திங்கள், 14 டிசம்பர், 2020

சித்தப்பா என்னும் வரம்!

 

பழனிசாமி சித்தப்பா 


 

இருள் பிரியாத காலையில் மரம் நிறை நிழற்சாலையில் நடந்திருக்கிறீர்களா?

அப்படியானால் இதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்!

தூரத்தில் வரும்போதே, மனதை மயக்கும் மணம் நாசியை வருடும். ஆனால்  தேடித்தேடிப் பார்த்தால்தான் பவளமல்லி பூ இருப்பதே தெரியும்.

அப்படித்தான் இவருடைய நேசமும்!

ஒரு ரோஜாவைப்போல் வெளிப்படையாக பளிச்சென்று தெரியாது. ஆனால், தன் இருப்பை புலப்படாத வாசத்தால் உணர்த்திக்கொண்டே இருக்கும்!

என்னிடம் மட்டுமல்ல, யாரிடமும் தன் நேசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதில்லை இவர்.

பேசும்போதுகூட ஒரு மேட்டர் ஆஃப் ஃபேக்ட் தோரணைதான் இருக்கும்!

இது, ஏறத்தாழ நாற்பது வருடங்கள் அலுவலகத்தை நேசித்து வாழ்ந்த எல்லோருக்கும் நிகழ்வதுதான்! அவர்கள் அறியாமலே அந்த அலுவலக தோரணை அவர்களுக்குள் ஊறிப்போய்விடும்!

கூடப்பிறந்தவர்கள், அவர்கள் குழந்தைகள் என எல்லார்மேலும் தணியாத நேசமும், அதைவிட முக்கியமாக அக்கறையும் கொண்டவர்!

ஆனால் அதையும் ஒரு கண்டிப்பு கலந்த தொனியில்தான்  சொல்லத் தெரியும்.

பள்ளிப்பருவம் என்ற வசந்த காலத்தில் வேலூரில் எங்கள் தாத்தா வீடு என்ற சொர்க்கத்தில் எல்லோரும் ஒன்றுகூடும் நாட்களில்தான் இவரோடு அதிகம் பேச நேர்ந்தது.

எப்போதும் ஒரு மோட்டிவேஷன், படிப்பு, எதிர்காலத் திட்டமிடல் இதைப்பற்றியே பெரும்பாலும் அவருடைய உரையாடல் இருக்கும்!

என்ன செய்யப்போகிறாய் என்ற கேள்விக்கு அப்பா என்ன சொல்றாரோ .. என்று இழுத்தாலே சட்டென்று முகம் மாறிவிடும் அவருக்கு!

"உனக்குன்னு ஒரு ஐடியா வேண்டாமா? உன்னால எது முடியும், உனக்கு எது வேணும்ன்றதை நீ தெரிந்திருக்க வேண்டாமா?"

பொத்திப்பொத்தி வளர்க்கப்பட்ட என் கிராமிய வளர்ப்பு முறையில் அது அப்போது எனக்குப் புரியவில்லை!

வழக்கம்போல இதுவும் வெகு தாமதமாக காலம் கடந்தே புரிந்தது எனக்கு!

கூடப்பிறந்தவர்கள்மேல் அப்படி ஒரு அளவு கடந்த பிரியம். அதுவும் சகோதரிகள்மேல் உயிர்.

ஏறத்தாழ உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார் தாம்பரத்து அத்தையை!

சகோதரர்களிடத்தும் அதே அன்பும் மரியாதையும். ஆனால், தன் மனதுக்கு தவறு என்று பட்டதை தாட்சண்யமின்றிச் சொல்ல மறந்ததில்லை

"என்னமோ அண்ணா, நீங்க சொல்ற விஷயம், நீங்க போற வழி எனக்கு சரின்னு படல! இது எனக்கு உடன்பாடில்லை" அப்பாவிடம் இப்படி முகத்துக்கு நேராக பலமுறை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்!

ஆனால், அடுத்த நாளே ஃபோன் செய்து, "அண்ணன் எப்படி இருக்கார், கொஞ்சம் பார்த்துக்க அவரை" என்று தவறாமல் பேசுவார்!

கொஞ்சம் பட்டுத்துணி போர்த்திய நேசம் அவரது!

