சனி, 17 ஏப்ரல், 2021

இரண்டாவது அலைக்கு உண்மையில் யார் காரணம்?

 


இரண்டு லட்சத்தை கடந்து பறந்துகொண்டிருக்கிறது தினசரி எண்ணிக்கை!

சென்றமுறை, எல்லாக் கதவையும் அடைத்து வீட்டுக்குள் பதுங்கியிருந்த தொற்றின் உச்ச நாட்களில் கூட தொண்ணூறாயிரத்தை தாண்டவில்லை. இந்தமுறை, பத்தே நாட்களில் இரட்டிப்பாகிறது!

வரும் நாட்களில் இன்னும் கொடூரமான வேகத்தில் பரவக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்!

குஜராத்திலிருந்து வரும்  செய்திகளும் படங்களும் பீதியைக் கூட்டுகின்றன -

கொத்துக்கொத்தாய் எரிக்கப்படுவதற்கே மணிக்கணக்கில் காத்திருக்கும் பிணங்கள்! ஒற்றைப் படுக்கையை மூன்றுபேர் பங்கிக்கொள்ளும் அவலம், அதுவும் கிடைக்காமல் வெட்டவெளியில் காத்திருந்தே செத்துப் போனவர்கள் என்று!

இரண்டாவது அலை வரும் என்று கூவிக்கொண்டிருந்த WHO முற்றாக அலட்சியப்படுத்தப்பட்டு இன்று இந்த நிலை வர யார் காரணம்?

தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது -

மக்களின் அலட்சியம், ஒத்துழையாமை மட்டும்தான் காரணம் என !

இன்னொருமுறை சோற்றாலடித்த பிண்டங்கள் என்று மக்களை நோக்கி விரலை நீட்டியாகிவிட்டது!

இனி, வேறு யாரையும் குறை சொல்லமுடியாது!

ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் இடிந்து, இம்முறை மக்களின் மண்டையில் விழுந்திருக்கின்றன!

முதலாவது தூண் சரிந்து விழுந்து யுகங்கள் ஆகின்றன!

தேர்தல் உத்தி வகுப்பாளருக்கு நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டிக்கொடுத்து, தினசரி பேட்டாவும், பிரியாணியும், சாராயமும் வாரியிறைத்து மக்கள் சேவை செய்யத்தான் இத்தனை குட்டிக்கரணமும் என்று நம்பும் முட்டாள்கள் தலையில் விழுந்தது இந்தத்தூண்!

கொள்ளையடிப்பதை பகிர்ந்துகொள்ளும் விழுக்காடு 70:30 அல்லது 30:70 என்பதைத் தங்களுக்குள் முடிவு செய்துகொள்ள, இந்த ஆட்டுமந்தைகளை லாரி லாரியாக அள்ளிப்போட்டுக்கொண்டு வந்து படம் காட்டித் திரிந்த அரசியல்வியாதிகள் இதற்குப் பொறுப்பில்லை!

தினசரி கொடுக்கும் நூறோ இருநூறோ, ஓட்டுக்கு தூக்கியெறிந்த ஆயிரமோ, இரண்டாயிரமோ, சாராயம் காய்ச்சும் தங்களுக்கோ, விற்கும் அரசுக்கோ திரும்ப வந்துவிடும் என்ற நம்பிக்கையோடுதான் வாரியிறைத்திருக்கிறார்கள்!

கொஞ்சமும் யோசிக்காமல் அன்றாட சாராயத்துக்கு கிடைக்கிறது என்று கிடைக்கும் லாரியிலெல்லாம் ஏறி, ஷிஃப்ட் முறையில் எல்லாக் கூட்டத்துக்கும் போய் கடை மூடுவதற்குள் ஓடவேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ஓடி ஓய்ந்த முட்டாள்கள்தான் இதற்குப் பொறுப்பு!

முக கவசம், சமூக இடைவெளி என்ற எதையும் நினைத்துப்பார்க்க யாருக்கும் நேரமில்லை! உனக்குக் கூடிய கூட்டம் பெரிதா, எனக்கு வந்த கூட்டம் பெரிதா என்று ஆர்ப்பரித்துத் திரிந்தார்கள் ஆளவந்தார்கள்!


நிர்வாகம்
என்ற இரண்டாவது தூண் என்றோ இடிந்து விழுந்துவிட்டது! டேபிளுக்கு அடியே தயங்கித் தயங்கி லஞ்சத்துக்கு நீண்ட கைகள், ஆண்டவர்களுக்குப் பங்கு இலக்கு நிர்ணயிக்க ஆரம்பித்த பிறகு, சட்டமாக அடித்துப் பிடுங்க ஆரம்பித்தபோதே இற்று விழுந்துவிட்டது இரண்டாவது தூண்!

அதற்கு பெருந்தொற்றெல்லாம் கவலை  இல்லை! யார் வந்தாலும் பிழைப்புக்கு என்ன வழி என்ற தங்கள் உத்திகளை வகுத்துக்கொள்ளவே அவர்களுக்கு நேரம் போதவில்லை!

தேர்தல் திருவிழாவில் எந்த கட்சி கரையேறுமோ, அதற்குத் தக்க சம்பாதித்த விழிமுறைகளை பட்டியலிட்டுக்கொண்டு காத்திருக்கிறது நிர்வாகம்!

தனியே ஒருவன் காரில் போகும்போது முகக்கவசம் கட்டாயம் என்று கண்டிப்பு முகம் காட்டிய மூன்றாவது தூண் - நீதிமன்றம்!

இதற்கு, பாவம் தேர்தலுக்குக் கூடிய கூட்டங்களோ, மத வழிபாட்டுத் தளங்களிலும் திருவிழாக்களிலும் அலைமோதிய மக்கள் வெள்ளமோ கண்ணுக்குத் தெரியவில்லை!

தானாக முன்வந்து ஒரு கண்டனத்தைக்கூட பதிவு செய்ய முதுகெலும்பு இற்றுப்போய்விட்டது நம் நீதித்துறைக்கு!

அரசியல்வியாதிகளும் மத வியாபாரிகளும் ஆட்டிப்படைக்கும் வித்தைக் குரங்காகிவிட்டது மூன்றாவது தூண்!

நான்காவது தூண் பற்றி சொல்லவே வேண்டாம்!

எந்தக் கட்சிக்கு எத்தனை கூட்டம் வந்தது, எந்தக் கட்சி ஜெயிக்கும், கோவிலில் கூடிய கூட்டம் அதிகமா அல்லது மசூதியில் கூடியது அதிகமா என்ற பட்டி மன்றம்!

எந்த நட்சத்திரம் வாக்களிக்க என்ன உடை போட்டு, எதில் வந்தது, எந்த நடிகன் வீட்டில் நாய் எத்தனை குட்டி போட்டது, அதில் எத்தனை பெட்டை என்று செய்திகளை முந்தித்தந்து புல்லரித்தன அச்சு ஊடகங்கள்.

காட்சி ஊடகங்களுக்கு வேறு தலையாய பணிகள் இருந்தன!

யார் வெற்றி நடை போடுகிறார்கள், யார் வந்து நல்லாட்சி தரப்போகிறார்கள் என்று விளம்பரம் போட்டு கல்லாக்கட்டுவதும், குடும்பங்களைக் குலைப்பது எப்படி என்று நெடுந்தொடர்கள் எடுப்பது என்று அவர்கள் கவலை அவர்களுக்கு!

இதில் வைரஸ் பரவலை அவர்கள் ஏன் கண்டுகொள்ள வேண்டும்? வேண்டுமானால், இதற்கு யார் காரணம், மத்திய அரசா, மாநில அரசா? மக்களா, அன்றி மதியூகி அரசியல்வாதிகளா என்று சில இற்றுப்போன கனவான்களை வைத்து விவாதம் நடத்திவிட்டால் போச்சு!

இல்லாவிட்டால் இருக்கிறது கும்பமேளாவா ஜும்மா மசூதியா என்ற தலைப்பு. இதில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வசதி இருப்பது கூடுதல் போனஸ்!

தேர்தல் திருவிழா, தேர் திருவிழா என்று மக்கள் கூடி கொண்டாடித் திரிந்ததற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

நம்புங்கள்!

உயர்நீதி மன்றத்தில், கோவிட் நிலவரம் தங்கள் கையை மீறிப் போய்விட்டது என்று மாநில அரசு கைவிரித்துவிட்டது!

மத்திய அரசு ஏற்றுமதி செய்த தடுப்பூசி மருந்துகளை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது!

பிரதமர் கும்பமேளாவில் கூட்டம் கூடுவதை சிலாகித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்!

உள்துறை அமைச்சரும், பிரதமரும், எதிர்க்கட்சி இளவரசரும், மேற்கு வங்கத்தில் தனித்தனியே கூட்டம் கூட்டி பலத்தை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாடு நாசமாய் போய்க்கொண்டிருக்கிறது!

கும்பமேளாவில் 13 லட்சம்பேர் கலந்துகொண்டதாக அதிகாரப்பூர்வமான தகவல் சொல்கிறது! கொரோனா அந்தக் கூட்டத்தில் நசுங்கிச் செத்துப்போனது!

இன்று, மக்கள்தான் காரணம் என்று எல்லோரும் கூடி நின்று நம் முகத்தில் காரி உமிழ்கிறார்கள்!

நல்லது!

இது நமக்குத் தேவைதான்!

இந்தக் கொடூரமான காலத்தில் கால கட்டத்தில் தேர்தல் நடத்தியே ஆகவேண்டுமா என்று எந்த நீதிமன்றமும் கேட்கவில்லை!

பேரிடர் காலங்களில் தேர்தலை ஒரு ஆறு மாதம் தள்ளிப்போடுவதால் என்ன குடி முழுகியிருக்கப் போகிறது?

பாலாறும், தேனாறும் ஓடுவதை சிலநாள் தள்ளிப்போட்டிருக்கலாமே?

யார் கேட்பது?

சரி, தேர்தல் நடத்தி ஜனநாயகத்தைக் காத்தே ஆகவேண்டுமெனில், பிரச்சாரங்களை ஆன்லைனில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் திராணியற்றுப் போனது தேர்தல் ஆணையம்!

ஒருவேளை அது அப்படிச் சொல்லியிருந்தாலும், நீதிமன்றம் போய் அதற்குத் தடை வாங்கியிருப்பார்கள் அரசியல் வியாதிகள்!

கூட்டம் கூட்டிக் குறளிவித்தை காட்டாமல் எப்படி விநியோகத்தை முடிப்பது?

மேலும்,

பள்ளி, கல்லூரி பாடங்களை ஆன்லைனில் நடத்தலாம், இல்லாத கொள்கையை எப்படி ஆட்டுமந்தைகளுக்கு ஆன்லைனில் விளக்க?

சரி, நாளைய முதல்வர்கள் என்ன செய்தார்கள்?

தங்கள் படங்களை திரையரங்கில் திரையிட்டார்கள்! அதற்கு நூறு சதவிகித இடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி கொடுக்கவேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தார்கள்! அவர்களால் ஆன தொண்டு -  கொரோனாவை வளர்க்க!

கூவிக்கூவி அரசு தடுப்பூசி போட்டபோது, அதன் நம்பகத் தன்மையை விமர்சித்த அத்தனை தலைவர்களும், வெட்கமே இல்லாமல் ஊசி போட்டுக்கொண்டு போஸ் கொடுத்தார்கள்! கேள்வியே கேட்காமல், அதையும் சிலாகித்தன ஆட்டுமந்தைகள்!

கச்சிதமாக இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொண்டு,பாதுகாப்பான உயரத்தில் நின்று கெட்டவார்த்தையும், புளுகு மூட்டையுமாக உளறி, கைதட்டல் வாங்கிக்கொண்டு, வாக்குப்பதிவு முடிந்த கையோடு, வயிற்றில் நெருப்பும், மனதில் பேராசையுமாக காத்திருக்கின்றன கபட ஓநாய்கள்!

அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், இனி அடிக்கப்போகும் கொள்ளைகளுக்கு வழிமுறை வகுப்பது அவர்களின் தலையாய கடமையாக இருக்கும்போது?

எனில், என்ன செய்யவேண்டும் நாம்?

வாங்கிய பணமெல்லாம் குடித்துத் தீர்த்தாகிவிட்டது! இனி, அடுத்த வருவாய் நாடாளுமன்றத் தேர்தலில்தான்!

கைதட்டச் சொன்னால், கை  தட்டுங்கள், விளக்கேற்றுங்கள், கூடவே, தேடிப்போய் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்!

என் தாய், நான் இருக்கும் ஊரிலிருந்து மூன்று மணிநேர பயணத் தொலைவில் இருக்கிறார்!

அம்மா, எனக்கு வேலை இருக்கிறது என்று சமாதானம் சொன்னால், “வேலையைப்பார், உன்னை சிரமப்படுத்திக்கொண்டு வந்து என்னைப் பார்க்கவேண்டாம், தொலைபேசியில் பேசினாலே போதும் என்கிறார்!

நான் இந்தப் பூமிக்கு வர, ஒரு கருவியாய் இருந்தவர் அவர்! அவருக்கே இந்தப் புரிதல் இருக்கிறது!

உங்களை, என்னை, ஏன் எல்லோரையும் படைத்த அந்த இறைவனுக்கு அந்தப் புரிதல் இருக்காதா? அவ்வளவு முட்டாளா ஆண்டவன்?

எனவே, கோவிலுக்குப் போனாலோ, ஊர்கூடித் தேர் இழுத்தாலோ, கூழ் ஊற்றினாலோ, நோன்பு திறந்தாலோ,  கும்பமேளாவில் குளித்தாலோதான் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவான் என்றால், அது தெய்வமல்ல, நீங்கள் படைத்த கற்பிதம்!

குஜராத் நிலைமை தமிழகத்துக்கு வர இன்னும் அதிக நாட்கள் இல்லை!

அரசு நள்ளிரவுக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது- பேய்களும், பிசாசுகளும் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிவிடும்!

மெல்ல மெல்ல ஊரடங்கை கொண்டுவரும் - அதற்குள் காலம் கடக்காதிருக்க இறைவனை ப்ரார்த்தியுங்கள்!

அப்படி முழு அடைப்பு வரும்போது,

உங்களைக் காத்துக்கொள்ள, கொஞ்சமாவது சேமியுங்கள் - அல்லது கடைசியாகவே சார்த்தப்படப்போகும் அரசு கஜானாவுக்கான அமுதசுரபியில் காசை வாரி இறைத்துவிட்டு சுரணையற்றுக் கிடங்கள்!

முடிந்தால், உங்களுக்கு உங்கள் மீதும், உங்கள் குடுமபத்தின் மீதும் கொஞ்சமாவது அக்கறை இருந்தால்,

உங்கள் வேலையை ஒழுங்காக செய்துகொண்டு, அனாவசியமாக வெளியே சுற்றாமல், பாதுகாப்பாக இருங்கள், உண்மையான கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் உங்களைக் காப்பாற்றுவார்.

இந்தக் கொடூரமான அரசியல், அதிகார மிருகங்கள் உலவும் வனத்தில், வாழ்க்கை கௌரவமாக அமையாவிட்டாலும்சாவாவது கௌரவமாக அமையட்டும்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக