சனி, 1 மே, 2021

முன்னாள் காதலியோடான ஒரு சந்திப்புத் தருணம்!

 


"இன்னைக்கு சாயங்காலம் நித்யாவைப்பார்த்தேன்"

"எந்த நித் .."

கேட்கவந்த சாந்தி சட்டென்று நிறுத்தி ரவியை வெறித்துப் பார்த்தாள்!

அந்தத் தகவலை உள்வாங்கிக்கொள்ள கொஞ்சம் நேரம் பிடித்தது. இட்லியை தட்டில் வைக்கவந்த கை அப்படியே நிற்க, "எதுக்கு இது திடீர்ன்னு?" சட்டென்று முட்டிவந்த கண்ணீரை அடக்கத் தெரியவில்லை.

அப்படியே இழுத்து அருகே அமர்த்தி மெல்ல அணைத்துக்கொண்டான் ரவி.

கொஞ்சம் சாந்தப்படுத்திக்கொள்ளும்வரை தலையைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தது கை!

"சொல்லுங்க ரவி, இத்தனை வருஷம் கழிச்சு எதற்கு இது?"

"பீ ஸ்போர்ட் டியர், மீட்டிங் அன் எக்ஸ் இஸ் நாட் க்ரைம்!

இது ஒன்னும் திட்டம்போட்டு நடந்த மீட்டிங் அல்ல

சாயங்காலம் ரொம்ப பசிக்கற மாதிரி இருந்தது. ஆபீஸ்ல இருந்து ஒரு சின்ன நடை - அன்னபூர்ணாவுக்கு! ஒரு சாம்பார் இட்லியும் காஃபியும் ஆர்டர் பண்ணிட்டு நிமிர்ந்து பார்த்தா, ரெண்டு டேபிள் தள்ளி, தனியே, நித்யா!"

"சரி, நீங்க பாட்டுக்கு பார்க்காத மாதிரி வரவேண்டியதுதானே? எதற்கு போய் பேசணும்?"

"ஏய், எங்களுக்குள்ள ஏதும் சண்டையா என்ன? அதெப்படி ஒருத்தங்களைப் பார்த்தும் பார்க்காமல் வரமுடியும்?

நானாகத்தான் போய் அந்த டேபிளில் உட்கார்ந்தேன், ஹாய் நித்யான்னு நான் சொன்னதும், அந்த மூஞ்சியிலும், இப்போ உன்னை மாதிரியே ஒரு ஷாக்!"

"சாரி ரவி. எனக்கு இதுக்கு எந்த நல்ல அர்த்தமும் தெரியல!

அமைதியா போய்ட்டிருக்கற நம்ம லைஃப் உங்களுக்கு பிடிக்கலையா ரவி?"

"இப்போ, நான் நித்யாவைப் பார்த்து பேசியதில் எப்படி அது கெட்டுப்போகும்?

எனில், நீ என்னை இன்னுமே புரிஞ்சுக்கலைன்னுதான் அர்த்தம்!"

 "சரி, பார்த்துட்டீங்க, பேசிட்டீங்க, அவ்வளவுதானே, சாப்பிடுங்க!"

ஒரு நிமிஷம் சாந்தியை உற்றுப்பார்த்தான் ரவி. கண்ணோரம் துளிர்த்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்குவது தெரிய, மெளனமாக சாப்பிட்டு எழுந்தான்.

ஒரு டம்ளர் பாலையும் வாங்கிக் குடித்துவிட்டு பெட்ரூமுக்குள் போய்விட்டான்!

இயல்புக்கு மாறாக ரொம்பநேரம் டீவி பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சாந்தி முதுகு அவ்வப்போது குலுங்கி அடங்குவது தெரிய, யோசனையோடு, தூங்கும் பையனை கட்டிக்கொண்டு தூங்கிப்போனான்

நான் நித்யாவை பார்த்துப் பேசியது தவறா?

உறக்கமா விழிப்பா என்று தெரியாத அரை மயக்க நிலையில், சாந்தி பக்கத்தில் வந்து படுப்பது கட்டிலின் அசைவில் புரிய, கண் விழித்துப் பார்த்தபோது, மறுபுறம் திரும்பிப் படுத்திருப்பதைப் பார்த்து, சட்டென்று அவளை தன்பக்கம் திருப்ப, அந்த இரவு விளக்கின் வெளிச்சத்தில், கண்ணோரம் பளிச்சிட்டது கண்ணீர்.

ஒரு வினாடி அவளையே உற்றுப்பார்த்தான் ரவி!

"என்ன ஆச்சு சாந்தி, என்ன இது சின்னப்பிள்ளையாட்டம்?"

"ரவி, என்னை விட்டு விலகிப் போயிடமாட்டீங்களே?"

அந்தக் கேள்வியின் அர்த்தம் புரியவே கொஞ்சம் நேரமாச்சு ரவிக்கு. எதிர்பாராமல் தாக்கப்பட்டவன்போல் உணர்ந்தான்!

எழுந்து ஹாலுக்கு வா சாந்தி, லெட் அஸ் டாக் இட் அவுட்!

ஹாலுக்கு வந்து லைட் போட்டுப்பார்த்தால், கடிகாரம் ஒருமணி என்றது!

"நல்லவேளை, நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைதான்! நான் போய் ரெண்டுபேருக்கும் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன், நீ அதுக்குள்ளே என்ன பேசலாம்னு யோசிச்சுவை!"

கொஞ்சம் இறுக்கமாகவே சொல்லிப்போனான் ரவி.கோப்பைகளோடு வந்தபோதும், இறுக்கம் தளராமல் உட்கார்ந்துகொண்டிருந்தவளிடம் கோப்பையை நீட்டி, ரெண்டுபேரும் குடித்து முடிக்கும்வரை, மௌனம் இருவருக்கும் இடையே வேட்டை நாயைப்போல் உலாத்திக்கொண்டிருந்தது.

"சொல்லு சாந்தி, நான் நித்யாவைப் பார்த்ததும் பேசியதும் எப்படி நம் வாழ்வை பாதிக்கும் என்று நினைக்கிறாய்? அவ்வளவு முட்டாளா நீ அல்லது அவ்வளவு மூர்க்கனா நான்?"

"இல்லை ரவி, நிம்மதியாகப் போய்க்கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் இது இப்போது எதற்கு?

நீங்கள் இன்னும் நித்யாவை மனசுக்குள் வைத்துக்கொண்டுதான் என்னோடு குடித்தனம் நடத்தினீர்கள் என்பது எனக்கு ஆயாசமாக இருக்கிறது ரவி. இத்தனை நாள் ஒரு போலி வாழ்வையா நாம் வாழ்ந்திருக்கிறோம்?"

"இப்போதுதான் எனக்கு உன்மேல் கோபம் வருகிறது சாந்தி. சட்டென்று வார்த்தையை விடுவது பெண்களுக்கே கைவந்த கலை. இல்லையா?

நம் கல்யாணம் எந்த சூழலில் நடந்தது என்பது உனக்கு நியாபகம் இல்லையா சாந்தி?

சாகக்கிடந்த நம் பாட்டியின் கடைசி ஆசை என்று தட்ட முடியாமல் ஒரே நாளில் முடிவாகி மறுநாளில் முடிந்ததுதானே நம் கல்யாணம்?

அதற்குப்பின் நம் குழந்தை பிறக்கும்வரை குத்துக்கல்லாக உட்கார்ந்திருந்துதான் செத்துப்போனது கிழம்!

அந்த எதிர்பாராத இக்கட்டான சூழலில், யாராலும் எதுவும் சொல்ல முடியாத உணர்ச்சிப் பெருக்கில் எடுத்த முடிவு நம்மை நல்லவேளையாக பாதிக்கவில்லை.

முதலிரவில் என் கைவிரல் கூட உன்மேல் படவில்லை. நித்யாபற்றி, அந்த காதலைப்பற்றி, மூச்சுவிடாமல் அந்த இரவிலேயே நாம் பேசிவிடவில்லையா? அதன்பிறகும், உன் மனம் சமாதானம் ஆகும்வரை ஏறத்தாழ மூன்று முழு மாதங்கள் நான் பொறுமையோடு காத்திருக்கவில்லையா? அதன்பின் நம் அன்பு நம்மை எல்லாவற்றையும் மறக்கவைக்கவில்லையா?

ஒரு கட்டத்தில், நித்யா கிடைக்காததுகூட எவ்வளவு நல்லதாகப் போனது என்று நாம் பேசிக்கொள்ளவில்லையா?

ஆனால், நாம் நம்மைப்பற்றி மட்டும்தானே யோசித்தோம் சாந்தி?

எவ்வளவு சுயநலமாக இருந்திருக்கிறோம் நாம்?

நித்யா மனதை அந்த எதிர்பாராத அதிர்ச்சி எவ்வளவு தாக்கியிருக்கும்? இந்தக் காதல் தோல்வியிலிருந்து மீண்டுவர நித்யா கொடுத்த விலை என்னவாக இருக்கும் என்பது எனக்கு உறுத்திக்கொண்டேதான் இருந்தது சாந்தி.

இன்றைக்கு எதிர்பாராமல் பார்த்தபோது, அந்தக் கவலைதான் என்னை உடனே போய் பேசவைத்தது.

பேசப்பேசத்தான் தெரிந்தது. அந்தக்கவலை நித்யாவை ஒரு முழு வருடம் அரித்திருக்கிறது. காலம்தானே எல்லாக் காயத்துக்கும் மருந்து? அது நித்யாவையும் கல்யாணம், குழந்தை என்று ரியாலிட்டியை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறது.

குழந்தைக்கு இப்போதுதான் ஆறு மாதமாம். நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்று தெரிந்ததும், அந்தக் கண்ணில் தெரிந்த நிம்மதி ஒன்று போதும் சாந்தி என் குற்ற உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய.

மற்றபடி, நித்யாவை நினைத்துக்கொண்டு உன்னோடு குடும்பம் நடத்துமளவு கீழ்த்தரமானவன் இல்லை நான். பழைய ரணங்களை ஆறாது சீழ்ப்பிடிக்க வைத்திருப்பதில் யாருக்கு லாபம்?

இப்போது நான் தெளிந்திருக்கிறேன்! நீயும் குழப்பிக்கொள்ளாமல் இரு."

"சாரி ரவி, உங்கள் அன்பை, காதலை இழந்துவிடுவேனோ என்ற பயம் என்னை அப்படி நினைக்கவைத்துவிட்டது!"

"பைத்தியம்!

நிம்மதியாகப் போய் ஒருமணிநேரமாவது தூங்கு. நாளைக்கு மாலை நித்யாவை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறேன்!"

"ரவி, என்ன இது முட்டாள்தனம்? பார்த்தோம், பேசினோம் என்று வராமல் இது எதற்கு வேண்டாத வேலை?   என்னை ஒரு வார்த்தை கேட்கணும்ன்னு தோணலையா உங்களுக்கு? எனக்கு இதில் கொஞ்சம்கூட உடன்பாடில்லை!"

"பட்டிக்காடு மாதிரி பேசாதே சாந்தி. நித்யா இங்கே வருவதும், உன்னோடு பேசுவதும் எனக்கு ரொம்ப முக்கியம்

நான் உன்னோடு சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்பதை நான் சொல்வதைவிட நீ சொல்வது நித்யாவுக்கும் நிம்மதி தரும்

குற்றவுணர்ச்சி இல்லாமல் வாழ்க்கையைத் தொடர நம் மூவருக்குமே அது உதவியாக இருக்கும்.

யாருடைய சாபத்திலும் வருத்தத்திலும் நம் வாழ்க்கை தொடர எனக்கு விருப்பம் இல்லை."

"இது ஒரு விபரீத முயற்சி ரவி.

ஒன்ஸ் முடிந்தது முடிந்ததாகவே இருப்பதுதான் எல்லோருக்கும் நல்லது.

இது என்னவோ பெரிய புரட்சி மாதிரி நீங்கள் பேசுவதுதான் எனக்கு அயர்ச்சியாக இருக்கிறது ரவி. நீங்கள் பார்க்கும் சினிமா இல்லை இது. வாழ்க்கை.

இங்கே சட்டவிதிகள் வேறு. நம் நிம்மதியைக் குலைக்கும் எதுவும் தேவையற்ற வீண் வேலை."

"இருக்கலாம் சாந்தி, ஆனால், அது முடிவதோ, வெறும் நட்பாய் தொடர்வதோ, நல்ல புரிதலோடு என்பது முக்கியம் இல்லையா?"

"விரும்பியோ, வலுக்கட்டாயமாகவோ, நம்மை விட்டு விலகிய உறவு, அப்படியே போய்விடுவதுதான் நடைமுறையில் நல்ல விஷயம் ரவி."

"இல்லை சாந்தி, நம்மைப்பற்றி, குறிப்பாக உன்னைப்பற்றி ஒரு மோசமான புரிதல் யார் மனதில் இருப்பதும் எனக்கு சம்மதமில்லை!"

"சரி, எத்தனை மணிக்கு வருகிறார்கள்?"

"வருகிறார்களா? யார்?"

"ம்ம், நித்யா அண்ட் ஃபேமிலி?"

"ஸாரி சாந்தி, நான் நித்யாவை மட்டும்தான் வரச் சொல்லியிருக்கிறேன். ஃபேமிலி மீட் நெக்ஸ்ட் டைம்தான்.

மேலும், நித்யா வரும்போது நான் இங்கே இருக்கப்போவதில்லை. நீ மட்டும்தான்."

"ரவி, இது என்ன விபரீத விளையாட்டு?"

"இல்லை சாந்தி, நீங்கள் இருவரும் பேசும்போது நான் இங்கிருப்பது மனம் விட்டு உன்னிடம் பேச நித்யாவுக்கு இடைஞ்சலாக இருக்கலாம்."

"தேவையில்லாத வேலை ரவி இது.

நேசித்த இருவர் நண்பராய் தொடர்வது அவ்வளவு இயல்பான விஷயம் இல்லை ரவி. அது கதைகளில் மட்டுமே சாத்தியம். நாளைக்கு நடப்பது ஒரு இறுதி சந்திப்பாக இருப்பதுதான் நம்ம நாலுபேருக்குமே நல்லது.

எல்லோரும் அவரவர் இடத்தில் சந்தோஷமாக சவுக்கியமா இருக்கிறோம் என்பதைப் புரியவைத்து அனுப்பிவிட்டால் போதும்,

எங்காவது தற்செயலாக சந்திக்கும்போது இயல்பாய் ஒரு புன்னகை, ஒரு  ஹலோவோடு கடந்துபோகமுடிவதே போதும்.

நாளைக்கு வர்ற நித்யாவுக்கு ஒரு காஃபி கொடுத்துட்டு கொஞ்சநேரம் கதை கேட்டுட்டு அனுப்பிடறதுதான் எல்லோருக்குமே நல்லது".

"ஸாரி சாந்தி, உயிராய் காதலித்த இருவர், தவிர்க்கமுடியாத உணர்ச்சிப்பெருக்கான நேரத்தில் பிரிய நேர்ந்தாலும், அதை சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டு, ஒருவர் மேல் ஒருவருக்கு வெறுப்பில்லாமல் நட்பாய் வாழ்வது சாத்தியம் என்றே நான் நம்புகிறேன்.

ஆனால், இந்த விஷயத்தில் உன்னை நான் கட்டாயப்படுத்தவிரும்பவில்லை!

ஆனால் ஒவ்வொரு சமயம் நீ உன்னை அறியாமல் குற்ற உணர்ச்சியில் குமைவதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் சாந்தி. எல்லோருமே அவரவரை சூழ்நிலையோ கடவுளோ தள்ளிக் கொண்டுவிட்ட இடத்தில் சந்தோஷமாகவே இருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்துகொண்டாலே வாழ்க்கை அழகாகும்!

நாம் சந்தோஷமாக இருப்பதை அவர்களும், அவர்கள் நலமோடிருப்பதை நாமும் அறிவதே நிம்மதி!

நாளை சந்திப்பு உங்கள் இருவர் மனதிலும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் குற்றவுணர்ச்சியையும் மொத்தமாகக் களையுமானால் அதுவே எனக்குப் போதும்!

நாளை வீடு தேடி வரும் நித்யாவுக்கு ஏதாவது டிபன் மட்டுமாவது செய்துகொடு

நித்யாவுக்கு ரசகுல்லா ரொம்பப்பிடிக்கும்ன்னு நீயே சொல்லியிருக்கிறாய். அன்னபூர்ணாவில் வாங்கிக்கொண்டு வந்து ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறேன்!

நித்யானந்த் இங்கிருந்து போகும்போது ஒரு நல்ல நண்பராய் செல்வது எல்லோருக்குமே நல்லது

அவ்வளவே!

நானும், ஆனந்த்தும் பார்க்கில் விளையாடிக்கொண்டிருக்கிறோம், நீ கூப்பிடும்வரை!"

"ரவி, லவ் யூ!"

"போடா லூஸு!" 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக