உங்கள் அழுகை அவனை அவமானப்படுத்துவதை நீங்கள் உணரவில்லையா?
உலகத்தின் கடைசி செவி ஏதேனும் ஒரு ஓசையைக் கேட்கும்வரை வாழ்ந்துகொண்டிருக்கப்போகும் ஒரு மகா கலைஞனை,
வெறும் ஸ்தூல சரீரம் மறைந்துவிட்டதற்காக இறந்துபோனான் என்று சொல்ல எப்படி உங்களுக்கு மனம் வருகிறது?
நிலையற்ற ஒரு மானிட வாழ்வில் அதிகபட்சமாக என்ன செய்யமுடியுமோ, அதற்குப் பலமடங்கு அதிகமாக இந்தச் சமூகத்துக்குச் செய்துவிட்டவனை இறந்துபோனான் என்று சொல்வது அநீதி!
இத்தனை நாள் உங்கள் பயணத்தில், உங்கள் தனிமையில், உங்கள் சோகத்தில், உங்கள் மகிழ்ச்சியில், உங்கள் கவலையில், உங்கள் வெற்றியில், உங்கள் தோல்வியில்
எந்த இசைக்கரம் நீட்டி உங்களை அணைத்துக்கொண்டானோ,
அந்த இசைக்கரம் நீட்டி உங்கள் கொள்ளுப்பேரனை, இன்னும் நூறு தலைமுறையை அணைத்துக்கொள்ளும், அந்தக் கரத்தை எடுத்துக்கொண்டு போய்விடவில்லை அந்தப் பூவுடல்!
அது எக்மோ போன்ற வெளிப்புறக் கருவிகளால் இம்சைப்படுத்தப்பட்டு, இனி ஒரு நடமாட முடியாத இயந்திரமாக படுக்கையில் வைத்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய ஜீவன் இல்லை!
பலரும் தன் தகப்பனை இழந்ததுபோல் இருந்தது என்று சொல்லியிருந்தார்கள்! அதுதான் அந்த மனிதனின் வெற்றி!
ஒரு சபிக்கப்பட்ட ஏப்ரல் நான்காம் தேதி காலை, என்னை ஊட்டிவளர்த்த மனிதனின் காதில், தயவு செய்து நீ செத்துப்போ, இப்படி உன்னை என்னால் பார்க்க முடியவில்லை என்று சொல்லிப்போய், மதியமே அந்த உயிர் விடுதலையான சேதி கேட்டு எனக்கு வந்த ஒரு துயரம் சூழ்ந்த நிம்மதிதான் நேற்றும் வந்தது!
பன்முகத்தன்மை வாய்ந்த அந்தக் குரலுக்காகவோ, இந்த உலகத்தில் வேறு எந்த மனிதனும் முயன்றுகூடப் பார்த்திராத விஷயமாக, தன் நாற்பதாவது வயதில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து அதிலும் ஆளுமையை நிரூபித்தமைக்காகவோ மட்டும் இன்று யாருமே அந்த மனிதனைக் கொண்டாடவில்லை!
அந்த மனித நேயம், உயர்வு தாழ்வற்ற பழகும் இனிமை இந்த உயர் குணங்களுக்காகவே அவன் அதிகம் நினைவு கூரப்பட்டான்.
தான் சார்ந்த துறையில் சாதிப்பது பலருக்கும் வாய்க்கக்கூடும்,
ஒரு நல்ல மனிதனாகப் பெரும்பான்மையோரால் கொண்டாடப்படுவது கோடியில் ஒருவனுக்குக்கூட அல்ல, ஒரு யுகத்தில் ஒருவனுக்கே வாய்க்கும்!
அதுதான் யாருமே செய்ய முடியாத அவனது அருஞ்சாதனை!
நேற்று அந்த நள்ளிரவு நேரத்தில்,
தன்னெழுச்சியாக
எந்த ஒரு அரசியல், மத, ஜாதி, சமூக நிர்பந்தங்களும் இல்லாமல் சென்னைத் தெருவில் கூடிநின்று வாழ்த்திய அந்த ஒவ்வொரு உயிரிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதம்தான் அவன்!
அவன் மறைந்தான் என்று நினைப்பதே அறிவீனம்!
அவன் கொண்டாட்டத்தின், ஆறுதலின், மகிழ்ச்சியின் வடிவம்!
அதுதான் அவனை நிரந்தரி ஆக்கியிருக்கிறது!
உலகில் துயரமும், கீழ்மையும் இருக்கும்வரை இந்த உயர் ஆத்மா அதை சமப்படுத்த இறைவனால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டுக்கொண்டே இருக்கும்!
அதற்கு ஓய்வும் உறக்கமும் கிடையாது!
அது நம்மை எந்நேரமும் ஒரு நல்ல அலைவரிசையாய் அணைத்துக் காத்துக் கிடக்கும்!
உங்களுக்குக் கொண்டாட ஒரு மிகப்பெரிய ஒற்றைக்காரணி இருக்கிறது!
இப்படி ஒரு மாபெரும் ஆத்மா, ஸ்தூல வடிவில் உலாவிய காலத்தில் அதை அடையாளம் கண்டு, கொண்டாடும் வாய்ப்பு இந்த அற்ப மானிடப்பிறப்பில் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!
அதற்கு இறைவனுக்கும், மானிட வடிவெடுத்து வந்த பாலு என்ற இறைக்கும் நன்றி சொல்லி வழியனுப்பிவையுங்கள்!
வா மச்சான் வா, என்றோ, வண்ணம் கொண்ட வெண்ணிலவே என்றோ, சங்கரா நாத சரீராபரா என்றோ புலிக்குப் பிறந்தவனே என்றோ, அந்த சங்கீத மேகம் பொழிந்துகொண்டேதான் இருக்கப்போகிறது!
இல்லை, உங்களுக்கு அழுதேதான் ஆகவேண்டுமென்றால்,
இந்தத் தற்காலிகப் பிரிவிலும், அவரை சாதி பார்த்து, மதம் பார்த்து, இனம் பார்த்துத் தூற்றும் கேடுகெட்ட ஜென்மங்களுக்காக,
அவர் சம்பாதித்ததை அவர் எப்படி செலவு செய்யவேண்டும்,
அவர் இறப்புக்கு வருத்தம் தெரிவிப்போனை நீ எப்போது என்று கேட்டுப் பூரிக்கும்,
யார் எப்போது பேசவேண்டும், என்ன பேசவேண்டும், எங்கு போகவேண்டும், என்ன செய்யவேண்டும் என்று
தாங்கள் மட்டுமே தீர்மானிக்கப் பிறந்தவர்கள் என்றும்,
தங்களை மட்டுமே அறிவார்ந்தோர் என்று
கொண்டாடித் திரியும்
அற்ப ஜீவிகளுக்காக,
அவர்களை அரசியல் ஆதாயத்துக்காகத் தூண்டிவிட்டு தங்களைத் தலைவர்கள் என்று சொல்லித் திரியும் சில இழி பிறவிகளுக்காக,
அந்தக் கேவலங்களை சகித்து வாழும்
நம் சபிக்கப்பட்ட வாழ்வுக்காக அழுங்கள்!
இறப்பே அற்ற அந்த மகாகலைஞனுக்காக அழாதீர்கள்!
Excellent!
பதிலளிநீக்கு