வியாழன், 16 ஜூலை, 2020

தினம்தோறும் சுசீலா - இரண்டாம் ஐம்பது!இன்றோடு நூறு பாடல்கள்!
அன்றன்று காலை என் மனதில் காரணமில்லாமல் ஓடும் இசையரசி பாடல்களின் பகிர்வு!
இன்றோடு நூறாவது நாள்! 
போஸ்டர் ஒட்டிக் கொண்டாடும் பெரிய சாதனை இல்லை இது!

கொட்டிக்கிடக்கும் ரத்தினங்களில் ஒரு ஐம்பதை மட்டும் எடுத்துக் கோர்ப்பதில் என்ன பெரிய சாமர்த்தியம் இருக்கிறது?

அரை நூற்றாண்டுக்கு மேலாக நம் பொழுதுகளை இனிமையாக்கிய குயிலை தினம்தோறும் சிறிது நேரம் நினைவு கூர்வது ஒரு சின்ன நன்றிக்கடன் - திருப்பதி உண்டியலில் ஒற்றை ரூபாய் காணிக்கை போடுவதுபோல!

இது என் நினைவுக்கு வந்த நூறு! 

உங்களுக்கும் இப்படி ஒரு பட்டியல் இருக்கக்கூடும்!
நேரமிருக்கையில் கேட்டுப்பாருங்கள்!
நன்றி!

முதல் பாடல் இணைப்பு- மீசைக்காரனுடையது!
“சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா!”
இதை எண்ணிக்கையில் அடக்க மனமின்றி- தனியாக- தலைமேல்!
https://youtu.be/bijCO0wR9k8

1.      மழை தூரல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது” V குமார் இசை, வாலி வரிகள் கிள்ளைக் காதலின் குதூகலமும் துள்ளலும் இசையரசி குரலில்! SPB இதில் வெறும் இசை நிரப்பி!

2.      ராஜாவும் வாலியும்! கூடவே இசையரசி!நீரிருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன்வெறும் சோகம் சொல்லாமல் அழுத்தமான ஆறுதலைச் சொல்லும் குரல்! இளையராஜ ராஜாங்கத்தில் தேன்குரல் மயிலிறகு வருடல்!

3.      எண்ணங்களாலே வேலியிட்டேன்- என் இதயத்தை உனக்கே காவல் வைத்தேன்!எத்தனை கொஞ்சல் இந்தக் குரலில்! காதல் சொட்டும் ஒரு அன்பழைப்பு இசையரசி குரலில்! கோவர்த்தனம் இசையில் ஒரு இனிய கானம்!

4.      கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண் பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார்சேதுராமன் பொன்னுசாமி நாதஸ்வரத்துக்கு சரியான இனிமைப் போட்டி இசையரசி! கவியரசரும் திரையிசைத் திலகமும் at their best!

5.      இன்றேனும் அவன் எனை நினைவானோ இளமையைக் காக்க துணை வருவானோ நன்று தோழி நீ தூது செல்வாயோ நங்கையின் துயர சேதி சொல்வாயோகணவன் மீது செல்லக் கோபம், காதலின் பெருமித ஏக்கம் இசையரசி குரலில்! கவியரசரும் மெல்லிசை மன்னர்களும் பக்க வாத்தியம்!

6.      ஏதோ ஒரு வகை எண்ணம் அதில் ஏனோ ஒரு வகை இன்பம் ஒரு நாள் ஒரு முறை கண்டேன் அவர் உயிரை தொடர்ந்தே சென்றேன்மெல்லிசை மன்னர்களும் கண்ணதாசனும் இசையரசியோடு! பெண்மையின் நளினமும் தயக்கமும் நாணமும் காதலும் தவிப்பும் குரல்வழி பாடலெங்கும்!


7.      கட்டித் தங்கம் என்று கன்னம் தொட்டுக் கொண்டு ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோஇசையரசி குரலில் இன்னுமொரு தாலாட்டு! கவியரசரும், மெல்லிசை மன்னரும் துணையிருக்க! அன்பு வழியும் குரலில் ஒரு இனிமைப் பண்!


8.      கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான் பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்வாலிபக் கவிஞர் வரிகளுக்கு மெருகூட்ட மெல்லிசை மன்னர்! உயிர் கொடுக்க இசையரசி! இளமையின் ஏக்கமும் தாபமும் பொங்கி வழிய...


9.      கரையோரம் மீன் கெடக்கு! கண் மூடிப் போற கொக்கு!மேற்கத்திய இசையும், தெம்மாங்கும் துள்ளாட்டம் போடும் ராஜ இசை! கூடவே குதித்தாடும் இசையரசி குரல்! சீண்டலும், தாபமும் சம அளவில்! இப்படி ஓர் அழைப்பை எப்படி நிராகரிக்க?

10.  துள்ளாட்டம் போடவைக்கும் ராஜ இசை! தள்ளாடவைக்கும் பஞ்சு அருணாசல வரிகள்! நேர்கொண்டு வெல்லும் இசையரசி! ஹம்மிங்கில் மட்டும் எத்தனை கொஞ்சல், பாடும்போது எத்தனை குதூகலம்!தாளத்தைப் போடு, ராகத்தைப் பாடு, சந்தோஷமாக பொன்னூஞ்சல் ஆடு11.  யமுனையிலே வெள்ளம் இல்லை விடியும் வரை கதை படிச்சான் விடியும் வரை கதை படிச்சி முடியாமல் முடிச்சி வச்சான்வாலியின் குறும்பும், மெல்லிசை மன்னர்களின் இசைத் தோரணமும்! கிறக்கமும், குதூகலமும், பெருமையும் ஆரம்ப ஹம்மிங் முதலே இசையரசி குரலில்!

12.  மெல்லிசை மன்னரும் கண்ணதாசனும் இசையரசியோடு!காதல் நாயகன் ஒரு பாதி காதலி தானும் மறுபாதிஎவ்வளவு துள்ளலும் இனிமையும் அந்தக் குரலில்! ஒரு நாடகப் பாடலில்கூட எத்தனை பாவம்! சுசீலா ஒரு தீவிர உணர்வு கடத்தி!

13.  மூவர் கூட்டணியில் இன்னொரு உணர்வுருக்கி!ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவாஏன், ...ன் ஏன் என்னுயிரே என உருகும் குரலில் கண்ணீர் தெரிக்கும்! உணர்ச்சிக்குவியலாய் உயிர் தரும் இசையரசி!

14.  மூவர் நிகழ்த்திய அற்புதங்களில் இன்னொன்று!கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க பொட்டு வைத்த பூவையர் போட்டி போடதுள்ளாட்டம் போடும் இசையரசி வாலிபக்குரல்! இன்னுமிவர் முதுமை எய்துவதில்லை!

15.  "அம்மம்மா மெய்சிலிர்த்தேன்... அச்சத்தால் தலை குனிந்தேன்" மூவர் அணியின் இன்னொரு பரிணாமம்! உறுத்தாத இசை, தெள்ளிய வரிகள்! தாபமும், தயக்கமும், மோகமும், ஆர்வமும் ததும்பி வழியும் இசையரசி குரல்!

16.  நான் இனிப் பறிக்கும் மலர் அனைத்தும் மணம் பரப்பும் சுற்றிஇதை சொல்லவேண்டுமா என்ன? மூவர் கூட்டணியின் வாசலில் நின்றது வெற்றி! ஒவ்வொரு வரியிலும் சந்தோஷத் துள்ளலில் இசையரசி! உற்சாக ஊற்று!

17.  மாயவநாதன் வரிகளுக்கு மெல்லிசை மன்னர்கள் இசை! சிற்றோடை போல் சலசலக்கும் இசை, குயில் போலக் கொஞ்சும் இசையரசி!விண்ணளந்த மனம் இருக்க மண்ணளந்த அடியெடுக்க பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள்கேட்க நேர்ந்த செவிகள் தீராப் புண்ணியம் செய்தவை!

18.  கட்டவிழ்ந்த கண் இரண்டும் உங்களை தேடும் பாதி கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும் ... கொண்ட பள்ளியறை பெண்மனது போர்களம் ஆகும்மெல்லிசை மன்னர்களும் கவியரசரும் உருவம் தர, காதலுக்கு உருகி உருகி உயிர் கொடுத்திருப்பார் இசையரசி!

19.  காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே வரும் காற்றினிலும் பெரும் கனவிலும் நான் காண்பது உன் முகமேஉள்ளம் உருக்கவே சேர்ந்த மூவர்! ஆரம்ப ஹம்மிங்கிலேயே ஆரம்பித்துவிடுவார் இசையரசி! நெஞ்சம் மறப்பதில்ல்ல்ல்ல்ல்ல்ல்லை..... சாகும்வரை!

20.  மூவரும் இணைந்து தந்த இன்னொரு மயிலிறகு! பெண் பார்க்க வந்தவனை ஈர்க்க இதில் ஒரு ரா...மன் என்ற கொஞ்சல் போதாதா என்ன? இசையரசி ஒரு மொத்தமான தேன்கூடு! பக்தியும் காதலும் ஊடும் பாவுமாய் இழையும் பாடலுக்கு ஜரிகை இழை இசையரசி!21.  கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ அதன் பேர் பாசமன்றோமூவரின் இன்னொரு முத்து! குரலிலேயே இவ்வளவு நேசத்தைக் காட்டமுடியுமா? இசையரசிக்கு இன்னும் நூறு ஜென்மத்துக்கு யாரும் நிகரில்லை!

22.  கண்களால் சொல்லி வைத்தேன் அதை காணவே இல்லை பெண்களே யாவும் சொன்னால் அதில் பெருமையே இல்லைகவியரசரும் இசைஞானியும் இசையரசியோடு! வயலின் கொஞ்சம் நின்று குரலைக் கேட்டுக் கிறங்கும்! ஏக்கமும் தாபமும் குரல் வழி இசையொடு!

23.  வாலிபக் கவிஞரும் இசைஞானியும்!நீ தொட்ட காலங்கள் சொல்லவோ? அது நீரிட்ட கோலங்கள் அல்லவோஎந்தக் காலத்தும் சோகமும் ஏக்கமும் முழுமையாய் சொல்லும் பாவம் இசையரசி அன்றி வேறு யாருக்கும் வாய்த்ததில்லை!

24.  காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான் கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்உற்சாகத் துள்ளலோடு ஆரம்பிக்கும் பாடல் விரக்தியும் துயரமுமாகத் தொடர்ந்து, போலி உற்சாகத்தில் முடிய, மூன்று உணர்வுகளையும் ஒரே பாடலில் துல்லியமாக! இசையரசி!

25.  பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது முருகா அமைதி கொண்டது - அறிவில் சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டதுதிரையிசைத் திலகமும், கவிரசரும்! இறைவனையே தாலாட்ட இசையரசியைவிட்டால் வேறு யார்? தாய்மையின் பெருமிதத்தோடு பக்திமாலை!

26.  கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டு போகவில்லை மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டு போகவில்லைமெல்லிசை மன்னர்களும் வாலிபக் கவிஞரும் இசையரசியோடு! பிரிவின் துயரும் அன்பின் வாஞ்சையும் பொங்கி வழியும் தேன் குரலில்!

27.  கண்களால் உன்னை அளந்தேன் தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்வாலிபக் கவிஞரும் மெல்லிசை மன்னர்களும் இசையரசியோடு! காதல் ஊர்வலம் இது! நேசமும் தாபமும் அன்பும் பொங்கி வழியும் இந்தப்பாடல் கண்ணில் கண்ட அனைவரையும் காதலிக்கத் தூண்டும்!

28.  ஆத்மநாதன் வரிகளுக்கு ராஜேஸ்வரராவ் இசை! என்ன அற்புதமான வரிகள்!அழகு நிலா சிரிக்கவில்லை என்பதையும் சொல்லு நான் வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லுஇசையரசி குரலின் உருக்கமும், கொஞ்சலும், கெஞ்சலும்! எக்காலத்தும் தவிர்க்கவே முடியாத பாடல்!

29.  ராஜாவும் கவியரசரும் கும்மாளம் அடித்திருக்கிறார்கள்!இருபதெல்லாம் தீருவது அறுபதென்றால் ஆறுவதுஅடக் கடவுளே! இசையரசியா இது? துள்ளிசைக்கு சற்றும் சளைக்காது ஈடுகொடுத்து துள்ளாட்டம் போடுகிறது குரல்! உற்சாகப் பூப்பந்து இந்தப் பாடல்!

30.  வண்ண மயில்களுக்கும் மந்திகளுக்கும் கல்யாணமாம் கல்யாணம்வாலிபக் கவிஞரும் மெல்லிசை மன்னரும் கேட்டதற்கு மேல் கொட்டிக் கொடுத்திருக்கிறார் இசையரசி! என்ன ஒரு எள்ளலும் துள்ளலும் அந்தத் தேன் குரலில்! உற்சாக ஊற்று!31.  முதல் ஹம்மிங்கில் ஆரம்பிக்கிறது சாராய வியாபாரம்! கிறங்கடிக்கும் குரலில் இசையரசி அன்பே... அன்பே என காதுக்குள் தேன் வார்க்கிறார்! மூவர் கூட்டணியில் இன்னொரு புதையல்!தோழியர் கதை சொல்லித் தரவில்லையா துணிவில்லையா பயம் விடவில்லையா

32.  நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனான்டி.. நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவான்டி..மெல்லிசை மன்னர்களும் வாலிபக் கவிஞரும்! ஹம்மிங்கும், கோரஸும் துணைவர, இசையரசி குரலில் பிரிவின் ஏக்கமும் தவிப்பும் தேனில் குழைத்து!

33.  தேடுதடி என் விழிகள் செல்லக்கிளி ஒன்று சிந்தையிலே நான் வளர்த்த கன்று உன் வயிற்றில் பூத்ததடி இன்றுமூவர் கூட்டணியின் இன்னொரு மேஜிக்! உற்சாகமாகப் பாடும் பாடலிடையே மெல்லிய சோகம் ஊடாட விடும் வித்தை இசையரசிக்கு மட்டுமே தெரியும்!

34.  நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்னமூவர் வழங்கிய முத்து! முகத்தில் அறைந்த சொல்லாக் காதலின் வேதனை ஒவ்வொரு சொல்லிலும்! எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும் துயரை செதுக்கியிருப்பார் இசையரசி

35.  பொன்னாடை போர்த்திவரும் புள்ளிமயில் போலிருக்கும் பெண்ணாகப் பிறந்தவரை பின்தொடர்ந்து உலகம் வரும்மெல்லிசை மன்னர்களும் கவியரசரும் துணைவர, ஆனந்தராகம் பாடுகிறார் இசையரசி! கேட்டால் பசி தீரும் பாடல் தேன் குரலில்!

36.  கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோகாற்றில் மறைவேனோ! நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன்!திரையிசைத்திலகம் இசை! கவியரசரின் அபிமான களம்! கொஞ்சல், காதல், பக்தி, ஏக்கம், நெகிழ்வு - என்ன இல்லை இசையரசி குரலில்?

37.  துயில்வது போல் ஒரு பாவனை தொடும் வரையில் சிறு வேதனை அனுபவித்தால் அது ஊடலோ அதன் பின்னால் சுகம் கூடுமோவாலிபக் கவிஞரும் மெல்லிசை மன்னரும் களம் அமைக்க கூவியிருக்கிறது குயில்! காதலன் வரக் காத்திருப்பில் தாபத்தோடொரு எதிர்பார்ப்பு!

38.  கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டு போகவில்லை மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டு போகவில்லைவாலிபக் கவிஞரும் மெல்லிசை மன்னர்களும்! தன் துயரம், தோழியின் தவிப்பு இரண்டும் சொல்லி, கொண்டவனுக்கும் ஆறுதல் சொல்ல இசையரசியன்றி வேறு யார்?

39.  ஊமை கண்ட கனவையும் உறவு தந்த நினைவையும் கருவிலுள்ள மழலையும் உருவம் காட்ட முடியுமோமூவரும் சேர்ந்து மனங்களை அசைத்த இன்னொரு பாடல்! விரக்தியும் துயரமும் இயலாமையும் அலட்சியமாக ஒற்றைக் குரலில்! எத்தனை கொண்டாடினாலும் போதாது இசையரசியை!

40.  பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா அதில் பூப் போல நினைவொன்று வைத்தாய் கண்ணா எந்தக் கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணாசுதர்ஷணம் இசையில் கவியரசர்! நிராகரிப்பின் வலியை இசையரசியன்றி யாரால் இப்படி சொல்லமுடியும்? உருகாத இதயம் ஏது இதற்கு?41.  அன்னையைப்போலே உன்னுடல் தன்னை வருடி கொடுத்திடவா.. நீ அமைதியுடன் துயில் கொள்ளும் அழகை ரசித்திடவா” R. சுதர்ஷனத்தின் உறுத்தாத இசை! ஆறுதலும் அன்பும் குழைத்து மயிலிறகால் மருந்திடும் இசையரசி! வடுவின்றி மறையும் வலியனைத்தும் இந்தக் குரல் கேட்க!

42.  கவியரசரும் திரையிசைத் திலகமும்!எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன் உன்னை என்னையல்லால் வேறு... யாரறிவார்?” காத்திருந்து வென்ற காதலின் சந்தோஷம், குறும்பு, ஒய்யாரமான கிண்டல்- என்ன இல்லை இசையரசி குரலில்!

43.  தானாட மறந்தாலும் சதையாடும் என்பார்கள் தாளாத பாசத்தில் அண்ணா என்றழைப்பார்கள்மூவர் கூட்டணியில்! சகோதர வாஞ்சை சொல்லும் பாடலில் அவ்வளவாக பேசப்படாத முத்து! இசையரசி குரலில் ஒரு தங்கையின் பெருமிதம்!

44.  பொய் மானையே அன்று மெய் மான் என அந்த சீதை பேதை ஆனாள் மெய் மானையே இன்று பொய் மானென இந்த கோதை பேதை ஆனாள்இசைஞானி இசையில் இசையரசி! மெல்லிய குரலில் மனம் துளைக்கும் சோகம்!

45.  நீரில் எந்தன் கண்கள் நீந்த நானே காரணம் காற்றில் இன்று காயும் எந்தன் ஆசைத் தோரணம்வாலியும் ராஜாவும் சொல்ல நினைத்த அத்தனையும் ஆரம்ப ஹம்மிங்கில் சொல்லிவிடுகிறார் இசையரசி! பிரிவுத் துயர் உயிர் தொடச் சொல்ல இன்றுவரை இவரன்றி யார்?

46.  பூப்பந்து கை கொண்டு நீ வந்து ஆட பொன் வாங்க நாள் பார்த்ததோ பாலாடை மின்ன என் மேலாடை பின்ன வாவென்று நான் கேட்பதோமெல்லிசை மன்னரும் கவியரசரும் கொடுத்த விருந்து! குரலில் துள்ளாட்டம் போட்டு பரிமாறும் இசையரசி!

47.  பால் மணக்குது பழம் மணக்குது பறவை கூடும் வனத்திலே தேன் இருக்குது தினை இருக்குது வேடுவர் தினை புனத்திலேதிரையிசைத் திலகம் துள்ளிசையில் குத்தாட்டம் போடும் கவியரசு வரிகள்! குறத்தியின் குதூகலம் இசையரசி குரலில்!

48.  மாலையும் இல்லை மணவறை இல்லை ஊர்வலம் எனக்கில்லை மலரே யாருக்கும் மனமில்லை மலரேகண்ணதாசனும் விஸ்வநாதனும் இசையரசியோடு! மொழியில்லாப் பெண்ணின் துயரத்தை உருகி உருகிச் சொல்கிறது குயில்!

49.  ராஜாவும் அமரனும் இறங்கி அடித்திருக்கிறார்கள்! இசையரசி குரலில் இன்னொரு நேத்து ராத்திரி யம்....மா! எப்படி இந்தக் கிறங்கடிக்கும் போதைப் பாட்டை கொண்டாட மறந்தது மினிபஸ் உலகம்? சுசீலா என்ன மாதிரி ஒரு வெர்சடைல் சிங்கர்ன்னு மறுபடி நிரூபணம்!

50.  எட்டி நிற்கும் வானம் உன்னைக் கண்ட நேரம் பக்கம் வந்து தாலாட்டும்! அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம் தொட்டுத் தொட்டு நீராட்டும்!தாமரையும் மெல்லிசை மன்னரும் பாதை போட, அன்புத் தேர் ஓட்டியிருக்கிறார் இசையரசி! அன்னையின் அன்பும் பெருமிதமும்!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக