சனி, 25 ஜூலை, 2020

மகேந்திரன் என்னும் மகாகலைஞனும் மக்களின் விருப்பத் தேர்வும்!முள்ளும் மலரும்

காவியத்தின் பாடல்கள் வரிசை!இயக்குனர் மகேந்திரன் பிறந்தநாள் என்று ஏராளமானபேர் பாடல்கள் பகிர்ந்திருந்தனர்
அதில் தவிர்க்கமுடியாத பாடல்கள் நிறைந்த படம் - முள்ளும் மலரும்!


இளையராஜா என்னும் கோடைப்பெருமழை அடித்துப் பொழிந்த மற்றொரு படம்!

இதைவிட பலபடி மேலான ஜானி என்ற இசைக்காவியம் பற்றி இன்னொருநாள் பேசுவோம்

இப்போது, முள்ளும் மலரும்!

ஆனால், அரசியல் போலத்தான் பொதுமக்கள் ரசனையும் தேர்வும் - என்றுமே சிறப்பானதாகத்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை!

முள்ளும் மலரும் பாடல்கள் என்று பேச ஆரம்பித்தாலே, எல்லோரும் செந்தாழம்பூவில் பாடலில் போய் நின்றுகொள்கிறார்கள்!
ஜேசுதாஸின் மயக்கும் குரலும், கண்ணதாசன் வரிகளும் என்ற முரட்டு ப்ளஸ் பாயிண்ட் காரணமாக இருக்கலாம்!

பட்டுப்போல் குரலும், மெல்லிசையும் என்று அந்தப் பாடல் ஸ்கோர் செய்வதில் வியப்பில்லை
ஆனால், நிச்சயமாக கண்ணதாசன் அந்தப்பாடலுக்கு சரியான நியாயம் செய்திருக்கிறார் என்று தோன்றவில்லை!

'பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி'

"ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்"

இதெல்லாமே அடுத்தடுத்த அடிகள் ஒட்டாமல் தெறித்துப் போவது கண்கூடு!

வெறும் இசையும் குரலும் காப்பாற்றிய பாடல் இது!

போதாக்குறைக்கு பாலுமகேந்திரா, மகேந்திரன் என்ற இரண்டு மஹாகலைஞர்களும் அந்தப் பாடலின் காட்சியமைப்பை குதறிவைத்திருப்பார்கள்!

வண்டி அசையாமல் நிற்க, சரத்பாபு கைகளைத் தாறுமாறாக திருப்புவார் - பின்னால் வேடிக்கை பார்த்து நிற்பவர்கள்கூட மாறாமல் பல ஃப்ரேம்களில் வண்டி ஓடிக்கொண்டிருக்கும்!

ஷோபா என்னும் பிறவிக் கலைஞிதான் பாவம், காற்றில் பறக்கும் முடியை ஒதுக்கி, முகம் மோதும் காற்றுக்கு சிலிர்த்து என்று மெனக்கெட்டிருப்பார்!

மற்ற யாருடைய படமோ ஒளிப்பதிவோ என்றால் பரவாயில்லை
இதை காணாமல்கூட கடந்துவிடலாம்!

ஆனால் தங்கள் துறையில் மகேந்திர ஜாலம் செய்த இரண்டுபேர் இப்படி அப்பட்டமாக சறுக்கியிருப்பது கொஞ்சம் பெரிய ஏமாற்றமே.

காட்சி அமைப்பு, பாடல் வரிகள் இரண்டுமே இந்தப் பாடலை தரவரிசையில் கடைசியில் கொண்டு தள்ளிவிடுகின்றன!
லிங்க்:அடுத்தது - ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்!

சரியாக விளைந்து முற்றி வெடித்த கரும்பு மாதிரி பாலுவின் குரல்
ராஜாவின் துள்ளிசை
போதாக்குறைக்கு அவருடைய சிறப்புக் களம் - கோரஸ்!

காட்சி அமைப்பும், ஒளிப்பதிவு கோணங்களும், வெறியேற்றும் பாலு குரலும், ரஜினியின் மூர்க்க நடன அசைவுகளும் என்று மொத்தமாக ஒரு கொண்டாட்ட மனநிலைக்குத் தள்ளும் பாடல்
கூடவே ஒரு இனம்புரியாத சோகத்தையும் அடிநாதமாக!

கங்கை அமரன் வெகு சுலபமான வரிகளில் காளியின்  ஆதங்கத்தை, விரக்தியை வார்த்தைகளில் கடத்தியிருப்பார்
கேட்கும்போதெல்லாம் உற்சாகம் தெறிக்கவிடும் பாடல்!
லிங்க்:

இதற்கு மூன்றாம் இடம் என்பது அநியாயம்தான்!

ஆனால், அந்த அநியாயத்தை செய்திருப்பது ராஜாதான்!

அவரை யார், இதனினும் உயர்வான இரன்டு பாடல்களை இதே படத்தில் போடச் சொன்னது?

அடுத்தது வரும் இரண்டு பாடல்களும், ஏனோ அவ்வளளவாக பொதுஜன ஈர்ப்பைப் பெறாதது மிகப்பெரிய அநியாயம்!


இந்தப்பாடல் படத்தில் இருப்பதே பலருக்கும் தெரியாது போல!

ஜென்ஸி என்னும் மாய வசீகரியின் குரலில், பஞ்சு அருணாசலம் வரிகளில் இந்தப் பாடல்!

பலாச்சுளையோடு தேன் கலந்தாற்போல் திகட்டத்திகட்ட ஒரு இனிமை!

காதல் வசப்பட்ட ஒரு கிராமத்து வெள்ளந்திப்பெண்ணின் உள்ளூறும் உற்சாக ஊற்று இந்தப்பாடல்!

ஷோபாவின் மிகையற்ற நடிப்பும்
பாலுமகேந்திராவின் அசத்தலான ஒளிப்பதிவும்
ஜென்ஸியின் கொஞ்சல் குரலும் என
மாயச்சுழலில் இழுத்துச் செருகும் தேனிசை வெள்ளம்!

கேட்போரையெல்லாம் மலைச்சாரலில் துள்ளல் நடை போடவைக்கும் மாயாஜாலம் இந்தப் பாடல்!
லிங்க்:


இனி, என் பார்வையில், படத்தில் முதலிடம் பிடித்த பாடல்!நெல்லுச்சோறும், மீன்குழம்பும் மணக்க மணக்க!!

வாணி ஜெயராம்!
ஐஸ் கட்டியின்மேல் நழுவிச் செல்லும் ஸ்காட்ச் விஸ்கி இவருடைய குரல்

ஒற்றை மிடறு போதும், மெதுவாக உச்சத்தில் ஏற்றி உட்காரவைக்க!

வெறித்தனமான கவிதை இந்தப்பாடலின் படமாக்கம்!

ஃபடாஃபட் ஜெயலட்சுமி - சொக்கவைக்கும் திராவிட அழகி!
தாபமும் தவிப்பும், ஒரு சோத்துமூட்டையின் பாவனையில்!

தங்கை இருக்க, தான் மணம் பூண்ட குற்ற உணர்விலும் தவிப்பிலும் "சூப்பர்ஸ்டார் ஆகாத" ரஜினி தயங்கித் தயங்கி மருக,

ஆறுதல் சொல்வதோடு, தன் ஆசையும் சொல்லும் வேடத்தில், ஜஸ்ட் லைக் தட் ஸ்கோர் செய்திருப்பார் ஃபடாஃபட்!

காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும் போட்டிபோட
வாணி ஜெயராம் குரல் நம்மைக் கைபிடித்துக் கூட்டிப்போய் நாயகியின் ஆளை விழுங்கும் கண்ணுக்குள் தள்ளிவிட்டுப் போகும்!

சந்தேகமே இல்லாமல், தமிழ் சினிமா உலகின் அட்டகாசமான, வெகு யதார்த்தமான முதலிரவுக்காட்சி!

"இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க"

இந்த வரிகளுக்காகவே கங்கை அமரனுக்கு ஒரு தங்கக்காப்பு போட்டிருக்கவேண்டும் ராஜா

எவ்வளவு நாசூக்கும் எளிமையும் அழுத்தமுமாக தாபத்தைச் சொல்லி அழைக்கும் வரிகள்!
லிங்க்:


ராஜா என்னும் இசை அரக்கனைப்பற்றி சொல்லவே வேண்டாம்!
சொல்ல ஏதாவது புதிதாக இருக்கிறதா என்ன?

அது ஒரு அமுதசுரபி!
அதில் ஒரு துளியை மட்டும் சுவைத்து முடிக்கவே ஒரு ஆயுள் போதாது!

அதுக்கு எணெ ஒலகத்துல இல்லவே இல்ல
அள்ளி தின்ன எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல

இதோ ஒரு போனஸ் லிங்க்: ராஜாவின் வெறித்தனம்!