புதன், 22 ஜூலை, 2020

நடுநிலை என்பது யாதெனில் ...


சரோஜாதேவியாக மாறிப்போன சுஜாதாக்கள்!


எண்பதுகளில்  "சிவப்பு கறுப்பு வெளுப்பு" என்ற தலைப்பில் தன் முதல் சரித்திர நாவலை குமுதத்தில் தொடர்கதையாக எழுத ஆரம்பித்தார் சுஜாதா!
சில வாரங்களிலேயே சிலபல மறைமுக அரசியல் காரணங்களால் அது நிறுத்தப்பட்டது!

குமுதம் அலுவலகத்தில் குண்டாந்தடியோடு குழுமிய குண்டர் கூட்டம், அதற்கான சாதி தூண்டுதல் இதெல்லாம் இந்தக் கட்டுரைக்கு சம்பந்தமற்ற சரித்திரக் கதை!

ஆனால், அதில் ஆட்சேபணைக்கு சொன்ன காரணங்களில் ஒன்று இன்றும் எனக்கு நியாபகம் இருக்கிறது!

கதாநாயகி ஓடிவரும்போது வெள்ளைக்கார வில்லன் தன் நண்பனிடம் சொல்லுவான்
"அவள் ஓடிவரும் அழகைப்பார், சாக்குப்பைக்குள் பூனைக்குட்டிகளைப்போல்!"

எனக்கு சட்டென்று பிடித்துப்போன உவமை, சிலருக்கு மறைமுக காரணத்தை மறைக்கத் திரையாக உதவியது!

அன்றைக்கு ட்விட்டர் போன்ற அறிவார்ந்த தளங்கள் இல்லை!

அதனால் சுஜாதாவுக்கு " என்னை விமர்சிக்கும் நீ ஏன் சரோஜாதேவியை விமர்சிக்கவில்லை, அப்படியானால் நீதான் ஆபாசவாதி" என்று அறிவுப்பூர்வமாக மடைமாற்றத் தெரியவில்லை!

தன்னை விமர்சிப்பவர்கள் எல்லோரும் சரோஜாதேவி வாசகர்கள் என்று கீழ்த்தரமாய் சிந்திக்க அவருக்குத் தெரியவில்லை - பாவம்!

ஆனால், அதைவிட முக்கியமான காரணம்,
தான் சரோஜாதேவியை விட நிச்சயம் உயர்ந்த தரமான எழுத்தாளர் என்ற மனப்பூர்வமான நம்பிக்கை அவருக்கு இருந்தது!

அதனால்தான், விமர்சனங்களை அவரால் நடுநிலையோடு எதிர்கொள்ள முடிந்தது!

இன்றைக்கு, தான் மற்றவர்களைவிட தரத்தில் உயர்ந்தவன் என்ற தன்னம்பிக்கை எவருக்குமே இல்லை - ஏனென்றால், அவரவர் தரம் அவர்களுக்கே தெரிந்து தொலைத்திருக்கிறது!

அதனால்தான், விமர்சிப்பவனை சிறுமைப்படுத்த, தங்கள் தரத்துக்கேற்ற புது வார்த்தையையே உருவாக்க முடிந்திருக்கிறது அவர்களால்!
"நடுநிலை நக்கிகள்!"


நடுநிலை என்று ஒன்று இருக்கவே முடியாது என்று ஒரு வாதம் - மிக பலமாக!
அதற்கு சில அறிஞர்களின் மேற்கோள்கள் வேறு!
போதாதா என்ன?

இவர்கள் புரிதலில் நடுநிலை என்பதற்கு விளக்கம் என்ன?

நீயும் சரி, அவனும் சரி - அல்லது நீயும் தப்பு, அவனும் தப்பு என்பதா?

சமன் செய்து சீர்தூக்கும் கோல் என்பதற்கு இதைவிட பைத்தியக்காரத்தனமான, அரைவேக்காட்டுப் புரிதல் இருக்கவே முடியாது!

ஒரு உறுதி செய்யப்பட்ட கொலைகாரன் மீது சுமத்தப்படும் இன்னொரு குற்றச்சாட்டு புனையப்பட்டது எனில், "அந்த வழக்கில்" அவன் நிரபராதி என்று தீர்ப்பளிக்கும் நீதிமன்ற நெறிமுறைக்கு என்ன பெயர்?
அது நடுநிலை இல்லையா?

இவர்கள் நீதிமன்றம் போனால்கூட, நீ குற்றம் செய்தாயா என்ற கேள்விக்கு, ஏன் அவன் செய்த குற்றம் உன் கண்ணில் படவில்லை என்று வேடிக்கை பார்ப்பவனைக் காட்டிக் கேட்பார்கள்!

ஏனென்றால், குற்றமுள்ள நெஞ்சு, தான் தவறு செய்யவில்லை என்று வாதிட வக்கற்றது!

அது அப்படித்தான் மடை மாற்றும்!

நான் குற்றமற்றவன் என்று சொல்லும் அருகதை எவனுக்குமே இல்லாத கீழ்த்தரமான அரசியல் சூழலில், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இவர்களுக்கு இருக்கும் ஒற்றை ஆயுதம், நீ/ அவன் மட்டும் யோக்கியமா என்பதே!

எனவேதான் இவர்களுக்கு நடுநிலையாளர்கள் மேல் அப்படி ஒரு தீராத எரிச்சல்!

நடுநிலை பேசுபவனை இன்னொரு அமைப்பின், சாதியின், மதத்தின், கட்சியின் சார்பாளன் என்று நிறுவிவிட்டால், அவனை, அவன் குற்றச்சாட்டை எதிர்கொள்வது வெகு எளிது இவர்களுக்கு!

எனவேதான் நடுநிலை என்ற ஒன்று இருக்கவே முடியாது என்று தீர்மானமாய் அடித்துவிடுவது!

அந்தக் குறிப்பிட்ட சூழலில் யார் குற்றம் செய்தவரோ, அவர்முன் தைரியமாக விரல் நீட்டிச் சுட்டுவதுதான் நடுநிலை - அது தான் சார்ந்தவராக இருந்தாலும்!

பாதிக்கப்பட்டவர், தவறிழைத்தவரைவிட நெறி தவறியவராகவோ,  முற்றாக தமக்கு ஒவ்வாதவராகவோ இருந்தாலும், அந்த குறிப்பிட்ட சூழலில் தான் சார்ந்த, ஆதரிக்கும் நபரோ, குழுவோ, கட்சியோ செய்தது தவறு என்று சுட்டுவது நடுநிலை!

இதனால், தான் சார்ந்த கட்சியின் பிம்பம் பாதிக்கப்படும், எதிரிக்கு அது சாதகமாகும் என்று தெரிந்தாலும் அந்த இடத்தில் நியாயத்தை சுட்டுவது நடுநிலை!

ஆனால், தான் சார்ந்த அமைப்பு தவறே செய்யாது, தாங்களோ, தங்களைச் சேர்ந்தோரே நேர்மையின் பிம்பங்கள் என்று மூர்க்கமாக வாதிடுவதும், அந்தத் தவறை, சூழலை நீர்த்துப்போக வைக்க, அடுத்தவன் தவறை அந்த இடத்தில் சம்பந்தமே இல்லாமல் சுட்டிக்காட்டி நடுநிலை வேஷம் போடுபவன்தான் - இவர்கள் கண்டுபிடித்த அந்த வார்த்தைக்கு சொந்தக்காரன் - நடுநிலை நக்கி!இங்கு எல்லாமே அப்படித்தான் மாற்றப்பட்டிருக்கிறது - சமத்காரமாகப் பேசுவதுதான் சாமர்த்தியம், சாணக்கியம்!

நா நயம்தான் நாணயம் என்று ஐம்பது ஆண்டுகாலம் கட்டமைக்கப்பட்ட பிம்பம்எல்லா ஊழல்களையும், எல்லா அயோக்கியத்தனங்களையும்  உயர்வானவை என்று மக்களை நம்பவைத்திருக்கிறது

வெறும் வாய்ப்பேச்சால் மட்டுமே இங்கு ஒரு அமைப்பால் தன்னை புனிதமானது என்று கட்டமைத்துக்கொள்ள முடிகிறது!

நேற்றுவரை தன்னாலேயே ஊழலின் ஊற்றுக்கண் என்று புழுதி வாரித் தூற்றப்பட்ட ஒருவனை அல்லது ஒரு அமைப்பை, தன்னோடு வந்து சேர்ந்தவுடன் நேர்மையின் பிறப்பிடமாக மற்றவர்களை நம்பவைக்க முடிகிறது!

பத்தாண்டு காலம் ஒரு கட்சியின் நிழலில், தனக்கும், தன் குடும்பத்துக்கும், வட்டத்துக்கும், சதுரத்துக்கும் நூறு தலைமுறைக்குத் தேவையான எல்லாவற்றையும் சேகரித்துக் குவித்தபின், அடுத்த தேர்தலில் காற்றுள்ள பக்கம் சாயும்போது, முன்பு தான் அண்டிப்பிழைத்த அந்த அமைப்பை நேர்மையற்றது என்று நிறுவ முடிகிறது!

ஒரு மாலையோ, சால்வையோ பகிரங்கமாய் பொதுவெளியில் இடம் மாறுவது ஒருவனை நல்லவனாகவோ, கெட்டவனாகவோ உடனடியாக மாற்றமுடிகிறது!

மக்களை மழுங்கச் செய்தபிறகு, மெல்ல மெல்ல தான் அவனைவிட கொஞ்சம் யோக்கியன் என்ற நிலைப்பாட்டிலிருந்து, தன்னை புத்தனென்றும், புனிதனென்றும் நிறுவ முடிகிறது!

இந்த மாறிய நிலைப்பாட்டை கேள்வி கேட்பவனை தைரியமாக தூற்றவும் முடிகிறது

ஏனெனில் இங்கு, அவர்களின் வாதப்படி, ஒன்று அந்தக் கொள்ளைக்கூட்டம் - அல்லது இந்தத் திருட்டுக்கூட்டம்!
நடுநிலை என்ற ஒன்று இல்லவே இல்லை!

இருவரையும் கேள்வி கேட்பவன் நடுநிலை நக்கி!

கலைஞரின் மகன் நேற்று சொன்னதுபோல்,
நடுநிலைகள் சேற்றில் புரளும் பன்றிகளிலிருந்து விலகி நிற்கிறார்கள்!
நடுநிலை நக்கிகள் தங்கள் ஆதாயக் கணக்குகளுக்கேற்ப,
அதில் ஏதோ ஒரு பன்றியை பசுவென்று சொல்லித் திரிகிறார்கள்!

முதலில் நீ சார்ந்த இடம் யோக்கியமா என்று கேட்பது, தான் யோக்கியன் இல்லை என்று தரும் மறைமுக ஒப்புதல் வாக்குமூலம்!

அவனை இதே கேள்வியைக் கேட்பாயா என்பது தனக்குத்தானே தந்துகொள்ளும் தரச் சான்றிதழ்.

இன்னொன்று,
இப்போது நமக்குத் தேர்வு செய்ய சுஜாதாக்களே இல்லை,

சரோஜாதேவிகளும்
சற்றே மேம்பட்ட சரோஜாதேவிகளும் மட்டுமே!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக