மை ஃபுட் !
புத்தகத்தை தூக்கி எறிந்த கண்ணகிக்கு அந்த ஏஸி அறையிலும் உடல் வியர்த்திருந்தது!
மார்கழிப்பனி உடலின் பசி நரம்புகளை மீட்டித் தொலைக்கிறது என்றுதான் மகன் படுத்திருக்கும் ஏஸி அறையில் வந்து உட்கார்ந்தாள்!
ஏதாவது படிக்கலாம் என்று கையில் அந்தப் புத்தகத்தை எடுத்துவந்ததுதான் தவறாகப்போயிற்று!
"பால்நகையாள்
வெண்முத்துப்
பல்நகையாள்
கால் நகையால்
கழுத்து நகை
இழந்த கதை!"
எல்லாம் எங்க அப்பன் இலக்கிய ஆர்வத்தால் வந்தது!
தன் அபிமான காவியத்து நாயகியின் பெயரை அம்மா தடுத்தும் ஆவலாய் வைத்தார்!
பெயர்ப்பொருத்தம் பார்த்து வந்த காதல்!
கல்லூரிக்காலத்தில் கோவலனின் கண்ணசைவில் விழுந்தாள் கண்ணகி!
தங்கையை ட்ராப் செய்ய ட்ரைவராய் காலேஜுக்கு வந்த கோவலன் பிறகு கண்ணகியைப் பார்க்க தினமும் வர ஆரம்பித்தான்!
அதிசயமாக எதிர்ப்பு கோவலனுடைய அப்பாவிடமிருந்து வந்தது!
“உனக்கிருக்கும் வசதிக்கு இந்தத் தறுதலை பின்னாடி ஏம்மா சுத்தறே?
படிச்சுப் படிச்சுச் சொல்லியும் அந்த நாய் பள்ளிக்கூடத்தை தாண்டலை! சொத்து இருக்குன்ற மிதப்புல நானும் அவன் படிப்பைப்பற்றி கண்டுக்கல!
கூடாநட்புகளோடு சேர்ந்து குடி கூத்தி என்று அலையும் அந்த நாய்கிட்ட
உனக்கு என்னம்மா பிடிச்சுத் தொலைச்சுது?”
வழக்கமான வீறாப்புதான், எப்பேர்ப்பட்ட கெட்டவனையும் என்னால், என் காதலால் திருத்திவிடமுடியும்
என்று தீவிரமாகித் தொலைத்தது காதல்!
வளர்த்துவானேன்,
ஒரு சுபயோக சுபதினத்தில் பொள்ளாச்சி ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் திருட்டுக்
கல்யாணம்!
பிறகு வேறு வழி இல்லாமல் கொடீசியாவில் வரவேற்பு!
சுயார்ஜித சொத்தையெல்லாம் மருமகள் பேரிலேயே எழுதிவைத்துவிட்டு
ஆறே மாசத்தில் செத்துப்போனார் கோவலனின் அப்பா!
கல்யாணம் முடிந்து ஒரு வருடம் நன்றாகத்தான் ஓடியது!
கோவலனுக்கு கண்ணகி எப்போதெல்லாம் வேண்டுமோ அப்போதெல்லாம் ரெட்டை
ரெடியாக இருந்தாள்! ஆனாலும் வெறும் படுக்கையைப் பகிரத்தான் பெண்டாட்டியா என்று தோன்றும்போதெல்லாம்
கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது!
அப்பா,
மாமனார் இருவரின் நிறுவனங்களையும் தனி ஒருத்தியாக நிர்வகிக்கும்போது இப்படி ஒரு
தண்டக்கடனை ஏன் சகித்துக்கொள்கிறோம் என்று தோன்றாமல் இல்லை!
என்ன செய்ய,
தானாகத் தேடிக்கொண்டது.
தோற்றுப்போனோம் என்று கண்ணைக் கசக்கக் கூடாது என்ற வீராப்பும்
அந்த சந்தோஷமான நாளில் தகர்ந்துபோனது!
சாராய நாற்றத்தோடு மேலே விழுந்து புரளும் கணவனை சகித்துக்கொள்ள
முடிந்த அளவு சுகித்துக்கொள்ள முடியாத நிலையில், தான் கருவுறுவோம் என்று கனவுகூட கண்டதில்லை கண்ணகி!
ஏதோ ஒரு அபூர்வ கணத்தில் தானும் மனமொத்து உடன்பட்டாளோ அன்றி
இறை தந்த வரமோ, அந்த
மாதம் நாட்கள் தள்ளிப்போக,
குடும்ப மருத்துவரும் சந்தோஷ சமாச்சாரம் என்று உறுதிப்படுத்தினார்!
அன்று மாலை வழக்கமான வேகத்தோடு தன்மீது பாய்ந்தவனை மெதுவாகத்
தள்ளிவிட்டு சொன்னாள்
"உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
நாற்பத்தெட்டு நாளாச்சாம், டாக்டர் கொஞ்சநாள் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லியிருக்கிறார்!"
எரிச்சலோடு கேட்டான்
"இப்போ
இந்த சனியனுக்கு என்ன அவசரம்?"
வீட்டுக்குள்ளேயே சரக்கும், உடம்பு
தேவைப்படும்போது பெண்ணும் கிடைத்துக்கொண்டிருந்ததில் ஒன்று கெட்டுப்போகுமோ என்ற கவலைதான்
அவனுக்குப் பிரதானமாக இருந்தது!
அதற்குப்பின் அவன் மூர்க்கம் இன்னும் அதிகமானபோதும், அலுவலகம், வீடு, தன் உடல்நிலை
எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அவனுக்கு முடிந்தவரை ஈடு கொடுத்தாள் கண்ணகி!
அதற்கும் ஒருநாள் வந்தது வினை!
அஜய் வயிற்றில் ஏழு மாதமாக இருந்தபோது, ஒரு மாறுதலுக்கு
இருக்கட்டும் என்று அவள்தான் வற்புறுத்திக் கூட்டிப்போனாள் அந்த நாட்டிய நாடகத்துக்கு!
கிக்கானி ஸ்கூலில் நடந்த அந்த நாடகத்தில் கண்ணகியின் கவனம் ஆட்டத்தின்மேல், கோவலனின் நாட்டம்
ஆட்டக்காரி மேல்!
ரம்யா - பேருக்கேற்றாற்போல் ரம்யம்!
என்ன சொன்னானோ,
எப்படிக் கவிழ்த்தானோ,
அடுத்த மாதமே அவன் வலையில் விழுந்தாள் அந்த நாட்டியப்பள்ளி ஆசிரியை கம் நடனமணி
ரம்யா!
இப்போதெல்லாம் தன்னை அவன் தொந்தரவு செய்யாததற்கு குழந்தை மீதிருந்த
அக்கறை என்றுதான் நினைத்தாள் கண்ணகி!
ஒருநாள்,
வெளியே போய் முட்டமுட்டக் குடித்து வந்தவன், நிறைமாத கர்ப்பிணி என்றுகூடப் பாராமல், அவள் மீது வந்து
விழுந்தான், வாய்
நிறைய ரம்யா என்று கூப்பிட்டுக்கொண்டு!
அவ்வப்போது அவன் மீது வீசும் பொம்பளை செண்ட் வாசமும், வியர்வை நெடியும்
கொஞ்சம் சந்தேகத்தை கிளப்பியிருந்தாலும்,
இப்போது அப்பட்டமாக உறுதியானது!
மறுநாள் காலை பழி சண்டை!
தன் நிலையில் உறுதியாக இருந்தான் கோவலன்!
வீட்டு சாப்பாடு கிடைக்காத நிலையில் கடை சாப்பாடு சாப்பிடுவதில்
என்ன தவறு என்பது அவன் லாஜிக்!
தன் அப்பாவை ஏமாற்றி அவள் எழுதி வாங்கிக்கொண்டதாய் பழி சுமத்தி
சொத்தில் பாதியை சண்டைபோட்டு வாங்கிக்கொண்டு,
இனி அவளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மதியஸ்தர்கள் முன்னனிலையில்
எழுதிக்கொடுத்துவிட்டுப் போனான் கோவலன்!
இருந்தும் சட்டபூர்வமான விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை கண்ணகி!
இன்னும் அவளுக்குள் ஒட்டிக்கொண்டிருந்த அந்தப் பத்தாம்பசலி, அவன் என்றைக்காவது
திருந்தி வருவான் என்று நம்பியதும் ஒரு காரணம்!
அதன்பிறகு இந்த நான்கு ஆண்டுகளில் அவனைப்பற்றி அவள் கேள்விப்பட்டது
எதுவுமே நன்றாக இல்லை!
கண்ணகிக்கும் வேலை வேலை என்று ஓடத்தான் நேரம் சரியாக இருந்தது.
ஆனாலும், சுருதி
சுத்தமாக சுதியேற்றப்பட்ட வீணைபோல் அவள் உடம்புதான் குளிர் ராத்திரிகளில் துணை தேடித்
தவித்தது! கோவலன் மீட்டிய தந்திகள் ஒவ்வொன்றும் விரல் தேடி அலையும்போதுதான் தூக்கம்
தொலைந்தது அவள் ராத்திரிகளில்.
இடையே அவளது என்ஜினீயரிங் கம்பெனிக்கு ஜாப் ஒர்க் காண்ட்ராக்ட்
எடுத்து செய்துகொண்டிருந்த ரவி இண்டஸ்ட்ரீஸ் ஓனர் ரவிச்சந்திரன் மெல்ல மெல்ல அவள் மீது
ஈடுபாடு காட்ட ஆரம்பித்தான்!
கால ஓட்டத்தில் கோவலன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துபோக ரவி
இடம் பிடிக்க ஆரம்பித்தான்!
நிறுவனத்தை திறம்பட நடத்துவதில் கில்லாடி! எந்தக் கெட்ட பழக்கமும்
இல்லாத பெரிய இடத்துப்பிள்ளை!
அப்பாவுக்கு ஒரே பிள்ளை என்றாலும், அவருடைய மில்லை
பார்த்துக்கொள்வதைவிட,
தான் ஒரு நிறுவனம் ஆரம்பித்து நடத்துவதே பெருமை என்று ஆரம்பித்ததுதான் ரவி இண்டஸ்ட்ரீஸ்!
அயராத உழைப்பும்,
எம்பிஏ படிப்பும் கைகொடுக்க,
ஆறே வருடத்தில் எண்பது கோடி டர்ன் ஓவர்! கொரோனா காலத்திலும் அது கொஞ்சமும் சரியவில்லை!
முதல் பார்வையிலேயே கண்ணகியிடம் விழுந்தான்!
"வாட்
எ உமன்!"
கண்ணகியின் கதை கோவையின் தொழிலதிபர்கள் வட்டாரத்தில் பரவலாகத்
தெரிந்த விஷயம்! அவளது வியாபார ஈடுபாடும்,
உழைப்பும், வளர்ச்சியும்
எல்லோருக்குமே அவள்மீது ஒரு அனுதாபத்தை வளர்த்திருந்தது - ரவியின் தந்தை உட்பட!
கண்ணகிக்கு முதலில் ரவி மீது பெரிய ஈடுபாடு வரவில்லை! ஆனாலும்
பழகப்பழக அவனது புத்திசாலித்தனமும்,
தனக்கு நிகரான, இன்னும்
சொல்லப்போனால் ஒருபடி மேலான நிர்வாகத் திறமையும் அவன்பால் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது!
இப்படியே எத்தனை நாள் காலத்தைக் கழிப்பாய்? இதில் உன் தவறு
என்ன? உனக்கு
மட்டும் ஏன் இந்த தண்டனை,
கோவலன் எங்கோ ஒருத்தியோடு சந்தோஷமாகத்தானே இருக்கிறான்?
கேள்விகளால் அவளை மெல்ல மெல்லக் கரைத்தான் ரவி!
ஆனால்,
ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தான்! கோவலனுடன் சட்டப்பூர்வமாக மணமுறிவு
வாங்கியபிறகுதான் அவள் மீது தன் சுண்டுவிரல்கூடப் படும் என்பதில்!
இன்னொருத்தன் மனைவியோடு உறவு என்று ஆரம்பித்தால், அவனுக்கும் கோவலனுக்கும்
என்ன வேறுபாடு என்பது அவன் வாதம்!
கொஞ்சம் முரண்டு பிடித்தாலும், அவளை மருமகளாக்கிக்கொள்ள
சம்மதம் சொல்லிவிட்டார்கள் ரவியின் பெற்றோரும்!
பசுவும் கன்றுமாக உன்னை ஓட்டிப்போக நான் ரெடி! ஆனால், உனக்கான சட்டப்பூர்வமான
காளை நான் மட்டுமே என்றானபிறகு! - இது ரவி!
கூடவே,
"உன்னிடம்
விழுந்த என் மனதை இன்னொருத்தியிடம் இழுத்துப்போக நான் ரெடியில்லை கண்ணகி, எனக்கு கல்யாணம்
என்று ஒன்று நடந்தால் அது உன்னோடுதான்!"
இப்போதுகூட அவள் பதிலுக்குத்தான் காத்திருக்கிறது அந்தக் குடும்பம்!
"இதை உன்மீது
இரக்கப்பட்டு நான் எடுத்த முடிவு என்று நினைத்துக்கொள்ளாதே!
வாழ்வு கொடுக்க நீ ஒன்றும் வகையற்றுப் போய் திரியவில்லை!
என் காதலை ஏற்றுக்கொண்டு எனக்கு வாழ்க்கை கொடுக்கப்போவது நீதான்
கண்ணகி!"
எனக்கு ஒரு நல்ல பதிலை இந்த 2020 முடிவதற்குள்ளாவது சொல்லு!
இல்லாவிட்டால் என்ன செய்ய உத்தேசம் ரவி, வேறு பெண் யாரையாவது
பார்த்து வைத்திருக்கிறாயா?
இல்லை,
இன்னொரு பத்து வருஷம் காத்திருக்க உத்தேசம்!
அப்போதும் நான் சரி சொல்லாவிட்டால்?
அந்த வயதில் நம்ம ரெண்டுபேருக்கும் கல்யாணம் தேவைப்படாத நிலை
வந்திருக்கும் கண்ணகி!
கண்ணடித்துச் சிரிப்பான் ரவி!
இதோ,
அவன் சொன்ன கெடு முடிய இன்னும் பத்து நாட்கள்தான்!
என்ன செய்யப்போகிறேன் நான்? கண்ணகிக்கு குழப்பம் தீர்ந்தபாடில்லை!
மறுநாள் விடிந்ததும் அவள் செய்த முதல் வேலை, கோவலன் நிலை பற்றி
விசாரித்ததே!
அரை நாளுக்குள் எல்லா விபரமும் வந்து விழுந்தது! ஏனோ அவன்மேல்
அனுதாபம்தான் வந்தது அவளுக்கு!
பணமும்,
புதுப்பெண்ணும் கிடைத்த சந்தோஷம்,
கட்டுப்பாடற்ற சுதந்திரம்!
பாரிஸ்,
ஸ்விட்ஜர்லாந்து என்று அடிக்கடி ரம்யாவோடு டூர்!
ஆரம்பகால ஜோரில்,
குந்தித் தின்றதில் கரைந்த குன்று கண்ணுக்குத் தெரியவில்லை!
வேறு எதில் எப்படியோ,
படுக்கையில் சமர்த்தன் கோவலன்! ரம்யாவும் தேன் குடித்த வண்டுபோல் கிறங்கித்தான்
கிடந்தாள்!
நாளாக நாளாக அவள் நாட்டியப்பள்ளி வருமானத்தில் குடித்துக்கொண்டு
வீட்டிலேயே கிடப்பவனைப் பார்த்து எரிச்சல்தான் வர ஆரம்பித்தது!
அந்தப் பத்தாம் கிளாஸ் ஃபெயில் க்வாலிஃபிகேஷனுக்கு கலெக்டர்
வேலை தரவும் யாரும் தயாராக இல்லை,
அதற்குக் குறைச்சலான வேலைக்குப் போக கோவலனும் தயாராக இல்லை!
இந்த சூழலில்தான் அந்த நாட்டியப்பள்ளிக்கு கீபோர்ட் ஆசிரியராக
வந்து சேர்ந்தான் அரவிந்தன்!
பேரழகன்!
ஒருநாள் ரம்யா அவனை அறிமுகம் செய்துவைக்க சந்தேகப்பேய் மெல்ல
விழிக்க ஆரம்பித்தது கோவலனுக்குள்!
ரம்யா பாவம் அவனுக்கு விசுவாசமாகத்தான் இருந்தாள்!
அவளுக்கு அரவிந்தனின் அழகு ஒரு பொருட்டாகவே படவில்லை - ஆனால்
கோவலனுக்குத்தான் அவன் அழகு பொறாமை,
சந்தேகம் இரண்டையும் தூண்டிவிட்டது!
வேலை களைப்பு,
கைப்பொருள் கரைந்த வேகம் இதெல்லாம் தந்த மன உளைச்சலில் ரம்யா கொஞ்சம் அசிரத்தையாக
இருக்க, தன்னைவிட்டு
அவள் விலகிப்போவதாய் பட ஆரம்பித்தது கோவலனுக்கு!
எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது அந்த வருட பள்ளி ஆண்டுவிழா!
காண ஆயிரம் கண் வேண்டும் என்ற பாடலுக்கு அரவிந்தன் கீபோர்ட்
வாசிக்க, பள்ளி
மாணவிகள் ஆட, ரம்யா
அவனைப் பார்த்துக்கொண்டே பாடியதாய் கோவலனுக்கு மட்டும் பட்டது விதி!
அன்றைக்கு இரவே நடந்த சண்டையில்,
"கூப்பிட்டவுடனே
இன்னொருத்தி புருஷனோடு வந்தவள்தானேடி நீ! இன்னைக்கு காசில்லைன்னதும் வேறொருத்தன் பின்னாடி
போகத் தயாராய்ட்டயாடி"
அவன் போட்ட கூச்சலுக்கு பொறுமையாகத்தான் பதில் சொன்னாள் ரம்யா!
"கண்ணகியை
விட்டு என் பின்னால் வந்ததுபோல நாளைக்கு என்னை விட்டுட்டு வேறொருத்தி பின்னால் நீங்க
போகமாட்டீங்கன்னு நான் நம்பலையா?
ஒன்றிருக்க இன்னொன்றுக்குத் தாவும் வழக்கம் எனக்கு இல்லைங்க!"
போதை வெறியில் முதல்முறையாக எட்டி அவள் இடுப்பில் உதைத்தான்.
தடுமாறி அறைக்கு வெளியே போய்விழுந்த ரம்யா அப்போது எதுவும் செய்யவில்லை!
மறுநாள் காலை அவன் உடைமைகள் எல்லாம் தெருவில் வீசப்பட்டு, அபார்ட்மெண்ட்
வாட்ச்மேனால் கழுத்தைப் பிடிக்காத குறையாக வெளியே தள்ளப்பட்டான்!
தெருவில் நின்ற கோவலனுக்கு முதலில் தேவைப்பட்டது ஒரு குவார்ட்டர்!
அது கொடுத்த தைரியம் ஒரு ஆட்டோ பிடித்து கண்ணகியின் ஆபீஸுக்கு
விரட்டியது அவனை!
நேராக ரிசப்ஷனில் போய் தள்ளாடி நின்றான்!
யாரென்று கேட்ட ரிசப்ஷன் பெண்ணிடம் சீறலாய் ஏறத்தாழ கத்தினான்
"அவள்
புருஷன்!"
எம்டி என்ற போர்ட் கண்ணகியின் அறையைக் காட்ட, விருட்டென்று உள்ளே நுழைந்தான்!
அவன் நின்ற கோலமும், குடிவெறியில் கலங்கியிருந்த கண்ணும் அவன் நிலையைச்
சொன்னது!
“வந்துட்டேன் கண்ணகி! அந்தத் தேவடியாளை விட்டு
நிரந்தரமாய் வந்துட்டேன்!
இனி உன்கூடத்தான் இருப்பேன்! இனி ஆபீஸெல்லாம் நான் பார்த்துக்கறேன்!
அந்த நாய்க்கு நான் யாருன்னு காட்றேன்!”
சட்டென்று திரை விலகியது போலிருந்தது கண்ணகிக்கு!
“யார் நீ சொன்ன தேவடியா? 'நீதான் அந்த வார்த்தைக்கு முழு அர்த்தம் கோவலா. இப்போதுகூட நீ திருந்தி வரவில்லை!
அவளைப் பழி வாங்க, நீ குடித்துக் கும்மாளம் போட என்னை உபயோகிச்சுக்க
வந்திருக்கே அப்படித்தானே?”
“இருக்கட்டுமேடி, நான் ஆம்பள
அப்படித்தான் இருப்பேன் இப்போகூட உனக்கும் உன் பிள்ளைக்கும் வாழ்க்கை கொடுக்கத்தான்
வந்திருக்கிறேன்!”
“நீ கொடுக்கும் வாழ்க்கை எனக்குத் தேவையே இல்லை.
நம் விவாகரத்துக்கு விடுமுறை கோர்ட்டில் அப்ளை செஞ்சாச்சு! நீ கிளம்பலாம்!”
ஒரு நிமிஷம் நம்பமுடியாமல் அவளையே உறுத்துப் பார்த்தவன் கத்த
ஆரம்பித்தான்!
“கண்ணகி பேரை வெச்சுக்கிட்டு இப்படிப்பேச உனக்கு
கேவலமா இல்லையா?”
“முட்டாளே, அப்போதே தப்பு
செஞ்சவ கண்ணகிதான்!
அந்தணர், அறவோர், பெண்கள்,
குழந்தைகள்தவிர எல்லோரோடும் ஊரையே எரித்ததைவிட, கோவலனை எரித்திருக்கவேண்டும் அவள்!
அவள் செய்யத் தவறியதை நான் செய்வதற்குள் மரியாதையாக வெளியே போ!
இல்லாவிட்டால் நான் செக்யூரிட்டியை கூப்பிடவேண்டியிருக்கும்!”
தலை குனிந்தவாறு வெளியே போன கோவலன் கையிலும் வங்கிக்கணக்கிலும்
அன்றைய தேதியில் இருப்பு எட்டாயிரம் ரூபாய்!
சரியாக எட்டாவது நாள், முனீஸ்வரன் கோவில் வாசலில் ஜாகையை மாற்றிக்கொண்ட
கோவலன் லாலி ரோடு சிக்னலில் அன்றைய சாராயத்துக்காக போகவரும் கார் ஜன்னல்களில் கையேந்த
ஆரம்பித்தான்!
தை முதல் நாள் மருதமலை நோக்கி அந்த சிக்னலில் நிற்காமல் போன
பத்து வண்டிகளில் ஒன்றில் மணமகளாக மடியில் மகனோடு உக்கார்ந்திருந்தாள் கண்ணகி!
அன்றைக்கு ராத்திரி சரக்கு கிடைக்காத விரக்தியில் கோவலனும் தூங்கவில்லை,
வேறொரு காரணத்தால் கண்ணகியும் தூங்கவில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக