கோவிட் பாசிட்டிவ். சொல்லுவதற்கு எவ்வளவு எளிமையாக இருக்கிறது!
ஆனால், சாவின் விளிம்புவரை அலட்சியமாக இழுத்துப்போய் நிறுத்திவிட்டது!
குளிக்க அடம்பிடிக்கும் குழந்தையைப்போல தப்பித்து ஓடி வரத்தான் பெரிய சாமர்த்தியம் வேண்டியிருந்தது!
ஒரு விஷயம்!
கொரோனா எல்லோரையும் ஒன்றுபோலத் தாக்குவதில்லை!
எனவே, இதுதான் கொரோனாவிலிருந்து மீண்டுவரும் ஒரு பொதுவான விதிமுறை என்று சொல்லும் எதையுமே நம்பாதீர்கள்!
உங்களுடைய பொதுவான ஆரோக்கியம், உடல்நிலை, வயது என்று எதுவுமே இந்த நோயின் தாக்கத்துக்கு அளவுகோல் இல்லை!
பின்னே?
இது கொஞ்சம் மனைவி அமைவதைப்போல அந்தரங்கமான விஷயம்!
அந்தக் குட்டி வைரஸுக்கு உங்களை எவ்வளவு பிடித்திருக்கிறதோ, அந்த அளவுக்கு தாக்கம்!
அவ்வளவே!
ஆனால், அறிகுறிகள் தெரியவந்தபின், ஒவ்வொரு மணி நேரமும் முக்கியம்! அது உங்கள் மீட்சியை விரைவுபடுத்தும்!
சரி!
இனி கதைக்கு வருவோம்!
யோசித்துப் பார்த்தால், ஆரம்பம் முதலே இந்தக் கொரோனா எச்சரிக்கைகளை கொஞ்சம் அலட்சியமாகவே டீல் பண்ணியிருக்கிறேன்!
கேரளா, உடுமலை, பழனி மோகனூர் என்று கோபால் பல்பொடி வியாபாரி மாதிரி ஓயாமல் சுற்றிக்கொண்டிருந்ததில், எப்போதோ கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் உள்ளே நுழைந்து ஒளிந்துகொண்டிருந்தது போல!
செப்டம்பர் 29, ஆர் எஸ் புரம் வாங்கிக்கிளைக்கு கொஞ்சம் ஆர்வமாகவே கிளம்பிப்போனேன் - அந்த ஒல்லிக்குச்சி உடம்புக்கார ரம்யாவைப் பார்த்து மாசக்கணக்காச்சு!
டிபி ரோடு முழுக்க கொத்துப் பரோட்டா போட்டு வைத்திருக்கிறார்கள்! குளிரக் குளிர ஏசி போட்டு வந்த (இன்னொரு வயலேஷன்) வண்டியை ஒரு சந்துக்குள் நிறுத்திவிட்டு, மொட்டை வெயிலில் ஏதோ நியாபகத்தில் வங்கியையும் தாண்டி ஒரு கிலோமீட்டருக்கு நடந்து போய் திரும்பிவர, உள்ளிருந்த வைரஸ் சந்தோஷமாக விழித்துக்கொண்டது!
ரம்யா ட்ரான்ஸ்ஃபர் ஆகிப்போன ஏமாற்றம் என்றுதான் முதலில் நினைத்தேன்!
வீடு வருவதற்குள் காய்ச்சல் சிவ்வென்று ஏறியிருக்க, சளி, இருமல் என்று கண்டதும் காதல் மாதிரி கடகடன்னு பத்திக்க ஆரம்பிச்சுது!
நல்ல வேளை! வீட்டுக்கு வரும் வழியிலேயே மருத்துவர் ஆலோசனைப்படி, மருந்து, ஐ ஆர் தெர்மாமீட்டர் எல்லாமே வாங்கிக்கொண்டு வந்து சமைந்த பெண் குடிசைக்குள் உட்கார்ற மாதிரி ரூமுக்குள் ஐசோலேட் பண்ணிக்கவரைக்கும் கொஞ்சம் ஜாலியாகக் கூட இருந்தது!
மரியாதைப்பட்ட தூரத்தில் மனைவி நின்று கண்ணில் பயத்தோடு பேசுவதெல்லாம் கனவில்கூட வாய்க்காத லக்ஸுரி!
சுற்றி சுற்றி மருத்துவர்கள் இருக்கும் தைரியத்திலும், நமக்கு ஒன்றும் ஆகாது என்ற அபார நம்பிக்கையிலும் இன்னொரு மிகப்பெரிய தவறான முடிவை எடுத்தேன்!
ஸ்வாப் டெஸ்ட் எடுக்க வேண்டியதில்லை என்ற முடிவு.
எப்படி இருந்தாலும் கொரோனாவுக்கு இதுதான் சிகிச்சை!
ஐந்து நாள் ட்ரீட்மெண்ட்டில் சரியாகப் போகிறது. எதற்கு தேவையில்லாமல் டெஸ்ட் செய்து கஷ்டப்பட வேண்டும் என்று ஏக மனதாக முடிவு செய்து, டெஸ்ட் செய்யாமலே மருந்து மாத்திரைகள் மட்டும் சாப்பிட்டுவந்த நிலையில்,
ஆறாவது நாளிலும் எந்த குணமும் இல்லாத நிலையில் காய்ச்சலும் மூச்சுத்திணறலும் வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்க, முதல்முறையாக பயம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது!
இதற்கிடையே மகனுக்கும், மகளுக்கும் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்க, அவர்களும் தனித்தனி அறைகளில் வாசம், மருந்து மாத்திரை!
மனைவியின் கல்லூரித் தோழர் கொரோனா ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்தவர், உடனே, உடனே ஒரு ஸ்கேன் எடுக்க வலியுறுத்த, அந்நேரத்துக்குமேல் எடுக்க முடியாமல், மறுநாள் மாலைதான் எடுக்க நேர்ந்ததில், மேலும் ஒரு அதி முக்கியமான நாள் இழப்பு!
ஸ்கேன் ரிப்போர்ட் கைக்கு வரும்போது இரவு எட்டு மணி.
உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தாகவேண்டிய நிலையில் நுரையீரல் பாதிப்பு!
ஏறத்தாழ நூறு ஃபோன் செய்தும், எந்த மருத்துவ மனையிலும் இடம் இல்லை!
ஃப்ரஸ்ட்ரேஷன் என்றால் என்ன என்பதை தெளிவாக உணர்ந்த தருணம்!
சுகாதாரத்துறை உயர் அதிகாரிவரை பேசியும், அரசாங்க விதிமுறைகளை மீறும் வாய்ப்பே இல்லை!
ஸ்வாப் டெஸ்ட் எடுத்து, ஐசிஎம்ஆர் எண் வாங்கியிருந்தால் மட்டுமே, மிக உயரிய இவ்வச சிகிச்சை அளிக்கும் ஈ எஸ் ஐ வாசற்படியை மிதிக்க முடியும் என்பது விதி!
எனவே, அறிகுறி இருப்பவர்கள் கண்டிப்பாக, கண்டிப்பாக ஸ்வாப் டெஸ்ட் எடுத்துவிடுங்கள்! மிக உயரிய, முற்றிலும் இலவசமான சிகிச்சைக்கு அது ஒன்று மட்டுமே பாஸ்போர்ட்!
ஐ மேட் எ காஸ்ட்லீ மிஸ்டேக்!
