செவ்வாய், 5 ஜனவரி, 2021

கடைசி ? பொங்கல் வாழ்த்துக்கள்!

 


மக்களுக்காகவே ஓயாது உழைக்கும் தமிழக அரசு இந்த வாரத்திலேயே மக்களின் நலனுக்காக இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறது!

இரண்டுமே மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியது!

முதலாவது டாஸ்மாக் பார்களை 50 % இருக்கைகளோடு திறப்பது!

இரண்டாவதும், அதி முக்கியமானதும் - திரையரங்குகளை 100 % கொள்ளளவோடு செயல்பட அனுமதிப்பது!

இத்தனை நாட்களும் திரைப்படங்களை திரையரங்கில் பார்க்க முடியாமல் மூச்சுக்குத் தவித்துக்கொண்டிருந்த தமிழக மக்களுக்கு இப்போதுதான் உயிர் வந்தது!

முதலில் 50 % இருக்கைகளை மட்டுமே அனுமதித்த அரசு, தெருவில் இறங்கிப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட நடிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்ற கருணை உள்ளத்தோடு, மக்கள் நலனுக்காகவே பிறப்பெடுத்த இன்னொரு நடிகரின் வேண்டுகோளை ஏற்று முழுமையாக 100 சதவிகித இருக்கைகளோடு காட்சிகளைத் திரையிட அனுமதித்துள்ளது!

இனி,

ஒருவேளை சாப்பாடாவது சாப்பிட முடியும் நடிகர்களும் தயாரிப்பாளர்களும்!

இதற்காக,

ஏற்கனவே செழிப்போடிருக்கும் மக்களின் உயிரை, ஆரோக்கியத்தை கொஞ்சமாக பணயம் வைப்பதில் என்ன தவறு?

அரசும் அப்படி ஒன்றும் சும்மா கைவிட்டுவிடவில்லை மக்களை!

தீவிரமான வழிகாட்டு நெறிமுறைகளை காகிதத்தில் அச்சிட்டும், இணையத்திலும் வெளியிட்டிருக்கிறது அரசு!

மக்களும், தங்கள் வழக்கமான விழிப்புணர்வோடு கடைவீதிகளிலும், கட்சிக்கூட்டங்களிலும், டாஸ்மாக் பார்களிலும் கடைப்பிடிக்கும் அதே கட்டுப்பாட்டோடும், பொறுப்புணர்வோடும் அதை அச்சுப்பிசகாமல் கடைப்பிடித்து, கொரோனாவை ஒழித்தே தீருவார்கள்!

அந்த நெறிமுறைகளில் மிக முக்கியமானது, கொரோனா விழிப்புணர்வு குறித்த படத்தை திரைப்பட இடைவேளையில் ஒளிபரப்ப வேண்டும் என்பது!

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு,

புகைப்பழக்கம் உயிரைக் குடிக்கும்

போன்ற அதி தீவிர எச்சரிக்கை வாசகங்களை இருபது முப்பது ஆண்டுகளாகப் பார்த்தும் படித்தும், தமிழகத்தில் குடிகாரர்களோ, புகைப் பிடிப்போரோ இல்லாமலே போய்விட்டபோது,

அந்த விழிப்புணர்வுப் படத்தைப்பார்த்து கொரோனாவை ஒழிக்காமல் விட்டுவிடுவார்களா மக்கள்?அல்லது இலக்கு வைத்து சாராயம் விற்று நாட்டுக்குக் கேடு தரும் மதுவை ஒழித்துக்கட்டிய அரசு இந்த விஷயத்தில் மட்டும் மக்களை கைவிட்டுவிடுமா என்ன?

ரசிக சிகாமணிகள் அரசியல்வாதிக்குக் கூடும் கூட்டத்தை 100% தியேட்டர் அனுமதியோடு மடத்தனமாக ஒப்பிடுகிறார்கள்!

அந்தக் கூட்டங்கள் திறந்தவெளியில் நடைபெறுகின்றன.

திரையரங்குகளில் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் காற்றோட்டமின்றி ஒருவர் மூச்சுக்காற்றை இன்னொருவர் சுவாசித்துக்கொண்டு நூற்றுக்கணக்கானோர் அடைத்துவைக்கப்படுகின்றனர்.

சமீபத்தில், சென்னையில் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் எண்பது பேருக்கு கொரோனா தொற்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்கிறது ஒரு செய்தி!

திரையரங்குகள் கண்டிப்பாக நட்சத்திர ஹோட்டல் அளவுக்கு ஒவ்வொரு காட்சியின்போதும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கும் என்று சொல்ல முடியாது!

நுழைவாயிலில் மொக்கையாக ஒரு தெர்மாமீட்டரை சில வினாடிகள் காட்டுவதால் கொரோனா இருப்பைக் கண்டுபிடித்துவிடமுடியும் என்று அரசு சொல்கிறது!

நம்புவது உங்கள் விருப்பம்!

தமிழகத்தில் சுமார் 1000 திரையரங்குகள் இருப்பதாக எடுத்துக்கொண்டால், முதல்நாளில் மட்டும் நான்கு காட்சிகள் எனில் 4000 காட்சிகள்!

காட்சிக்கு 250 பேர் என்றாலும், 10,00,000 பேர்!

எந்தக் குப்பையாக இருந்தாலும், முதல் நான்கு நாட்கள் (விடுமுறை காலம் வேறு) அரங்கு நிறைந்து தொலையும்!

எனில், மிகக் குறைந்தபட்சம் நாற்பது லட்சம் முட்டாள் ரசிகர்கள் ஒரு காற்றோட்டமில்லாத அறையில் நோய்த்தொற்று வாய்ப்போடு வேகவைக்கப்படப் போகிறார்கள்!

அந்த நாற்பது லட்சம் பேரோடு இது நிற்கப்போவதில்லை!

தலைக்கு மிகக்குறைந்தபட்சம் பத்துப்பேர், குடும்ப உறுப்பினர், மார்க்கெட், மால், டாஸ்மாக் என்று பரப்பினால், நான்கு நாட்களில் நாலு கோடி மக்கள் நோய்த்தொற்று அபாயத்துக்கு உள்ளாகிறார்கள்!

கேடுகெட்ட அரசாங்கமும், காசே குறி என்றலையும் திரைத்துறையினரும் மனசாட்சியை எங்கே தூக்கியெறிந்தார்கள்?

மிகப்பெரிய இந்தப் பாதகத்தை ஏன் எந்த அரசியல்வாதியோ, மக்கள் நலனுக்காகவே வாழும் நடிகப் புனிதர்களோ தட்டிக் கேட்கவில்லை?

எப்படிக் கேட்பார்கள்?

அரசியல் கட்சிகளுக்கு ரசிகக் கண்மணிகள் ஆதரவு தேவை!

அவை ஓட்டுக்காக வாழும் உயிரினங்கள்!

ஆளும் கட்சி வெற்றிகரமாய் காய் நகர்த்தி ரசிகர்களை கைப்பற்றிக்கொள்ள முயலும்போது எதிர்க்கட்சி அதை எதிர்த்து எப்படி ஓட்டை இழக்கும்?

மக்களின் ஓட்டைவிடவா உயர்வானது அவர்கள் உயிர்?

நாளைக்கே தொற்று பரவலானால்,

மக்கள் விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிக்கவில்லை என்று அரசும், ஆதரவு கட்சிகளும்,

அரசு சரியாக கண்காணிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளும் பிரச்சாரம் செய்தால் போயிற்று!

யாருக்குத் தெரியும், இப்போதே அதற்கான ஸ்க்ரிப்டும் தயாராக இருக்குமோ என்னவோ?

ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்ட, வரத்துடிக்கும் நடிகர்கள் பாடு இன்னும் மோசம்!

தங்கள் தாய்வீட்டை பகைத்துக்கொள்ள முடியாது, ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கிறார் என்று சுலபமாகப் பேசுவார்கள்!

அவர்களுக்கு திரையரங்கங்களில் கட் அவுட்டுக்கு பால் வார்க்க, காட்சி ஆரம்பிக்கும்போது விசிலடித்து, தொண்டை கிழியக்கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, நாளைய தமிழகமே, விடிவெள்ளியே என்று வண்ணவண்ணமாய் போஸ்டர் அடிக்க, அவரவர் ரசிக சிகாமணிகள் இருக்கிறார்கள்!

பொதுமக்கள் எக்கேடு கெட்டால் அவர்களுக்கென்ன? 

ஒரு தேசியக்கட்சியின் பிரதான நட்சத்திரம் இப்படி திருவாய் மலர்ந்திருக்கிறார்

"மாற்றுக்கருத்து உள்ளோர் யாரும் தியேட்டருக்குச் செல்லவேண்டாம், உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை!"இது எல்லா இடத்துக்கும் பொருந்தும்தானே?

மொத்தமாகக் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு இதைச் சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே?

கல்லூரிகளை, பள்ளிகளை, பாராளுமன்றத்தை திறந்தால் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது!

ஏனென்றால், அங்கே வருவோரெல்லாம் அடங்காத முட்டாள்கள்! விதிமுறைகளை கடைப்பிடிக்க மாட்டார்கள்!

ஆனால், திரையரங்கத்துக்கு வருவோரும், டாஸ்மாக் பாருக்கு வருவோரும் அறிவுசால் அறிஞர்கள்!

அவர்கள்  இம்மியளவும் விதிமுறைகளை மீறமாட்டார்கள்!

அப்படி யாரேனும் மீறினாலும் அவற்றை நடத்தும் சமூக சேவகர்கள் அதைத் தடுத்துவிடுவார்கள்!

அப்படித்தானே?

ஆட்டுமந்தை ஜனங்களுக்கு இது ஏன் உறைக்கவில்லை?

ஒரு மகத்தான ஆபத்துக்குத் தயாராகுங்கள் மக்களே!

இந்த முட்டாள்தனத்தினால் பரவக்கூடும் நோய்த் தொற்றால், பலருக்கும் இது கடைசி பொங்கலாக இருக்கவும் கூடும்!

அவச்சொல்லாகப் பட்டாலும், இன்னும் தடுப்பு மருந்துகள் முழுமையாக நிரூபிக்கப்படாத நிலையில், இதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை!

அரசு தரும் 2500 ரூபாயை திரையரங்கிலும், டாஸ்மாக்கிலும் சந்தோஷமாக செலவு செய்து, அதிர்ஷ்டம் இருந்தால் தொற்றை வாங்கிவாருங்கள்!

ஹேப்பி பொங்கல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக