செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

குலதெய்வ வழிபாடும் கொரோனாவும்!
சில தலைமுறைகளுக்கு முன்னர்,
ஆடி மாசத்தின் கடைசி ஞாயிறு!

கழிவாடி என்று சொல்லப்படும் ஆடி மாத இறுதி வாரம்!
அன்றுதான் நடந்தது அந்த அதிசயம்!

 ஒரு சின்னஞ்சிறு கிராமம்
கோரைப்பாய் முடைவதற்கு பிரசித்தி பெற்ற ஊர்
சீஸன் இல்லாத நிலையில் கரைபுரண்டோடிய காவிரியாற்றில் சிலர் குளித்துக்கொண்டிருந்தனர்
அப்போது வெள்ளத்தில் இரண்டு பெட்டிகள் மிதந்து வரப் பார்த்தார்கள்!

புரண்டோடிய வெள்ளத்தில் நீந்தித் துளைத்துச் சென்று, ஆளுக்கு ஒரு பெட்டியாய் கரைக்கு இழுத்து வந்தார்கள்!

இருவரும் மாமன் மச்சான் உறவு முறையினர்.

அவற்றுக்குள் என்ன இருந்தது என்பது தெரியாத நிலையிலேயே அவரவர் கைப்பற்றிய பெட்டியில் இருந்ததை அவரவர் எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்தார்கள்!

முதல் பெட்டியை திறந்து பார்த்தபோது அரையடி உயரத்தில் பல சாமி சிலைகள் இருந்தன.


அடுத்த பெட்டியில் சிகப்பும் வெள்ளையும் கட்டம் கட்டமாக ஒரு பட்டுப்புடவை!

இது நிச்சயமாக ஏதோ ஒரு காரணத்துக்காக கடவுள் தங்களுக்கு அனுப்பிவைத்த பரிசு என்று உறுதியாக நம்பிய இருவரும், அடுத்தடுத்த தெருவில் இருந்த தங்கள் வீட்டில் கொண்டுவைத்து தினசரி தீபாராதனை செய்து வழிபட ஆரம்பித்தார்கள்!

கனவில் வந்து கடவுள் சொன்னதோ, அன்றி பூசாரியிடம் குறி கேட்டார்களோ - இரண்டுவிதமாகவும் சொல்லப்படும் கதைகளின்படி,
அந்தப் புடவையை வைத்து வழிபட்ட வீடும் சிலைகளை வைத்து வழிபட்ட வீடும், இரு தரப்புக்கும் முறையே  குலதெய்வம் கோவில் என்று அழைக்கப்படும் கோவில்வீடானது.

கொஞ்சம் கொஞ்சமாக இரு வீடுகளும் கோவிலாக வடிவெடுத்தன!
புடவை வைத்து வழிபட்ட கோவிலில், வழிபட வசதியாக ஒரு உருவச்சிலை வைக்கப்பட்டு, அது புடவைக்காரியம்மன் ஆயிற்று.


 எங்கே பிழைப்பைத் தேடிப் போனாலும், வருடம்தோறும் ஆடி மாதத்தின் கடைசி ஞாயிறன்று அந்தந்த உறவுமுறையின் அனைத்துப் பங்காளிகளும் அவரவர் கோவில்வீட்டில் தவறாமல் வந்திருந்து குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது!

இரு தரப்பிலும் எந்த நல்ல காரியம் என்றாலும், முதல் அழைப்பு அவரவர் கோவில் வீட்டுக்கு என்றானது!

நான் சார்ந்த புடவைக்காரியம்மன் கோவிலில் இன்னொரு அம்சமாக, அந்தப் பங்காளிகள் இல்லத்தில் நடக்கும் ஒவ்வொரு திருமணத்தின்போதும் சாமி கும்பிடும் தினத்தன்று (பொதுவாக திருமணத்துக்கு மூன்று முதல் ஏழு நாட்கள் முன்னதாக) கோவில் வீட்டிலிருந்து அந்தப் புடவை பெட்டியில் எடுத்துவரப்பட்டு, சாமி கும்பிட்டபின் திரும்ப எடுத்துச் செல்வது கட்டாயமான சம்பிரதாயம் ஆனது!

புடவை இற்றுப்போகவோ, கிழியவோ செய்யுமுன், அதே டிசைனில் புதியதாக ஒரு புடவை நெய்யப்பட்டு, கோவில் வீட்டு பூஜைக்கு பெட்டியில் வைக்கப்படும். பழைய புடவை ஆற்றில் விடப்படும்!

இந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்றுவரை தலைமுறைகள் தாண்டி ஒரு அதீத ஒழுங்கில் நடைபெறுகின்றன!

அந்த விழாவில் கலந்துகொள்ளும் ஆண், பெண், குழந்தைகள் யாவரும் எந்த வயது, அந்தஸ்து பேதமும் இன்றி கருவறையில் புடவைக்காரிக்கு தங்கள் கையால் தீபாராதனை செய்து வழிபடலாம்!

இது சிறுதெய்வ வழிபாடா, குலதெய்வ வழிபாடா, மூட நம்பிக்கையா என்பது குறித்த விவாதங்களைவிட, இந்த ஒருநாள் நிகழ்வில் நாங்கள் அடையும் நன்மைகள் பல!

ஏறத்தாழ நூறு குடும்பங்களுக்குமேல் கூடுவார்கள் ஒவ்வொரு கோவிலிலும்!

இரண்டு கோவிலும் ஒரு குறுக்குச் சந்தால் இணைக்கப்படும் அடுத்தடுத்த தெருக்களில் இருப்பதால், எல்லோரும் இரண்டு கோவிலிலும் சென்று சாமி கும்பிடுவது ஒரு கட்டாயச் சடங்கு

ஓட்ட நடையில் கடந்தால், இரண்டு நிமிடங்களில் கடந்துவிடக்கூடிய சிற்றூர்! காரில் போகும்போது, ஆரம்பிப்பதும் முடிவதும் ஒரு நொடியில்
அந்த ஊரே வருடத்தில் அந்த ஒரு நாள் கார்களால் நிரம்பிவழியும்!


யார் வரவுக்கும் காத்திருக்காமல் எட்டு மணிக்கு மேளதாளத்தோடு ஆற்றுக்குப்போய் குளித்து ஈரத்துணியோடும் நெற்றி நிறைய விபூதியோடு இங்கே ஒரு அரசு உயர் அதிகாரி, அங்கே ஒரு கணிப்பொறி நிபுணன், இந்தப்பக்கம் ஒரு டாக்டர், வக்கீல், தொழிலதிபர் என்று தண்ணீர் குடமோ சொம்போ தூக்கி இரண்டு கிலோமீட்டர் வெயிலில் நடந்துவருவார்கள்!

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யும் இடைவெளியில் குடம் குடமாக பானகமும் இனிப்பு பணியாரமும் ஓயாமல் பிரசாதமாக விநியோகம்!

அநேகமாக எல்லோருமே பானகமும், பணியாரமும், மாவிளக்கும் எடுத்து வருவார்கள்! வீட்டுக்கு என்று எதுவும் மிச்சம் எடுத்துச் செல்லும் பழக்கம் எப்போதுமே கிடையாது!

கோவிலுக்குப் பின்னால் சமையல்கட்டில் சாம்பாரும் ரசமும் கொதிக்கும் மணம் வேறு பசியைத் தூண்டும்!

ஏறத்தாழ ஒரு முழு வருட இடைவெளிக்குப்பின் எல்லோரும் ஒரு இடத்தில் முழு நாளும் கூடியிருக்க நேர்வதில் பல விஷயங்கள் பேசி முடிக்கப்படும்!

தேடிப்பார்த்தாலும் ஒரு சோடாக்கடை கூட இல்லாத சிற்றூரின் கொளுத்தும் வெய்யிலுக்கு பானகம் பேரமிர்தம்!

வருடம் ஒருமுறையே பார்க்க நேரும் உறவுகளோடு கைகோர்த்து ஊரையே சுற்றிவரும் நகரத்துக் கான்க்ரீட் காடுகளில் வளர்ந்த குழந்தைகள்!

அவர்களுக்கு காவேரிக்கரையும், வெற்றிலைக் கொடிக்காலும், கோரை வயலும், ஊரை வளைத்து ஓடும் வாய்க்காலும், அரசமரத்தடி நாகர் சூழ் பிள்ளையாரும் என எல்லாமே அதிசயம்!


பெரியவர்களுக்குப் பேச ஆயிரம் விஷயங்கள்! ஊர்வம்பு முதல் உறவுக்கலப்பு வரை!

"இத்தனை வளர்ந்துட்டானா/ளா உன் மகன்/மகள்? நம்ம ... வீட்டில்கூட கல்யாணத்துக்குப் பார்த்துக்கிட்டிருக்காங்க. பேசி முடிச்சுடு!"
வெறும் பேச்சோடு போவதில்லை- ரகசியமாய் பெண்ணை, பையனை பார்க்கவைக்கும் படலமும் நடக்கும்!

"என்ன மாமா அப்படிப் பார்க்கறீங்க,அது உங்க மகனுக்கு முறைப்பெண்தான்! பேசி முடிச்சறலாமா?" என்ற அக்கறை விசாரிப்பு ஒரு பக்கம்!

" அழகான பொண்ணுங்களை பார்க்கணும்ன்னா, எங்க கோயிலுக்குத்தான் வரணும்! உங்க பிள்ளைகளுக்கு அழகு எப்படி இருக்கும்?"
"அது சரி, நீங்கல்லாம் எங்க வீட்ல பொண்ணெடுத்த பயலுகதானே, உங்களுக்கு அழகான பிள்ளைகள்தானே பிறக்கும்? உங்க தங்கச்சிங்களை கட்டிக்கிட்டு வந்துட்டு எங்களுக்கு எப்படிடா அழகான குழந்தை பிறக்கும்?" 
என்ற ரத்தத்தில் ஊறிய நக்கல் ஒருபக்கம்!

அபிஷேகம், அலங்காரம், போதும் போதுமென்று கதறக் கதற இலையில் விழும் சுடுசோறு!

அதற்குப்பின் அந்த வருட வரவுசெலவு பார்க்கப் பெருசுகள் எல்லாம் உட்கார, உள்ளூர் உறவுகளின் வீட்டுக்கு ஒரு சிற்றுலா - தவறாமல் அங்கும் காப்பித்தண்ணி அல்லது சோடா கலர்!

தலைக்கட்டுப் பணம் வசூலித்து முடித்து, சொந்தத்தில் ஒருவரே பூசாரியோடு பராமரிப்புப் பொறுப்பும் ஏற்றவரிடம் ஒப்படைத்து, பிரசாதப்பை வாங்கிக்கொண்டு, போகலாமா என்று நூறுமுறை கேட்டபின்னும் மனமின்றி வண்டியேறும் பிள்ளைகள்!

கையசைப்பும், கட்டிப்பிடிப்பும், தலையசைப்பும் என நூறுவகை விடைபெறலோடு மெல்ல நகரும் வண்டி- அழியாத நேச நினைவுகளின் புதுப்பிப்பின் தித்திப்போடு!

இத்தனை உறவு நமக்கிருப்பதே அங்குதான் தெரியவரும்!

இத்தனை பெரியப்பா, சித்தப்பா, அண்ணன், தம்பி, அக்கா தங்கைகள் எனக்கிருப்பதே இங்கே வந்தால்தான் தெரிகிறது என்று அதிசயித்துப்போகும் பிள்ளைகள் அலைபேசியில் சில புதிய எண்கள் சேர்ந்திருக்கும்!

வாத்தியார் பையனா நீ என்று வயது பாராமல் இழுத்து மடியமர்த்திய பெரியவர் நினைப்பில் கண்கள் கசியும்!அதற்குப்பின் ஒருமாதம் வீட்டுக்குள் பேசிக்கொள்ள கோடி விஷயம் சேர்ந்திருக்கும்!
அடுத்த வருட கழுவாடி எப்போது வரும் என்று அப்போதே மனம் ஏங்க ஆரம்பிக்கும்!

இந்த வருடம் கொரோனா அந்தப் பெரும் சந்தோஷத்தில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது!


அவரவர் வீட்டில் எட்டரை மணிக்கு பானகம் வைத்துப் படைத்துவிட்டு, பன்னிரண்டரை மணிக்கு உள்ளூர் பங்காளிகள் மட்டும் தீர்த்தம் எடுத்துவந்து பூஜை செய்வதை ஜூம் ல் நேரலையில் பார்த்து மனதைத் தேர்த்திக்கொண்டு பணியாரம் வைத்துப் படையல் போட்டு சாப்பிட்டதில் வயிறு நிறைந்தது! மனம்தான் ஏக்கத்தில் வறண்டுபோனது!

இந்த சின்னச்சின்ன சந்தோஷங்களையாவது விட்டுவைக்குமளவு கருணையோடிருக்கட்டும் இறை!

முடிக்குமுன் ஒரு சின்ன நிகழ்வு!

வழக்கம்போல் பாடம் எனக்குத்தான்!

சென்றமுறை போயிருந்தபோது,
வருடம் ஒருமுறை வருவதே ஏதோ சாதனைபோல் அருகில் உட்கார்ந்திருந்த தமிழ்செல்வனிடம் அதிகாலை மூணு மணிக்கு எழுந்து கோவையிலிருந்து கிளம்பி மூன்று மணிநேரம் பயணித்து வந்த கதையைச் சொன்னபோதுநேரிடையாக எதுவும் சொல்லவில்லை!

கடந்துபோன ஒரு குடும்பத்தை அழைத்தான் - "இங்கே வா, இது யார் தெரியுதா, உனக்கு சித்தப்பா முறை!" என்று என்னை அறிமுகம் செய்துவைத்துவிட்டு
அடுத்த கேள்வியைக் கேட்டான்
"ஆமாம், நீ சிங்கப்பூர்ல இருந்து எப்போ வந்தே?"

"என்ன சித்தப்பா புதுசா கேட்கறீங்க, வருசா வருஷம் கழிவாடிக்கு தவறாமல் குடும்பத்தோடு வருவதுதானே! அப்போதானே நம் குழந்தைகளுக்கும் நம்ம சொந்தங்களையெல்லாம் தெரியும்?"

லண்டனிலிருந்துகூட ....

இதைவிட என்னை ....

இன்னும் நான் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது!