ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

மார்க்கெட்டிங் பயணமும் துபாய் ரிட்டர்னும் ..

 


ரொம்ப நாளைக்கப்புறம் சாலைவழி பயணம் சென்னைக்கு!

அதுவும் ஒரே நாளில் போயிட்டு வரணும்!

கேட்டவுடனே  சரின்னு சொல்லியாச்சு!

யோசிக்கற பழக்கம்தான் ஜாதகத்திலே இல்லையே!

ஒரு பட்டு வேஷ்டி சட்டைக்கு ஆசைப்பட்டு கல்யாணமே பண்ணிக்கிட்டவனுக்கு பயணத்துக்கு ஒப்புக்கறது கஷ்டமா என்ன?

பட்ஜெட் மாதிரி பேப்பர்ல போடும்போது எல்லாமே ஈசியாதான் இருந்தது!

காலைல நாலரை மணிக்குப் புறப்பட்டால் பதினோரு மணிக்கு ஸ்ரீபெரும்புதூர்! அங்கே ஒரு கம்பெனியில் எம்டி கூட மீட்டிங், அதை முடிச்சுட்டு பூந்தமல்லில ஒரு கம்பனில ரெண்டரை மணிக்கு மீட்டிங். இடைல போற வழில ஒரு யூனிட்ல ஒரு பத்து நிமிஷ டெமோ, வழியிலேயே லன்ச்!

நாலு மணிக்கு மீட்டிங் முடிஞ்சாலும், பன்னிரண்டு மணிக்குள்ளே வீடு!

எவ்வளவு சுலபமா இருக்கு, ரமணிச்சந்திரன் கதைல வர்ற வாழ்க்கை மாதிரி!

இருக்கறதிலேயே நம்ம டேஸ்டுக்கு ஏத்த மாதிரி ஒரு பென்ட்ரைவ், ஒரு பாட்டில் சுடுதண்ணி! எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு நாலு மாஸ்க்! அவ்வளவுதான் பயணத்திட்டம்!

கூட யாராவது வரும்போது லேப்டாப் எடுத்துட்டுப் போறதில்லை! தனியா போனாலும் முடிஞ்சவரைக்கும் அதைத் தொடறதில்லை.- ரொம்ப ஃபார்மலா ப்ரெசென்டேசன் கொடுக்கறது என்னவோ மெடிக்கல் ரெப் மாதிரி ஒரு ஃபீலிங் கொடுக்கும்ன்றதால!

ஏதாவது தேவைப்பட்டால் மொபைல்ல இருக்கற வீடியோவை காமிச்சே ஒப்பேத்திடுவேன்! அதில் ரெண்டு அட்வான்டேஜ்!

ஒன்னு, நான் ஐஃபோன் வெச்சிருக்கேன்னு பீத்திக்கலாம்! ரெண்டாவது, ஃபோன்ல குட்டி இமேஜ்ல பார்க்கும்போது ரொம்பல்லாம் டெக்னிக்கல் டீடைல் கேட்கமுடியாது!

ரெண்டு வருஷத்துல ஒரு மாதிரி புதுப் பெண்டாட்டிகிட்ட அட்ஜஸ்ட் ஆயிடற மாதிரி டெக்னிக்கல் டைரக்டர் கூட பயணம் போவது பழகிப்போச்சு! அவருக்கும் என்னோட கிறுக்குத்தனமெல்லாம் சகிச்சுக்கற பொறுமை வந்துடுச்சி!

ஆனா இன்னொரு ஆறாவது விரல்தான் அன்னைக்கு வில்லன்னு எனக்கு அப்போ தெரியாது!

"என் ஃப்ரெண்டு ஒருத்தர், கொரோனாவுக்கு பயந்து கல்ஃப்ல இருந்து வந்திருக்கார்! அவருக்கு மெடிக்கல் லைன்ல நல்ல எக்ஸ்போஸர் இருக்கு! மார்க்கெட்டிங்க்ல வேற நல்ல இன்ட்ரெஸ்ட்! நம்மகூட வர்றேன்னு சொல்றாரு. கூட்டிக்கிட்டுப் போலாமா?" ன்னு கேட்டப்போ வைஃப் கூட போன்ல பேசிக்கிட்டே மண்டையை ஆட்டித் தொலைச்சுட்டேன்!

ஆனால், அந்த ஆள் மார்க்கெட்டிங் பத்தி என்கிட்டே கத்துக்கப்போறார்ன்னு சொன்னதுதான் ... சரி, அது அந்த ஆள் தலையெழுத்துன்னு விட்டுட்டேன்!

செவ்வாய்க்கிழமை காலைல மூணு மணிக்கெல்லாம் எந்திருச்சு குளிச்சு ரெண்டு அதிரசம் சாப்பிட்டு, ஒரு காஃபி குடிச்சுட்டு டெக்னிக்கல் டைரக்டர் வீட்டுக்கு சாமக்கோடங்கி மாதிரி போனபோது மணி நாலு இருபத்தஞ்சு. மாசக்கடைசி குடும்பஸ்தன் மூஞ்சி மாதிரி தெருவே இருளடைஞ்சு கிடக்குது. வீட்டுக்குள்ளே பேய் நடமாட்டம்கூட இல்லை!

கடுப்பா கால் பண்ணினா, ஹூ இஸ் தட்ன்னு இங்கிலீஸ் வேற! யோவ், ராப்பிச்சைக்காரன் மாதிரி வாசல்ல நிக்கிறேன்னு சொன்னா, அய்யய்யோ அலாரம் அடிக்கலன்னு பழி கடிகாரத்துமேல!

பத்தே நிமிசத்துல செண்ட் வாசம் மூணாவது தெருவுக்கு அடிக்குது! ரைட்டு, ஐயா செண்ட்ல மாத்திரம் குளிச்சிருக்கார் போல!

ஒருவழியா வண்டிக்குள்ள அவரைத் திணிச்சுக்கிட்டு, பெட்ரோல் பங்க்ல சொத்தெல்லாம் எழுதிக்கொடுத்து டீசல் அடிச்சுக்கிட்டு கிளம்பி, அரபுநாட்டு ரிட்டர்ன் வெய்ட் பண்றதா சொன்ன இடத்துக்குப்போனா ரெண்டு தெருநாய் ப்ரஜாவிருத்தில மும்முரமா இருக்கு! நல்ல சகுனம்!

அந்த ஆளுக்கு போன் அடிச்சா, நீங்க கிளம்பும்போது கூப்பிடறதா சொன்னீங்களேன்னு வீட்லயே வெய்ட் பண்ணறேன்னு வியாக்கியானம்! ஒருவழியா அந்த ஆளும் ஒரு லேப்டாப் பையோட வந்து சேரும்போது மணி அஞ்சறை!

சட்டை காலர் பட்டன் வரைக்கும் போட்டுக்கிட்டு ஏதோ இன்டர்வியூவுக்கு போறமாதிரி தலையெல்லாம் படிய வாரிக்கிட்டு பழமாட்டம் வந்த கல்ஃப் ரிட்டர்ன் கைல இன்னொரு பெரிய பேக்!

வண்டியிலே ஏறி உட்கார்ந்ததுமே புஸ்புஸ்ன்னு ரெண்டு கைக்கும் சேனிடைசர் அடிச்சுக்கிட்டு, பையில இருந்து ஒரு பெரிய ரோல் டிஸ்யூ பேப்பரை எடுத்து கிழிச்சு ரெண்டு நிமிஷம் தொடச்சிட்டு, ஒரு ஜிப்லாக் கவர்ல போட்டுட்டு எதையோ சாதிச்சமாதிரி ஒரு லுக்கு! "கார் ஹேண்டில் அழுக்கா இருந்துச்சு!"

நீங்க பிறந்து வளர்ந்தது எல்லாமே கல்ஃப்லதானா?

இல்லைங்க நமக்கு அன்னூர்.

அன்னூர் ப்ராப்பரா, இல்லை...

இல்லைங்க பக்கத்துல சொக்கம்பாளையம்

அதுசரி

வீட்ல எல்லாத்துக்குமே டிஸ்யூ பேப்பர்தானா?

ஆமாங்கன்னு அப்பாவியா சொன்னவருக்கு என் கேள்வி புரியலைன்னு நினைக்கறேன்!

சேலம் பக்கம் போகும்போது மணி ஏழு!

நமக்கு ட்ராவல்ன்னாலே ரோட் சைட் கடைகள்லதான் சாப்பாடு!

டு பீ நிறுத்திடுங்க, சாப்பிட்டுப் போலாம் - துபாய் ரிட்டர்ன்!

மணி ஏழுகூட ஆகல - தொப்பூர் போய்டலாம், அங்கே ஒரு கடைல இட்லி குடல்கறி செம்மையா இருக்கும்!

ஐயோ, வேண்டாங்க, அதெல்லாம் ஹைஜீனிக்கா இருக்காது. இதைவிட்டா, போறவழில நல்ல ஹோட்டலே இல்லை! எனக்கு சுகர் வேற இருக்கு!

ரைட்ரா. இன்னைக்கு இந்த ஆள் புண்ணியம் கட்டிக்கப்போறான்!

வண்டியை நிறுத்தின வேகத்தில் ரெஸ்ட் ரூமுக்குள்ள பாஞ்சுட்டாரு - மறக்காம கைல சேனிடைசர் பை வேற!

அந்நேரத்தில் சோறு கேட்டு வந்தவங்கள சர்வரே விநோதமா பார்க்க,

இட்லி சாப்பிடலாம் - அதுதான் ஹெல்த்தி - துபாய்தான்!

வேற வழி? அதிதி தேவோ பவ! நம்ம கெஸ்ட் ஆச்சே அவர்

இட்லி தட்டை மெதுவா வெச்சப்பவே சுதாரிச்சிருக்கணும்!

கொஞ்சம் வேகமா கடிச்சுட்டேன் - ஏற்கனவே பல்வலி வேற!

ஒருவழியா தலைக்கு நாலு இட்லி முழுங்கிட்டு, கழுநீர் தண்ணி மாதிரி ஒரு காஃபியையும் குடிச்சு கிளம்பும்போது துபாய் வாயில சனி!

இது மாதிரி நீட்டான ஹோட்டல்ல சாப்பிடுங்க சார், ரோட் சைட் ஹோட்டல்லாம் சுகாதாரக்கேடு!

ஏற்கனவே கடுப்புக்கூந்தல், இதில் அட்வைஸ் வேற!

ஆமாங்க, ஆனா, அந்த சர்வர் இட்லி கொண்டுவரும்போது மூக்கை நோண்டிக்கிட்டு வந்தாரே அதுகூட ஹைஜீன்தானே!

சுகர் மாத்திரையை கீழே போட்டுட்டு ஜெர்க் ஆயிட்டாரு பாவம்!

ஸ்ரீபெரும்புத்தூர் போறதுக்குள்ளே மூணு ஹோட்டல்ல நிறுத்தி காஃபி கூடவே ஸௌசால்யம்!

டீக்கடைக்கு கூப்பிட்டா குளிக்கக் கூப்பிட்ட வீரா மாதிரி அடம்!

அந்தக் கடுப்பு, அரை மணி நேர லேட் வேற!

எல்லாத்தையும் ஆக்சிலேட்டரில் காட்ட கார் ஏறத்தாழ பறந்தது!

சார், கொஞ்சம் மெதுவா போங்க!

கவலைப்படாதீங்க, அடியெல்லாம் படாது, நேரா மேலதான்!

ஏதோ முணுமுணுத்துக்கிட்டே வந்தார் - கந்தர் சஷ்டி கவசமோ, இல்லை ஏதோ கெட்ட வார்த்தையோ!

டெஸ்டினேஷன் சேரும்போது அப்போவும் லேட்!

மொபைல்ல கூட ஃபிலிம் காட்டாம ப்ராடக்ட் பத்தி பேசிட்டு மெஷின் பார்க்க உள்ளே போனபோது சொக்கம்பாளையம் மூஞ்சில ஏகத்துக்கும் டிசப்பாய்ண்ட்மெண்ட்

என்னங்க, இவ்வளவுதான் பேசுவீங்களா?

வேற என்னங்க, அந்த ஆள் எனக்கு புதுப் பொண்டாட்டியா வெட்டிக்கதை பேச?

சார், அவர் உங்ககிட்ட மார்க்கெட்டிங் கத்துக்கலாம்ன்னு வந்திருக்காரு அதான் - இது டெக்னிக்கல் டைரக்டர்!

வளவளன்னு பேசறதுதான் மார்க்கட்டிங்கான்னு அவருக்கு ஒரு கடி!

ஆனால், ஆர்டரும், சேம்பிளும் வாங்கிக்கிட்டு கிளம்பும்போது ரெண்டுபேரும் வாயே திறக்கலை!

அடுத்த அரைமணில இன்னொரு கம்பெனி!

இறங்கின உடனே கண்ணில் பட்டது சும்மா தீபிகா படுகோனே மாதிரி ஸ்லீக்கா ஒரு மெர்ஸெடிஸ் - நல்ல ரத்தத் சிகப்பில்! கண்டிப்பா ஒன்னு, ஒண்ணரைக்கோடி இருக்கும்!

வயநாடு போனப்போ சைஸா சேட்டுப் பொண்ணைத் தொட்டுப் பார்த்தமாதிரி கொஞ்சம் ஏக்கத்தோட தொட்டுப்பார்த்துக்கிட்டே கம்பனிக்குள்ளே போகும்போது அந்தக் கார் ஓனர் எப்படியும் ஒரு சின்னவயசுப் பையனாதான் இருப்பார்ன்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன்!

எழுபது வயசு பெரியவர் ஒருத்தர்!

பிஸினெஸ் கார்ட் ஷேர் பண்ணிக்கும்போதே எனக்குத் தெரிஞ்சுபோச்சு அவர் லெவல்!

நான் பேசறேன் - இது டெக்னிகல் டைரக்டர்!

நிம்மதியா சாஞ்சு உட்கார்ந்து வேடிக்கை பார்க்க ரெடியாய்ட்டேன்!

இண்டர்காமை எடுத்து, சினேகாவை வரச்சொல்லு!

எங்க பக்கம் திரும்பி, என்ன சாப்பிடறீங்க?

கதவைத் திறந்துக்கிட்டு நுழைந்த ஸ்னேகா எங்க அம்மா செட்டு!

ஸ்னேகாவாம்ல!

கடுப்பை தீர்த்துக்க வேற வழி?

எனக்கு ஒரு ஸ்ட்ராங் காஃபி வித்தவுட் சுகர்!

நல்லவேளை, அந்த ஆள் இதென்ன சரவணபவனான்னு கேட்கல!

போய் காஃபி டே வாங்கிட்டு வா!

பார்றா!

மேக் புக்கைத் திறந்தவர், Sir, basically our machines are self-learning, artificial intelligence based inspection and automation....

பத்து நிமிஷம் மூச்சுவிடாம தன் யூகே அனுபவம் தந்த இங்கிலீஸ் எல்லாம் கொட்டித் தீர்த்தார் தலைவர்! இடையிடையே வீடியோ வேற!

ஷோக்கா பேஷ்னார்ல்ல, ஆனா நமக்கு இந்த இங்கிலீஸ் கண்றாவியெல்லாம் புரியாதுங்க!

மூஞ்சில ஆடலை ரெண்டுபேருக்கும்!

சலனமே இல்லாம காஃபி குடிச்சுட்டிருந்தேன்!

பரிதாபமா என்னைப் பார்க்குதுக ரெண்டும்!

நிதானமா காஃபி குடிச்சுட்டு சொன்னேன்!

ஐயா, எங்க மெசின் வாங்கினீங்கன்னா, நூறு சதவிகிதம் டிஃபெக்ட் இல்லாத காம்போனென்ட் கொடுக்கமுடியும், அதுமட்டும் இல்லாம இப்போ, இருபதுபேர் தப்புத்தப்பா செய்யற வேலையை மெஷின் தப்பே இல்லாம செய்யும். அதனால உங்களுக்கு இருபதுபேர் சம்பளம் மிச்சமும்கூட!

இப்படி புரியற மாதிரி சொல்லுங்க! என்ன விலை வருது?

அறுபது லட்சம் பக்கம் வரும்!

என்னங்க யானை விலை சொல்றீங்க?

கீழ நிக்கற பென்ஸ் யாருதுங்க?

ஏன்? என்னுதுதான்

நீங்க ஏன் ஒரு மாருதி ஆல்டோ வாங்காம இதை வாங்குனீங்க?

சைலெண்டா மூஞ்சிய உத்துப்பார்த்தவர் "என்ன சொல்லவர்றீங்க?"

ரொம்ப சிம்பிள் சார். எங்க மெஷின் அவ்வளவு வித்தியாசமானது! நீங்க ஒவ்வொருதடவையும் செட்டிங் மாற்றவேண்டியதில்லை! அதுவே எல்லாத்தையும் கத்துக்கும்!

வேற விலை சொல்லுங்க, பேசலாம்!

பத்து பெர்சன்ட் தள்ளுபடி தர்றேன்! ஓகேன்னா சொல்லுங்க!

சரி, சாம்பிள் எடுத்துட்டுப் போயிட்டு கொட்டேஷன் அனுப்புங்க!

வேற ஏதாவது என்கிட்டே கேட்கணுமா?

சார், அந்த காருக்கு ட்ரைவர் வெச்சிருக்கீங்களா, இல்லை ஸெல்ப் ட்ரைவிங்கா? சும்மா ஒரு இன்ட்ரெஸ்ட்தான்!

ரெண்டு கோடி ரூபாய் போட்டு கார் வாங்கி, இன்னொருத்தன் முதலாளி மாதிரி ஓட்டிக்கிட்டு திரியவா? ஸெல்ப் டிரைவிங்தான்!

True it is. Spent so much on nuptials, how can we..

ஷாக் அடிச்சமாதிரி என்னைப் பார்த்த டைரக்டர் கண்ணில் அதிர்ச்சியும் கெஞ்சலும்!

ஐயா, நான் என்ன சொன்னேன்னு புரிஞ்சுதுங்களா?

என்னங்க?

இல்லை, நீங்க பண்ணுனதுதான் கரெக்ட்ன்னு சொன்னேன்!

அப்போ, நாங்க கிளம்பவா?

வெளியே வந்ததும் நம்ம அரபு ஷேக் கேட்ட கேள்வி,

சார், நிஜமாகவே இவர்தான் உங்க மார்க்கெட்டிங் எல்லாம் பார்த்துக்கறாரா?”

ஏங்க, அப்படி பேசுனீங்க?

ஸ்நேகான்னு ஒரு கிழவியை கூப்பிட்டு அவர் மாத்திரம் கடுப்பை கிளப்பலாமா?

சங்கீதால சாப்பிட்டு முடிக்கவரைக்கும் ரெண்டுபேரும் மூச்சுக்காட்டலையே!

மூணாவதா பூந்தமல்லி போனபோது, அது கொஞ்சம் ப்ரொஃபஸனலி மேனேஜ்ட் கம்பெனி போல!
மீட்டிங்
ஹால்ல ஜிஎம், ப்ரொடக்சன் மேனேஜர் குவாலிட்டி மேனேஜர், அது இதுன்னு ஆறுபேர்!

ஷல் வீ சீ ப்ரெசென்டேஷன்?

ஸிரோ சைஸ் பொண்ணு மாதிரி இருக்குன்னு மேக் புக் வாங்கி, அதை கனெக்ட் பண்ண ஹெச்டிஎம் கார்ட் வாங்கல தலை!

ப்ரொஜெக்டர்ல கனெக்ட் பண்ண முடியாம தடுமாறி லேப் டாப்லயே ப்ரெசென்டேசன்!

ஜி எம்முக்கு சரி மண்டை!

அரைமணிநேரம் குடைஞ்சு குடைஞ்சு கேள்வி!

ஒருவழியா ப்ரைஸிங் பேசும்போது, பர்ச்சேஸ் மேனேஜர் திருவாய் மலர்ந்தார், எங்க பட்ஜெட் இருபதுதான் சார்!

இதை முதலிலேயே சொல்றதுக்கு என்னன்னு கேட்கவந்ததை அடக்கிட்டு, போய்ட்டு லெட்டர் போடறோம்ன்னு பொண்ணுப் பார்க்க வந்தவங்களாட்டம் சொல்லிட்டு வெளியே வரும்போது மணி ஆறு!நைட்டுக்காவது எங்காவது ரோட்டுக்கடைல சாப்பிடலாமா? - நம்ம கவலை நமக்கு!

நத்திங் டூயிங் - இது துபாய்!

வர்ற வழியெல்லாம்,

கல்ஃப்ல இப்படியெல்லாம் லேன் மாற முடியாது, இப்படியெல்லாம் குறுக்கே புகுந்தா தூக்கி உள்ளே வெச்சுடுவாங்கன்னு ஒரே துபாய் புராணம்!

நடுவே எஞ்சின்ல ஏதோ சத்தம் வருதுன்னு ஓரமா நிறுத்திப் பார்த்தால், டைரக்டர் குறட்டை சத்தம் அது!

ஆரணி தாண்டி டீசல் அடிக்க பங்க்ல நிறுத்தி,

ரெஸ்ட் ரூம் எங்கே?

சாவியை எடுத்து கைல கொடுத்து கை காட்டின ரூம்ல லைட்டும் இல்லை!

உள்ளே நுழைந்தபோதே சுகந்தம் - திண்டுக்கல் பஸ் ஸ்டான்ட் மாதிரி!

நமக்குத்தான் எல்லாக் கேவலமும் பழகிடுச்சே, முடிச்சுட்டு வெளியே வர, சுகர் பேஷண்ட் உள்ளே போன வேகத்தில் குமட்டிக்கிட்டே ஓடி வந்துட்டார்!

என்ன சார் முழுகாம இருக்கீங்களா?

பதில் சொல்லக்கூட நிற்காமல் பக்கத்துக்கு சந்தில் நுழைந்தவர் வர சரியா அஞ்சு நிமிஷம் ஆச்சு!

அப்பாடான்னு ஆசுவாசமா வந்தவர்கிட்டே நான் அந்தக்கேள்வியை கேட்டிருக்கக் கூடாதோ?

ஏன் சார், இதை துபாய்ல பண்ணினா அறுத்து காக்காய்க்கு போட்ருவாங்கதானே? துபாய்ல காக்காய் எல்லாம் இருக்குதா?”

ரெண்டு மணிக்கு இறக்கிவிடும்வரைக்கும் துபாய் மூச்சுக்காட்டலை.

அநேகமா, மார்க்கெட்டிங் ஆசையே அவருக்கு மறந்து போயிருக்கும்!