படிக்கும்போது, கல்யாணம் ஆன புதிதில், அதன்பிறகு கைக்குழந்தையோடு என்று மூன்று காலகட்டங்களில் சென்னை வாசம் வாய்த்தது எனக்கு.

எல்லாக் காலகட்டங்களிலும் வாரம் தவறாமல் சைதாப்பேட்டை போயே ஆகவேண்டும்.

முந்தைய நாளே கூப்பிட்டுவிடுவார்

"நாளைக்கு உங்க சித்தியை என்ன செய்யச் சொல்லட்டும்?"

மீனோ, கோழியோ எதையாவது நம் விருப்பம் என்று சொல்லும்வரை விடமாட்டார்!

காலையிலேயே போய், சாப்பிட்டு நேரம் போவது தெரியாமல் தம்பிகளோடு செஸ் விளையாடிக்கொண்டிருந்தால்,

"கிளம்பு, இருட்டில் போகாதே" என்று துரத்தியும் விடுவார். ஆனால், கிளம்பும்போதும் சாப்பிடாமல் விடமாட்டார்

இனி போய் என்ன சமைக்கப்போறா, "சாப்பிட்டுப்போங்க ரெண்டுபேரும்!"

போய்சேர்ந்தவுடன் போன் பண்ணி சொல்லியாகவேண்டும்!

தப்பித்தவறி வேலை இருக்கிறது என்று சொன்னாலும், "நீதானே வெளியே போறே, வீட்டிலேயும் பாப்பாவையும் கொண்டாந்து விட்டுட்டுப் போ! நைட் வந்து கூட்டிக்கிட்டுப் போய்டு!"

எந்த அளவுக்கு அந்தப் பழக்கம் என்றால், ஞாயிறு வந்தால், தாத்தா வீட்டுக்குப் போலாம்ன்னு தென்றல் சிணுங்குமளவுக்கு!

தாத்தா தாத்தா என்று அவர் காலையே சுத்திவரும் நேரம் போக, சித்தப்பா ரெண்டுபேரும் அத்தனை நெருக்கம் அவளுக்கு!

அது ஒரு அழகான பொற்காலம்!

அவரிடம் என்னை ஈர்த்தது முக்கியமாக இரண்டு விஷயங்கள் - எங்கள் அனைவர் மீதான அந்த அளவிடமுடியாத நேசம் தவிர்த்து!

ஆண் வீட்டுவேலைகளை பகிர்ந்துகொண்டு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்பதை சென்ற தலைமுறையில் நடைமுறைப் படுத்திய மனிதர்.

கூத்தாடாத நிறைகுடம். தேவைக்குமேல் எதுவும் செய்துகொள்ளாத எளிமை.

அன்பும், கண்டிப்பும் சரிவிகிதத்தில் கலந்த நேசம்!

இந்த வயதிலும் சோம்பியிருக்காத தேனி!

அலைச்சலுக்கும், பயணத்துக்கும் சற்றும் தயங்காத சுறுசுறுப்பு!

ஆர்ப்பாட்டமில்லாத பக்தி!

இப்படி அவரிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ!

அன்பாய் என்னோடு பேசிய நேரங்களுக்கு இணையாக என்னோடு முரண்பட்டு கண்டிப்பாய் பேசிய நேரங்கள் அதிகம்!

காரணம், பூச்சுக்களோடு பேசத்தேரியாத அவர் குணம்!

ஆனால், அந்தக் கண்டிப்பின் பின்னால் இழையோடும் அக்கறையும் அன்பும் சொல்லாமலே புரியும் வாஞ்சை!

எனக்கு இறைவன் ஆசீர்வதித்துக் கொடுத்த வைரங்களில் ஒன்று!

ஆனால், இவரிடம் ஒரு மிகப்பெரிய குறை!

நிபந்தனை இல்லாமல் இவர் எனக்கு உதவியதே இல்லை!

அதுவும் சாதாரண நிபந்தனை அல்ல!

கண்டிப்பான குரலில், மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவே முடியாத அந்த நிபந்தனையை விதிக்காமல் இதுவரை அவர் உதவியதே இல்லை!

"நான் செய்ததை யாருக்கும் சொல்லக்கூடாது - உன் மனைவி உட்பட!"

இந்த நிமிடம்வரை அதை நான் மீறியதில்லை - அவர் பேச்சை தட்டுவது அவ்வளவு எளிமையாக இருப்பதில்லை!

ஆனால், ஒரு விஷயம் இந்தப் பதிவில் நான் பகிர்ந்தே ஆகவேண்டும்!

அவரும், இன்னொரு ஜீவனும் இல்லாவிட்டால், நான் இருந்த இடத்தில் புல் முளைத்து ஒரு யுகம் ஆகியிருக்கும்!

வலதுகை கொடுப்பது இடதுகைக்குத் தெரியக்கூடாது என்பதில் அத்தனை உறுதி!

பலமுறை எனக்கே தெரியாமல் அவர் உதவியது பிறகுதான் தெரியவரும்!

தயங்கித் தயங்கி, நன்றி சொல்ல ஆரம்பித்தால்

"இதெல்லாம் பெரிசு பண்ணக்கூடாது. போய் வேலையைப்பார்"

அதை சொல்லும்போதே

"இதைப்போய் யார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்காதே. இது நம்ம ரெண்டுபேருக்குள்ளேயே இருக்கட்டும். புரியுதா" - என்ற கண்டிப்பும் கூடவே!

என் வசந்த காலங்களைவிட இலையுதிர் காலங்களில் நிழல்தரும் உறவுகளால் என்னை ஆசீர்வதித்து அனுப்பியிருக்கிறான் இறைவன்!

அவரது அன்பில் ஒரு சதவிகிதத்தை இந்த ஆயுளுக்குள் என்னால் திரும்பிச் செலுத்த முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை!

 


ஒரு சின்னப் பின்குறிப்பு:

அப்படிப்பட்டவருக்கும் ஒரு மனக்குறை இருப்பதை சமீப கால உரையாடலில் அவரிடமிருந்து தெரிந்துகொண்டேன்!

ஆனால், அது உண்மை அல்ல என்பதை இந்தப்பதிவின் மூலமும் சொல்லிக்கொள்ள ஆசை!

கடைசி காலத்தில் அவருடைய அண்ணன் அவரிடம் கோபித்துக்கொண்டுவிட்டார் என்ற குழந்தைத்தனமான வருத்தம்தான் அது!

ஏதோ கோபத்தில் தம்பியிடம் "வைடா ஃபோனை" என்று சீறி விழுந்தவர் அதன்பிறகு சில நாட்களிலேயே உணர்விழந்து பல நாட்கள் இருந்து கரைந்துபோனார்!

கடைசி காலத்தில் அண்ணனும் என்னைப் புரிஞ்சுக்காமலே போய்ட்டாரு என்று சின்னப்பிள்ளை போல அவர் கலங்கியதை என்னால் என்றைக்கும் மறக்கவே முடியாது!

ஆனால், சித்தப்பா,

அப்பாவுக்கு அம்மாவிடம் ஏதேனும் வருத்தம் இருந்தால்கூட உங்களிடம்தான் அதைப் பகிர்ந்துகொள்வார் என்பது உங்களுக்கும் தெரியும்தானே! முதுமையின் இயலாமையில் அவர் உங்களிடம் முறையிட்டபோது, அந்த விஷயத்தில் அவர் மீதிருந்த தவறை நீங்கள் சுட்டிக்காட்டியதில் வந்த சிறுபிள்ளைத்தனமான கோபம் அது!

அதை அப்போதே அவர் மறந்தும் போனார்!

விதிவசமாக அது அவர் உங்களிடம் பேசிய கடைசி பேச்சாகப் போனது!

அதன்பிறகு நீங்கள் வந்து பார்த்தபோது இயலாத நிலையில் அவர் கண்களில் வழிந்த நீர் சொல்லவில்லையா உங்களுக்கு அவருக்கு உங்கள்மேல் கோபம் ஏதும் இல்லை என்று?

மேலும், உங்களைப்போன்ற ஒருவரிடம் யாரால் கோபித்துக்கொள்ள முடியும் சித்தப்பா? அது உங்கள் அண்ணனாக இருந்தாலும்?

எல்லாவற்றுக்கும் மேலாக,

உடன்பிறந்தோர் மீதான நேசம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் எல்லாரும்தானே எங்களுக்கு இலக்கண வழிகாட்டி? உங்களுக்குள் இருந்த அந்த நேசம், புரிதல் இவற்றைவிடவா அந்த கணநேர கோபமும் வருத்தமும் வலிமையானது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக