பும் சந்தோஷமுமாக கையைப் பிடித்துக்கொண்டு அவர் சொன்ன முதல் வார்த்தை - 'குண்டாயிட்டே!"
உண்மைதான்!
பேப்பரில் போட்ட பென்சில் கோடு போலிருந்தவன் வாழ்வின் அழுத்தங்களால் கொஞ்சம் ஊறிப்போயிருந்தேன்!
அத்தனை ஆண்டுப் பிரிவும் ஒன்றுமே இல்லை என்பதுபோல் ஏதோ நேற்றுத்தான் பார்த்துப் பிரிந்ததுபோல் அடுத்த பத்து நிமிடங்களில் அத்தனை அன்பான விசாரணைகள்!
நான் ஒரு எமோஷனல் இடியட் என்பது நெருங்கிய வட்டத்து ரகசியம்!
கசியத் துடித்த கண்ணீரை விழுங்கும் பிரயத்தனத்திலேயே பாதி நேரம் போனது!
பிடுங்கி எறியப்பட்ட என் சிறகுகள் மீண்டும் முளைக்க ஆரம்பித்தது அப்போதுதான்!
தொடர்பு எண்ணை வாங்கிக்கொண்டு தனியே காரில் பயணிக்கும்போது தடையின்றி வழிந்தது கண்ணீர் ஆனந்தமாய்!
இப்போதும், அவரைச் சந்தித்து மீளும் ஒவ்வொரு நாளும் தாய்வீடு போய்வந்த நிறைவும் சந்தோஷமும்!
அதற்குப்பின் கோவை என் வாசஸ்தலம் ஆனபோதும், அடிக்கடி சந்திப்பது எட்டாக்கனி!
கோவையின் இந்த எல்லையில் நான், அந்த எல்லையில் அவர்! அவரவருக்கான அலுவல் சுமைகள் வேறு!
அரசு மருத்துவ மனையில் மகப்பேறு துறையில் மூத்த மருத்துவர் அவர்!
நிற்பதற்குக்கூட நேரமில்லாத ஓட்டம்!
ஆனாலும், எப்போது ஃபோனை எடுத்தாலும், அதே கனிந்த குரல் "சொல்லுடா கண்ணா!" கேட்கும்போதே மனம் பறக்க ஆரம்பிக்கும்!
வயது முற்றாக மறந்து கிள்ளைக்
குதூகலம் கொள்ளும் மனம்!
வேலைக்கு இடையே என்றால், "சாரிம்மா, அப்புறம் கூப்பிடட்டுமா ப்ளீஸ்!"
தொண்ணூறு சதவிகிதம் மறந்துபோவார்!
ஆனால் அதற்கும் இதே,” சாரிடா கண்ணா”தான்!
அம்மா வீட்டில் கிடைக்கும் அத்தனை சுதந்திர உணர்வுக்கு சற்றும் குறையற்ற நிறைவு அவர் வீட்டுக்குப் போகும்போதெல்லாம்!
ஏதோ சொந்த வீட்டில் இருப்பதுபோல் தரையில் கால் நீட்டி உட்கார்ந்து அரட்டை அடிக்க முடிவது அங்கு மட்டும்தான்!
இப்போதும் பழைய ஈரத்தோடு உரிமையான அறிவுரைகள்
"எப்போ சொந்தமா வீடு கட்டப்போறே? இவ்வளவு வாடகை கொடுத்து அவ்வளவு பெரிய வீடு எதுக்கு உனக்கு? அந்த வாடகையை ஈஎம்ஐ யாக கட்டிவிடலாம்!"
இன்றுவரை கேட்கும் ஒரு விஷயம் இது!
அவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பார், நானும் வெட்டி வேலையாய் அலைந்துகொண்டிருக்கும் இந்த சூழலிலும்,
" இருடா, ரெண்டு தோசை சாப்பிட்டுப் போ!"
சொல்லிக்கொண்டே கிச்சனில் நுழைபவருக்கு வெறும் தோசையை தர மனம் வராது!
இது நேற்று செஞ்சது, நல்லா இருந்துச்சு சாப்பிட்டுப்பாரு என்று கொஞ்சம் பழைய குழம்பாவது தட்டில் ஊற்றாவிட்டால் மனசு ஆறாது அவருக்கு!
அவர் படிப்புக்கும், தரத்துக்கும், வசதிக்கும் நானெல்லாம் தூசு!
ஆனால் ஒரு ராஜாவைப்போல் உணரவைக்கும் நேசம் அவரது!
தன்னுடைய எந்த உயர்வையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளாத அபூர்வப்பிறவி என் அக்கா!
நாம் ஏதாவது புதிதாகச் சொல்லும்போது
அவ்வளவு ஆர்வமும் அப்பாவித்தனமுமாகக் கேட்கும்போது நமக்கே நம்மைப்பற்றி ஒரு கர்வம்
வந்து ஒட்டிக்கொள்ளும்!
பள்ளிக்கூடத்துக் கதையை பெற்றவளிடம் பகிர்ந்துகொள்ளும் சந்தோஷம்
வரும்!
காரணமே இல்லாது, அல்லது காரணம் கண்டுபிடித்துக்
கற்பித்து விலகிப்போன அத்தனை நெருக்கமானவர்கள் மத்தியில், விலகிப்போக ஆயிரம் காரணங்கள் இருந்தும், பழைய நேசம் குறையாமல் வளர்ந்துகொண்டே போகும் அன்புச் சுரங்கம்!
இப்போது அவரை சந்திக்கவோ, அலைபேசியில் உரையாடவோ நேரும்போதெல்லாம், தவறாது சொல்லும் அறிவுரை,
" சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடு கண்ணா! ரொம்ப சூஸியா இருக்காதே, சில விஷயங்களில் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு தேடு!. அப்போதான் அமையும்!
பணம், வசதி எல்லாமே இரண்டாம்பட்சம்தான்!
நல்ல குடும்பம், நல்ல பையனாக இருந்தால் போதும்!
ஆனால் படிப்பு விஷயத்தில் மட்டும் சமரசம் பண்ணிக்கொள்ளாதே!"
அவருக்குத் தெரியும் அவர் உபதேசத்தில் நான் முடித்த படிப்பு என்னை எவ்வளவு இக்கட்டிலிருந்தும் எப்படிக் காத்ததென்று!
நல்லன எல்லா வயதினருக்கும் சட்டென்று புரிந்துபோகும்!
எனக்கும், என் மனைவிக்கும் அக்கா மீது மதிப்பும் மரியாதையும் இருப்பது பெரிய விஷயம் இல்லை!
ஒருநாள், அவர்கள் வீட்டில்
வேறு ஒருவரிடம் அக்கா மரியாதையாக அடக்க ஒடுக்கமாய் பேசியது பார்த்த என் மகள் திரும்பி வந்தபோது சொன்னது
"சந்தியா அத்தை எதுக்குப்பா அப்படி அவர் கிட்ட அடங்கிப்போய் பேசறாங்க?"
அவளுக்கு வீடு வரும்வரை மனம் ஆறவே இல்லை!
அப்படி ஒரு கம்பீரமான காந்தம் என் அக்கா!
இப்போதும், வீட்டில் ஓயாத வேலை வைக்கும் மூன்று சொர்க்கங்கள் இருக்கும்போதும், சின்ன இடைவெளி கிடைத்தால் மறக்காமல் ஃபோன்!
"எப்படி கண்ணா இருக்கீங்க எல்லோரும்? சாரிம்மா குட்டீஸ் எனக்கு ஓய்வே தருவதில்லை"
என்று ஆரம்பித்து, வழக்கமான அக்கறையான அறிவுரைகளோடுதான் முடிப்பார்!
கண்டிப்பாக மறந்து போகுமளவு வேலை இருக்கும் என்ற புரிதலால், அவர் மறந்தே போனாலும், மாலைவரை காத்திருந்து போன் செய்து,
"அக்கா, எனக்கு இன்னைக்குப் பிறந்தநாள், கல்யாண நாள், ஆசீர்வாதம் பண்ணுங்க" என்று உரிமையோடு வாங்கிக்கொள்ள முடிகிறது என்பது அவர் ஒருவரிடம் மட்டும்தான்!
அப்பாவைத் தவிர, வேறு யார் காலிலாவது சட்டென்று என்னால் தயக்கமே இல்லாமல் விழ முடிகிறது என்றால், அது அவர் காலில்தான்!
இந்தப் பிறந்த நாளில்கூட நேரில் போய் காலில் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டு வரத்தான் நெஞ்சு நிறைய ஆசை!
ஆனால், மூன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த சூழலில் நுழைவது தவறு என்று மூளை மனதைத் தடுத்துவிட்டது!
எனவே போனில் ஆசி!
இது போதும் இன்னுமொரு நூறாண்டுக்கு!
அப்பா தவறிய செய்தியை வெறும் குறுந்தகவலாகத்தான் அனுப்பினேன் அவருக்கும், ஏனையோருக்கும்!
பலருக்கும் ஏனோ, போன் செய்து விசாரிக்கக்கூட மனமில்லை!
அடுத்த சில மணி நேரங்களில் அக்கா ஓடிவந்துவிட்டார்!
சற்று நேரம் அம்மாவுக்கும், எனக்கும், எல்லோருக்கும் ஆறுதல் சொல்லி கையைப்பிடித்து அமர்ந்திருந்தவர்,
கிளம்பும்போது கார் வரை கூட்டிச்சென்று மெதுவாகக் கேட்டார்
"எப்படி சமாளிக்கப்போறே?
பணம் இருக்கிறதா, நான் ஏதாவது கொடுத்துவிட்டுப் போகட்டுமா?”
வேண்டாம் என்று நூறு முறை மறுத்தபோதும், போகும்போதும் சொல்லிவிட்டுப்போனார்
"ஏதாவது தேவை என்றால் தயங்காமல் கூப்பிடு!"
இந்த அன்புதான் சந்தியா அக்கா!
என்னால் அவருக்கு தம்பிடி பிரயோஜனம்
இல்லை! ஆனால் அவரால் நான் பெற்றவை ஏராளம்!
அவர் அப்படி இருப்பதைவிட இன்னொரு ஆச்சர்யம், அவரது குட்டிப்பதிப்பு - என் மருமகன்!
இருபது வருடம் கழித்துப் பார்க்கும்போது அவன் அம்மாவைப்போலவே!
அங்கிள் என்று ஒருமுறைகூட செயற்கையாய் கூப்பிட்டதில்லை அவன்!
மாமா,மாமா என்று கூப்பிடும்போது அத்தனை ஆசையாக இருக்கும்!
என் கல்யாண மேடையில் எனக்கு அப்பா அம்மாவையே கண்ணுக்குத் தெரியவில்லை!
அவன் திருமணத்துக்குப்
போயிருந்த அன்று அவசரமாய் வீடு திரும்பியே ஆகவேண்டிய இடைஞ்சலான சூழலில் அக்காவிடம் மட்டுமே பேசிக்கொண்டிருந்துவிட்டு ஓடிவர நேர்ந்துவிட்டது!
மறுமுறை வீட்டுக்குப் போனபோது
"ஏன் மாமா மேடைக்கு வராமலே போய்ட்டீங்க?"
அக்காவின் வளர்ப்பு வேறு எப்படி இருக்கும்?
உருவத்தை மட்டுமல்ல தனக்குள்
இயல்பாக ஊற்றெடுக்கும் அத்தனை அன்பையும் மகனுக்கும்
கடத்தியிருக்கிறார்!
நான் அறிந்தவரை கணவர், குழந்தைகள், வீட்டுக்கு வந்த மருமகள், மருமகன் என்று எதிலுமே குறைவில்லாத நிறைவாழ்வு அமைந்திருக்கிறது என் அக்காவுக்கு!
இன்னுமொரு நூறாண்டு இதே அன்பும் நிறைவுமாக வாழவேண்டும் அவர்!
அப்போதுதான் கடவுள் இருக்கிறான் என்பதில் ஒரு சின்ன நம்பிக்கையாவது தொடரும்!
அடுத்த பிறவி என்று ஒன்றிருந்தால்,
அவரை சந்திக்குமுன் இழந்துபோன அந்த இருபது வருடங்களையும் சேர்ந்து அனுபவிக்க,
ஒரே தாய் வயிற்றில்
அவருக்கு அடுத்துப் பிறக்கவேண்டும் நான்!
நன்றி:
இதை எழுத ஒருவகையில் தூண்டுதலாய்
இருந்த முகமும் பெயரும் அறியா என் தங்கை (பெரியக்கா?) @nigarnirai அவர்களுக்கு!
எழுத்தாளராக உங்களையும், ஒருமுறையாவது சந்திக்க வேண்டுமென்று தூண்டும் அபூர்வ மனுஷியாக சந்தியா அவர்களையும்
ReplyDeleteஒரே நேரத்தில் உயர்த்தும் பதிவு!
சபாஷ்!