இனி மறுநாள் காலை டெஸ்ட் எடுத்து முடிவு வரும்வரை காத்திருப்பது என்பது தற்கொலைக்கு சமம்! ஃபைவ் ஸ்டார் கேட்டகிரி மருத்துவமனைகள் தவிர்த்து, குடியிருக்கும் வாடகை வீட்டை விற்று வந்தால் காப்பாற்றிவிடுவார்கள் என்ற கேட்டகிரி மருத்துவமனை ஒன்றில் மிகுந்த சிபாரிசில் இடம் கிடைக்க, வாழ்க்கையின் முதல் ஆம்புலன்ஸ் பயணம்,
நள்ளிரவில் அட்மிசன்!
அனுமதிக்கப்பட்ட உடனே, ரத்த, யூரின் பரிசோதனைகள், அடுத்த ஒருமணி நேரத்தில், கையில் கதீட்டர் பொருத்தப்பட்டு, ஒரு சுபவேளையில், வெள்ளமாக போடப்பட்ட ஊசிகளுக்கு பிள்ளையார் சுழி!
இரண்டாவது நாள்!
மூச்சுத்திணறல் அதிகமாக, உடனடியாக ஐசியூக்கு மாற்றப்பட்டு ஆக்சிஜன் முகமூடி! சினிமாவில் வர்ற மாதிரி சுற்றிலும் மானிடர்! அதிலிருந்து வரும் வினோதமான க்விக் க்விக்!
தூக்கமா சாவான்னு தெரியாத ஏதோ ஒண்ணு!
நரகத்திலிருந்து மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் ஆள் நேரிலேயே வந்து ப்ரோமோ வீடியோ காட்டறாரு!
ஏறத்தாழ கைலாஸா மாதிரி எல்லாம் ஜாலியா இருக்காங்க! சரி, உள்ளே போய்டலாம்ன்னு நினைக்கும்போதுதான், நேத்து நைட் ஊசி போட்ட நர்ஸ் இதைவிட அழகுன்னு ஞாபகம் வந்துது!
போங்கடான்னு கையை உதறிக்கிட்டு திரும்பி வந்துட்டேன்!
மறுபடி முழு சுய நினைவு வர
முழுசா ரெண்டு நாள்!
இடையில் ஒரே ஆறுதல் குழந்தைகள்
இரண்டுபேருக்கும் நெகட்டிவ்!
மருத்துவமனையில் சேர்ந்த ஆறாவது
நாள் - வீட்டிலிருந்து குறுஞ்செய்தி! மனைவிக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்டில் பாசிட்டிவ்.
அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படப் போகிறார்!
வீட்டில் குழந்தைகள் இருவரும்
தனியே!
தம்பதி சமேதராய் ஆஸ்பத்திரி
வாசம்!
பதினேழு நாள்!
ஓயாத ஊசி, மருந்து, மாத்திரை, திரும்பத் திரும்ப ரத்தமாக
உறிஞ்சி, பரிசோதனை வெள்ளம்!
“அந்த சிஸ்டர்கிட்ட ரொம்பப் பேசறேன்னு உங்களுக்கு கோபம்தானே?”
“ஏன்?”
“பின்ன ஏன் வெய்ன் கிடைக்கலேன்னு இத்தனை தடவை குத்தறீங்க?”
“அய்யடா, ஈயாளு பெரிய மன்மதக் குஞ்சு!”
“என்ன சிஸ்டர் பொசுக்குன்னு கெட்டவார்த்தை பேசிட்டீங்க!”
“ச்சீய்!”
இந்த மலையாள பெண்களின் அய்யடாவையும்
ச்சீயையும் கேட்கவே இன்னும் நூறு வருஷம் வாழலாம்!
இந்த பெப்பி டாக்ஸ் எல்லாம், உயிர்ப்போடு இருக்க ஒரு சின்ன
கிரியா ஊக்கி!
மற்றபடி, கும்பிட்டுத் தொழ வேண்டிய ஜீவன்கள் இந்த நர்ஸ்கள்! எந்நேரமும் கேஸ் சீட் எழுதுவது, வேளாவேளைக்கு ஊசி, மாத்திரை, ட்ரிப்ஸ் என்று அத்தனை பேஷண்டுக்கும்!
இதற்கிடையே சிஸ்டர், சிஸ்டர் என்று ஓயாமல் கூப்பிடும்
குரல்களுக்கு ஓட்டம்!
ஆறுநாள், இடைவிடாத இருபத்துநான்கு மணிநேர
ட்யூட்டி! ஆறுபேர் ஒரு வார்டுக்கு!
இவர்களுக்கு இந்த வெட்டி அரட்டையும்
தேங்க் யூ சிஸ்டரும், புன்னகையும்தான் ஏதோ நம்மாலான
சிறு நன்றி!
எக்காரணம் கொண்டும் இந்தச்
சின்ன வைரஸ் நம்மைக் கொல்ல விடப்போவதில்லை என்று உறுதியாகஇருங்கள்!
பிறந்ததிலிருந்து சாவதற்கு
ஆயிரம் காரணங்கள் இருக்க, இந்த சைனீஸ் சப்பைமூக்கு வைரஸ்க்கா நாம் சாவது?
நெவர்!
எதிர்மறை எண்ணங்கள் வராமல்
பார்த்துக்கொள்ளுங்கள்! அவை வைரஸ் தாக்கத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்களும், நர்ஸ்களும் திரும்பத் திரும்ப
வலியுறுத்துவது சரிதான்!
நேர்மறை எண்ணங்களும், வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியமும்தான்
முதல் மருந்து!
பதினைந்தாவது நாள் ஸ்கேன் எடுத்தபின், இன்னும் இரண்டு நாள் கண்காணிப்பில்
இறந்தபிறகு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று டாக்டர் சொன்னபோது, அடுத்த மாபெரும் பிழையைச் செய்தேன்!
பிள்ளைகள் வீட்டில் தனியாக
இருக்கிறார்கள், ஏற்கனவே இரண்டு நாட்கள் ஆக்சிஜனோ, ஊசியோ இல்லாமல் இருக்கிறேன்
என்ற நம்பிக்கையில், டிஸ்சார்ஜ் செய்ய கொஞ்சம் பிடிவாதமாகக்
கேட்க, நீங்கள் நன்றாகத்தான் இருக்கிறீர்கள், வீட்டில் போய் ஒரு வாரம் தனிமைப் படுத்திக்கொண்டு இருங்கள் என்ற
அறிவுரையோடு, ஏஎம்ஏ (Against Medical Advice) என்று டிஸ்சார்ஜ் சம்மரியில்
எழுதிக்கொடுக்க, ஃபார்மாலிட்டியெல்லாம் முடித்து,
அம்மாவை நாங்க பாத்துக்கறோம், நீங்க தைரியமா போங்க என்று
அத்தனை நர்ஸ்களும் ஆறுதலும் தைரியமும் சொல்ல,
வீடு வந்து சேரும்போது நைட்
எட்டு மணி!
கிளம்பும்போதும், ஆஸ்பத்திரியிலேயே லாஸ்ட் சப்பர்
முடிச்சுட்டுத்தான் வந்தேன்!
அவ்வளவு சுவையான சாப்பாடு!
என்ன, அந்த டேஸ்ட் தெரிய ஆரம்பிக்கவே
ஒருவாரம் ஆனது!
வீட்டுக்கு வந்தவனை மகள் ஆரத்தி
எடுத்து வரவேற்க, "ஏன்டா நான் என்ன கல்யாணமா
பண்ணிக்கிட்டு வந்திருக்கேன்?"
தனியறை புகுவிழா!
இத்தோடு சுபம் போட்டிருக்க
வேண்டும்தானே! அதுதானே வழக்கம்?
என் எந்தக்கதை இரண்டாம் பாகம்
இல்லாமல் முடிந்திருக்கிறது?
இரண்டாம் பாகம்!
எல்லா மெடிக்கல் ரிப்போர்ட், டிஸ்சார்ஜ் சம்மரி, எல்லாவற்றையும் மகள் மனைவியின்
நண்பர், என் மைத்துனர் (மருத்துவர்)
என்று எல்லோருக்கும் அன்றைய இரவே பகிர, மறுநாள் அதிகாலை முதல் மகள் தொலைபேசிக்கு ஸ்க்ரீன் ஷாட்களும், அழைப்புகளும் குவிய ஆரம்பித்தன!
எந்த முட்டாள் இவரை டிஸ்சார்ஜ்
செய்தது?
This man is in
potential danger of a relapse at any moment.
உடனடியாக கிடைக்கும் மருத்துவமனையில்
அட்மிஷன் போட ஏற்பாடு செய்யுங்கள்!
பதினேழுநாள் கழித்து திரும்பிவந்த
அப்பா செத்துப் போயிடுவான் என்ற எச்சரிக்கையைவிட வேறென்ன கொடூரமான தகவல் வேண்டும் ஒரு
குழந்தைக்கு!
மொத்த ஆயுளுக்குமான பதட்டம், அழுகை!
Against Medical
Advice டிஸ்சார்ஜ் ஆகி வந்ததால், எந்த மருத்துவ மனையிலும் அனுமதி
மறுப்பு!
ஒருமுறை அனுமதிக்கப்பட்டு திரும்ப
வந்த பேஷண்டுக்கு மறுபடி ஸ்வாப் டெஸ்ட் எடுத்து
பாசிட்டிவ் என்றால் மட்டுமே அரசு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி!
எவ்வளவு பெரிய பிழை - ஒருநாள்
தாமதிக்க மறுத்து சுயமாக முடிவெடுத்து வீட்டுக்கு வந்தது!
எக்காரணம் கொண்டும்
மருத்துவர் அனுமதி இல்லாமல் உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்காதீர்கள்! அதற்கான விலை மிகமிக அதிகம்!
வேறு வழியே இல்லாமல் மைத்துனர்
அந்த முடிவை எடுத்தார்!
வீட்டிலேயே வைத்து மேல் சிகிச்சையைத்
தொடருவது என்று!
உடனடியாக ஊசி மருந்துக்கு ஏற்பாடு
செய்ய, அந்த மருந்தை தனியாருக்கு விற்க
கட்டுப்பாடு!
மருத்துவமனைகளுக்கு மட்டுமே, அதுவும் மொத்தமாக விற்பனை செய்யவேண்டும்
என்ற அரசாங்க கண்காணிப்பு!
கடவுள் மனித ரூபத்தில்தானே
சுற்றிக்கொண்டிருக்கிறார்!
எனக்கு அவர் மருந்துக்கடை உரிமையாளர்
சிவப்பிரகாசம் வடிவில்!
“விடுங்கண்ணா, எப்படியாவது ஊசி மருந்து வாங்கித் தருவது என் பொறுப்பு!’
மாலைக்குள் அலைந்து திரிந்து
தேவையான ஏழு ஊசி மருந்தை வாங்கிவிட்டார்! அதற்குள் இண்டரிம் ரிலீஃப் ஆக உடனடியாக மாத்திரைகள்!
சிவப்பிரகாசமே தினசரி வந்து
ஊசி போடுவதாக ஏற்பாடு!
விடிய விடிய ஓவ்வொரு மணி நேரமும்
பல்ஸ் ஆக்சிமீட்டரில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை எடுத்துக் குறித்து விடிந்ததும் அனுப்பும்
வேலை மகனுக்கும் மகளுக்கும்!
குருவிகள் தலையில் எத்தனை பனங்காய், ஒரு முட்டாள்தனமான முடிவால்!
மூன்று முழு நாள் ஆகியது, O2 லெவல் 95 க்கு மேல் ஸ்டெபிலைஸ் ஆகி
மருத்துவர் முகங்களில் பதட்டம் நீங்கி புன்னகை வர!
எதற்கும் இருக்கட்டும் என்று
வீட்டுக்கே வரவைத்து எடுத்த அரசாங்க ஸ்வாப் டெஸ்ட் ரிசல்ட்டும் நெகட்டிவ் என்பது போனஸ்
நற்செய்தி!
ஐந்துநாள் இன்ஜெக்சன் முடிந்தது!
விடியவிடிய ஒவ்வொரு மணி நேரமும்
பூப்போல் கையைப் பிடித்து ரீடிங் எடுத்து, விடிந்ததும் பதட்டத்தோடு எல்லோருக்கும் அனுப்பிக் காத்திருக்கும்
கொடூரமான தண்டனை குழந்தைகளுக்கு!
நான் கடவுள்களைப் பெற்றவன்
என்ற பெருமிதம் எப்போதும் எனக்கு உண்டு! இந்தமுறை இன்னும் அழுத்தமாக அடிக்கோடிட்டு!
நேற்றிரவு மனைவியும் டிஸ்சார்ஜ்
ஆகி வந்து விட்டார்! சுபம் போடுவதற்குமுன்,
எல்லாவற்றுக்கும் சிகரமான பணம்
பற்றி எழுதாமல் எப்படி?
கையிலோ அக்கவுண்டிலோ ஒற்றை
ரூபாய் இல்லாத நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட் பற்றி கேள்விப்பட்டவுடன் எதுவுமே கேட்காமல், சொல்லாமல் உடனே ஐம்பதாயிரம்
அனுப்பிய உயிர் காக்கும் தோழனின் ஆரம்பித்து, கேட்டும், கேட்காமலும் ஏறத்தாழ நான்கு லட்ச ருபாய் செலவை எந்தக் கவலையும்
இல்லாமல் நான் கடக்க உதவிய என் உறவுக்கூட்டத்துக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லுவது அபத்தம்!
என் மிகப்பெரிய குடும்பம் என்னை எவ்வளவு நேசிக்கிறது, அது சமயம் வரும்போது எப்படி
வெகு இயல்பாய் உதவுகிறது என்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்!
கூடவே என் மனைவியின் நண்பர் குழாம் செய்த மாபெரும் உதவி! அதை ஒருங்கிணைத்த திரு. சுரேஷ்!
ஏதோ ஒரு ஜென்மத்தில் எங்கோ
ஒரு அனாதைப் பசுமாட்டுக்கு பிரசவம் பார்த்திருப்பேன் போல!
இதில் இன்னொரு மகத்தான ஆச்சர்யம்
சிவப்பிரகாசம்!
அவ்வப்போது மருந்து வாங்கும்போது
இயல்பாய் இரண்டு வார்த்தை சிரித்துப் பேசுவதுதவிர எந்த உறவும் இல்லாதவர். என் கணக்குப்படி
இப்போதே அவருக்கு இருபத்தைந்தாயிரம் தரவேண்டியிருக்கும்!
இன்று காலை மனைவிக்கு ப்ளட்
டெஸ்ட் எடுக்கவந்தவரைக் கேட்டேன்
"சிவா, ஏதாவது பணம் தரட்டுமா?"
"அண்ணா, இன்னொரு முறை பணத்தைப் பற்றிப் பேசினால் எனக்கு கெட்ட கோபம்
வரும்!"
கடவுள் இல்லை என்று எவன் சொன்னது?
இவர்கள் எல்லோரும் இருக்கும்போது
கொரோனாவாவது இன்னொன்னாவது,
என் நிழலைக்கூடத் தொடமுடியாது!
முடிப்பதற்குமுன் ஒரு சின்ன
அனுபவ அறிவுரை!
கொரோனாவை விளையாட்டாக
எடுத்துக்கொள்ளாதீர்கள்!
அவசியம் இல்லை எனில், எக்காரணம் கொண்டும்
வீட்டைவிட்டு வெளியே போகாதீர்கள்!
நன்றி!