வியாழன், 25 ஜூன், 2020

பேரிடர் காலத்து சோதனை!

கவிதை முயற்சிகள்!


கடந்து போகிறாய்
கொஞ்சிச் சிரிக்குது
ஜிமிக்கி!

இருளின் சமத்துவம்
வெளிச்சத்துக்கில்லை!
எல்லாமே ஒன்றாய்
கருவண்ணப் போர்வைக்குள்!
வர்ண வேறுபாடுகள் பகலின் சாபம்!

முன் நெற்றி முத்தமிட
அத்தனை நெருங்காதே
மூச்சு முட்ட வைக்கிறதுன்
பேரழகுப் பெட்டகம்!

பொங்குவதெல்லாம் சூடேறும் வரைதான்!
ஆறும்போது ஆடை போர்தது உறங்கும் பால்!

காதலி போல் தலை கோதும் தென்றல்!
கொண்டவள் போல் சேர்த்தணைக்கும் இருள்!
மாமியார் போல் ஓயாது கத்தும் குயில்
- அதிகாலை பெண்வடிவம்

குழந்தை!

எழுதிய கவிதை
ஏதென்று புரிய
பத்து மாதம்!

யார் கடந்தாலும்
முகம் பார்த்துச் சிரிக்கும்!
ரகசியமாய் மீனுரச
உடல் நெளித்து சிலிர்க்கும்!
ஆசையோடு கையில் அள்ள
சிக்காது நழுவும்!
- நீருறங்கும் நிலா!

எடையற்றதோ நிலவு,
நீரில் மிதக்கிறது?

காவேரிக் கரையோரம்
எனக்கென்றோர் இடமுண்டு
கதை முடிந்து போனால்
கால் நீட்டிப் படுத்துக்கொள்ள!
முன்பாவது விறகு, வறட்டி,
மண்ணெண்ணெய் தீப்பந்தம்!
மறுநாள் வரை காத்திருந்து
குடம் குடமாய் நீரிறைத்து
தணலாற்றித் தேடல்!
இப்போதோ ஒற்றை கற்பூரம்
மாரில் ஏற்றி வைத்து
படுத்தவாக்கில் உள்நுழைய
தாமதித்து வந்து கை நீட்டி
எப்படி நடந்ததென்று
ஆவலோடு கேட்பவர்க்கு
கதை சொல்லி முடிப்பதற்குள்
மண் கலயம் கைசேரும்!
காவேரி உள்ளிறங்கி
தலை நனைத்து துவட்டி,
வளர்ந்துவிடும் என்பதனால்
தைரியமாய் மீசை சிரைத்து
வீடுவந்து சேரும் சொந்தம்
சோறு தின்று இளைப்பாறி
சொல்லாமல் ஊர் திரும்பும்
காரியத்துக்கு கட்டாயம்
இருந்தாக வேண்டியோர்க்கோ
இரவுக்காட்சி திரையரங்கில்
படம் பார்த்து மனமாற்றும்!
காவேரிக் கரையோரமோ
அடுத்தவர்க்காய் காத்திருக்கும்!

ஈதல் வசைபட வாழ்தல்
அதையெண்ணி நோதல்
- வாழ்க்கைச் சக்கரம்!

நிலவுக்கும் உண்டு
நீயறியாச் சிரமங்கள்!
ஜன்னலோரப் பயணத்தில்
துணையென வரவேண்டும்!
குளம் நிறை நீருக்கு
ஒளியாடை தரவேண்டும்!
சிறு கை துளாவிய அமுது
என்றேனும் கிடைக்குமென
ஜொல் வடிய காக்கவேண்டும்!
வடை சுடும் கிழவிக்கோ
இடம் ஒதுக்கித் தரவேண்டும்!
உவமையென உரைப்பவை
சகித்துச் சிரிக்கவேண்டும்
நிலவுக்கும் உண்டு
நீயறியாச் சிரமங்கள்!

யாருக்கு யாரோ
அனுப்பி வைத்த தூதை
தடம் மாறி ஜன்னல் வழி
எனக்குரைத்து நிற்கிறது
காதல் கண்ட போதையில்
நிலை மறந்த நிலா!

கூட்டமாய் சேர்நது
கிண்டல் செய்து சிரிக்கின்றன
நட்சத்திரங்கள்!
தேய்ந்தழுகிறது நிலா!

நிமிர்த்திப்பார்க்க
எத்தனை யத்தனம்!
மறுதலித்து
கடிக்கப் பாய்ந்தது!
வருடங்கள் உருண்டன
விரயத்தில்!
சுருண்டிருந்தால் என்ன,
விதிக்கப்பட்ட பேரழகு
அதுவே அதன் இயல்பு
வயதோடு வந்த புரிதலில்
நாய் வாலின் இயல்பை
ரசிக்கும் பொறுமை வர
வாலாட்டி இணக்கமாய்
கூட நடக்குது
வாழ்க்கை நாய்!
கவிதை எழுதவா
புகைப்படம் எடுப்பதா
இரண்டும் வேண்டாமென
சலனம் விலக்கி
வேடிக்கை பார்க்க
- கவிதையாய்ப் பொழியுது
மழை!
- புகைப்படம் எடுக்குது
மின்னல்!
கை தட்டி ரசிக்குது
இடி!

நீயும் நானும்
நாமாய்க் கலந்து
நீயும் நீயுமென்றே
ஒன்றானோம்!

பல்லக்கில் ஊர்கோலம்
சப்பரத்தில் சயனம்
பித்தமும் சூடும் அகல
பன்னீர் இளநீர்க் குளியல்
பசியாறப் பக்குவமாய்
பாலும் தெளி தேனும்
பாகும் பருப்பும் கலந்து!
எதிலுமக்குக்
குறை வைத்தோம்
எமைப் படைத்த
ஆண்டவரே!
ஏனிப்படி
எங்களைக் கைவிட்டு
எங்கோ ஒடி ஒளிந்தீர்
எம் தேவரே!

கட்சிசார் அறிஞராதல்
அத்தனை சுலபமன்று!
எரித்தே கொன்றாலும்
தீவிபத்துதானென்போம்!
சாராயம் காய்ச்சினாலோ
சமூகசேவை நோக்கென்போம்!
ஆயிரம் மைல் நடந்து
குடும்பங்கள் சாகக் கண்டும்
லட்சம் கோடியென்று
கொடிபிடிப்போம்!
ஊர்ப்பணம் திருடி
ஓடியதில் குற்றமேதென்று
ஓயாமல் வாதிடுவோம்!

தந்ததென்றும்
பெற்றதென்றும்
எப்படித்
தரம் பிரிக்க
இதழ் கலந்த
முத்தத்தில்!

பூவின் மீதிருந்தாலும்
புல்லின் மடி கிடந்தாலும்
தடயமின்றிக் கதிரவனில்
கரையும் பனித்துளிபோல்
உன்னுள் கரையவேண்டும்
நான்!

பரஸ்பரம் தலையசைத்து
எதிரெதிர் திசை நடந்த
கடைசி சந்திப்பிலேயே
இறந்தவனுக்கு
மீண்டும் சாவதிலா பயம் சஹி?
விதிவந்து கண் மூடும்
கடைசி நொடியிலேனும்
உள்ளுரை உன் பூமுகம்
காணாது போகத்தான்
சற்றும் சம்மதமில்லை
தேன்மொழியே
எனக்கு!

வெள்ளி முளைத்ததோ உன் காதோரம்!
கயல்விழி மறைத்து ஆடி ஏறியதோ முகத்து!
ஆலிலை வயிறு சற்றே மேடிட்டுத் தளர்ந்ததோ!
கண்ணோரம் இதழோரம் சுருக்கம் முளைத்ததோ!
கால் நூற்றாண்டு காலம் காண நேராப் பிரிவிலும்
மனமுரை முகம் மட்டும் மூடிய விழிச்சிறைக்குள்
இளமை சற்றும் மாறாது!

ஆண்டுக்கொரு நாள்
நீள் பெருமூச்சொடு
நலமா என்றென்
காது நிறைக்கும்
உன் ஒற்றைச் சொல்
இருக்கிறது இன்றுவரை
தித்திப்பு மாறாது!
அழைக்க மறந்த ஆண்டு
நீயில்லை!
கேட்கவியலா நாளிலோ
நானில்லை!
சாவுச் சேதிக் காத்திருப்பில்
ஊசலாடுது நம்
மாறாக்காதல்
கால் நூற்றாண்டாய்!

உனக்கு என்னைப்
பிடித்திருக்கிறது
என்பதைவிட
வேறென்ன வேண்டும்
என் உயர்வைச் சொல்ல!

எத்தனை நதி கடந்தாலென்?
கரையமர்ந்து காலம் மறந்து
ரசித்தாலென்?
கால் நனைக்கவோ அன்றி
முங்கிக் குளிக்கவோ
நான் தேடும் ஒற்றை நதி
நீ!

நிறைவேறாதென்று தெரிந்தே வளர்ந்த
கிள்ளைக் காதலின்
காக்காய்க் கடி மிட்டாய் தித்திப்பும்,
கன்ன முத்த ஈரக் குளிர்ச்சியும்
காலன் வரும்வரை மனப்பதிவில்!

நிமிர்ந்து பார்ப்போர்
யாருமற்றுப் போனாலும்
ஒளிர்ந்துகொண்டுதானிருக்கிறது
நிலவு!

போகும் வழியெங்கும்
அன்பு விதை தூவிப் போனேன்!
நடந்த பாதையெலாம்
அன்பின் அடர்வனம்
இன்று!
அமாவாசைக்கு வைக்கும் சோற்றையும்
இப்போது மயில்களே சாப்பிடுகின்றன!
காகங்கள் அருகி
மயில்கள் பெருகிவிட்டனவா
அன்றி முன்னோர்கள்
வசிப்பிடம் மாறிவிட்டனரா?

விதைக்குள் மறைந்திருக்கும்
கனிகளைப்போல்
எனக்குள்ளே
நீ!

உலர்த்திய துணி காய்வதற்குள்
வந்து தொலைத்துவிட்டது சனியன்
- பெய்யெனச் சொல்லிப்
பொழியவைப்பவரின் சலிப்பு!
டூவீலர் வேறு வாசலில் நிற்கிறது
நனைந்து நாறிப் போகுமே
- அவையத்து முந்தியிருக்கச்
செய்வோனுக்கு வயிற்றெரிச்சல்!
ஹையா மழை என்று
கை கொட்டி ஆர்ப்பரிக்கிறது
அறியாக் குழவி மட்டும்!

பகர்வதும் பகிர்வதும்
நேரிடைதானே சரி?
காதலுக்கு எதற்கு தூது?
நீர்த்துப் போவதோ
சேர்த்துச் சொல்வதோ கூடப்
போகட்டும்,
பந்திச் சோற்றின்
சூடும் சுவையும்
எடுப்புச் சாப்பாட்டில் ஏது?

தாலாட்டித் தூங்கவைக்கவும்,
தூங்கவொண்ணாது தவிக்கவிடவும்
ஒற்றைக் காரணி
- உன் நினைவு!

உன்னை வெறுக்க
ஒற்றைக் காரணி
உயிரினும் மேலான
உன்மீதான நேசம்!

வேட்டைக்குக் காத்திருக்கும்
பசித்த மிருகமென
நாக்கைத் தொங்கவிட்டு
எச்சில் வழிய மூச்சிரைக்க
காதுகளை முன்னனுப்பி
கண்கள் காத்திருக்கும்
சன்னல் சதுரத்தில்
முகம் பதித்து
காலை இருள் பதுங்கி!
வெட்டவெளிக் குளியலில்
திளைத்திருக்கும்
அண்டைவீட்டு வேலைக்காரி
நிர்வாணம் தேடி!

துரட்டிக்கு எட்டா கனியெல்லாம்
பறவைக்கு!
கொய்ய முடியா மலரெல்லாம்
வண்டுக்கு!
ஈட்டவொன்னா பொருளெல்லாம்
ஏனையோர்க்கு!
- ஈந்து இசைபட
வாழும் வாழ்க்கை!

தெரிவதில்லை என்பதனால்
இல்லாமலா போய்விடுகிறது
அமாவாசை இரவில்
நிலவு!
போலவே நம் காதலும்
- அருகில்லை என்பதால்
அருகிப் போவதில்லை!

பங்கிட்டுத்தானே
பிரிந்தோம் நாம்...
மறத்தலும் துறத்தலும்
பறத்தலும் ரசித்தலும்
சுவைத்தலும் சுகித்தலும்
களித்தலும் செழித்தலும்
உனக்கென்றும்
நினைத்தலும் மருகலும்
தகித்தலும் தளர்தலும்
துவள்வதும் துடிப்பதும்
இரத்தலும் இறத்தலும்
எனக்கென்றும்
பங்கிட்டுத்தானே
பிரிந்தோம் நாம்!

பூக்கள் மலர்ந்துகொண்டும், கனிந்துகொண்டுமிருக்கின்றன!
குயில்கள் கூவிக்கொண்டுதான் இருக்கின்றன!
ரவியும் மதியும் பயணத்தை நிறுத்திவிடவில்லை!
நட்சத்திரங்கள் கண்ணடிப்பதும்
தென்றல் வீசுவதும்கூட தொடர்ந்துகொண்டே!
எல்லாமே எனக்காக என்று ஆடிய உயிரினம்தான்
எலிபோல் வளைக்குள் பதுங்கிக்கொண்டு!

கடவுளைத் தேடி கோவிலுக்குப் போவதே
மிகப்பெரிய நாத்திகம்!

பூக்கள் அறிவதில்லை
தம் பயணம்
பேடைக்கா மேடைக்கா
அன்றி பாடைக்கா என்று

தூய்மைப் பணியாளர்கள்!
காலில் விழுவோம்
மாலைகள் இடுவோம்-
கவனமாக
 வாசலில் நிறுத்துவோம்


இந்து முஸ்லிம் கிறுத்தவன்
பௌத்தன் ஐயர் ஐயங்கார்
செட்டி முதலி கவுண்டன்
வன்னியன் பள்ளு பறை
உயிர்க்கொல்லிக்கு பேதமில்லை!
உங்களுக்குள்தான் அத்தனையும்!

உன் வாசமில்லாக் காற்றில்
சுவாசிக்க ஏது ப்ராணவாயு?

உன் மடி சாய்ந்துன்
முகம் பருகி மரிப்பதுபோல்
ஒரு கனவு!
அதிகாலைக் கனவு
பலிக்குமென்ற
பேராசைக் காத்திருப்பில்
இப்போது நான்!
கடவுள்களைப் படைக்குமுன்
எதை வைத்து சண்டையிட்டிருப்பான்
மனிதன்?

பொறியில் அகப்பட்ட எலிகளைப்போல்
கதவடைத்துக் கிடக்கிறது உலகம்
எங்களுக்கே எங்களுக்கானதென்று
கொக்கரித்த மனித இனம்!
பறந்துகொண்டுதானிருக்கின்றன
பறவைகள்!
உலவிக்கொண்டுதானிருக்கின்றன
உயிரினங்கள்!
இப்போது சொல்லுங்கள்
யாருக்கானதிந்தப்
புவி?

கூண்டுக்கிளி பொரித்த குஞ்சுக்கு
இறக்கை
வெறும் அலங்காரமே!

துக்கவீட்டு வாசலில்
தலையாட்டி
சிரித்துக்கொண்டிருந்தன
பூக்கள்!

வேறெந்தத் தலைமுறைக்கும்
கிட்டாத வாய்ப்பிது!
தேர்வறையில்
கடைசி ஐந்து நிமிடம் என்று
மணியடிப்பது போல்
இறுதி வாய்ப்பை
வழங்கியிருக்கிறது
இயற்கை!
முடிந்தவரை
பிழை திருத்தம் செய்வோம்!
பிழைத்திருந்தால்
வருடம் முழுக்க வசந்தம்!
இல்லையேல்
பிழையகற்றிய நிம்மதியில்
பயணம்!

தகுதிக்கு மீறிய
பிரார்த்தனை
இறைஞ்சல்களிடமிருந்து
சிலநாள்
கோவில் கதவடைத்துத்
தப்பிக்க இறை கண்ட
குறுக்குவழி
கொரோனா?

ஒத்திவைத்த
சந்திப்புக்களை
கேட்க மறந்த
மன்னிப்புக்களை
சொல்ல மறந்த
நேசங்களை
செய்யத் தயங்கிய
பாவங்களை
இப்போதேனும்
முடித்துவைப்போம்
கரோனாவோ
வேறு கழுதையோ
கொண்டுபோய்
சேர்க்குமுன்பு!

வீசும் காற்றில்
விஷம் பரவுகிறது
எனக்கான
தனிமைச் சிறையில்
நானும்
உனக்கான
தனிமைச் சிறையில்
நீயும்
அடைபட்டுச் சாகுமுன்
மறந்துபோன ஆசைமுகம்
எனக்குள்
நிரப்பிச் சாவேன்
நாளையேனும்
மறுக்காமல்
வா!

காரிருளுக்கும்
வண்ணங்கள் தீட்டுது
உன் ஓரவிழிப் பார்வை!

சகிக்கமுடியாமல்
இரைகிறது
உன் மௌனம்!

மலர் நெடியும்
வியர்வை சுகந்தமும்
சரிவிகிதம் கலந்து
மயக்கும் ரசாயனம்
நீ!

தளும்பாத விழிகளோடு
கடந்து போயேன்
ஒருமுறையாவது!
ஓரிரவாவது
உறங்கிக் கழிக்கிறேன்!

எடையற்றதோ நிலவு,
நீரில் மிதக்கிறது?

கௌதமன் தந்த வரத்தில்
நிம்மதியாய் கல்லாய்
உறைந்து கிடந்தாள்
ரிஷிபத்தினி அகலிகை!
ராமன் பாதம் பட்ட சாபத்தில்
 மீண்டும் எழுந்தாள் உயிர்த்து!

மழைத்துளி புள்ளி வைக்கிறது
நீர்மேலிருக்கும் நிலாக் கோலத்தில்!

நீரில் மிதக்குது நிலவு
அசைத்துச் சிரிக்கிறது காற்று!

உரசிப் போன பட்டாம்பூச்சி
பூசிப் போன வண்ணம் போதும்
என் எளிய சந்தோஷங்களைப்
புதுப்பித்துக்கொள்ள!

ஒரு யுகத்துக்கான கதைகள் பேசி முடித்துவிட்டன
இமைக்கதவை சற்றே பூட்டிவை!

இப்படிக் கற்பிதத்தில் குமைவதற்கு
 - அன்று காரணத்தைக் கேட்டிருக்கலாம்!

துக்கம் விதைத்து
தூக்கம் திருடியவள்
நீ!

அமீபா போலொரு
வடிவிலா வாழ்வு ருசி
பழகியபின் உன்
சமச்சீர் பிம்பச்
செதுக்கு உளி
சிதைத்தெனை
வதைக்கையில்
வசிப்பதெங்கே
அதற்குள்!
பிம்பமே வாழ்வென்றெண்ணும்
பெரும்பான்மைக் குவியலில்
ஒன்றைத் தேடு
உன் மாளிகைக் கூட்டுக்கு!
தும்பைத் தேன் துளி போதும்
கனவற்ற என் வாழும் நாள்
முழுமைக்கும்!

மழையில் நனைவோமெனில்
தடுமன் பிடிக்குமென்றாய்!
அடர் வனத்தில் நடப்பதற்கோ
முழங்கால் நோகுமென்றாய்!
பயணம், நிலவு, வண்ணம்,
இசை, வானம், கடல்,
விகடன், கல்குதிரை
சடங்கு, சாமி, சாத்திரம், கோவில்
எதிலும் நமக்கிடை
ஆயிரம் முரண்கள்
காதல் சரடிணைத்த
எதிர்த்துருவ ஈர்ப்பில்
எப்படியடி
இத்தனை வலிமை?

பிரிவதென்ற முடிவுக்குப்பின்
விளக்கங்கள் விரயம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக