திங்கள், 22 பிப்ரவரி, 2021

த்ரிஷ்யம் 2 - என் பார்வையில்

 


இரண்டு தகப்பன்களின் கதையைச் சொல்லும் படம் இது!

அநேகமாக எழும் எல்லாக்கேள்விகளுக்கும் இந்தப் படத்தில் பதில் இருக்கிறது!

ஆரம்பக் காட்சியில் அந்தக் கொலைகாரன் கண்ணில் ஜார்ஜ்குட்டி படுவது உட்பட!

யாருக்கும் தெரியாமல் செய்த செயல் என்று உலகத்தில் ஒன்று இல்லவே இல்லை!

ஏன் அந்த ஊரைவிட்டு ஜார்ஜ்குட்டி போயிருக்கக்கூடாது?

எவ்வளவு ஆழப் புதைத்தாலும், உண்மை ஒருநாள் வெளியே வரும் என்ற எதார்த்தம். அப்படி வரும்போது தன்னையும், தன் குடும்பத்தையும் எப்படிப் பாதுகாத்துக்கொள்ள, தான் அங்கே இருந்தே ஆகவேண்டிய அவசியம் உணர்ந்தவன் ஜார்ஜ் குட்டி! படத்தின் முதல் பாதியில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் ஒரு நியாயம் - சிசி கேமரா அமைப்பது உட்பட!

இனி ஏதும் நடக்காது, தான் பத்திரமாக இருக்கிறோம் என்று வெளியே காட்டிக்கொண்டாலும், அப்படி ஏதும் நடந்தால், வெகு சாமர்த்தியமான காய் நகர்த்தல்கள் மூலம் தன் மகளுக்கோ, மனைவிக்கோ எந்த ஒரு தீங்கும் நேர்ந்துவிடக்கூடாது என்று திட்டமிடும் வெறித்தனமான நேசத்தை எவ்வளவு அமைதியான உடல்மொழியில் வெளிப்படுத்துகிறார் மோகன்லால்!

நான் பார்த்தவரை, குடிக்க இவ்வளவு வலிமையான,  நேர்மையான காரணத்தை வேறு எந்தப்படமும் சொன்னதில்லை!

எல்லாப்பாத்திரங்களுமே கச்சிதமாக செதுக்கப்பட்ட படம்!ஜார்ஜ்குட்டி

தன் குடும்பத்தைக் காக்க எந்த எல்லைக்கும் போகக்கூடிய ஒரு அன்பு மிக்க மனிதன்! ஒரு தேர்ந்த சதுரங்க விளையாட்டைப்போல, நாளை வரக்கூடிய ஆபத்தை, எதிரியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்று கணித்துக் காய் நகர்த்துவதும், ஆனால், அதன் ஒரு சிறு பாரமும் தன் குடும்பம் அறியாது காப்பதும் என்று வெகு இயல்பான மனிதன்!

மகனை இழந்த தகப்பனை, கண் பார்த்துப்பேச முடியாமல் தவிப்பதும், அவர்களின் இழப்புக்காகவும் உளப்பூர்வமாக வருந்துவதும், பாசத்தை, பிறர் துயரும் உணர்ந்த ஒரு மகத்தான மனிதனின் பாத்திரப்படைப்பு!

அந்தப் பாத்திரமே சொல்வதுபோல், சாகும்வரை அந்த சதுரங்க விளையாட்டை நிறுத்தப்போவதில்லை ஜார்ஜ்குட்டி.

பக்கத்துவீட்டுப் பெண்மீது ராணிக்கு வரும் வருத்தமும் அவனுக்கு வருவதில்லை!

அவர்கள் தங்கள் கடமையைச் செய்தார்கள் என்பதை உணர்ந்து கடக்கும் பாங்கு!

ராணியின் பார்வையில் தான் ஏமாற்றப்பட்ட வருத்தமும் அழகாகவே நியாயப்படுத்தப் படுகிறது! கணவனின் போக்குப் புரியாமல், ஆனால் அவன் மீதான நம்பிக்கை சற்றும் குறையாத மனைவியின் பாத்திரம் மீனாவுக்கு! உருவத்தில் காணும் அதீத முதிர்ச்சி நடிப்பிலும்!

ஒரு சாதாரணக் கொலைக்கேஸுக்கு இத்தனை மெனக்கெடலும் திட்டமிடலும் சாத்தியமா என்னும் கேள்விக்கும் ஒப்புக்கொள்ளக்கூடிய பதில்!

குற்றவாளி இவன்தான் என்று தெரிந்தும், என்ன நடந்தது என்பது புரிந்தும், தங்களை மிக சாமர்த்தியமாக ஒரு சாதாரண கேபிள் டிவி ஆபரேட்டர் ஏமாற்றியது அந்த ஐஜியின் ஈகோவை உசுப்பிவிட்டது நியாயமே!

தன் அறிவுக்கும் திறமைக்கும் விடப்படும் சவாலை எந்த மனிதனும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டான் என்பது இயல்பு!

அதிலும் ஒரு பெரும் பதவியில் இருப்பவன்! அதற்காக சில சட்டமீறல் வழிமுறைகளையும் கைக்கொள்ள அவன் முயல்வதும் நியாயமே!

இம்முறையும் தான் தோற்று ஜார்ஜ்குட்டி வென்றதை ஏற்க முடியாமல், ஆனால், அவன் தரப்பும் புரிந்த மரியாதையும் கோபமும் வெறுப்புமாய் அவனைக்கடக்கும்போது பார்க்கும் ஒரு பார்வை போதும் அந்தப் பாத்திரத்துக்கு!

தன் ஒரே மகன் செய்தது தவறு என்பது உணர்ந்தாலும், தன் வளர்ப்பில் உள்ள குறையை உணர்ந்தாலும், மரணம் அதற்கான தண்டனை அல்ல என்பதை திட்டவட்டமாக நம்பும் பாத்திரம் கீதாவுக்கு!

அமெரிக்காவுக்கே போனாலும், இன்னும் நூறு வருடம் ஆனாலும், தன் கணவன் எத்தனை சமாதானம் சொன்னாலும், அவரால் ஜார்ஜ்குட்டியை மனப்பூர்வமாக மன்னிக்கவே முடியாது!

தன் அதிகாரத்துக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே அதை அவர் பார்ப்பது ஒரு மிடுக்கான காவல் அதிகாரியின் பார்வையில் வெகு அழகாகவே காட்டப்படுகிறது.கீதாவுக்கும் ஜார்ஜ்குட்டியைப்போல்தான், சாகும்வரை இந்த வழக்கு முடியப்போவதில்லை!

அந்தக் கணவன் பாத்திரம் இன்னொரு அற்புதம்!

அதிகாரம் மிக்க மனைவி, ஆசை மகனின் இழப்பு, அவனால் இன்னொரு குடும்பத்தில் நேர்ந்த விபரீதம், அந்தக் குடும்பத்தலைவன் செயலில் இருக்கும் சட்டத்தை மீறிய நியாயம்!

இது அத்தனையும் புரிந்துகொண்டும், யார் மீதும் தன் வருத்தத்தை காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் குமையும் ஒரு ஜீவனின் தவிப்பை அருமையாக வெளிப்படுத்தும் நடிப்பு!

ஒரு இயல்பான மனிதராய் வாழ்ந்திருக்கிறார் அவர்!

தான் நம்பாவிட்டாலும், தன் மகன் ஆத்ம சாந்திக்கு தவிப்பதும், தன் வேண்டுகோள் அளவைவிட, ஜார்ஜ்குட்டி அதை நிராகரிப்பதின் வலிமையான நியாயம் புரிந்து அமைதி காப்பதும் என்று அபாரமான பாத்திரப்படைப்பு!

இந்த இரண்டு தகப்பன்களும்தான் இந்தக் கதையின் அற்புதங்கள்!

ஏன் இதை ஒரு தற்காப்புக்காக தாக்குதல் என்று நிரூபித்து இதிலிருந்து நிரந்தரமாக விலக முயலவில்லை?

இப்போதே காதுபட அந்தக் குடும்பத்தின் மூன்று பெண்களைப்பற்றியும் புறம் பேசுகிறது ஊர் - அவர்கள் ஒவ்வொருவரின் வயது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல்! அதை கோர்ட் வரை சென்று ஒப்புக்கொண்டு, அதை முகத்துக்கு நேர் கேட்க எந்த மிடில்க்ளாஸ் மனிதனும் விரும்பமாட்டான்!

ஒரு வளர்ச்சியடையாத கிராமமும், கழுத்தைப் பிடித்துத் தள்ள நேரம் இருக்கும் மக்களும் அப்படித்தான் பேசுவார்கள்! அது அவர்கள் இயல்பு!

தனக்கு நேரும்வரை எல்லாருக்குமே அது வெறும் பொழுதுபோக்கும் வெற்றுவாய் அவலும்தானே!

லாஜிக், டெக்னிக் என்று குறை கண்டுபிடிக்க வல்லுனர்களுக்கு நிறைய விஷயங்கள் இருக்கலாம்! ஆனால், அது எதுவும் என் பாமரப் பார்வைக்குப் படவில்லை!

மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்று கீதாவோ, ஜார்ஜ்குட்டியோ சாகும்வரை இந்தப்படத்தை நகர்த்தக் கதை இருக்கிறது!

அதை  உறுத்தாமல் சொல்லக்கூடிய திறமை ஜீத்து ஜோசப்புக்கு இருக்கிறது!

இப்படி ஒரு மென்உணர்வுப்படத்தை ஒரு சதுரங்க விளையாட்டுப்போல் பார்க்கும் ஆர்வமும் என்போல் பாமரனுக்கு இருக்கிறது!

ஒரு நிறைவான படம் இதுஎன்வரையில்!

2 கருத்துகள்:

  1. நன்றி அருமையாக திறனாய்வு செய்துள்ளீர்கள். படித்து இன்புற்றேன். @chinnapian

    பதிலளிநீக்கு
  2. விவரித்தவிதம் இயல்பாக உள்ளது.c-kuttrameythamdanai.

    பதிலளிநீக்கு