புதன், 20 ஜனவரி, 2021

பயணங்கள் முடிவதில்லை!

 


மார்கெட்டிங்கில் இருப்பதில் பெரிய வசதி, நினைத்தால் ஏதோ ஒரு சாக்கு சொல்லி பயணம் கிளம்பிவிடலாம்!

நாலு நாளாக மழை, பனி மூட்டம்!

பயணம் வா வா என்று கூப்பிட,  லட்டு மாதிரி மைசூரிலிருந்து  ஒரு அழைப்பு!

உங்க கம்பெனி ப்ரொஃபைல் பார்த்தோம். எங்களுக்கு உங்கள் தேவை இருக்கலாம்! நேரில் வரமுடியுமா ஒரு டிஸ்கஷனுக்கு?

எப்போது வரமுடியும்?”

நேற்றைக்கே ரெடி என்று சொல்ல,

மறுநாள் காலை பதினோரு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட்.

இப்படிப்பட்ட ஒரு பயணத்தில் நயன்தாரா வருவதாகச் சொன்னாலே கூட்டிப்போக யோசிப்பேன்! இதில் டெக்னிகல் டைரக்டரை எப்படி கூட்டிப்போவேன்? (குஜராத் பயணம் வேறு நியாபகம் வருதா இல்லையா!)

காலை ஐந்து மணிக்கு எழுந்து கிளம்பினால் போதும், அதிகபட்சம் நாலு மணி நேர பயணம்தானேன்னு கொஞ்சம் நிதானமாகவே எழுந்து, சுச்சூ போனா, பாதிலேயே உறைஞ்சு நிக்கற அளவுக்கு பனி!

காஃபி கலந்து குடிச்சுட்டு குளிக்கப்போய் தண்ணில கைவெச்சா, பத்தாவது படிக்கும்போது தமிழய்யா பொண்ணு கை பட்டபோது அடிச்ச அதே ஷாக்!

சுடுதண்ணில குளிக்கற பழக்கம் பரம்பரைக்கே இல்லைன்னு பெருமை வேற!

தலைல தண்ணி பட்டபோது எகிறியதில் கூரை மண்டைல இடிச்சதோ?

ஒருவழியா குளிச்சேன்னு பேர் பண்ணிட்டு, ரெண்டாவது டோஸ் காஃபி கலக்கும்போது தர்மபத்தினி எண்ட்ரி!

என்ன உருட்டிட்டிருக்கீங்க?, இன்னுமா கிளம்பல?”

இதோ, கிளம்பிட்டேன்னு சட்டையை மாட்டிக்கிட்டு வந்தா,

இது என்ன கண்றாவி காம்பினேஷன். போய் ஒரு டார்க் கலர் சட்டை போட்டுட்டு வாங்க!

போதும், அந்தக் கம்பெனில எல்லாம் தடிதடியா ஆம்பளைங்கதான் இருப்பாங்க!

எக்கோலமோ கெடுங்க!

இந்தப் பொம்பளைங்க மட்டும் எப்படி நோகாம மோவாயை தோள்பட்டைல இடிச்சுக்கறாங்க? 

எனக்கு தூக்கம் கலைஞ்சிருச்சு, இருங்க, ரெண்டு தோசை ஊத்தி தர்றேன். குளிருக்கு பசிக்கும்!

இதுகூட நல்ல ஐடியாவா இருக்கேன்னு ஆசையா தட்டை எடுத்துக்கிட்டு வந்து, தொட்டுக்க என்ன?

நேத்து சட்னி ஃபிரிட்ஜ்ல இருக்கு பாருங்க! எனக்கும் பிள்ளைகளுக்கும் அது ஏனோ பிடிக்கவே இல்லை! நீங்க சாப்பிடலைன்னா குப்பைலதான் போடணும்!

அஞ்சே முக்கால் மணிக்கு ரஜாய்க்குள்ள புலி உருமுற மாதிரி குறட்டை விடற ஜீவன், வாலண்டியரா தோசை ஊத்தித் தர்றேன்னு சொன்னப்பவே சுதாரிச்சிருக்கணும்!

ஐஸ் கட்டி மாதிரி ஒரு சட்னி பல்லுல பட்டதும் மண்டை வரைக்கும் சில்லுங்குது! எப்படியோ ஒரு தோசையோட தப்பிச்சு வண்டியெடுக்க நானும், பழைய சட்னியை தலைல கட்டுன சந்தோஷத்துல தூக்கத்தை தொடர அம்மணியும் நகரும்போது மணி ஆறரை!

சரி, டைம் இருக்கு, சமாளிச்சுக்கலாம்!

மேட்டுப்பாளையம் ரோடு பிடிச்சு சிறுமுகை பவானிசாகர் வழியா பண்ணாரி!

(அந்த ரோட்ல அதிகாலைல போய்ப்பாருங்க! தமன்னா மாதிரி எந்த வளைவு நெளிவும் இல்லாம ஸ்ட்ரைட்டா இருக்கும்! அதிர்ஷ்டம் இருந்தா யானை கூட்டத்தையே பார்க்கலாம்! அன்னைக்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லை)


பண்ணாரி
செக் போஸ்ட்ல எனக்குன்னே காத்திருந்தாரு ஃபாரஸ்ட் ஆபீஸர். சார், இஃப் யூ டோன்ட் மைண்ட், எங்க ஸ்டாஃப் ஒருத்தரை தலைமலைல ட்ராப் பண்ண முடியுமா ப்ளீஸ்!

டூ மைண்ட்ன்னு சொல்லத்தான் ஆசை!

ஆனா, இந்த "ஆர்ட் ஆஃப் சேயிங் நோ" நான் எல்கேஜி ஃபெயில்!

அதை கல்யாணத்துல சொல்லியிருக்கணும், அது எதுக்கு இப்போ!

அதுக்குள்ளே கதவைத் திறந்து ஏறிக்கிட்ட ஆபீஸர், சத்தியமா அவர் பேரு அதுவாத்தான் இருக்கும்ன்னு நினைச்சேன் ஐயம் கோதண்டராமன்!

சரி, அதுக்கென்ன இப்போன்னு  மூஞ்சியை வெச்சுக்கிட்டு மெதுவா போனா, எதிர்ல சரமாரியா வண்டிங்க வருது!

நேத்து ராத்திரி ட்ராபிக் பிளாக் ஆகி இப்போதான் வண்டியெல்லாம் ரிலீஸ் பண்ணியிருக்காங்க!

தகவல் உபயம் கோதண்டம்!

மலைப்பாதை பயணங்களில் பொதுவாக பாட்டு கேட்பதில்லைங்கற விரதத்தை விட்டு தேடியெடுத்து மகாராஜபுரம் ராமச்சந்திரன் ஃபோல்டர்ல இருந்து பாட்டு போட்டா,

", இது ஷண்முகப்ரியாதானே!"

ரைட்டு! இப்போ, ஷாக் ஆகறது என் முறை!

ரெண்டாவது ஹேர்பின் பெண்டிலேயே பனிமூட்டம், எதிர்ல முழுக்க வெள்ளை சுவர் கட்டியது மாதிரி! குளிர் வேற நடுங்குது! மலைப்பாதை பயணத்தில் ஜன்னலை ஏற்றுவதில்லை - இது இன்னொரு விரதம்!

சாப்பிட்ட ஒரு தோசையும், பவானிசாகர்ல இறங்கி நின்னப்பவே கரைஞ்சுபோச்சு!

முன்னாடி ஐம்பது வண்டி நிக்குது!

ஒருவழியா, ஆறாவது ஹேர்பின் பெண்டு திரும்பும்போது மணி ஒன்பதரை!

பதினோருமணி அப்பாயிண்ட்மெண்ட் சங்குதான்டின்னு, வேற யாரு, குரல் கேட்குது காதுக்குள்ள!ஒருவழியா ஆபீசரை இறக்கிவிட்டுட்டு, ஹாசனூர்ல சவம் மாதிரி விறைச்சுக் கிடந்த ரெண்டு தோசையை விழுங்கிட்டு பறந்தா, தமிழ்நாடு பார்டர் தாண்டின உடனே, ஹன்சிகா கன்னம் மாதிரி இருந்த ரோடு சாய்பல்லவி கன்னம் மாதிரி ஆயிடுச்சு!

முக்கி முனங்கி சாம்ராஜ் நகர் வந்ததும்,

ஒரு ஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீஸர்!

தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் வண்டியை பார்த்தா நூறு ரூபாய் வாங்காம அனுப்பமாட்டார் போல!

என்னோட பர்த் சர்டிபிகேட், மேரேஜ் சர்டிபிகேட், டெத் சர்டிபிகேட் இதைத்தவிர எல்லாமே வேணும்ன்னு அடம்பிடிச்சு வாங்கிப் பார்த்துட்டு பைசா தேறாத கோபத்துல அடுத்த வண்டியை நிப்பாட்டப் போய்ட்டார்!

ஒருவழியா SKF நுழையும்போது லன்ச் டைம்!

பன்னெண்டு மணிக்கு லன்ச்சா! பாவிகளா!

சபிச்சுக்கிட்டே உட்கார்ந்திருக்க, ஒரு மணிக்கு வந்தார் சாம்பார் வாசத்தோட - ப்ரொடக்சன் மேனேஜர்!

ஒருவழியா நாஸால விடற ராக்கெட் கூட நாங்க செஞ்சதுதான்னு சத்தியம் பண்ணி, சேம்பிள் வாங்கிக்கிட்டு, நாளைக்கு கொட்டேஷன் அனுப்பறேன்னு சொல்லி கிளம்பும்போது அடுத்த அப்பாயின்மெண்டுக்கு டைம் ஆயிருச்சு!

பேய் மாதிரி வண்டியை ஓட்டிக்கிட்டு போய் நிறுத்தும்போது மணி நாலு!

ஆன் டைம்!

பசிக்க வேற ஆரம்பிச்சுடுச்சு!

"ஸாரி, வீ ஹேட் லெங்த்தி மீட்டிங். இப்போதான் சாப்பிடப்போறேன், ஒரு டென் மினிட்ஸ்!"

சொல்லிக்கிட்டே, அங்கே பாக்கற மாதிரி இருந்த ஒரே பெண்ணையும்,

"கம் பேபி, லெட் அஸ் ஹாவ் லன்ச்" ன்னு கூட்டிக்கிட்டுப் போய்டுச்சு கிழம்!

அரை மணி நேரம் தேவுடு காத்ததுக்கு அப்புறம் வந்த கிழம் பார்க்கத்தான் அப்படி - சரி மண்டை!

"இந்தியால மெஷின் லேர்னிங்க்கா, யூ மஸ்ட்  பீ  ஜோக்கிங்!"

வாடி பார்த்தசாரதி ன்னு நான் காட்டிய ஆறு மிஷின் வீடியோவையும் பார்த்து எழுந்தே நின்னுட்டாரு சார்!

அன்பிலிவபிள். இதெல்லாம் நீங்க செஞ்சதா?

அடுத்த ஒருமணி நேரம் ஃபாக்டரியை சுத்திப் பார்த்துக்கிட்டே (பொண்ணுங்களுக்கு ஏன் இப்படி ஓவரால் கொடுத்துத் தொலைக்கிறீங்கடா பாவிகளா!) நாங்க பேசிய டெக்னிக்கல் டீட்டைல்ல்லாம் வேண்டாம்!

பூனை மூத்திரம் மாதிரி ஒரு காஃபி! குடிச்சுட்டுத்தான் போகணும்ன்னு ஒரே அடம்!

கொண்டுவந்து வச்ச கைல மருதாணி! அதுக்காக விழுங்கித்  தொலைச்சு, நைஸ்ன்னு வழிஞ்சுட்டு ஏந்திரிக்கும்போது மணி ஆறு!

கூகுளாண்டவரை வழிகேட்டு போனா, அது மைசூரை சுத்திக்கிட்டு வெளியே கொண்டாந்து விடும்போது மணி ஏழு!

சரி, சாப்பிட நின்னா நேரம் ஆயிடும், நல்லவேளை இன்னைக்கு மழை இல்லை, ஒரே அழுத்து, தாளவாடி போய் சாப்பிட்டுக்கலாம் -

மேலே சொர்க்கத்துல இருந்து என் மாமனார் அப்போ சிரிச்சது கேட்டுத்  தொலைக்கல!

நஞ்சுண்டாபுரம் ரயில்வே கேட்டில் ஒரு அரைமணி நேரம்!

அப்போ ஆரம்பிச்சது மழை!

தாளவாடிக்கு ஒரு பத்து கிலோமீட்டர் முன்னாடி கொட்டற மழைல, அந்த அரைகுறை ஹெட்லைட் வெளிச்சத்துல பக்கத்து வீட்டு ஆண்ட்டி மாதிரி ஒல்லியா ஒரு நாலஞ்சு உருவம் நடு ரோட்ல!

ஒரு யானைக் கூட்டம்!

வண்டியவே உத்துப் பார்த்துக்கிட்டு அமைதியா நிக்குதுக! இப்போ,  உனக்கென்ன அவசரம்ங்கற மாதிரி!பத்து நிமிஷம்!

வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கிட்டிருக்கும்போதே இவன்லாம் அவ்வளவு ஒர்த் இல்லைன்னு ஒரு பத்துப்பைசா பார்வை பார்த்துட்டு காட்டுக்குள்ள போய்டுச்சு!

பசி, பயம், குளிர்!

இந்த மாதிரி சமயத்துக்குன்னே வண்டில கொஞ்சம் பிஸ்கட் பாக்கெட் வாங்கி வைக்கறது உண்டு! ஆனால், மறுநாள் ஆபீஸ் போற வழில அஞ்சு நிமிஷத்துல தின்னு தீர்த்தாத்தான் தூக்கமே வரும்!

காலி!

ஒண்ணுமே இல்லை!

பசி, பசின்னு தாளவாடி வந்தா, நிறுத்தி இறங்கமுடியாத அளவு மழை!

வரிசையா லாரி நிக்குதுவேற!

சரி, இறங்கினா லேட் ஆய்டும்ன்னு நகர ஆரம்பிச்சப்போ, ஒரு லாரி ட்ரைவர் ஏதோ சத்தமா சொன்னாரு!

போய்யான்னுட்டு வந்து, ரெண்டு வளைவில் திரும்பினதும்தான் தெரியுது, சுத்தமா கண்ணே தெரியல - அந்த அளவுக்கு பனி, மழை ரெண்டும்!

ஃபாக் லேம்ப் ஆன் பண்ணினா, மெழுகுவர்த்தி மாதிரி எரியுது!

அடுத்த வளைவு லெஃப்ட்லதான்னு உத்தேசமா மெதுவா திருப்பினா, பின்னாடி வந்த லாரியிலிருந்து ஹாரன் சத்தத்தோட ஒரே கூச்சல்!

முன்னாடி பார்த்தால் கைகாலெல்லாம் உதறுது!

ரைட்ல திரும்பறதுக்கு பதிலா, லெஃப்ட்ல திரும்பியிருக்கேன்! இன்னும் அரையடி நகர்ந்திருந்தா வண்டி கீழேயும், நான் மேலேயும் வேகமா போயிருப்போம்!

லாரியை முன்னாடி விட்டு, அது வாலைப் பிடிச்சுக்கிட்டே ரெண்டு வளைவு தாண்டல, கண்ணே தெரியாத அளவு பனி!

இனி போவது ஆபத்துன்னு நினைக்கும்போதுதான் பார்த்தேன், முன்னால் ஏறத்தாழ நூறு வண்டி! அதற்குள் பின்னாலும் வண்டிகளாக வந்து நின்றுவிட,  ஏறத்தாழ அரை  மணி நேரத்துக்குள் மலைப்பாதை முழுக்க எதிரும் புதிருமாக வண்டிகள்!

கடுமையான குளிர்! கொல்லும் பசி! கொட்டும் மழை! வண்டி நகரும் சாத்தியமே தெரியாத நிலையில், ஃபோனைஎடுத்துப் பார்த்தால், அட, உயிர் இருக்கிறது!


ரெண்டு ட்வீட் போட்டுட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால், ரெயின்கோட்டோடு ஒரு உருவம் மெதுவாக டிராஃபிக்கை நகர்த்த முயற்சி செய்துகொண்டிருந்தது!

உற்றுப்பார்த்தால், அட, காலைல கோதண்டத்தை ஏற்றி அனுப்பியவர்!

ஒருவழியாக இரண்டு மணி நேரம், முக்கி, முனகி இன்ச் இன்ச்சாய் நகர்ந்து தரைக்கு வந்ததும்தான் உயிரே வந்தது!

இடையில் பக்கத்து வீட்டு அங்கிளுக்கு மொட்டையடித்து அலகு குத்துவதாய் வேண்டிக்கொண்டதை எப்படி நிறைவேற்றப்போறேன்னு தெரியல!

வீடு வந்து சேரும்போது நடு ஜாமம்!

காலைல சாப்பிட்ட ரெண்டு தோசை எப்போதோ ஆவியாகிப் போயிருந்தது!

பெல்லடிச்சு, கதவைத் திறந்த மனையாள் கேட்ட முதல் கேள்வி, சாப்பிட்டுட்டீங்கதானே?

ஏன், சாப்பிட ஏதாவது இருக்கா?

ம், தோசை போடறேன்!

தொட்டுக்க?

ஃப்ரிட்ஜ்ல சட்னி இருக்கு!

அது சரி, போற உசுரு பட்டினிலேயே போகட்டும்!
 

குறிப்பு:

பகிர்ந்திருக்கும் போட்டோ எதுவும் அந்தப் பயணத்தில் எடுத்ததல்ல!


1 கருத்து: