வியாழன், 4 பிப்ரவரி, 2021

வேற்றுகிரகவாசியும் குடியுரிமையும்

 


ஆத்மாவுக்கு தலைவலி மண்டையைப் பிளந்தது!

உடனடியாக ஒரு காஃபி குடித்தே ஆக வேண்டும் என்று உடலும் மனமும் கெஞ்சியது!

அலெக்ஸா!... சற்றே இரைந்தே கூவினான்!

பதில், அலெக்ஸாவிடமிருந்தல்ல தியாவிடமிருந்து வந்தது!

காஃபி ரெடி ஆத்மா, இதோ வர்றேன்!

தேவதையைப்போல் கையில் காஃபி கோப்பையோடு வந்த தியாவைப் பார்த்ததும் தலைவலிகூட கொஞ்சம் குறைந்ததுபோல் இருந்தது ஆத்மாவுக்கு!

நீ ஒருத்திதான் இன்னும் இருபதாம் நூற்றாண்டுப் பழக்கவழக்கங்களைக் கட்டிக்கொண்டு அழுகிறாய் தியா! அலெக்ஸா எங்கே?

ஆத்மா, மை டியர் புருஷா, கொஞ்ச நேரமாவது மனுஷியிடம் பேசேன்! எந்நேரமும் மிஷின்களை கட்டிக்கொண்டே அழுவது உனக்கு அலுக்கவில்லையா முட்டாளே?

நேற்றிரவு நீ வீட்டுக்கு வரும்போதே மணி மூன்று! சரியாக இரண்டு மணிநேரம் கோழித்தூக்கம் தூங்கியிருக்கிறாய்! உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதே!

தியா, இன்னும் எத்தனை நூற்றாண்டுக்கு இப்படி பத்தாம் பசலியாகவே இருக்கப்போகிறாய்? இது முப்பதாம் நூற்றாண்டு! இங்கு பிறப்பு, சாவு எல்லாமே அட்டவணைப்படிதான்! எனக்கு இன்னும் இருபத்தெட்டு பிறந்த தினங்கள் அனுமதிக்கப் பட்டிருக்கிறது!

அப்படித்தான் ரவியும் சொல்லிக்கொண்டு திரிந்தான்! பிறகேன் முந்தாநாள் மாரடைப்பால் செத்துப்போனான்?

அது ஏதோ தயாரிப்பில் நடந்த கோளாறு! நேற்றே அவனுக்கு சிப் மாற்று சிகிச்சை செய்து உயிர் கொடுத்தாகிவிட்டது!

இப்படி சாகும் நாள் தெரிந்து வாழும் நரகவாழ்க்கை நம் சாபம் ஆத்மா!

தயவுசெய்து ஆரம்பிக்காதே தியா! இன்றைக்கு கடைசிகட்ட விசாரணையை முடித்து நான் ரிப்போர்ட் கொடுத்தாக வேண்டும்!

.ஜெ.சி இன்று கூடுகிறது! சர்வதேச நீதிபதிகளின் பேனல் என் விசாரணை அறிக்கைக்கு காத்திருக்கிறது! இந்த வழக்கை நாளை மதியத்துக்குள் விசாரித்து தீர்ப்பும் தண்டனையும் வழங்கப்பட்டே ஆகவேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருக்கிறது தியா!

எது, அந்த வேற்றுக்கிரகவாசிகள் வழக்குதானே? நீ எப்படி அவர்களோடு உரையாடுகிறாய் ஆத்மா?

உலகங்களைக் கடந்த ஒரே பாஷைதான் தியா! கல்தோன்றி மண் தோன்றுமுன் தோன்றிய சங்கத்தமிழ்!

என்னது? அவர்களும் தமிழ் பேசுகிறார்களா? வேற்றுகிரகவாசிகளுக்கு எப்படி தமிழ்?

இந்த அண்டம், பேரண்டம் எல்லாமே கடந்து பரவிய ஒரே மொழி அதுதானே தியா? இருபத்தைந்தாம் நூற்றாண்டிலிருந்தே நம் பொதுமொழி அதுதானே! அதை அவர்களும் அறிந்திருப்பதில் வியப்பில்லை! ஆனால், அவர்கள் அது தங்கள் கிரகத்தில் தோன்றிய மொழி என்று செல்லும்போதுதான் சிரிப்பு வருகிறது!

ஆத்மா, எனக்கு இப்போதே அவர்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறது!வாய்ப்பே இல்லை தியா! அவர்கள் அந்த கிரகத்திலிருந்து என்ன கிருமிகளை சுமந்து வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை!

மிகச் சிறிய வடிவிலான அவர்களை சிறை வைக்க சிறைச்சாலையை தயார் செய்வதுதான் மிகப்பெரிய வேலையாக இருந்தது!

ஒருமாத மருத்துவ சோதனைக்குப்பிறகு சிறைக்கு மாற்றப்பட்ட அந்த நாலு பேரை சந்தித்த மூன்றாவது நபர் நான்தான் தியா!

அதுவும் ஒரு பாதுகாப்பான தூரத்தில் உட்கார்ந்துகொண்டு, கண்ணாடித் தடுப்புகளுக்கு அப்பால் இருந்து கேள்வி கேட்கமட்டும் அனுமதி!

ஆத்மா, உன் அன்பு மனைவிக்கு இதுகூட செய்யமாட்டாயா?

எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த செண்டிமெண்ட் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன தியா! இப்போது இந்த அன்பு,  மனைவி எல்லாமே கெட்டவார்த்தைகள்! நீயும் நானும் எண்பத்தெட்டு ஆண்டுகள், நாற்பத்து மூன்று நாட்கள் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்ட இணை! அவ்வளவே!

உன் ரத்த மாதிரியை அரசாங்க பரிசோதனைச்சாலையில் கொடுத்து பரிசீலிக்கவேண்டும்! எப்படி இந்த அழிந்துபோன சிந்தனைகள் எல்லாம் உன் ஜீனில் ஒட்டிக்கொண்டு வந்தது என்று!

உனக்காக ஒரே ஒரு சலுகை! நான் வரும்போது என் இமைக்கேமராவில் அவர்களைப் படம் எடுத்துவந்து காண்பிக்கிறேன்  எப்படியும் இந்த முழு விசாரணையும், அரசு தொலைக்காட்சியில் அடுத்தமாதம் ஒளிபரப்பப்படப் போகிறது!

சரி, நான் போய் குளித்துவருகிறேன்! எனக்கு ஏதாவது செய்துவை! பசிக்கிறது!

முப்பதாம் நூற்றாண்டிலும் நாங்கள்தான் சமைத்துவைக்கவேண்டும் என்று தோன்றுவது மட்டும் எப்படி உன் ஜீனில் ஒட்டிக்கொண்டிருக்கிறது ஆத்மா?

பதில் சொல்லாமல், அல்லது சொல்லத் தெரியாமல் குளிக்கப்போனான் ஆத்மா!

குளித்து, உடை மாற்றி, புறப்படத் தயாராக வந்த ஆத்மாவை டைனிங் டேபிளில் வரவேற்றது சூடான இட்லியும் தேங்காய் சட்னியும்!

இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்கிறது தியா!

இந்த உவமைகள்கூட வழக்கொழிந்துபோனவைதான் ஆத்மா! இவை எப்படி உன் ஜீனில்!

பழிக்குப்பழியா? கேட்டுக்கொண்டே இட்லியை விண்டு சாப்பிட ஆரம்பித்தான் ஆத்மா!

உன் ஹெலிகார் வர இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது ஆத்மா! அந்த ஜீவராசிகளைப்பற்றி ஏதாவது சொல்லேன்!

உட்கார் தியா!

எனக்கும் யாராவது ஒருவரிடம் இதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்- இறுதி அறிக்கையை சமர்ப்பிக்குமுன்னால்!

அப்போதுதான் என்ன தீர்ப்புக்கு பரிந்துரைக்கலாம் என்ற ஒரு தெளிவு கிடைக்கும் எனக்கும்.இன்னொரு பிரபஞ்சத்தில் இப்போது தீக்கோளமாய் இருக்கும் கிரகத்திலிருந்து கடைசி உயிரினமாய் தப்பித்து வந்திருக்கிறார்கள் அவர்கள். ஏறத்தாழ மூன்று ஒளியாண்டுகள் பயணித்து வந்திருக்கிறார்கள் ஒரு வினோத வாகனத்தில்!

அந்தக் கடைசி அமில மழைக்குத் தப்பிப் பிழைத்த நான்கே உயிரினங்கள் இவர்கள்தான்!

இப்போது நம் கிரகத்தில் குடியுரிமை கேட்கிறார்கள்! குடியுரிமை தருவதா அன்றி திருப்பி அனுப்புவதா என்பதை என் விசாரணை அறிக்கையின்பேரில் சர்வதேச நீதிமன்றம் தீர்மானிக்கும்!

அவர்களைப்பற்றி கொஞ்சம் சொல் ஆத்மா!

சொல்கிறேன்! முதலில் அவர்கள் கிரகத்தைப்பற்றி!

நம் கிரகத்தைப்போலவே வளமான கிரகம் அவர்களது!

ஒருகாலத்தில் ஏறத்தாழ எழுபத்தைந்து சதவிகிதம் நீரால் சூழப்பட்டிருந்திருக்கிறது அந்தக் கிரகம்!

ஒன்பது மில்லியன் - ஜஸ்ட் இமேஜின் - தொண்ணூறு லட்சம் வகையான ஜீவராசிகள் அந்தக் கிரகத்தில் இருந்திருக்கிறார்கள்!

அதை முற்றாக அழித்து தீக்கோளமாக்கிவிட்ட முட்டாள் ஜீவராசிகளில் உயிர் தப்பியது இந்த நான்குபேர் மட்டும்தான்!

ஏறத்தாழ ஒன்பது கோடி ஆண்டுகளுக்குமுன்பே உயிரினங்கள் தோன்றிவிட்ட அந்தக் கிரகத்தில், வெறும் ஒன்றரைக்கோடி ஆண்டுகளுக்குமுன் - அதாவது முதல் உயிரினம் தோன்றி ஏழரைக்கோடி ஆண்டுகள் கழித்து பரிணாம வளர்ச்சி பெற்று உண்டான உயிரினம் இது! இல்லை, அதை பரிணாம வளர்ச்சி என்பதைவிட பரிணாம வீழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும்!

ஏன் அப்படிச் சொல்கிறாய் ஆத்மா?

இவர்கள் தோன்றுவதற்கு எட்டுக்கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தொண்ணூறு லட்சம் ஜீவராசிகளின் பரிமாண வளர்ச்சி இவர்களோடு நின்றே போனது! ஒருவேளை, பரிணாம வளர்ச்சியின் உச்சம் இவர்கள் என்று இயற்க்கை நினைத்ததோ அன்றி அதன்பின் பரிணாம வளர்ச்சியே அற்றுப்போகுமளவு விஷமாய்த் தோன்றியது இந்த ஜீவராசியோ எனக்குத் தெரியாது! ஆனால், என் விசாரணை சொல்வது, இந்த ஜீவராசி கொடூர விஷம் என்பதையே!

கோடிக்கணக்கில், அத்தனை லட்சம் வகை ஜீவராசிகள் வாழ்ந்துவந்த இடத்தை உயிரினம் வாழத் தகுதியற்ற விஷக்காடாய் ஆக்கியிருக்கிறார்கள் மாபாதகர்கள்!

தங்கள் வசதிக்காக கொஞ்சமும் முன்யோசனை இன்றி பல ஜீவராசிகளை தடயமே இல்லாமல் அழித்திருக்கிறார்கள்!

உயிரின சமன்பாடு என்பதன் அடிப்படை அறிவுகூட இல்லாத முட்டாள்கள்!

அதோடு வெறி அடங்காமல், தங்களுக்குள்ளேயே பல பிரிவினைகளை உண்டாக்கி, தங்களைத் தாங்களே இனரீதியாக அழித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்!இந்தப் பேரண்டத்தில், ஒரு அணுவிலும் சிறிய துகளில் வாழும் தாங்கள்தான் இந்த அகிலத்துக்கே கடவுள் என்ற முட்டாள்தலைக்கனம் எல்லாவற்றையும் அழித்து ஒழித்து, இப்போது இந்த நான்குபேர் மட்டுமே, கடைசி நொடியில் விண்வெளியில் பறந்துவந்து தற்செயலாக போனமாதம் இங்கு தரையிறங்கியிருக்கிறார்கள்!

இப்போது தங்களுக்கும் இங்கே குடியுரிமை கேட்கிறார்கள்!

நீ என்ன நினைக்கிறாய் தியா?

அவர்களை இங்கே தங்கவிட்டால், நம் கிரகத்தையும் அழித்துவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ஆத்மா?

நான் நினைப்பது இருக்கட்டும், உன் விசாரணை ஏறத்தாழ முடியப்போகிறது, நீ என்ன நினைக்கிறாய்?

ஆத்மா பதில் சொல்ல வாயைத் திறப்பதற்குள், வாயில் காணொளிப்பெட்டி அலறியது! உங்கள் ஹெலிகார் வந்துவிட்டது!

வந்து தீர்ப்பையே சொல்கிறேன் தியா!

சொல்லிக்கொண்டே பறந்துவிட்டான் ஆத்மா!

ஏறத்தாழ நள்ளிரவில்தான் வந்தான் ஆத்மா!

என்ன ஆச்சு ஆத்மா?

நான் போவதற்குள்ளேயே சிறைச்சாலை காவலுக்கு இருந்த பெண்ணிடம் பேரம் பேசியிருக்கிறார்கள்! தங்களைத் தப்பிக்கவிட்டு, பாதுகாப்பாய் எங்காவது கண்மறைவாய் தங்க ஏற்பாடு செய்துகொடுத்தால், ஒரே மாதத்தில் இந்த கிரகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி அவளைத் தலைவியாக்குவதாக!

இவர்கள் திருந்தும் வகை அல்ல! பதவி ஆசையில் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்து தங்கள் கிரகத்தையே அழித்த இந்தக் கொடியவர்களை தங்கவிடும் ஒவ்வொரு கணமும் நமக்கு ஆபத்து!

இவர்கள் மூச்சுக்காற்றே விஷம் என்பதால், உடனே அவர்களை நம் அஸ்ட்ரோ கிரகத்து ஆளில்லாத விண்கலத்தில் ஏற்றி, அவர்கள் கிரகத்திலேயே ஒரு பாதுகாப்பான தூரத்தில் இருந்து உதிர்த்துவிட்டு வரும்படி ப்ரோக்ராம் செய்து ஏற்றி அனுப்பிவிட்டோம்!

அவர்கள் பற்றவைத்த நெருப்பில் அவர்களே அழிவதுதான் சரியான தண்டனையாக இருக்கும் என்று அஸ்ட்ரோ ஜூடிசியல் கோர்ட் ஜுரிகள் ஒருமனதாக தீர்மானித்து தீர்ப்பளித்தார்கள்! ஒருவருக்கும் அதில் மாற்றுக்கருத்தே இல்லை!

நான் கேட்ட அவர்களின் புகைப்படம் எங்கே ஆத்மா!

அதோ, அந்த ஹோலோக்ராமைப் பார் என்று தன் இமைக்கேமராவிலிருந்து ப்ரொஜெக்ட் செய்த உருவங்களை திகைத்துப் பார்த்தாள் தியா!

நம் உயரத்தில் பத்தில் ஒரு மடங்கே இருக்கும், சுமார் இரன்டு மீட்டர் உயரமும் அரை மீட்டர் அகலமும் மட்டுமே கொண்ட இந்த குள்ள உருவங்களா அத்தனை அழிவை உண்டாக்கின?

என்ன செய்ய தியா? இவர்கள் மண்டைக்குள் இருக்கும் மூளை என்ற வஸ்து அத்தனை விஷமேறிக் கிடக்கிறது!

இந்த சனியன்கள் எங்கிருந்து வந்தன ஆத்மா?

பூமி என்ற கிரகத்திலிருந்து

இவர்களை அங்கே மனிதர்கள் என்று அழைப்பார்களாம்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக